உள்ளடக்கத்துக்குச் செல்

என் பார்வையில் கலைஞர்/ஒன்றாகவா, ஒன்றாக்கியா ஒரு அலசல்

விக்கிமூலம் இலிருந்து
ஒன்றாகவா... ஒன்றாக்கியா
ஒரு
அலசல்...


எனது நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞருடன் ஒரு மேடையை பகிர்ந்துக் கொள்ளும் இனிய அனுபவம் ஒன்று அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்தது.

கலைஞர் 26796அன்று எனது நூல்களை வெளியிட்ட பிறகு வீட்டிலும் அலுவலகத்திலும் அதற்கு முன்பு நடந்த அவரும் நானும் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை அசைபோட்டேன். ஒவ்வொரு நிகழ்வும் மனத்திரையில் அந்தக் காலத்தில் நான் முதல் தடவையாக பார்த்த கேவா கலர் பிம்பங்களாகத் தோன்றின. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இப்போது பின் நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

அமரர் ஆதித்தனார் சார்பாக தினத்தந்தி அறக்கட்டளை மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கும், தமிழ் படைப்பாளி ஒருவருக்கும் 1995ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் கொடுத்து வருகிறது. இதற்காக நான் அலிகளை மனிதநேயமாக சித்தரித்து எழுதிய வாடாமல்லி நாவலை அனுப்பி இருந்தேன். என்றாலும், மூத்த தமிழறிஞர் விருதை சாலய் இளந்திரையனாருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக எனது விருதை விட்டுக் கொடுக்க முன் வந்தேன். அவருக்கு எழுபது வயது எட்டவில்லை என்ற காரணத்தால் விருது இல்லையென்று ஆனபோது, பரவலான வாசகப் பரப்பைக் கொண்டிருந்தாலும் சரியான அங்கீகாரம் பெறாத எழுத்தாளர் ரமணிச்சந்திரனுக்கு அந்த விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த பரிசு அப்போதைக்கு வேண்டாம் என்றும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லி விட்டேன்.

என்றாலும், நடுவர் குழுவில் இருந்த பேராசியர்கள் ஒளவை நடராசனும், டாக்டர். பொற்கோவும் எனது வாடாமல்லி நாவலுக்குத்தான் கொடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதை உறுதி படுத்துவதுப்போல் ஒளவை நடராசன் அவர்கள் ‘பரிசு வேண்டாமுன்னு சொல்கிற முதல் ஆளு நீங்க தான்யா, எதற்காக அப்படி சொன்னீங்க’ என்று மேடையில் கேட்டார். இதனால் ஆதித்தனார் விருது 1996ஆம் ஆண்டிற்காக எனக்கு கிடைத்தது. மூத்த தமிழறிஞர் அருணாசல கவுண்டருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா, அமரர் ஆதித்தனார் பிறந்த நாளான மேலே குறிப்பிட்ட நாளில் சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் நடைபெற்றது.

முதல்வர் கலைஞர், சரியான நேரத்தில் ராணி சீதையம்மாள் அரங்கிற்கு வந்து விட்டார். சொல்லி மாளாத கூட்டம். கலைஞர் சிறிது கடுகடுப்பாகவே இருந்ததுபோல் தோன்றியது. அரைமணி நேரத்திற்குள் விழாவை முடித்துவிட வேண்டும் என்று, அமைப்பாளர்களிடம் தெரிவித்து விட்டதாகக் கேள்வி. ஒரு மாபெரும் பத்திரிகையின் வேண்டுகோளை புறக்கணிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த விழாவிற்கு அவர் இணங்கியிருக்கிறார். தினத்தந்தி உரிமையாளரும், தமிழகத்தில் சாதிய வேறுபாடுகளைக் கடந்து இளைஞர் விளையாட்டு அணிகளை ஏற்படுத்தியவருமான திருமிகு. சிவந்தி ஆதித்தன் தக்கபடி வரவேற்புரை வழங்கினார்.

அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரலில் தமிழறிஞர் விருது பெற்ற அருணாசலக் கவுண்டர் மட்டுமே ஏற்புரை வழங்குவதாக இருந்தது. கலைஞர் என்னைப் பார்த்து நான் ஏன் பேசவில்லை என்று கேட்டார். நான் ‘நீங்கள் தான் ‘விரைவில் முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னீர்களாம்’. என்றேன். கலைஞர் ‘நீங்களும் பேசவேண்டும்’ என்றார். பேசுவதற்கு தயாராக வராததால், அன்று சிறப்பாகப் பேசினேன்.

முதலில், ஔவை நடராசன் அவர்கள் ஒரு இலக்கியச் சொற்பொழிவை நிகழ்த்தினார் - அதுவும் கலைஞர் வழியாக: கலைஞர் ஆக்கிய சங்கத்தமிழ் நூலில் ‘வாளிங்கே - அவன் நாக்கெங்கே? என்ற உரை வீச்சை அப்படியே ஒப்பித்தார். கூட்டம் மெய்மறந்து கேட்டது. கலைஞரின் அந்த கவிதை ஆரவாரமாக இருந்தாலும், அது ஆழமான கடலின் அலைப்பாய்ச்சலாக தோன்றியது. தமிழ் மண்ணின் வீரத்தை குறிப்பாக ஒரு வீரத்தாயின் மனப்போக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. பெண்பாற் புலவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், புறநானூறில் ‘நரம்பெழுந் துலறிய..’ என்று துவங்கும் பாடலுக்கு கலைஞர் எழுதிய உரைவீச்சு ... முதுமை தட்டிய வயதிலும் அந்த உரைவீச்சை ஒளவை ஒப்பித்த விதம் கண்கவர் காட்சியாகும்.

ஔவை நடராசான் அவர்களுக்குப் பிறகு நான் பேசினேன், பொதுவாக இந்த மாதிரி விழாக்களில் பேச்சாளர்கள் விழாவின் நாயகரை மட்டுமே முன்னிலைப் படுத்தி விட்டு மற்றவர்களை ‘கோட்டை விட்டு விடுவார்கள். கலைஞர் ‘கோட்டையில் இருப்பதால் இதுவே முறையாகிவிடும். அல்லது அழைத்தவரை ஒப்புக்கு பேசுவார்கள். நான் அப்படி பேசக் கூடாது என்று மேடையிலேயே தீர்மானித்து விட்டேன்.

சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள ஆண்டாண்டு கால நட்பை விளக்கினேன். ஆழமான கால்வாய் போல் நீர் பெருக்கெடுத்த தெரு வழியாக முட்டிக்கால் வரை நனைந்தபடி, 1985ஆம் ஆண்டு எனது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அவர் வந்ததையும், அதற்கு பிறகு என் வீட்டில் வறுமை வெளியேறி விட்டதையும், இதனால் எந்த பாவப்பட்ட அலிகளைப் பற்றி எழுதினேனோ அந்த அலிகளின் நல்வாழ்விற்காக விருது பணமான ஐம்பதாயிரத்தில் பத்தாயிரம் ரூபாயை வழங்க முடிகிறது என்றும் குறிப்பிட்டேன். தினத்தந்தியின் மூத்த செய்தியாளரான சுகுமார் முன் நடக்க, முட்டிக் கால்கள் வரை வெள்ளம் வியாபிக்க என் வீட்டை தேடித்தேடி கண்டுபிடித்த சிவந்தி அவர்கள் என் மீது கொண்டு பாசத்தையும், பற்றையும் எடுத்துரைத்தேன்.

பின்னர், கலைஞர் என் மீது காட்டும் பாசத்தால் எப்படி நெகிழ்ந்து போனேன் என்பதை விலாவாரியாக விளக்கினேன். கலைஞருக்கு நான் ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். கலைஞரின் தமிழைப் பயன்படுத்தி பல இளம் ஜோடியினரை கிராமங்களில் சேர்த்து வைத்த காதல் கடமையையும் விலாவாரியாக விளக்கினேன். கலைஞரின் தமிழ் எனக்குக் கை கொடுப்பதால் என் படைப்புகளுக்கு கிடைக்கும் ராயல்டியில் ஒரு பகுதி அவருக்குப் போகவேண்டும் என்றேன். கூட்டம் என் பேச்சையும் பெரிதும் ரசித்தது. கலைஞரின் இலக்கிய மேன்மைக்கு, அவரது குப்பைத்தொட்டி சிறுகதையை ஆய்வு முறையில் குறிப்பிட்டேன்.

ஒளவையும், நானும் ஆற்றிய உரைகளாலும், முகத்தாட்சண்யம் கருதியும் சிவந்தி ஆதித்தன் அவர்கள் மீது ஏற்பட்ட பழைய பாசம் புதுப்பிக்கப்பட்டதாலும், கலைஞர் கலகலப்பாகி விட்டார். இதை மைக்கில் பேசிக்கொண்டிருந்த நான் புரிந்து கொண்டேன். உடனே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கலைஞர் அவர்களையும், சிவந்தி ஆதித்தன் அவர்களையும் இந்த மேடையில் ஒன்றாகப் பார்க்கிறோம். இனிமேல் ஒன்றாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஐந்தாண்டு காலமாக நிலவிய இடைவெளியை இட்டு நிரப்புவது போல் பேசினேன். கலைஞருக்கு தினத்தந்தியும் குறிப்பாக சிவந்தியும், சிவந்திக்கு தமிழக அரசும் குறிப்பாக கலைஞரும் தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்திற்கு இது தேவைப்படுகிறது என்பதை நான் சூசகமாக குறிப்பிட்டதை புரிந்து கொண்ட கூட்டத்தினர் அதை ஆமோதிப்பதுப் போல் பலத்து ஆரவாரித்தனர்.

கலைஞர் பேச எழுந்தார். பேச்சாளர்கள் அத்தனை பேருக்கும் கிடைத்த கைத்தட்டல்களை கூட்டி போட்டால் அதைவிட அதிகமான கைதட்டல்கள். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமோ கேட்காதோ, ஒரு சிறு தக்கை விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும் அப்படிப்பட்ட மெளன எதிர்பார்ப்பு. கலைஞர், ஒளவை நடராசன் அவர்கள் படித்த தனது கவிதையை மீண்டும் படித்தார். அந்தக் கவிதையை பத்து நிமிடம் வரை அப்படியே ஒப்பித்தார்.

போரில் புறமுதுகு காட்டி மாய்ந்ததாக ஒருவனால் புரளிகிளப்பி விடப்பட்ட மகனது சடலத்தைப் பார்க்கும் ஒரு போராளித் தாயின் கதை. மகன் மார்பில் வேல் ஏந்தி இறந்ததைக் கண்டு பொய்ச் சொன்ன கயவனின் நாக்கெங்கே என்று முலைப்பால் அறுக்கப் போன அந்த வீரக் கிழவி அந்தப் பொய்யனைத் தேடுகிறாள். கூட்டம் அசந்து விட்டது. எப்போதோ எழுதிய அந்த கவிதையை கலைஞர் காற்புள்ளி, அரைப்புள்ளி கூட பிசகாமல் தாள நயத்தோடு ஒப்பித்ததை கண்டு கூட்டம் அதிசயத்து விட்டது. தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல் கலைஞர் முகத்யுைம் பார்க்க மறந்து அவர் வாயிலிருந்து ஒலிக்கும் வார்த்தைகளை மட்டுமே உள்வாங்கியது. ஆனாலும் கலைஞர் ஒரு போடு போட்டார். கடைசிவரி ‘வாளிங்கே! அவன் நாக்கெங்கே? என்று வரவேண்டும், ஆனால் ஒளவையோ ‘அவன் நாக்கிங்கே வாளெங்கே’ என்று மாற்றிச் சொல்லிவிட்டார் என்று திருத்தம் கொடுத்தார். கூட்டம் அவரது ஞாபகச் சக்தியை கண்டு வியந்ததுபோல் பலத்து ஆரவாரித்தது. போரில் பெற்ற மகன் புறமுதுகிட்டு இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய முலைப்பாலை அறுத்தெரிவதற்கு அந்தத் தாய்க் கிழவி எப்படி வீராவேசமாக பேசியிருப்பாளோ அப்படிப் பேசினார் கலைஞர். அப்போது அந்த வீரத்தாயின் ஆண் வடிவமாகக் காணப்பட்டார்.

இது முடிந்ததும், கலைஞர் நான் ஊசி ஏற்றிய வாழைப் பழத்தில் இன்னொரு ஊசியை ஏற்றினார். அமரர் ஆதித்தனார் அவர்களுக்கும், தனக்கும் பல்லாண்டு காலமாக இருந்த நட்புறவை விளக்கினார். ஆதித்தனார் அவர்கள் தனது தலைமையிலான அமைச்சரவையில்தான், முதன் முதலாக அமைச்சராக ஆக்கப்பட்டார், என்பதை ஏதோ சலுகை வழங்குவது போல் கூறாமல், ஒரு நட்புக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக தெரிவித்தார். பின்னர் அமரர் ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றில், தனது நட்பு குறித்தோ அல்லது தனது அமைச்சரவையில் அவர் இடம் பெற்றது குறித்தோ ஒரு வரி கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். அப்போது கூட்டத்தை ஒரு தடவையும், சிவந்தி ஆதித்தன் அவர்களை மறு தடவையும் பார்த்து விட்டு மீண்டும் ‘தம்பி சிவந்திக்கு என் மீது பாசம் உண்டு. ஆனால் அதை வெளிக்காட்ட அப்போதைக்கு பயம்’ என்று அவர் இயல்பாக பேசியபோது கூட்டத்தினர் இயல்பாக இருக்காமல் பலத்து ஆரவாரித்தனர்.

எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவசர குடுக்கையாக இந்த ஒன்றாக்கிப் பார்த்தலை, கூறியிருக்க வேண்டாமோ என்று நினைத்தேன். அதேசமயம் இவர்கள் ஒன்றானால் தான் தமிழகத்தில் நல்லதுகள் விரைவில் நடைபெற்று, அல்லதுகள் ஒரளவுக்காவது மறைய முடியும் என்ற பொது நலன் கருதியே அப்படிப் பேசினேன். ஆனாலும், கலைஞர் அப்படிக் குத்திக் காட்டியது, சிவந்தியின் மனதை புண்படுத்தியிருக்குமோ என்று நினைத்தேன். பொதுவாக, ஒரு பெரியவரை இன்னொரு பெரியவர் ஏதோ ஒரு வகையில் சாடும்போது, அந்தச் சாடலுக்கு காரணமான ஆசாமிதான் ஆப்பசைத்த குரங்காகி விடுவார். இந்த நிலைக்கு நான் வந்து விட்டேன். அதே சமயம் மக்கள் சாட்சியாக சொல்ல வேண்டியதை மனச்சாட்சிபடி சொன்னதில் ஒரு திருப்தியும் ஏற்பட்டது.

ஒருவாரம் கழித்து ராணி ஆசிரியரும், தமிழ் இதழ்கள் வரலாற்றை வரலாற்று பூர்வமாக எழுதியவரும், திராவிடச் சிந்தனையாளரும், சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு வேண்டியவருமான திரு. ஆமா சாமி அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, நான் அப்படி பேசியது சரிதானா என்று கேட்டேன். உடனே அவர் ‘இரண்டு பேருக்கும் இடையிலே இருந்த ஒரு முள்ளை நீங்க எடுத்திட்டிங்க’. நீங்க அப்படி பேசினது தான் சரி. கலைஞருக்கும் எங்க அய்யாவுக்கும் பழையபடி நல்ல உறவு ஏற்படுது. கலைஞரும் மனசிலேயே நினைத்துக் கொண்டிருக்காமல் அப்படிக் கொட்டி விட்டார். இனிமேல் முதல்வரும் மனதில் எதையும் வைத்திருக்க மாட்டார். அந்த வகையில் உங்களுக்கு எங்கள் நன்றி’ என்றார்.

அந்த விழாவில் மனதில் அழுத்தி இருந்த அந்த சுமையை கலைஞர் கீழே தூக்கிப் போட்ட நேர்த்தி இருக்கிறதே, அது கேட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இப்படி மனப்பாரத்தை பூவை இறக்குவது போல இறக்கும் பண்பாடும் சொல்லாற்றலும் எனக்குத் தெரிந்து கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இந்த இருட்டடிப்பை கலைஞர் சுட்டிக்காட்டிய போது, சிவந்தி அவர்களும் வேறு வழியில்லாத ஒரு மாணவனைப் போல அதாவது ‘ஏன் லேட்டு’ என்றால், லேட்டு சார்’ என்று சொல்லும் பள்ளி மாணவன் போல் சிரித்த காட்சியை யாராவது புகை படமாக எடுத்திருந்தால், அது புகைப்பட கண்காட்சியில் முதல் பரிசை பெறும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருநாள் சென்னையில் உள்ள தமிழக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்தம் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் நான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தெரிவித்தார். எனக்கு இந்த மாதிரியான சமாச்சாரங்களில் அதிக ஈடுபாடு கிடையாது. அதே சமயம் கலைஞர் சொல்லைத் தட்டுவது போல் நடந்து கொள்வதும் சரியாகப் படவில்லை. கலைஞர் என் மீது கொண்டிருக்கிற அன்பு கண்டு ஆனந்தித்தேன். அதே சமயம் அவர் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, சென்னை தொலைக்காட்சி ஆசிரியரான என் மீது வைத்த நம்பிக்கை போல் பொய்த்து விடக் கூடாதே என்கிற பயமும் ஏற்பட்டது. ஆகவே, கலைஞரிடம் புகார் போகக் கூடாது என்பதற்காக அந்த குழுவோடு ஒத்துப் போக வேண்டும் என்று பலதடவை மனதில் சொல்லிக் கொண்டேன்.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை, சிறந்த நடிகர், நடிகைகளை, இதரக் கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் அப்போதைய குழுவிற்கு முன்னாள் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியும், மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான நீதிபதி கோகுல கிருஷ்ணன் அவர்கள் தலைவர். இவர்தான் 1960ஆம் ஆண்டு பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சியே பட்டி மண்டபத்தில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு வழங்கியவர்.

இந்தக் குழுவில் மிகச் சிறந்த திரைப்பட வசனங்களை எழுதிய ஆருர் தாஸ், பசி என்ற கலைப்படத்தை எடுத்து தமிழ் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்கிய இயக்குநர் துரை, சங்கீதத்தை இசையாக்கிய விசுவநாதன் - ராமமூர்த்தி, பாசமலர் போன்ற அற்புத படங்களை இயக்கிய பீம்சிங் அவர்களின் சௌமித்ரா, எனது இனிய நண்பர் சாருஹாசன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இவர்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது என்ற திரைப்பட இலக்கணத்தோடு ஒத்துப் போனவர்கள். என்னால், அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை . நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் அவர் தனது தோழர்களோடு ஒரு ஏரியில் குளித்துக் கொண்டு ஜட்டியை கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாய் ஆட்டுவார். இதற்கு குழுவினடமிருந்து ஒரு சின்ன எதிர்ப்புக் கூட இல்லாதது, நான் அவர்களோடு ஒன்றிப் போகாத நிலைமையை வலுப்படுத்தியது. நான் அடிக்கடி கூச்சல் போடுவது வழக்கமாகி விட்டது.

கலைஞரிடம், இப்படி கூச்சல் போடுகிறவரை உறுப்பினராக போட்டு விட்டீர்களே என்று உறுப்பினர்களோ, அல்லது தோழர் அமிர்தமோ கேட்டு விடக் கூடாது என்பதற்காக குழுக் கூட்டங்களில் மெளனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்த என் வைராக்கியம் பிரசவித்து விட்டது. எப்படியோ எழுத்தாளர் பூமணி எழுதி இயக்கிய கருவேலம் பூக்களுக்கு சிறப்புப் பரிசை என்னால் வாங்கிக் கொடுக்க முடிந்தது.

அடுத்தாண்டு திரைப்பட தேர்வுக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட போது என்னைத்தவிர எல்லா உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தார்கள். நான் நடந்து கொண்ட விதமும், கோப தாபங்களும், கலைஞரின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், குழு உறுப்பினர்கள் என்னிடம் அன்போடும், பண்போடும் நடந்து கொண்டார்கள். ‘குழுவுக்கு ‘உங்கள மாதிரி ஒரு ஆள் தேவைதான்’ என்றும் சொல்லிக் கொண்டார்கள்’ எப்படியோ புதிய குழுவில் நான் இடம் பெறாமல் போனதற்கு நானே காரணம். அதற்காக எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ ஏற்படவில்லை. கலைஞரின் நம்பிக்கையை தகர்த்து விட்டேனே என்கிற ஆதங்கம்தான். அதே சமயத்தில் எனக்கு நானே உண்மையாக இருந்தேன் என்ற தெளிவு. கூடவே, எனது கருத்துக்களை இதமாக சொல்லி இருக்கலாமே என்கிற ஒரு பின் யோசனை.

என்றாலும், தமிழக அரசின் திரைப்படத் தேர்வில் கலைப்படங்கள் தேர்வதில்லை. சும்மாயிருப்பதே நடிப்பு என்பது மாதிரியான கலைபடங்கள் தான் வந்து கொண்டும் இருக்கின்றன. இந்தத் தேர்வில் திரைப்படங்களின் அடிப்படைக் கருத்துகளைப் பற்றியோ சமூக விரோத உரையாடல்கள் பற்றியா, உறுப்பினர்கள் அலட்டிக் கொள்வதில்லை. திரைப்படத் தணிக்கை குழுவை தலையணையாக வைத்துக் கொண்டு படங்களைப் பார்க்கிறார்கள். ஆகையால், இந்தக் குழு இப்படியே இருக்கட்டும் இன்னும் சில சமூகச் சிந்தனையாளர்களை குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னைக் கேட்டால், ஒரு திரைப்படத்தின் கதைக்கரு, அடிப்படையில் மோசமாக இருந்தால் அது எவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டாலும், அதற்கு அரசு பரிசுகள் வழங்கப்படலாகது என்பேன்.