எனது நாடக வாழ்க்கை/பில்ஹணன் திரைப்படம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
பில்ஹணன் திரைப் படம்

கோவை தியேட்டர் ராயல் புதிய நாடக அரங்கம். அது 15.4.46க்குள் கட்டி முடிந்து விடும் என்று எங்களுக்குச்சொல்லப் பட்டிருந்தது. 19ஆம் தேதி நாடகம் தொடங்கலாம் என்ற திட்டத்துடன் 4-4-46 இல் கோவை வந்து சேர்ந்தோம். சரியாக ஒன்றரை மாத காலம் தியேட்டருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. கம்பெனி வீடு நகருக்குள் கிடைக்கவில்லை. தியேட்டரிலிருந்து ஒன்றரை மைல்தொலைவில் இராமநாதபுரத்தில் தங்கியிருந்தோம் அதிக தூரம் என்றாலும் வீடு மிகவும் வசதியாக இருந்தது. அருகிலேயே பெண்களுக்குத் தனி வீடும் கிடைத்தது.

ஷண்முகா அரங்கம்

கோவை நகரப் பிரமுகர்கள் சிலருடன் சின்னண்ணா கலந்து ஆலோசித்தார். நாடகத்திற்காக ஒரு நல்ல அரங்கம் கோவையில் கட்டுவதற்குத் திட்டமிட்டார். பிரிமியர் சினிடோன் உரிமையாளர் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் மருமக்கள் திரு ஏ. சண்முகம் சகோதரர்கள், திரு டி. கே. சங்கரன் சகோதரர்கள், திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் மகன் திரு சதாசிவ முதலியார் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்ந்து கோவை மேட்டுப் பாளையம் சாலையில் தியேட்டருக்குத் தேவையான இடத்தை வாங்கினார். ஷண்முகம் கம்பெனி என்ற பெயருடன் ஒரு கூட்டுக் கம்பெனியை நிறுவினார். கட்டப்படும் நாடக அரங்குக்கு சண்முகா அரங்கு எனப் பெயர் வைப்பதாக ஒரு முகமாக முடிவு செய்யப் பெற்றது.

22. 4. 1946 இல் சண்முகா அரங்குக்கு அடிப்படைக் கல் காட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

ஷண்முகம் கம்பெனிக்கு முதல் நிர்வாக டைரக்டராக ஏ. என். மருதாசலம் செட்டியார் பொறுப்பேற்றார், அரங்க அமைப்பு வேலைகள் விரைவாக நடைபெறத் தொடங்கின.

தியேட்டர் ராயலில் சிவலீலா

10.5-46ஆம் தேதி தியேட்டர் ராயலில் சிவலீலா நாடகம் தொடங்கியது. நாங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமாக வசூலாயிற்று. திங்கட்கிழமை தோறும் விடுமுறை விடும் வழக்கத்தை மேற்கொண்டோம். தினசரி நாடகம் நடைபெறுவதிலிருந்து ஒருநாள் ஒய்வு கிடைத்தது நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. தியேட்டருக்குப் போகவும் வரவும் வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு பழய ‘வேன்’ வாங்கினோம். அதில் 20 பேர்வரை போகலாம். இரண்டு தடவைகளில் நடிகர்கள் எல்லோரையும் கொட்டகையில்கொண்டு சேர்ப்பதற்கு ‘வேன்’ மிகவும் செளகரியமாக இருந்தது.

பில்ஹணன் பட முயற்சி

வெற்றிகரமாக நடைபெற்று வந்த பில்ஹணன் நாடகத்தை வெள்ளித்திரையில் கொண்டுவரச் சின்னண்ணா விரும்பினார். புதுத் தியேட்டர் கட்டுவதற்குக் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில் மேலும் படப்பிடிப்பில் பணத்தைச் செலவு செய்வது சிரமமாக இருக்கு மென்று பெரியண்ணா கருதினார். குமாஸ்தாவின் பெண் படத்தில் கூட்டு டைரக்டராகப் பணி புரிந்த திரு. கே. வி. சீனிவாசன் பில்ஹணனைத் தாமே தனியாக டைரக்ட் செய்ய விரும்பினார். அவரும் சின்னண்ணாவும் இதில் அதிக ஆர்வம் காட்டியதால் அந்த ஆர்வத்தைத் தடை செய்ய பெரியண்ணா விரும்பவில்லை. சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவோடு பில்ஹணனச் சென்ட்ரல் ஸ்டியோவில் ஆறு மாத காலத்திற்குள் எடுத்து முடித்து விடலாம் என்று டைரக்டர் கே. வி. சீனிவாசன் உறுதி கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாடகக் குழுவின் நடிக-நடிகையரைக் கொண்டே பில்ஹணனைப் படமெடுக்க முடிவு செய்யப் பட்டது. சேலம் ஷண்முகா பிலிம்ஸ் திரு கந்தசாமி செட்டியாருடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நீதிபதி செளத்திரி பாராட்டு

அந்தமான் கைதியிலும், முள்ளில் ரோஜாவிலும் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகனக நடித்ததால் எனக்கு ஒய்வு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் சில நாடகங்களில் ஒய்வுபெற விரும்பினேன். என் எண்ணம் நிறைவேறவில்லை. எஸ்.எஸ். இராஜேந்திரன் கோவையிலேயே விலகிக்கொண்டார். ஆராய்ச்சிமணி என்னும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக அவரைக் கம்பெனியிலேயே இருக்கும்படி வற்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. கோவையில் இராஜேந்திரன் இல்லாததால் 10.6.46இல் ஆரம்பமான அந்தமான் கைதியில் கதாநாயகன் பாலுவாக நானே நடிக்க நேர்ந்தது. 11-6-46இல் நடைபெற்ற அந்தமான் கைதிக்கு நீதிபதிசெளத்திரி அவர்கள் தலைமை தாங்கி மிக நன்முகப் பாராட்டிப்பேசினார்.

இந்த நாடகம் நீதிபதியாகிய எங்களுக்கு வழி காட்டும் நாடகமாக அமைந்திருக்கிறது. குற்றம் செய்பவர்கள் எந்தச் சூழ்நிலைகளில் எல்லாம் அதைச் செய்கிறார்கள் என்பதை இந் நாடகத்தின் மூலம் நாங்கள் புரிந்துகொள்ளுகிறோம். கொலைக்குற்றம் செய்தவனுக்கு அதற்குரிய தண்டனையைக் கொடுக்கும் நாங்கள் அந்தக் குற்றத்தை அவன் ஏன் செய்கிறான்? எப்படிச் செய்கிறான்? எந்தச் சூழ்நிலையில் செய்கிறான்? என்பனவற்றை யெல்லாம் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை இந்த நாடகம் எடுத்துக் காட்டுகிறது”

என்று கூறினார் நீதிபதி செளத்திரி. அன்றைய வசூல் ரூ. 1275ம் நாடகாசிரியர், கவினார் கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றது.

வளையாபதி முத்துக்கிருஷ்ணன்

அந்தமான் கைதி நல்ல வசூலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்றது. 9.7-46இல் தம்பி பகவதி திடீரென்று மனைவியின் உடல்நிலை காரணமாக நாகர்கோவில் செல்ல நேர்ந்தது. அப்போது நான் பகவதி நடித்த நடராஜன் வேடத் தைப் புனைந்தேன். பாலு வேடத்திற்கு வளையாபதி முத்துக கிருஷ்ணனுக்குப் பயிற்சி அளித்தேன். முத்துகிருஷ்ணன் அதற்கு முன்பெல்லாம் அதிகமாக வேடம் புனைவதில்லை. வெளியே வேறு அலுவல்களைப் பார்த்து வந்தார். அவரது தோற்றம் கதா நாயகன் வேடத்திற்குப் பொருத்தமாக இருந்ததாலும், நடிப்புத் துறையில் ஈடுபட அவருக்கு ஆர்வம் இருந்ததாலும் அவரைப் பாலுவாக உருவாக்கினேன். நாலைந்து நாடகங்களில் நடித்த பின் அவருக்குப் பாலு மிகவும் பொருத்தமாக இருந்தது. தம்பி பகவதி திரும்பியபின் எனக்கு மீண்டும் அந்தமான் கைதியில் ஒய்வு கிடைத்தது.

10.10-46 முதல் தியேட்டர் ராயல் வாடகை உயர்த்தப் பட்டதாலும் நாங்கள் சொந்தமாகக் கட்டி வந்த கொட்டகை முடியாததாலும் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. பில்ஹனன் படப்பிடிப்புக்குத் தேதி நிச்சயித்து விட்டதால் கேவைக்கு அருகிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவானது.

பில்ஹணன் தொடக்க விழா

6-11-46இல் பில்ஹணன் படப்பிடிப்பு தொடக்கவிழா சென்ட்ரல் ஸ்டுடியோவில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. திருச்சி திருலோக சீதாராம் மற்றும் நண்பர்களெல்லாம் வந்திருந்து விழாவினைத் தொடங்கி வைத்தார்கள். பில்ஹனன் நாடக ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி அப்போது சென்ட்ரல் ஸ்டுடி யோவில் ஜபிடர் பிக்சர் ஸின் ஸ்ரீ முருகன் படத்திற்கு வசன கர்த்தாவாக நன்கு வளர்ச்சி பெற்றிருந்தார். அவரேபில்ஹனன் திரைப்படத்துக்குரிய உரையாடல்களையும் எழுதித் தர ஒப்புக் கொண்டார். நாடக பில்ஹணனைத் திரைப்பட பில்ஹணனாக எழுதும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பில்ஹணன் தொடக்கவிழா முடிந்ததும் 9-11-46இல் கோவையில் பட்டாபிஷேகம் முடித்துக்கொண்டு பாலக்காடு செல்ல முடிவு செய்தோம். பாலக்காடு கவுடர் பிக்சர் பாலஸ் அதிபர் திருமலைக் கவுடர் அவர்கள் எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். எனவே அவருடைய தியேட்டர் எளிதாகக் கிடைத்தது. கம்பெனி பாலக்காடு சென்றது.

சேரன் செங்குட்டுவன்

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் நானும் ஜூபிடர் சோமசுந்தரம் அவர்களும் கலந்து உரையாடினோம். அப்போது புதிய கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சேரன் செங்குட்டுவனைத் திரைக்குக் கொண்டு வந்தால் மகத்தான வெற்றி கிடைக்குமென்று நான் கூறினேன். சோமு அதனை வரவேற்றார். கதையை உருவாக்குவதற்குத் தகுதிவாய்த்த ஓர் எழுத்தாளரைக் குறிப்பிடுமாறு என்னைக் கேட்டார். நான் உடனே சிறிதும் தயக்கமின்றி அறிஞர் அண்ணாவின் பெயரைக் கூறினேன். “அவர் எழுதித் தருவாரா”? என்றுகேட்டார் சோமு. “அவருக்கு எழுதிச் சம்மதிக்க வைக்கிறேன். அவர் ஒப்புக் கொண்டால் நாமிருவரும் சென்னைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கலாம்” என்றேன். அன்றே அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். இரண்டு நாட்களில் பதில் கிடைத்தது. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், சேரன் செங்குட்டுவனைத் திரை உலகு நினைவில் கொண்டு வந்தது பற்றி. தங்கள் யோசனைப்படி, நான் கதை வசனம் தீட்டத் தடையில்லை. முன்கூட்டி, கதைப்போக்கு எவ்வண்ணம் இருக்க வேண்டும் - என்னென்ன சம்பவங்கள் மட்டும் மக்களிடம் காட்ட விருப்பம் என்பது பற்றி, ஜுபிடரைக் கலந்து பேசுவது அவசியம் என்று கருதுகிறேன்.ஆவன செய்யும் படி அவர்கட்குக் கூறவும்.
அன்பன்
அண்ணாதுரை

இக்கடிதத்தை ஜூபிடர் சோமுவிடம் காண்பித்தேன். அவர் கூறியபடி காஞ்சியில் விரைவில் நேரில் சந்திப்பதாக அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 10-11-46இல் இருவரும் சென்னைக்குக் காரிலேயே புறப்பட்டோம். 11 இல் சென்னை வந்து உட்லண்ட்ஸ் ஒட்டலில் தங்கினோம். 11ஆம் தேதி என். எஸ் கே. நாடகசபையின் பைத்தியக்காரன் நாடகம் பார்த்தேன். சகோதரர் எஸ். வி. சகஸ்ரநாமம் உருவாக்கிய நாடகம் இது என்பதை அறிந்த போது மிகவும் பெருமிதமுற்றேன். நாடகத்தைப் பேராசிரியர் வ. ரா. வும் நானும் ஒன்றாக இருந்து பார்த்து ரசித் தோம். அருமையான நாடகம்; உணர்ச்சி மிக்க உரையாடல்கள்; எஸ். வி. எஸ். ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

என். எஸ் கே. சந்திப்பு

12ஆம் தேதி மகாஜன சபையில் எழுத்தாளர் கூட்டம் நடை பெற்றது. நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். திரு நாரண துரைக்கண்ணன் அவர்களைக் கண்டேன். உயிரோவியத்தை நாடகமாக்குவதுபற்றி விவாதித்தோம். 13ஆம் தேதி திருநாரண துரைக்கண்ணன் இல்லத்தில் பகல் உணவருந்தினேன். அன்று மாலை நானும் ஜூபிடர் சோமுவும் சிறையில் கலைவாணர் என். எஸ். கே.யைச் சந்தித்தோம். அன்றிரவு ஸ்ரீராம பாலகான சபையின் குடும்ப வாழ்க்கை நாடகம் பார்த்தேன். கதை யமைப்பு எனக்கு நிறைவளிக்கவில்லை. 14 ஆம் தேதி சோமுவும் நானும் காஞ்சீபுரம் சென்றோம். அண்ணா அவர்கள் ஊரில் இல்லாததால் திரும்பினோம். அன்று மாலையே நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச்சந்தித்து மனோஹரா திரைப்பட உரிமையைக் கேட்டார் சோமு. “ஷண்முகம் மனோகரனாக நடிப்பதாக இருந்தால் தருகிறேன். வேறு எண்ணமிருந்தால் சொல்லுங்கள்” என்றார் பேராசிரியர்; உடனே, “இப்போதைய நிலையில் என்னைத்தான் நடிக்கச் சொல்கிறார். பின்னால் இருக்கும் நிலைமைகளை அனுசரித்து மாறவும் கூடும். எனவே நிபந்தனை எதுவும் போடாமல் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். சோமு அவர்கள், “இல்லை; இல்லை, ஷண்முகந்தான் மனோகரனாக நடிக்க போகிறார். தேவையானால் அந்த நிபந்தனையைத் தாங்கள் போட்டுக் கொள்ளலாம்” என்றார். நான் தான் வற்புறுத்தி, நிபந்தனை எதுவும் போடாமல் மனோகராவின் உரிமையை வாங்கிக் கொடுத்தேன்.

15ஆம்தேதி ஓர் இரவு நாடகம் பார்க்கத்தஞ்சை வந்தேன், பெருத்த மழையினால் அன்று நாடகம் நிறுத்தப்பட்டு விட்டது. 16ஆம் தேதி பில்ஹணனுக்குப் பாடல்கள் எழுத மதுர பாஸ்கரதாஸ் வருவதாக அறிவித்திருந்ததால் மறுநாள் தங்கி நாடகம் பார்க்கும் வாய்ப்பின்றி 16ஆம் தேதி கோவை வந்து சேர்ந்தேன். மதுர பாஸ்கரதாஸுடன் இரண்டு நாட்கள் இருந்து பாடல்கள் பற்றி விவாதித்து விட்டு 19 ஆம் தேதி பாலக்காடு சேர்ந்தேன்.

கடினமான உழைப்பு

பில்ஹணன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பகலில் கோவையிலும் இரவில் பாலக்காட்டிலுமாக நாள் முழுதும் உழைக்க நேர்ந்தது. என்னதான் உள்ளத்தில் உற்சாக மிருந்தாலும் இந்தக் கடினமான உழைப்பை உடல் தாங்க வில்லை. மாலை 5 மணி வரை கோவையில் படப்பிடிப்பு. அதற்கு மேல் காரில் புறப்பட்டுப் பாலக்காடு வருவேன். நாடகத்தில் உழைப்பேன். நாடகம் முடிந்ததும் உடனே புறப்பட்டுக் கோவை சென்று படுத்துறங்குவேன். காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து படப்பிடிப்புக்கு ஆயத்தமாக வேண்டும். ஒளவையார் நாடகம் தொடங்கிய பின் உண்மையிலேயே நான் மிகவும் சோர்ந்து விட்டேன். பகல் முழுதும் படப்பிடிப்பில் இருந்து விட்டு இரவில் ஒளவையாராக நடிப்பது என் சக்திக்கு மீறிய உழைப்பாக இருந்தது. என் சிரமத்தை நான் வெளியே சொல்லவில்லை என்றாலும் தொண்டைக் கட்டிக் கொண்டது. உடல் நலமும் குன்றிய தால் 26. 1. 47 இல் எங்கள் நண்பர்களான பாலக்காடு டாக்டர்கள் ராகவன், சிவதாஸ் இருவரிடமும் உடலைப் பரிசோதித்துக் கொண்டேன். இரண்டு நாள் நன்கு சோதித்த பின் மூன்று மாதங்கள் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், இரவில் 10 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாதென்றும், இப்படியே தொடர்ந்து உழைத்தால் 40 வயதுக்கு மேல் நரம்புத் தளர்ச்சி ஏற்படுமென்றும் கூறினார் டாக்டர் ராகவன். அன்றைய நிலையில் நான் ஒய்வு பெறுவது எப்படி? டாக்டரிடம் நிலைமையை எடுத்துக் கூறினேன். ஒய்வு பெறுவதைத் தவிர வேறு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். பிறகு டாக்டர் ராகவனும் சிவதாஸு கலந்து யோசித்தார்கள். நிலைமை அவர்களுக்கே தெரியுமாதலால் அதற்கேற்றபடி எனக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்கள் யோசனைப்படி தினந்தோறும் ஊசிபோட்டுக் கொள்ளவும், குறிப்பிட்ட சில மருந்துகளைக் காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும் ஒப்புக் கொண்டேன். பாலக்காட்டில் இருக்கும்போது அவர்களிடம் ஊசிப்போட்டுக் கொண்டேன். கோவையில் இருந்தபோது எனது நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் போட்டுக் கொள்வேன். இப்படியே பில்ஹணன் படம் முடியும்வரை மருந்திலேயே காலம் கழித்தேன்.

மனுஷ்யன் நாடகம்

ஒருநாள் திங்கள்கிழமை ஒய்வு நாளன்று பாலக்காடு வாரியார் ஹாலில் மனுஷ்யன் என்னும் மலையாள நாடகம் பார்த்தேன். நாடகக் கதை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நாடக ஆசிரியர் திரு முதுகுளம் ராகவன் பிள்ளை, அதில் பிரண்டாக நடித்தார். டாக்டராக பிரபல மலையாள நடிகர் அகஸ்டின் ஜோசப் நடித்தார். அவருடைய நடிப்பை முன்பே கொச்சியில் ஏசு நாதர் நாடகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். இப்போது மனுஷ்யன் நாடகத்தில் அவரை டாக்டராகப் பார்த்ததும் அவர்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. காட்சிகளின் கவர்ச்சியோ ஆடம்பர உடைகளோ எதுவுமில்லாமல் அந்த நாடகம் என்னைக் கவர்ந்தது.

இதே நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நல்ல காட்சி யமைப்புகளோடு நடித்தால் நாடகம் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நாடகம் முடிந்ததும் நாடக ஆசிரியரையும் அகஸ்டீன் ஜோசப் அவர்களையும் பாராட்டினேன். நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகக் கூறினேன். முதுகுளம் ராகவன் பிள்ளை மிகவும் மகிழ்ந்தார். “விரும்பினல் அப்படியே செய்யலாம். அது எனது பாக்யம்” என்றார். அதற்குப் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

கலையுலகின் எல்லையற்ற மகிழ்ச்சி

ஒருநாள் வாளையார் பகுதியில் வெளிப்புறக் காட்சியில் நடித்துவிட்டு வீடு திருப்பினோம். எல்லையற்ற மகிழ்ச்சி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம் கலைவாணரும் பாகவதரும் விடுதலைப்பெற்றார்கள் என்ற நல்ல செய்தியினைக் காதாரக் கேட்டோம். உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலே மிதந்தது. 23. 5. 47இல் கலைவாணருக்குப் பட்சிராஜா ஸ்டுடியோவிலும் 24. 5. 47இல் எங்கள் ஷண்முகா தியேட்டரிலும் வரவேற்பு விருந்துகள் நடந்தன. நானும் இந்த வரவேற்புக்களிலே கலந்து கொண்டேன். என். எஸ். கே. தமது சிறை அனுபவங்களை விரித்துச் சொன்னபோது என்னல் தாங்க முடியவில்லை. கண்கள் கலங்கின.

பாலகாட்டில் வசூல்குறைந்தது. கோவையில் பில்ஹணன் படமும் முடியவில்லை. கோவைக்கு அருகிலுள்ள திருப்பூர், தாராபுரம் ஆகிய இடங்களில் தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே கம்பெனி திண்டுக்கல் சென்றது. 27. 5. 47 இல் திண்டுக்கல்லில் நாடகம் தொடங்கப் பெற்றது. திண்டுக்கல்லிலிருந்து அடிக்கடி கோவை படப்பிடிப்புக்காக வந்து போய்கொண்டிருந்தோம்.

வானெலியில் முதல் பேச்சு

தமிழ் நாடகமேடை வசனங்கள் என்னும் தலைப்பில் திருச்சி வானெலி நிலையத்தார் என்னைப் பேச அழைத்தனார். அவர்கள் அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். 30.7. 47இல் அந்தப்பேச்சை பதிவு செய்யத் திருச்சிக்குச் சென்றேன். பண்டைக்கால நாடகங்களில் வசனங்கள் இருந்த நிலையையும், அதன் பிறகு தவத்திரு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் வசனங்களையும் விமர்சித்தேன். தேசபக்தியில் வெ. சாமிநாத சர்மா, அந்தமான் கைதியில் கவினார் கு. சா. கி. முள்ளில் ரோஜாவில் ப. நீலகண்டன் கவியின் கனவில் எஸ். டி. சுந்தரம் குமாஸ்தாவின் பெண்ணில் டி. கே. முத்துசாமி ஓர் இரவில் அறிஞர் அண்ணா ஆகியோர் கையாண்டுள்ள வசன நடை அழகைப்பற்றி ஆய்வுரை செய்தேன். திருச்சி நிலைய எழுத்தாள நண்பர்கள் என் ஆய்வுரையினை வெகுவாகப் பாராட்டினார்கள். அடுத்த வாரத்தில் என்னுடைய வானெலிப் பேச்சு பிரசண்ட விகடனில் வெளிவந்தது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களும் அதனைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். வானெலிப் பேச்சுக்காய்த் திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்குச் சென்ற அன்றே முற்பகல் பேச்சைப் பதிவு செய்து விட்டுத் தஞ்சை வந்து அன்றிரவே அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் பார்த்தேன். வசனங்கள் அற்புதமாக இருந்தன. கதை அமைப்பும் புதுமையாக இருந்தது. கே. ஆர். இராமசாமி இந்நாடகத்தில் மிக உருக்கமாக நடித்தார். சில நாட்களுக்குப்பின் 13-8- 47இல் குடந்தைக்குச் சென்று கே. எஸ் இரத்தினம் அவர்களின் தேவிநாடக சபாவில் ‘சூறாவளி’ என்னும் நாடகம் பார்த்தேன். நாடகத்தின் ஆசிரியர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள் இந்த நாடகத்திலும் வசன நடை எழுச்சி வாய்ந்த தாக இருந்தது. நண்பர் கே. என். இரத்தினமும், திரு. ஏ. கே. வேலனும் விரும்பியபடி அன்று நாடகத்திற்குத் திண்டுக்கல் தலைமை தாங்கி தேவி நாடக சபாவை மனமாரப் பாராட்டி விட்டுத் திரும்பினேன்.

சுதந்திரத் திருநாள்

1947 ஆகஸ்டு 15ஆம்நாள். ஆங்கில ஏகாதிபத்தியம் ஒன்றுபட்ட இந்தியாவை பாகிஸ்தான் இந்தியா என்று இரு கூறுகளாகப் பிரித்துவிட்டு வெளியேறியது. சுதந்திரத் திருநாள் இந்தியா முழுதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப் பெற்றது. திண்டுக்கல்லில் விடுதலை விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடினோம் வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேறும் இந்த மகத்தான விடுதலைத் திருநாளைத் துக்ககாள் என்று கொண்டாடினார் பெரியார் ஈ.வே. ரா. இன்ப நாள் என்று கொண்டாடினார் அறிஞர் அண்ணா. அண்ணா அவர்களும் பெரியார் ஈ வே. ரா அவர்களும் தலைவர் ம. பொ. சி. அவர்களும் திராவிட நாடு, விடுதலை, தமிழ் முரசு ஆகிய இதழ்களில் இந்தச் சுதந்திரத் திருநாளைப்பற்றி எழுதியுள்ள தலையங்கங்களை நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு படித்தோம். தலைவர் ம. பொ. சி., அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துரைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. இருவரும் ஒன்று சேர வேண்டுமென்று என்னுடைய ஆர்வத்தை வெளியிட்டு இரு அறிஞர்களுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதினேன். சுதந்திரத் திருநாளன்று திண்டுக்கல் நகர முழுவதும் விழாக் கோலம் கொண்டிருந்தது, நான் தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கத்திலும் மற்றும் மூன்று இடங்களிலும் சுதந்திரக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினேன். அன்று நடைபெற்ற எங்கள் சிவாஜி நாடகத்தில் இந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் முறையில் தக்க இடங்களில் வசனங்களைச் சேர்த்துப் பேசி ரசிகப் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றோம்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946ஆம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து, திருவிதாங் கூரிலுள்ளப் தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்புத் தோன்றியது. திருவாளர்கள் எஸ். நதானியல் ஆர். கே. ராம், பி. எஸ். மணி, எஸ். ரீவிதாஸ் , வி. மார்க்கண்டன் இரா. வேலாயுதப் பெருமாள் முதலிய தேசபக்தர்கள் அந்த அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு பெருமுயற்சி யெடுத்துக் கொண்டனார். திருவிதாங்கூரில் தமிழியக்கத்தை வளர்ப்பதற்கு இந்த அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் அரும்பாடுபட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து இந்த அமைப்புக்குத் தொடக்கக் காலத்திலேயே பேராதரவு காட்டினார் தலைவர் ம. பொ. சிவஞானம்.அவர்கள். நாங்களும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களும் திரு-தமிழர் இயக்கத்திற்கு ஆரம்ப நாள்தொட்டே ஆதரவளித்து வந்தோம். தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பும் இவர்களுடைய முயற்சிகளை வரவேற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்காக 24. 8. 47இல் திண்டுக்கல்லில் தேசபக்தி நாடகத்தை நடத்தினோம். அன்றைய வசூல் ரூபாய் 1035ம் திரு.தமிழரியக்க நிதிக்காக அவர்களிடம் எங்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. மேடையில் நான் பேசிய போது, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் முயற்சிகள் வெற்றி பெறவும், அங்குள்ள தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை ஆகிய தாலுக்காக்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தாய்த் தமிழகத்தோடு சேரவும் வாழ்த்துக்கூறினேன்.

பாரதி மண்டபத் திறப்பு விழா

எட்டையபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. சென்னையிலிருந்து ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் திரு நாரண துரைக்கண்ணனும் கடிதம் எழுதியிருந்தார். 11-10-72ல் அவர் திண்டுக்கல் வந்தார். மறுநாள் நாங்களிருவரும் புறப்பட்டுப் பகலில் எட்டையபுரம் சேர்ந்தோம். தமிழக முழுவதிலுமிருந்து எழுத்தாள நண்பர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனார். பேராசிரியர் சீனிவாசராகவன், கு. அழகிரி சாமி, திருலோக சீதாராம், புத்தனேரி சுப்பிரமணியம், கவினார் தே. ப. பெருமாள், பெ. தூரன் முதலிய பலர் எனக்குப் பழக்கமானவர்கள் இருந்தார்கள். எல்லோரும் எட்டைய புரம் அரசரின் மைத்துனார் திரு அமிர்தசாமி பங்களாவில் தங்கினோம். மாலையிலும் இரவிலும் இசைவாணி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, இசையரசு திரு எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோரின் இன்னிசை அமுதினைப் பருகினோம். மக்கள் வெள்ளம் போல் குழுமியிருந்தனார். ஒரே நெருக்கடி; வரவேற்புக் குழுவினரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. தமிழ்நாடே எட்டைய புரத்திற்குள் இருப்பது போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. முதல் நாள் விழா முடிந்து நாங்கள் உறங்குவதற்கு இரவு மூன்று மணி ஆயிற்று.

மறுநாள் அதிகாலையில் எழுந்து பாரதி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். தலைவர் இராஜாஜி அவர்கள் அப்போது வங்காளத்தின் கவர்னராக வந்து விழாவில் கலந்து கொண்டார். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எல்லோரையும் வரவேற்று மிக அருமையாகப் பேசினார். தலைவர் ம. பொ. சி. தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரின் பேச்சும் உணர்ச்சிக் கனலாக அமைந்தன.

ஜெய பேரிகை கொட்டடா!

அன்றைய விழாவில் பாட வேண்டுமென்று என் உள்ளம் துடித்தது. முன்னால் சிலர் பாடினார்கள். அவர்கள் பாட்டிலே இனிமையிருந்தது; இசைத்திறன் இருந்தது; ஆனால் பாரதி பாடல்களுக்குத் தேவையான எழுச்சியும் உணர்ச்சியும் இல்லை. நான் கீழே அமர்ந்திருந்தேன். பாரதி பாடல்களை நான் பாடுவதைக் கேட்ட நண்பர்கள் சிலர் பக்கத்திலே இருந்தனார். அவர்கள் என்னைப் பாடும்படியாகத் தூண்டினார். என்னல் அமைதியாக, உட்கார்ந்திருக்க முடியவில்லை. நேராக எழுந்து மேடைக்குச் சென்றேன். தலைவர் இராஜாஜியை வணங்கி விட்டு “நான் ஒரு. பாரதி பாடலைப்பாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டேன். அப்போது இராஜாஜிக்கு நான் அறிமுகமில்லாதவன். அவர், “இல்லையில்லை, நேரமில்லை. இனி அனுமதிப்பதற்கில்லை” என்றார். நல்லவேலையாகத் தலைவர் திரு காமராஜ் அவர்கள் இராஜாஜியின் அருகில் இருந்தார். அவர் என்ன அறிந்தவராதலால், “ஷண்முகம் பாரதி பக்தர்; நன்றாகப்பாடுவார்; பாடச்சொல்லுங்

கள்,” என்றார், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும் எனக்காக இராஜஜியிடம் பரிவுரை செய்தார். அதன் பிறகு இராஜாஜி “அப்படியானால் ஏன் நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை?” என்று சொல்லிக்கொண்டே “சரிசரி, பாடுங்கள்,” என்றார். நான் ‘மைக்’ கின் முன்னால் வந்து நின்றவுடனே என்னையறிந்தரசிகர்கள் கையொலி எழுப்பினார்கள். நான் உணர்ச்சிப்பிழம்பாக நின்றேன்.

ஜெய பேரிகை கொட்டடா
கொட்டடா கொட்டடா (ஜெய)

உச்சத்தில் குரலெழுப்பிப் பாடினேன். வெள்ளம்போல் இருந்த மக்கள் கூட்டம் மந்திர சக்தியால் கட்டுண்டதுபோல் நிசப்தமாக இருந்தது. பாட்டு முடிந்ததும் கடலலைபோல் கரவொலி எழுந்தது. நான் சபையை வணங்கிவிட்டுத் திரும்பியதும், தலைவர் இராஜாஜி “மிகநன்றாகப் பாடினீர்கள், இனி யாரும் பேசவோ பாடவோ வேண்டியதில்லை. நன்றி உரை மட்டும் போதும்,” என்றார்.... ...

அன்று மாலையிலேயே புறப்பட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ஜனசக்தி நாளிதழாக வர ரூ. 5000

திண்டுக்கல்லில் முள்ளில்ரோஜா நாடகம்பார்ப்பதற்காக தோழர் ஜீவானந்தமும் வந்திருந்தார். அவரோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். ஜனசக்தி வார இதழை நாள் இதழாகக் கொண்டு வரத் தீவிர முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பிட்ட ஒரு அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ. 5000 தேவைப்படுகிறதென்றும், அந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்தால் இரண்டு மாதத் தவணையில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். அப்போது எங்களுக்குப் பண நெருக்கடி அதிகம். கோவை ஷண்முகா தியேட்டர் இன்னும் கட்டி முடியவில்லை. அதற்கு எங்கள் பங்குத் தொகையைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போட்ட திட்டத்தைவிட ஷண்முகா தியேட்டர் அதிகமான தொகையை விழுங்கிக் கொண்டிருந்தது. பில்ஹணன் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி விரைவில் முடியவில்லை. ஆறு மாதத்தில் படத்தை

முடிக்கலாமென்று எண்ணினோம். பல்வேறு தகராறுகளால் ஏறத்தாழ ஒராண்டாகியும் படம் முடியவில்லை. இந்தநிலையில் தோழர் ஜீவா கேட்ட தொகையைக் கொடுத்து உதவுவது எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றாகத் தோன்றியது. இதுபற்றிப் பெரியண்ணாவும் நானும் கலந்து யோசித்தோம். தோழர் ஜீவாவின் லட்சியத்திலும் அயராத உழைப்பிலும் பெரியண்ணாவுக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஆழ்ந்து சிந்தித்த பிறகு எப்படியும் அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து உதவ உறுதி கொண்டார். மறுநாள் தோழர் ஜீவானந்தத்திடம் ரூ. 5000/-ரொக்கமாகவே கொடுக்கப் பெற்றது. முறைப்படி அதற்காக கடன் பத்திரமோ ரசீதோ எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

சென்னை சென்ற ஜீவா நன்றிக்கடிதம் எழுதினார். ஒருவார காலத்திற்குள் கம்யூனிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தோழர் ஜீவானந்தம் தலைமறைவாகிவிட்டதாகவும் அறிந்தோம். எங்கள் பணத்திற்காக நாங்கள் கவலைப்படவில்லை. தோழர் ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்காகவருந்தினோம்.

ஷண்முகா தியேட்டர் திறப்புவிழா

கோவையில் கட்டப்பெற்று வந்த ஷண்முகா அரங்கம்கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும் திறப்புவிழா நடைபெறப் போவதாகவும் அழைப்பு வந்தது. சின்னண்ணா மட்டும் விழாவில் கலந்துகொண்டார். 25. 10. 47இல் திவான் பகதூர் சி. எஸ். இரத்தின சபாபதிமுதலியார் அவர்களால் கோவை ஷண்முகா அரங்கு திறந்து வைக்கப் பெற்றது. எங்களையும் பங்குதாரர் களாகக்கொண்டு கட்டப்பட்ட நாடக அரங்கு ஆதலால் தியேட்டர் வாடகை கொஞ்சம் சாதகமாக இருக்குமென்று எதிர் பார்த்தோம். ஆனால்ஒரு மாதத்திற்கு முன்பே வாடகையை நிர்ணயம் செய்வதில் தகராறு வந்துவிட்டது. வாடகை அதிக மாகக் கொடுக்கவேண்டுமென்ற நிலையேற்பட்டதும் பெரியண்ணா சொந்தத் தியேட்டரில் நாம் நாடகம் நடத்தத்தான் வேண்டுமா என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். பெரியண்ணாவின் கோபம் நியாயமானது என்பதைப் பங்குதாரர்கள் உணர்ந் தார்கள். அதன்பின் கோவை ஷண்முகா அரங்கில் நாடகம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. கோவைக்குப்பயணமானோம்.