உலகநீதி
விக்கிமூலம் இருந்து
| உலகநீதி உலகநாதர் |
[[]]→ |
கடவுள் வாழ்த்து [தொகு]
- உலக நீதி புராணத்தை உரைக்கவே
- கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
- பாடல் 01
- ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
- ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
- மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
- வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
- போகாத இடந்தனிலே போக வேண்டாம்
- போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
- வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
- மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 02
- நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
- நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
- நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
- நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
- அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
- அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
- மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 03
- மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
- மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
- தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
- தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
- சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
- சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
- வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 04
- குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
- கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
- கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
- கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
- கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
- கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
- மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 05
- வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
- மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
- வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
- வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
- தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
- தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
- வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாட்டு 06
- வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
- மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
- மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
- முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
- வாத்தியார்கூ லியைவைத் திருக்க வேண்டாம்
- வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
- சேர்த்த புகழாளன் ஒருவள்ளி பங்கன்
- திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
- பாடல் 07
- கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
- கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
- பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
- பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
- இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
- எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
- குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
- குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
- பாடல் 08
- சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
- செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
- ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
- உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
- பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
- பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
- வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 09
- மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
- மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
- கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
- காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
- புண்படவே வார்த்தைகளைச்? சொல்ல வேண்டாம்
- புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
- மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 10
- மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
- வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
- திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
- தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
- இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
- ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
- குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
- குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
- பாடல் 11
- அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
- அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
- தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
- சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
- வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
- மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
- இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
- ஏதுஏது செய்வானோ ஏமன் தானே
- பாடல் 12
- கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
- கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
- தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
- துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
- வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
- வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
- மாறான குறவருடை வள்ளி பங்கன்
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 13
- ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
- அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
- ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
- உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
- காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
- கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
- போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
- பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே