கலித்தொகை/1.பாலைக்கலி/11-20

விக்கிமூலம் இலிருந்து

பாடல்:11 (அரிதாய)[தொகு]

அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:


'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;


'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;


'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.


என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே.

பாடல்: 12 (இடுமுள்)[தொகு]

இடு முள் நெடு வேலி போலக், கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு, ஆங்கு கை தெறப்பட்டு,
வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் -
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறு நுதல் நீத்துப் பொருள் வயின் செல்வோய்!


உரன் உடை உள்ளத்தை, செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா -
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை -


கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை;
போற்றாய் - பெரும! நீ; காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு, பொருள் வயின் போகுவாய்,
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.

பாடல்: 13 (செருமிகு)[தொகு]

செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவாய்ப்,
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,
மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது,
சேறு சுவைத்துத், தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ்சுரம் -

எல் வளை! எம்மொடு நீ வரின், யாழ நின்
மெல் இயல் மேவந்த சீறடித், தாமரை,
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக்
கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ?

நலம்பெறு சுடர் நுதால்! எம்மொடு நீ வரின்,
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்,
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?

கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட,
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ?

என ஆங்கு,
அனையவை காதலர் கூறலின், 'வினை வயின்
பிரிகுவர்' எனப் பெரிது அழியாது, திரிபு உறீஇக்,
கடுங்குரை அருமைய காடு எனின், அல்லது,
கொடுங் குழாய்! துறக்குநர் அல்லர் -
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே.

பாடல்: 14 (அணைமருள்)[தொகு]

அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இரும் கூந்தல்,
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சில நிரை வால் வளைச் செய்யாயோ! எனப்,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே;

'பொருள் அல்லால் பொருளும் உண்டோ?' என, யாழ நின்
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?

'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு?' என,
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ?

செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ?

அதனால்,
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து
அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே.

பாடல்: 15 (அரிமான்)[தொகு]

அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்
புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் -
இணைப் படைத் தானை அரசோடு உறினும் -
கணைத் தொடை நாணும், கடும் துடி ஆர்ப்பின்,
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடும் சினத்து, ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் -

புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?

பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

என ஆங்கு,
அனையவை போற்ற, நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயல் ஆகும்; மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

பாடல்: 16 (பாடின்றி)[தொகு]

பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க,
வாடுபு வனப்பு ஓடி, வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர் திறத்து இனி
நாடும்கால், நினைப்பது ஒன்று உடையேன் மன்? அதுவும் தான்:

தொல்நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து உள்ளார்,
துன்ன, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடைக்
'கல் மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதுவோ?

புனை இழாய்! ஈங்கு நாம் புலம்பு உறப் பொருள் வெ·கி,
முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடைச்,
'சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!' எனக்,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதுவோ?

ஒளி இழாய்! ஈங்கு நாம் துயர் கூரப், பொருள் வயின்,
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இ¨,
'முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக' என,
வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதுவோ?

என ஆங்கு,
செய் பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கத், தெருமரல் - தேமொழி! -
'வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு' என,
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினை திறத்தே.

பாடல்: 17 (படைபண்ணி)[தொகு]

படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணைப்
புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும்,
'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர் வயின்
நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கல் காண் - நறு நுதால்!

தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்பத், துறந்து நீ,
வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை,
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது,
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?

ஆற்றா நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ,
தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன், முயல்வளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக்
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாளும் நிலையுமோ?

வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ,
பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவைத்,
தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின்
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?

என ஆங்கு,
பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல்,
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல், மருந்து, ஆகி மனன் உவப்பப்
பெரும் பெயர் மீளி - பெயர்ந்தனன் செலவே!

  • செங்கைப் பொதுவன் விளக்கம்
பொருள் தேடும்பொருட்டு அவன் அவளைப் பிரிந்து செல்ல எண்ணினான். தோழி பக்குவமாக எடுத்துரைத்தாள். அவன் பிரிவதைக் கைவிட்டுவிட்டான். இதனைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
பாவி விரித்த மெத்தை. அதன்மேல் பல விரிப்புகள். அவனும் அவளும் அரவணைத்துக்கொண்டு கிடந்தனர். அவன் சற்றே விலகி ஒதுங்கினான். பெருமூச்சு விட்டான். “உனக்கு என்ன நேர்ந்தது” – அவள் வினவினாள். அவனோ வெளியே வந்துவிட்டான். தோழி அவனிடம் சொல்கிறாள்.
பழைய அழகெல்லாம் தொலைந்து இவள் துயரம் கொள்கிறாள். இந்த நிலையில் விட்டுவிட்டு நீ உன் தொழிலை இவளைப் பிரிந்து செய்ய முனைகின்றாய். இப்படி முனையும்போது ஒளி இழந்த அம்மாவாசை நிலவைக் காட்டிலும் இவளது உடல்நலம் அனைத்தும் ஓடிப்போகும் அல்லவா?
ஆற்றல் மிக்க பிரிவுநோய் இவளை அடித்துக் கொல்கிறது. இவள் பூண்டிருக்கும் அணிகலன்கள் மேனியோடு வாடுகின்றன. இந்த நிலையில் இவளை விட்டுவிட்டுப் பொருளைத் தொகுத்துவரப் பிரிய முயல்கின்றாய். பொய்கையில் இலைகளுடன் மணக்கும் தாமரை மலர் இதழ்களைக் கூற்றுவன் விழச் செய்வதால் மாண்டுவிடுவது போல ஆகி இவளது வாழ்நாளும் நிலைத்திருக்காது அல்லவா?
இவளது அழகு குறைந்துகொண்டே இருக்கும்போது நீ இவளைப் பிரிந்து மலை வழியாகச் செல்ல முயல்கின்றாய். அழகிய வண்டு உண்ணும்போது மகிழும் பூம்போது போன்ற இவளது இளமை நிலைத்திருக்குமா?
என்றெல்லாம் பொருத்தமாக நான் அவரிடம் எடுத்துரைத்தேன். அந்தச் சொற்கள் மருத்துவன் ஊட்டிய மருந்து உடம்பைக் குணப்படுத்துவது போல பொருளீட்டிவர நினைத்த அவர் மனத்தைக் குணப்படுத்தியது. அதனால் உன் மீளி (பாலைநிலத் தலைவன்) பிரிந்து செல்லும் நினைவைக் கைவிட்டுவிட்டான் – என்றாள் தோழி தலைவியிடம்.

பாடல்: 18 (அரும்பொருள்)[தொகு]

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்,
பிரிந்து உறை சூழாதி -ஐய! - விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்;

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும், காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிது அரோ
சென்ற இளமை தரற்கு!

பாடல்: 19 (செவ்விய)[தொகு]

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! -
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கு நின் செம்மல் சிதையத்
தவல் அரு செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.

பாடல்:20 (பல்வளம்)[தொகு]

பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்,
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்,
தணிவு இல் வெம் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்று இனம் தாங்கும்
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பகத்,
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்-

'கிளி புரை கிளவியாய்! நின் -அடிக்கு எளியவோ,
தளி உறுபு அறியாவே, காடு!' எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து
அளி என உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ?

'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின்,
ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர், கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும்
தேறு நீர், உடையேன் யான், தெருமந்து ஈங்கு ஒழிவலோ?

'மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்
மாண் நிழல் இல ஆண்டை மரம்' எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலே?

என ஆங்கு,
'அணை அரு வெம்மைய காடு' எனக் கூறுவீர்;
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடைப்
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?

கலித்தொகை
கலித்தொகை 1.பாலைக்கலி
[[]] :[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கலித்தொகை/1.பாலைக்கலி/11-20&oldid=1045965" இலிருந்து மீள்விக்கப்பட்டது