கலிங்கத்துப் பரணி/பேய் முறைப்பாடு

விக்கிமூலம் இலிருந்து

பேய்களாகப் பிறந்து கெட்டோம்[தொகு]

212

ஆறுடைய திருமுடியா னருளுடைய பெருந்தேவி யபயன் காக்கும்
பேறுடைய பூதமாப் பிறவாமற் பேய்களாப் பிறந்து கெட்டேம். 1

எங்களை யார் காப்பார்[தொகு]

213

ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக் காப்பதல்லா லடையப் பாழாம்
ஊர்காக்க மதில்வேண்டா வுயிர்காத்த உடம்பினைவிட் டோடிப் போதும். 2

பிழைக்க மாட்டோம்[தொகு]

214

ஓய்கின்றே மோய்வுக்கு மினியாற்றேம் ஒருநாளைக் கொருநாள் நாங்கள்
தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேஞ் செற்றாலு முய்ய மாட்டேம். 3

ஆசை போதும்[தொகு]

215

வேகைக்கு விறகானே மெலியா நின்றே மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகுங் காணேஞ்
சாகைக்கித் தனையாசை போதும் பாழிற் சாக்காடு மரிதாகத் தந்து வைத்தாய். 4

பசிக்கு ஒன்றும் இல்லேம்[தொகு]

216

சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் கீழ்நாங்கண் மேனாட் செய்த
பாவத்தா லெம்வயிற்றிற் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம். 5

மூளி வாய் ஆனோம்[தொகு]

217

பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற் பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோடப் பாராய். 6

நெற்றாகி யுள்ளோம்[தொகு]

218

அகளங்க னமக்கிரங்கா னரசரிடுந் திறைக்கருள்வா னவன்றன் யானை
நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றா யற்றேம். 7

நற்குறியால் பொறுத்துள்ளோம்[தொகு]

219

மூக்கருகே வழுநாறி முடைநாறி உதடுகளுந் துடிப்ப வாயை
ஈக்கதுவுங் குறியாலுய்ந் திருக்கின்றேம் அன்றாகி லின்றே சாதும். 8

முதுபேய் வருகை[தொகு]

220

என்றுபல கூளிகளி ரைத்துரைசெய் போதத்
தன்றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய். 9

முதுபேய் வணங்கிக் கூறல்[தொகு]

221

கைதொழுதி றைஞ்சியடி யேன்வடக லிங்கத்
தெய்தியவி டத்துளநி மித்தமிவை கேண்மோ. 10

தீய சகுனங்கள்[தொகு]

222

மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. 11

223

வார்முரசி ருந்துவறி தேயதிரு மாலோ
வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மனையி லூமனெழ ஓரியழு மாலோ
ஓமஎரி ஈமஎரி போல்கமழு மாலோ. 12

224

பூவிரியு மாலைகள் புலால்கமழு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ. 13

விளைவு என்ன ஆகும்[தொகு]

225

எனாவுரைமு டித்ததனை யென்கொல்விளை வென்றே
வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே. 14

இரு குறிகள் நல்லன[தொகு]

226

உங்கள் குறியும் வடகலிங்கத் துள்ள குறியு முமக்கழகே
நங்கள் கணிதப் பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம். 15

பரணிப் போர் உண்டு[தொகு]

227

நிருபரணி வென்றவக ளங்கன்மத யானைநிக ளங்களொடு நிற்பன வதற்
கொருபரணி உண்டென வுரைத்தன வுரைப்படி யுமக்கிது கிடைக்கு மெனவே. 16

களிப்பால் நடித்தன[தொகு]

228

தடித்தன மெனத்தலை தடித்தன மெனப்பல தனிப்பனை குனிப்ப வெனவே
நடித்தன நடிப்பவலி யற்றன கொடிற்றையு நனைத்தன உதட்டி னுடனே. 17

பசியை மறந்தன[தொகு]

229

விலக்குக விலக்குக விளைத்தன வெனக்களி விளைத்தன விளைத்தன விலா
அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே. 18

வயிறு நிரம்பப் போதுமா[தொகு]

230

ஆடியிரைத் தெழுகணங்க ளணங்கேயிக் கலிங்கக்கூழ்
கூடியிரைத் துண்டொழியெங் கூடாரப் போதுமோ. 19

ஒட்டிக்கு இரட்டி[தொகு]

231

போதும்போ தாதெனவே புடைப்படல மிடவேண்டா
ஓதஞ்சூ ழிலங்கைப்போர்க் கொட்டிரட்டி கலிங்கப் போர். 20