உள்ளடக்கத்துக்குச் செல்

அகல் விளக்கு/அத்தியாயம் 10

விக்கிமூலம் இலிருந்து

அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை எஸ். எஸ். எல். சி. யில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆனியில் தான் படிக்கும் கல்லூரியிலே வந்து சேர்ந்திடுமாறு எழுதியிருந்தான்.

அதற்கு முந்திய கடிதங்களைவிட அந்தக் கடிதத்தில் அவனுடைய மனநிலை நன்றாக இருந்தது. ஒருகால், நான் அவனுடைய உதவியைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்த காரணத்தால், அவனுடைய நல்ல உள்ளம் வெளிப்பட்டு மகிழ்ச்சியோடு அவ்வாறு எழுதியிருக்கலாம். எப்படியோ அவனுடைய மனநிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

வழக்கமாக வரும் சிரங்கு அந்த ஆண்டு வரவில்லை. அதற்குப் பிறகும் அது என்னைத் திரும்பப் பார்த்ததில்லை. விருந்தினரும் எங்கள் வீட்டுக்கு அந்த ஆண்டில் மிகுதியாக வரவில்லை. ஆகவே ஒருவகை இடையூறும் இல்லாமல் படிக்க முடிந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி ஏறக்குறைய இரண்டு மைல் தனியாகவே நடந்து சென்று இலுப்பை மரங்களுக்கு இடையே கால்மணி அல்லது அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து, பிறகு வந்த வழியே அமைதியாகத் திரும்பி வருவேன். போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன்.

சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய கோலங்களைச் சிறிது நேரம் பார்த்திருப்பேன். மேற்கு வானமும் என்னைப் போலவே நாள்தோறும் புதுப் புதுப் பாடங்களை எழுதிப் பார்த்து நினைவூட்டிக்கொள்வது போல் இருக்கும். முழுநிலா நாட்களிலும் அதற்கு முந்தி இரண்டொரு நாட்களிலும் மட்டும் கிழக்கு வானம் என் கண்ணைக் கவரும். பெருங்காஞ்சியிலும் அந்த இலுப்பைமரச் சாலையிலும் சந்திரனோடு இருந்து முழு நிலாவின் அழகைக் கண்டு மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. நிலாவின் வாழ்வை ஒட்டி நாட்களும் மாதங்களும் நகர்ந்து செல்லச் செல்ல முடிவுத் தேர்வு வந்து விட்டது.

அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கும்படியாகவும் வற்புறுத்தவில்லை. படிக்காமல் உடம்பைக் காக்கும் படியாகவும் அறிவுறுத்தவில்லை. என் போக்கில் விட்டு விட்டார்கள். தங்கையையும் தம்பியையும் மட்டும் அடிக்கடி படிக்குமாறு வற்புறுத்தி வந்தார்கள்.

தேர்வில் நன்றாக எழுதினேன். தேர்வு எழுதி முடிந்தவுடன் அத்தையின் மகன் திருமந்திரம் வீட்டுக்கு வந்தான். "தேர்வு எழுதியானவுடன், ஊருக்கு அழைத்து வரும்படியாக அம்மா சொல்லியனுப்பினார்கள்" என்றான். அப்பாவும் போய்வருமாறு சொன்னார். இசைந்து புறப்பட்டேன். அங்கே அத்தையின் மகன் திருமந்திரம் தவிர வேறு யாருடனும் நான் அவ்வளவாகப் பழகவில்லை. அவன் நல்ல பையன்; நுட்பமான அறிவும் அமைதியான பண்பும் உடையவன். அவனோடு மாலையில் உலாவச் செல்வேன். காலையில் கிணற்றில் நீந்தி மகிழ்ந்தேன். பெருங்காஞ்சியில் கற்ற நீந்தல் கல்வியை அந்த ஊரில் பயன்படுத்தினேன். அத்தை மகள் கயற்கண்ணியைப் பற்றி நான் பொருட்படுத்தவே இல்லை. அவளைப் பார்த்த போதெல்லாம், எனக்குக் கற்பகத்தின் நினைவு வந்தது.

இரண்டு வாரம் கழித்து அங்கிருந்து திரும்பினேன். சந்திரன் பெருங்காஞ்சிக்கு வந்திருப்பான்; அங்குச் சென்று அவனைக் காணவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் நான் வந்து கண்ட காட்சி வேறு. அப்பா முதுகுக் கட்டியால் கடைக்குச் செல்ல முடியாமல் வருந்திக்கொண்டிருந்தார். கட்டி ஒன்று போய் மற்றொன்று வரலாயிற்று. கடைக்குக் காலையும் மாலையும் போய்ப் பணப்பெட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து வரவு செலவைக் கவனிக்குமாறு சொன்னார். இதுவரையில் என் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு நேரக் கூடாது என்று அவர் என்னைக் கடைக்கு வருமாறு சொன்னதே இல்லை; வேறு எந்த வேலையும் வைத்ததில்லை. அவராலும் முடியாமல் வீட்டோடு கிடக்க நேரிட்டபோதுதான் அவ்வாறு சொன்னார். அதனால் தட்டாமல் அவர் சொன்னபடி செய்தேன்.

கட்டிகளால் அவர் பட்ட துன்பம் நாளுக்குநாள் மிகுதியாயிற்று. டாக்டர் சர்க்கரை இருப்பதாகக் கூறி, அரிசியும் மற்ற மாவுப் பொருளும் இல்லாத உணவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். வேனிற்காலம் ஆகையால், கட்டி மிக்க துன்பம் கொடுப்பது இயற்கை என்றார். வாரக்கணக்காக அவர் துன்பம் வளர்ந்து வரலாயிற்று. அவருடைய மனம் எல்லாம் கடையிலேயே இருந்தது. கடையில் இருந்த கணக்கர் அடிக்கடி வந்து எல்லா நிலைகளையும் சொல்லி அவருடைய கட்டளைகளைக் கேட்டுக் கொண்டுபோய் அவற்றின்படி பொருள்களை வாங்குவதும் விற்பதும் செய்தார். அப்பா என்னையும் அடிக்கடி கேட்டுத் தக்க வழிகளைச் சொல்வார். சில வேளைகளில் வலி பொறுக்க முடியாமல், மூச்சு விட்டுக்கொண்டே சொல்வார். இப்படி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாரங்களில் மளிகைக் கடையின் நுட்பங்களை ஒருவாறு தெரிந்து கொண்டேன் என்று சொல்லலாம்.

என் தேர்வு முடிவும் அதற்குள் வந்துவிட்டது. நான் தேர்ச்சி பெற்றேன். தமிழ், கணக்கு இரண்டு பாடங்களிலும் முதன்மை பெற்றேன். அப்பாவுக்கு என்னுடைய தொண்டு முறையைக் கண்டும், கடை வேலையைக் கவனித்ததைக் கண்டும், என்மேல் அன்பு வளர்ந்திருந்தது. ஆகையால், கல்லூரியில் படிக்கவேண்டும் என்று என் வேட்கையைத் தெரிவித்தவுடன், "சரி, உன்விருப்பம் போல் செய். இப்போது ஒன்றும் அவசரம் இல்லையே! இன்னும் இரண்டு வாரம் நான் கடையை முன்போல் கவனிக்க முடியாது. மாலையில் வந்து திரும்பிவிடுவேன். இந்த இரண்டு வாரமும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். அவ்வாறே செய்தேன்.

தேர்வின் வெற்றியைச் சந்திரனுக்குத் தெரிவித்திருந்தேன். அவன் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வழிகளைக் காட்டிப் பதில் எழுதினான். தானும் இண்டர்மீடியட் இரண்டாம் வகுப்பில் தேறியுள்ளதாக எழுதியிருந்தான்.

இரண்டு வாரம் கழித்து என்னை அழைத்துச் செல்லச் சந்திரனே வந்திருந்தான். வந்த மறுநாளே புறப்பட்டோம். கல்லூரியில் சேர்ந்தவுடன், விடுதியில் அவனுடைய அறைக்குப் பக்கத்தில் ஒரு அறை ஏற்பாடு செய்தான்.

கல்லூரியின் புதுவாழ்வில் பழகுவதற்கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. சந்திரன் அவ்வப்போது எனக்குத் துணையாக வந்து உதவினான். ஆனால் அவன் வகுப்பு வேறு, என் வகுப்பு வேறு; பாடங்களும் வேறு வேறு; ஆகையால் வாலாசாவில் இணைபிரியாமல் இருந்ததுபோல் அங்கே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளில் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்ததும் உண்டு. உணவுக்கூடத்திற்குச் செல்லும் வேளையில் ஒவ்வொரு நாள் என் அறையில் நுழைந்து குரல் கொடுத்து அழைத்துச் செல்வான்.

பெரும்பாலான நாட்களில் என்னை அழைக்காமலே சென்று விடுவான். நான் உணவுக் கூடத்திற்குச் செல்லும்போது அவனை அங்கே காண்பேன். "வேறு வேலை இருந்தது. நேரே வந்துவிட்டேன்" என்பான். சில நாட்களில் அவனை அறையிலும் காண முடிவதில்லை; உணவுக் கூடத்திலும் காண முடிவதில்லை. "எங்கே, காணோமே" என்பேன், "வேறு வேலை இருந்தது" என்பான். சில முறை இப்படி நேர்ந்த பிறகு, நான் கேட்பதும் குறைந்தது; அவனாகச் சொல்வதும் குறைந்தது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் படித்து ஒரே விடுதியில் தங்கியிருந்தும், நாளடைவில் எங்கள் தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரே வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வாய்ப்பு இல்லாத குறையால், நட்பும் தேய்ந்து போகிறதே என்று வருந்தினேன்.

எனக்கு அவன்மேல் அன்பு குறையவில்லை; அடிக்கடி எண்ணினேன்; அடிக்கடி காண முயன்றேன்; அடுத்தடுத்துப் பழக முயன்றேன்; வாய்ப்பு இல்லாதபோது நான் என்ன செய்வேன்!

சென்னைக்கு வந்த முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன் என்னைக் கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போனான். கடற்கரை எனக்கு விருப்பமாக இருந்தது. பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்கு முன் நிற்க முடியாதவை என்பதை நன்கு உணர்ந்தேன். தவிர, அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என்னைக் கவர்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை; சில நாட்களில் சில வேலைகளில் என் உள்ளம் தனிமையை நாடினாலும், பெரிய திரளான மக்களுக்கு இடையில் இருக்கும்போது நான் ஒருவகைக் கிளர்ச்சியை பெற்று மகிழ்கிறேன்.

திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன்.

அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள் கழிந்த பிறகு அவர்களோடு செல்வதற்கும் தயங்கினேன். காரணம், முதலில் நான் யாரோடு சேர்ந்து சென்றேனோ அவர்களிடம் தீய பழக்கங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள் பெண்களைப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான பேச்சில் ஈடுபடுவதும், ஆசிரியர்களைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.

உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன். அந்தச் சில மாணவர்கள் தாங்கள் புகைத்துக் கெட்டதோடு நிற்காமல், மற்றவர்களையும் கெடும்படியாகத் தூண்டி வற்புறுத்தினார்கள். அதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே பகையாக முற்றுவதற்கு முன்பே, அளவோடு நின்று பழக்கத்தை வரையறை செய்துகொள்வது நல்லது என்று மெல்ல ஒதுங்கினாற்போல் நடந்தேன்.

சந்திரன் என்னை அழைத்துச் செல்ல முடியாதபடி கடமைகளில் ஈடுபட்டிருந்தால், நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன். ஒருநாள் அவனுடைய அறையை நெருங்கிச் சென்றபோது, "எங்கே சந்திரா போயிருந்தாய்?" என்று கேட்ட ஒருவனிடம், "வேறு எங்கே! மெரினாவுக்குத்தான்" என்று சந்திரனே சொன்னான். அதைக் கேட்டபோது எனக்கு எப்படி இருக்கும்? என்னை விட்டுத் தனியே கடற்கரைக்குச் செல்லும் அளவிற்கு நட்பு மாறிவிட்டதே என்று வருந்தினேன்.

வாலாசாவில் இருந்தபோது எல்லா வகையிலும் என்னைப் போலவே நடந்து, எனக்கு உற்ற தோழனாக இருந்த சந்திரனிடத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு என் உள்ளம் நொந்தது. சிலவற்றைக் கடிந்து திருத்த வேண்டும் என்றும் என்மனம் தூண்டியது.

ஆனால், சொல்லிப் பயன்படாதபோது ஏன் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை சாமண்ணா, "நீ அடுத்த ஆண்டில் கல்லூரியில் படிப்பதாக இருந்தால்தான் சந்திரனையும் அனுப்புவேன். இல்லையானால் நிறுத்திவிடுவேன்" என்று என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவனுடைய தந்தை என்னைப் பற்றி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல் என்னளவில் அமைதியாக நடப்பது தகாது என்று என் மனச்சான்று சுட்டிக்காட்டியது. அவ்வாறே சொல்லிப் பார்ப்போம் என்று ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.

ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்ததும் அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல் வழியாக என் தலையைக் கண்டதும், "வேலு! என்ன? ஏன் பார்க்கிறாய்?" என்றான். சிறிது அச்சத்தோடு நின்றேன். எழுந்து கதவைத் திறந்து, "வா" என்றான். உள்ளே சென்று உட்கார்ந்தேன். "என்ன! படிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது?" என்று நல்ல மனநிலையோடு கேட்டான்.

"ஒரு வகையாக இருக்கிறது. நீதான் சொல்லித் தருவதில்லயே, உன்னை இங்கே பார்ப்பதே அரிதாக இருக்கிறதே" என்றேன்.

"எனக்கு எத்தனையோ வேலை!" என்று நேரே என் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துச் சொன்னான்.

"நாம் இங்கே வந்தது படிப்புக்காகத் தானே? வேறு கடமைகள் எதற்காக?"

"கல்லூரி என்றால் படிப்பு மட்டுமா?"

"அதுதான் முக்கியம். அது நல்லபடி முடிந்தால், ஓய்வு இருந்தால் மற்றவற்றை அளவாகக் கவனிக்கலாம்."

"ஓ! எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?"

"உன் நன்மைக்காகத்தானே சொல்கிறேன்?"

"என் நன்மையை நான் கவனித்துக் கொள்வேன், நீ உன் வேலையைப் பார்."

"மார்க்குக் குறைவாக வாங்கினாய் என்று சென்ற ஆண்டில் அப்பா வருத்தப்பட்டார்."

சந்திரன் பேசவில்லை. முகம் ஒரு வகையாகக் கலக்கம் உற்றது.

அவன் மனம் வருந்தியதை உணர்ந்தேன். அதற்குமேல் பேச என்னாலும் முடியவில்லை. அப்போது நிலவிய அந்த அமைதியை, "என்ன சந்திரன்! நாடகத்தில் பெண்ணாக நடிக்கப் போகிறாயாமே!" என்ற குரல் கலைத்தது. புகைபிடித்து வெளியிட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே நுழைந்தான்.

"இப்போது இவ்வளவு காலையில் என்ன நாடகத்தைப் பற்றி?" என்றான் சந்திரன்.

"அதற்கு அல்ல அய்யா! பெண் வேடம் என்றால் பையன்களின் கிண்டல் மிகுதியாகுமே! அதற்காகச் சொன்னேன்" என்றான் வந்தவன்.

"ஏதோ ஒரு பகுதி நாடகத்தில் நடிக்கலாம் என்று போனேன். ஏதோ ஒன்று கொடுத்தார்கள். சரி என்றேன்."

"நடத்து! உன் பாடு கொண்டாட்டம் தான்" என்று சொல்லியவாறே அவன் என்னைப் பார்த்து, "இவர் உங்கள் ஊர் அல்லவா? தம்பி இருக்கிற இடமே தெரியவில்லையே. இன்னும் கல்லூரி பழக்கம் ஆகவில்லைபோல் தெரிகிறது" என்றான்.

சந்திரன் ஒரு புன்முறுவல் செய்து, "இவன் எப்போதும் அப்படித்தான்" என்றான். "குளித்துவிட்டுப் போக வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து சட்டையைக் கழற்றினான்.

"உன் முகத்துக்குப் பெண் வேடம் பொருத்தம்தான். ஆனால் உயரமாக இருக்கிறாய். கொஞ்சம் குள்ளமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்றான் வந்தவன்.

நான் சந்திரனுடைய முகத்தை நன்றாகக் கவனித்தேன். அவனுடைய முகத்தில் முன் இருந்த ஒளி இல்லை. வாலாசாவில் இருந்தபோது கற்பகத்தின் முகம் போலவே இருந்தது. இப்போது அவ்வளவு சொல்ல முடியாது. முகம் மாறி இருந்தது. வற்றினாற்போல் இருந்தது. மார்பில் எலும்புகள் தெரிந்தன. தசைப்பற்று உடையவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், எலும்பு தெரியாத மார்போடு அளவான வளர்ச்சியோடு இருந்தான் முன்பு. பெருங்காஞ்சியில் கிணற்றில் குளித்தபோது நன்றாகக் கவனித்திருக்கிறேன். என் மார்பில் எலும்பு தெரிவது உண்டு.

அவன் மார்பிலும் முதுகிலும் தசைநார்கள் நன்றாக அமைந்து, எலும்புகள் மறைந்திருந்தன. அந்த நிலைமை எப்படி மாறியதோ தெரியவில்லை. என்ன கெட்ட பழக்கத்தால் உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ என்று வருந்தினேன். வேளைக்கு உணவு கொள்ளாமல் வீணான வேலைகளை மேற்கொண்டு அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ, தெரியவில்லை.

புகைப் பழக்கம் மேற்கொண்டானோ என்றும் எண்ணினேன். அதற்கு இடம் கொடுக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அவனுடைய உதடுகள் வெந்து கறுத்திருக்கின்றனவா என்று கவனித்தேன். அவற்றில் வறட்சி மட்டும் இருந்தனவே தவிர, என்றும் போல் செந்நிறமாக அழகாக இருந்தன. ஆகையால் புகைப்பழக்கத்துக்கு ஆளாகவில்லை என்று மகிழ்ந்தேன்.

அவர்கள் இருவரையும் பேச விட்டுவிட்டு, நான் வெளியே வந்தேன். என் அறைக்கு வந்த பிறகு, படிப்பில் குறை இருக்கும்போது சந்திரன் நாடகத்திற்கு ஏன் இசைய வேண்டும் என்று எண்ணினேன். அவனைத் திருத்துவதற்கு வழி என்ன என்று கலங்கினேன்.

நாடகத்தின் ஒத்திகைகள் நாள்தோறும் மாலையில் நடைபெற்றன. உணவு விடுதியில் விழாவுக்கான நாடகம் அது. ஒத்திகைக்கு நானும் இரண்டு நாள் போயிருந்தேன். சந்திரன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தானே தவிர, பேசவில்லை. நாடகத்தில் வரும் பேச்சுப் பகுதிகளைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தான். ஒத்திகையின் போது, நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது.

ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன். வாலாசாவில் இருந்தபோது இதற்கு வேண்டிய அறிகுறிகளே அவனிடம் காணப்படவில்லை.

சென்னைக்கு வந்தபிறகு இந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கலையை எப்படிக் கற்றுக்கொண்டானோ, தெரியவில்லை. பெண்களை நன்றாகக் கவனித்துப் பார்த்துப் பழகினால் தவிர, அவர்களின் நடை உடை பாவனைகளை அவ்வளவு ஒன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒருகால், சினிமாவுக்கு அடிக்கடி சென்று பார்த்துப் பெண்களின் நடை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். கல்லூரிப் படிப்பை நன்கு கற்காமல், இதில் பெறும் தேர்ச்சியால் பயன் என்ன என்று எண்ணி வருந்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_10&oldid=7879" இலிருந்து மீள்விக்கப்பட்டது