அகநானூறு/251 முதல் 260 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
2. மணிமிடை பவளம்
[தொகு]
251 தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;
வீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 5
தங்கலர்- வாழி, தோழி!- வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,
இன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,
தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர் 10
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை 15
வாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி
மாநிலம் நெளியக் குத்திப், புகலொடு
காப்புஇல வைகும் தேக்கமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி-
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே. 20
252 இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,
வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித் 5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனிவார் கண்ணேன் ஆகி, நோய்அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
பாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஈங்கைத்
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித் 10
தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையம் துயில்மறந் தனளே! 14
253 'வைகல் தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று; ஒய்யென,
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி,
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் 5
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்குயான்
சிலநாள் உய்யலென் போன்ம்' எனப் பலநினைந்து
ஆழல்- வாழி, தோழி!- வடாஅது,
ஆர்இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப் 10
பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர்அறிந்து,
இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
தழூஉப்பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம்தூம்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த 15
துறுகாழ் வல்சியர் தொழுஅறை வௌவி,
கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்,
பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனர் ஆயினும், மயர்இறந்து 5
உள்ளுப தில்ல தாமே- பணைத்தோள்,
குரும்பை மென்முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்புஅழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து,
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே. 26
254 'நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முது செவிலியர் பலபா ராட்டப்
பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி
மணன்மலி முற்றத்து, நிலம்வடுக் கொளாஅ,
மனைஉறை புறவின் செங்காற் சேவல் 5
துணையொடு குறும்பறை பயிற்றி மேல்செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல்நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
வேந்துஉறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி, 5
வந்துவினை முடித்தனம் ஆயின், நீயும்,
பணைநிலை முனஇய, வினைநவில் புரவி
இழைஅணி நெடுந்தேர் ஆழி உறுப்ப,
நுண்கொடி மின்னின்; பைம்பயிர் துமியத்,
தளவ முல்லையொடு தலைஇத், தண்ணென 5
வெறிகமழ் கொண்ட வீததை புறவின்
நெடிஇடை பின்படக் 'கடவுமதி' என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லெனத்,
தார்மணி மாஅறி வுறாஅ,
ஊர்நணித் தந்தனை, உவகையாம் பெறவே! 20
255 உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்,
கோடுஉயர் திணிமணல் அகன்துறை, நீகான் 5
மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே, அழிபடர் அகல,
வருவர் மன்னால்- தோழி!- தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்ஊர் ஆங்கண் 10
கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்,
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க,
அறன்இன்று அலைக்கும் ஆனா வாடை 15
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்,
'திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய,
நிரைவளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. 19
256 பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை
கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு 5
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென்; நின் மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்; நெருநை
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர்த் 15
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை;
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 21
257 வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர்ஆறு படீஇயர், யாழநின்
பொம்மல் ஓதி பொதுள வாரி 5
அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்; அணிகொள
நுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை 10
மெல்இறைப் பணைத்தோள் விளங்க வீசி,
வல்லுவை மன்னால் நடையே- கள்வர்
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்,
மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து.
நார்அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக், 15
களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன்கோட்டு
அரிலிவர் புற்றத்து அல்குஇரை நசைஇ,
வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயி னானே. 21
258 நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்,
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்-
தண்மழை தவழும் தாழ்நீர் நனந்தலைக் 5
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து
மாய இருள்அளை மாய்கல் போல,
மாய்கதில்- வாழிய, நெஞ்சே!- நாளும்,
மெல்இயர் குறுமகள் நல்அகம் நசைஇ,
அரவுஇயல் தேரும் அஞ்சுவரு சிறுநெறி, 10
இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக;
காமம் கைம்மிக உறுதர,
ஆனா அரும்படர் தலைத்தந் தோயே! 15
259 வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம்நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல்நீர் தலைஇ, உலவைஇலை நீத்துக்
குறுமுறி ஈன்றன, மரனே; நறுமலர் 5
வேய்ந்தன போலத் தோன்றிப், பலஉடன்
தேம்படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனிநன்று ஆகிய பனிநீங்கு வழிநாள்,
பால்எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போதுவந் தன்று, தூதே; நீயும் 10
கலங்கா மனத்தை ஆகி, என்சொல்
நயந்தனை கொண்மோ- நெஞ்சுஅமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனிநின் நயந்த 15
அன்னை அல்லல் தாங்கி,நின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும் தோய்க, நின் முலையே! 18
260 மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர,
வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச், 5
செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி எல்உற, 10
யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது,
முதுமரத்து உறையும், முரவுவாய் முதுபுள்
கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள்,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த
அன்பி லாளன் அறிவுநயந் தேனே. 15