அகல் விளக்கு/அத்தியாயம் 15

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், "நான் தேறிவிடுவேன்" என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, "செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?" என்றேன். "சோதிடம் கேட்டேன்" என்றான்.


"சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!" என்று சிரித்தேன். "குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்" என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, "நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா? ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்" என்றான். "அவரை ஏன் கேட்கவேண்டும்? நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா?" என்றேன். "என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்" என்றான்.


பிறகு, "அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன? அதை முதலில் சொல்" என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.


"இது எப்படி முடியும்? அழகான ரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்" என்றான்.


"ஐரோப்பியரும் அமெரிக்கரும் இல்லையா? நாமும் அப்படிப் பழகக்கூடாதா?"


"பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்."


"அவள் நல்ல பெண்."


"நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே."


"சே! என்ன பேச்சு பேசுகிறாய்?"


"ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா?"


"கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங்கப்போவதும் இல்லை."


"அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு?"


"அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா? அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது."


பிறகு, சாப்பிடப் போகலாம். வா" என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.


மறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.


வீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். "நல்ல பையன்! எவ்வளவு அக்கறையான பையன்! அவனா அப்படிப் போய்விட்டான்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.


நான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். "தம்பி எப்போது வந்தது?" என்றார். "இப்போதுதான்" என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, "அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்!" என்றார். உடனே போய்விட்டார்.


சந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.


பெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டிருந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.


வேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். 'இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்' என்றார். எனக்கும் அது நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.


அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், "எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு" என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.


ஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன.


புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.


வீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, "எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா? அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ" என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.


ஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.


இந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள்.


அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும் இல்லாத காரணத்தால், அம்மாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. திருமணத்திற்கு முன் செய்யும் சில பொங்கல் பூசைகளுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் அம்மாவே முன் நின்று, எங்கள் வீட்டு அலுவல் போலவே அக்கறையோடு மேற்கொண்டு செய்துவந்தார். அப்பா மளிகைக் கடையை விட்டு அசையவே இல்லை. பெண் வீட்டாரிடம் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது, பாக்கியமும் அந்த அம்மாவின் தகப்பனாரும் நேரே வந்து அப்பாவிடம் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்கள். "சில்லறைக் கடையை விட்டு எப்படி வரமுடியும்? சொல்லுங்கள்.


ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?" என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன கிராமம். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே.


ஒருநாள் இரவு தங்கி உறுதி செய்து கொண்டு விருந்து உண்டு மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டோம். ஒப்பந்தத் தாளில் குறித்த நாளிலேயே திருமணத்தை முடிப்பதென்று, வந்தவுடன் பாக்கியமும் அவருடைய தகப்பனாரும் திருமண ஏற்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்கள். மாப்பிள்ளை ஆகவேண்டிய விநாயகமோ, ஒரு மாறுதலும் இல்லாமல், பழையபடியே யாருடனும் பேசாமல் கடிகாரம் போல் தொழிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். தம் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாறுதலைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.


விடுமுறையில் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று நானும் மாலனும் திட்டமிட்டுப் புறப்பட்டோம். இண்டர் மீடியட் இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய பாடங்களின் புத்தகங்களையும் வாங்கினோம். மாலன் ஒருவாறு திட்டப்படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிர்பார்த்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. அமைதியாக இருந்த காலத்தில் சந்திரனைப் பற்றிய கவலையால் என் படிப்புக் கெட்டது. திருமண முயற்சியால் அந்தக் கவலை குறைந்தபோதிலும், திருமண வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் மனம் படிப்பில் ஈடுபடவில்லை.


திருமணம் பாக்கியம் வீட்டிலேயே நடைபெற்றது. செல்வம் இல்லாக் குறையால், ஆடம்பரத்திற்கு வழி இல்லை. எளிய முறையில் நடந்தாலும் கூடியவரையில் குறை இல்லாதவாறு நன்றாக நடைபெற வேண்டும் என்று பாக்கியம் பெரிதும் முயன்றார். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை. வந்த உறவினர் சிலர் திருமணத்துக்கு முந்திய இரவில் பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை.


அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைக் கைப்பற்றி இழுத்து, "என்ன தம்பி! நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே! குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா?" என்றார். "அப்படியா?" என்று திகைத்து நின்றேன். "கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா?" என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன்.


சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். "அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது? படிப்பும் இல்லை, பண்பும் இல்லை" என்றார்.


உள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள்.


ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, "போதும் அம்மா! ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்" என்றார் ஒருவர்.


இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது" என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், "அது என்ன வழக்கம்? சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம்! எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே! முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்" என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். "முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்" என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.


"இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்?" என்றேன்.


பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, "நீ சும்மா இரு. தம்பி! உனக்கு என்ன தெரியும்? வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே! எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா?" என்றார்.


மணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. "எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே? ஒன்பதாக இருந்தால் என்ன? எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன?" என்றேன்.


பக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. "நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள்? செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே? செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்?" என்றார்.


குடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.


அந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கர்ப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், "அதுதான் சரி" என்றும் "அப்படியே செய்வோம்" என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியாவது முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.


மறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை.


உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள்.


கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி - மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி - நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் - காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் - எல்லாவற்றையும் அணிவித்துப் - போர்த்திருந்தார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும்.


தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.


திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.


திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை.


நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், "இளம் பெண் - புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்" என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். "இனிமேல் எனக்குக் கவலை இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்" என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.


விடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_15&oldid=7892" இலிருந்து மீள்விக்கப்பட்டது