அபிதான சிந்தாமணி/முதற்பதிப்பின் முகவுரை
௳
கடவுள் துணை
முதற்பதிப்பின்
முகவுரை
மதிமிசை மிலைந்த மாப்பெரு மிமயந்
துதிபெறு கன்னித் துணையா யமைந்த
அந்தமில் பாரதப் பதியி னருந்தமிழ்
நந்த லில்லாத் தமிழ்நா வலர்மின்
பந்த மொருவாப் பசுவா நாயோன்
கொந்தா ரிரவிமுன் கொளுமின் மினியும்
அலைநிரை யளக்கர்மு னருநீர்க் காலென
புன்மொழி கொண்டு புகல்சில வாசகம்
என்னா லியன்ற தெழுதின னதனிடை
மாசுள தாயின் மறுவில தாக
வேச லிலாது வேற்றுக் கொள்கை
கடமையென் றெண்ணிக் கதைபல கொண்ட
நடையமை சிந்தா மணிநவின் றேனே.
அருங்குண நிறைந்த அன்பர்காள்!
நானிந்த அபிதான சிந்தாமணி யென்னு நூலைச் சற்றேறக்குறைய 1890-ம் வருஷங்களுக்குமுன் தொடங்கினேன். இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் ஹைஸ்கூல் எட்மாஸ்டருமாகிய ம-௱-௱-ஸ்ரீ- கோபாலராயரவர்கள், B.A., எனமண்டரம் வெங்கடராமையரவர்கள் செய்த புராணநாம சந்திரிகை போல், தமிழில் ஒன்று இயற்றின் நலமாமென்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்துதவ, அதை முதனூலாகக் கொண்டு புராண நாமாவளியென்று பெயர் புனைந்து எழுதத் தொடங்கினது. அந்தூல் எனக்குக் காட்சி மாத்திரையாயிற்றேயன்றி சாலப் போதாது. ஆதலினது நிரம்பிய நூலொன்றெனத் தேறிப் பன்னூலராயத் தொடங்கி வேறு பொழுது போக்கக் கொள்ளாது, இதனிடை முயன்று வருந்தினேன். இதனை விளையாட்டாகத் தொடங்கினேன். பின்னரிதனை முடிப்பது எவ்வாறென்ற கவலை மிக்கது.
இது காரணமாக நான் ஒருவனே பலர்கூடிச் செய்ய வேண்டிய இதனை ”சுலேகபோதநியாயமாக” பல விடங்களிற் சென்று பல அரிய கதைகளைப் பல புராண, இதிஹாஸ, ஸ்மிருதி, ஸ்தல புராணங்களிலிலும், மற்றுமுள்ள நூல்களிலுமுள்ள விஷயங்களையும், உலக வழக்குகளையும், அவற்றினுட் கருத்துக்களையும் தழுவியதாகும். இதலடங்கியவை: வேதப் பொருள் விளக்கம், பல மஹா புராணக் கதைகள், ஸ்தல புராணக் கதைகள், பாரதாதி இதிஹாசங்கள், ஸ்மிருதி விஷயங்கள், பலநாட்டுச் சமைய நிச்சயங்கள், பல ஜாதி விஷயங்கள், பரதம், இரத்தினோற்பத்தி, வைத்யம், சோதிடம், விரதம், நிமித்தம், தானம், கனாநிலை, பல சமய அடியராழ்வார்களின் சரிதைகள், பல வித்வான்களின் சரிதைகள், சிவாலய விஷ்ணுவாலய மான்மியங்கள், சூர்ய சந்திர ராக்ஷச இருமடிகளின், பரம்பரைகள், சைவ, வைஷ்ணவ மாத்வ ஸ்மார்த்த சமய வரலாறுகள், சைவாதீன பண்டார சந்நதிகளின் மட வரலாறுகள், இந்துதேசம் ஆண்ட புராதன அரசர் வரலாறுகள் முதலிய அரிய விஷயங்களாம்.
இது ஒரு தத்வ கலாரத்னாகரமாய் மந்திர சாஸ்திரமாயுள்ள அரிய விஷயங்கள் நீங்க மற்றவைகளின் சாரசங்கிரகமாகும். இதனை எழுதப்புகுங்கால் சிலர் வாயிலாகக் கேட்டதை அப்போதைக்கப்போது மறப்பெனுங் கள்வ னவற்றை வஞ்சியாது என் கைப்புத்தகத்தில் முதலில் குறித்துக் கொண்டு, பின்னர்க் கதையெழுதும் புத்தகத்தில் பதிந்து, அவற்றைச் சின்னாள் பொறுத்து அகராதி முறைப்படுத்தி, மீண்டும் பெயர்த்து எழுதினேன். இதற்குள் என் அன்பர் கோபலராயர் காலமாயினர்.
இந்நூல் இற்றைக்கு (131) பாரங்களுக்கு மேல் இராயல் எட்டுப் பக்கங்கள் கொண்ட உருவத்தில் சற்றேறக்குறைய லெட் இல்லாமல் (1050) பக்கங்கள் கொண்ட ஸ்மால் பைகாவில் முடிந்தது. இதனை நோக்கு மறிவாளர் இதனை நான் ஒரு முறை தனித்தனிக் கதையினுருக்கொண்டு எழுதிப் பின்னொரு முறை அகராதி முறைப்படப் பெயர்த்தெழுதிப் பின்னதனைச் சுத்தப் பிரதியாக்கிய பிரயாசையை யறியாதிரார்.
இந்நூல் இவ்வாறு ஒருவாறு முற்றுப் பெற்றபின் இதனை சென்னையிலிருந்த பிரபுக்கள் சிலரிடம் காட்டினேன். ‘அவர்கள் இத்தகைய நூல் தமிழிற் கின்றியமையாததே; அதனை வெளியிடுக’ என்றனரேயன்றி யதனை யச்சிட்டு வெளிப்படுத்த ஒன்றும் கூறிற்றிலர்.
பின்பு யாழ்பாணம் ம-௱-௱-ஸ்ரீ கனகசபைப் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்களிடம் இதின் ஒரு பாகத்தை காட்டினேன். அவர் இஃது அரிய தமிழ்க்கதை அகராதி; இதனைச் சென்னையிலுள்ளார் ஆதரிக்க வேண்டுமென ஒரு பத்திரம் எழுதித் தந்தனர். புரொபஸராயிருந்த சேஷகிரி சாஸ்திரியார் அவர்களிடம் காட்டினேன். அவர் இதனையொப்ப நானும் ஒரு நூல் எழுதிக் கொண்டு வருகிறேன் என்று கூறினரே அன்றி வேறொன்றுங் கூறவில்லை. அவர் கருத்தென்னோ அறியேன். அதற்க்குப் பின்னிதனைச் சென்னை கியூரேடரும் பச்சையப்பன் கல்விச்சாலைத் தரும விசாரணையின் எடிகேஷனல் டிரஸ்டியுமாகிய பிரம்மஸ்ரீ வ. கிருஷ்ணமாச்சாரியாரிடம் காட்டினேன். அவர் பல அச்சாபிசுக்காரர்களிடம் காட்டி செலவு அதிகம் பிடிக்கும் எனக்கூறி விடுத்தனர். நான் கூடிய அளவில் உயர்தரக் கல்வி போதிக்கவல்லேனாயினும் ஊழ்வலியால் சென்னை பச்சையப்பன் விசாரணைக்குட்பட்ட பி. டீ. செங்கல்வராய நாயகர், கோவிந்த நாயகர், கலாசாலைகளில் அமர்ந்து செல்வாக்கிலாததால் வருவாய் மட்டாக அச்சிடப் பொருளிலாது இதனை சஞ்சிகை வாயிலாக வெளியிட ஒரு அறிக்கை பத்திரம் வெளியிட்டேன். இதன் பொருட்டு பலரிடம் கையொப்பம் கேட்டேன். அவர்கள் இது தொடர்ந்த கதையாயின் வாங்கலாமெனவும், சிலர் முற்றுறப் பலநாள் பிடிக்கும் எனவும், சிலர் கையொப்பமிட்டுஞ் சென்றனர். இச் சோர்வால் எனக்கு அக்கார்யத்தில் ஊக்கஞ் செல்லாது நூலைப் புற்றிடுவோமா என எண்ணினேன். இதற்குள் சிலர் இதனையொத்த சிறு நூல்களியற்றினர். அதனைக் கண்டும் திருவுளப்பாங் கென்றிருந்தேன். இது நிற்க, நான் வழிபடு கடவுளாகிய மலைமகணாயகர் உள்ளக் குறிப்போ, அல்லது நான் முதன் முறை வெளியிட்ட அறிக்கைப் பத்திரிக்கையோ, மதுரைத் தமிழ் சங்கத்து பிரசிடெண்டும் பாலவனத்தம் ஜமீன்தார் அவர்களும், தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமி தேவரவர்களின் திருக்குமாரரும், என் தளர்ச்சிக்கண் ஊன்றுகோல் போல்பவருமாகிய ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைசாமித் தேவரவர்களின் கைப்பட்டுத் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலை கண்டு கழித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சுயந்திரசாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிடமிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச் சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக் கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றை சென்னையிலுள்ள அச்சுயந்திரசாலையில் என் முன்னிலையில் அச்சிட வுத்தரவளித்து அப்போதைக்கப்போது பொருளுதவி செய்து வந்தனர். அவர்கள் அருஞ்செயலை இப்புத்தகத்தில் நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போகார்.
இந்நூல் ஒரு தனி நூலன்று. இது பல சான்றோரியற்றிய நூல்களின் தொகுப்பாம். இதனை எழுதுமிடத்து எனக்கு சென்னை பிரசிடென்சி காலேஜ் தமிழ் பணிதரும் மஹோமஹோபாத்யாயருமாகிய பிரம்மஸ்ரீ வெ.சாமிநாத ஐயரவர்கள் வெளிப்படுத்திய் சங்க செய்யுட்கள் எனக்குதவிய வாகையால் அவர்களுக்கும், மதுரைச் செந்தமிழ் வாயிலாக வெளிவந்த பல அரிய விஷயங்கள் எனக்கு உதவிய வகையால் அப்பத்திராசிரியர்க்கும், பல நூல்களிலிருந்தும் பல அரிய விஷயங்களைத் திரட்டினேனாதலால் அந்நூலாசிரியர்களுக்கும், இந்நூற்கு வேண்டிய புத்தகங்களை நான் கேட்கும்போது நோவாது உதவிய பண்டிதர்களுக்கும், எனக்கு சமண தீர்த்தங்கரரின் சரிதைகளைத் தம் வேலை விட்டு அருகிலிருந்து விளக்கிய வீடூர் வித்வான் ம-M-M-ஸ்ரீ, அப்பாசாமி நாயினாருக்கும், இதில் நான் தவறிய விஷயங்களைப் பெருநூலென்று பொறுத்துக் திருத்திக் கொள்ளும் பொறையாளர்க்கும் நான் பன்முறை வந்தனம் புரியக் கடமைப்பட்டவனாகிறேன். இந்நூல் என்னை எழுதும் வகைத் தூண்டி யென் முயற்சியாலாது அதனை முற்றுறச் செய்வித்த முக்கண் மூர்த்தி மூவாமுதல்வன் செக்கர்மேனிச் சிவனடி யென்றும் பாசி படந்த குட்ட நிகர்த்த ஆசுடை மனத்து அமர்ந்து வாழ்க.
இங்ஙனம்:
ஆ. சிங்காரவேலு முதலியார்
கிருஷ்ணாம்பேட்டை, சென்னை