தண்டலையார் சதகம்
படிக்காசுப்புலவர்
[தொகு]'தண்டலையார் சதகம்' என்னும் இந்தச் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்தத் தண்டலையார் சதகத்தைப் 'பழமொழி விளக்கம்' என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இந்நூல் 'பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்' என்று பெயர்பெற்றது.
சதகம்:
'சதம்' என்றால் நூறு ஆகும்; 'சதகம்' என்றால் நூறுபாடல்களால் ஆன இலக்கியம் என்றுபொருள். சதம்> சதகம்.
ஊர்:
இந்த இலக்கியத்தைப் படைத்த படிக்காசுப்புலவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். "தொண்டைநாடு சான்றோர் உடைத்து" என்பது சான்றோர் வாக்கு. இவர் தொண்டைமண்டலத்தில் உள்ள 'பொற்களத்தூர்' என்னும் ஊரில் பிறந்தவர்; இது 'தென்களத்தூர்' என்றும் வழங்கப்பெறும். இவர் செங்குந்தர் மரபிலே தோன்றியவர். இளமையிலேயே நன்முறையில் கல்விகற்றுப் பல தமிழ்நூல்களில் புலமை பெற்று விளங்கினார். இவர் அருட்கவி ஆதலால் இவரின் வாக்குத் தெய்வ வாக்காக மதிக்கப்பெற்றது.
காளத்தி வள்ளல்:
அக்காலத்தில் தொண்டைமண்டல வல்ல நகரத்தில் சீரும் சிறப்புமுடைய செல்வராய் விளங்கியவர் 'காளத்தி' வள்ளல் ஆவார்; அவரைப்பாடி அவரிடமிருந்து ஏராளமான பரிசுகள் பெற்றுச் சிறப்புற்று இருந்தார்.
கறுப்ப முதலியார்
பின்னர் 'மாவண்டூர்' எனும்ஊரில் சிறப்பாய் வாழ்ந்திருந்த செல்வர் 'கறுப்ப முதலியார்' என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கித் 'தொண்டை மண்டல சதகம்' என்னும் நூலைப்படைத்துக் கற்றுவல்லோர் நிறைந்த அவையினில் அரங்கேற்றினார். அதன் சிறப்பில் மனம் பறிகொடுத்த முதலியார் அவருக்குப் பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்பித்தார்.
படிக்காசுப்புலவர் எனும்பெயர்:
அதன் பின்னர்ப் பல தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் தில்லை என்னும் பெயர்பெற்ற சிதம்பரத்திற்கு வந்தார். அங்குப் பொற்சபையில் நடமாடும் நடராசப்பெருமானாகிய கூத்தப்பிரானை மனமுருகித் துதிக்கும்போது சபாநாயகர், பஞ்சாட்சரப்படி எனவழங்கப்பெறும் ஐந்தெழுத்துப்படியில் பொற்காசுவைத்து அருளினார். இறைவன் அளித்த பொற்காசுகளை, (ஐந்தெழுத்துப்) படியினில் வைத்துப் பெற்றதனால், அன்றுமுதல் அவர் 'படிக்காசுப்புலவர்' என உலகோரால் அழைக்கப்பெற்றார்.
சேதுபதிமன்னர்:
அதன்பின் இராமநாதபுரம் சென்று, இரகுநாதசேதுபதி மன்னர் அவர்களைக்கண்டு, அவரைப்பாடிப் பரிசில்பெற்றுச் சிறிது காலம் அங்கிருந்தார்.
வள்ளல்சீதக்காதி:
பின் அக்காலத்தில் வள்ளல் தன்மையில் மிகச்சிறந்து விளங்கிய வள்ளல்சீதக்காதி அவர்களைக் காயல் பட்டினத்தி்ல் சென்று கண்டு அவரைப்பாடிச் சிறப்புகள் பல பெற்றார். வள்ளல்சீதக்காதி இசுலாம் சமயத்தவராயினும் பிறமதங்களையும் மதித்துப்போற்றிய பெருந்தகை; இன்னமதத்தைச் சார்ந்தவர் என்று பாராது, எல்லாமதத்தினரையும் மனிதர்களாக மதித்துப்பார்த்து அவர்களுக்குப் பொருள் வழங்கிஉதவிய கொடையாளர். அவரோடு பெரும் நட்புக்கொண்டு இருந்தவர் படிக்காசுப்புலவர்; சீதக்காதி இறந்தபோது அவர்மேல் இவர்பாடிய பாடல்கள் நெஞ்சை நெகிழ்விப்பனவாம்.
தண்டலை:
பின்னர் அவர் திருச்செந்தூர் சென்று அங்கு முருகப்பெருமானை வணங்கிப் பின்னர் வடதிசைநோக்கித் தம் பயணத்தைத் தொடங்கித் 'தண்டலை' எனும் தலத்தினை வந்தடைந்தார். தண்டலை என்பது 'தி்ருத்தண்டலை நீணெறி' எனவும் வழங்கப்பெறும். அங்கிருந்த அன்பர்களின் வேண்டுகோளின்படி இந்தத் 'தண்டலையார் சதகம்' எனும் அற்புத இலக்கிய்த்தைப் படைத்தருளினார். பின்னர் இந்தநூல் அங்கிருந்த சந்நிதியில் அரங்கேற்றப் பெற்றது.
தருமபுரம்:
அங்கேசில காலம் அன்பர் ஆதரவில் இருந்த படிக்காசுப்புலவர் பின்னர்த் தருமபுரம் சென்று அங்குள்ள தருமபுர ஆதீனத்து ஞானாசிரியரால் ஆட்கொள்ளப்பெற்று ஞானதீக்கையும், சந்நியாசமும் அருளப்பெற்றார்; அன்று முதல் அவர் 'படிக்காசுத்தம்பிரான்' என அழைக்கப்பெற்றார். பின்னர்ப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர்பெற்ற வைத்தீசுவரன் கோயில் சென்று, அக்கோயிற்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழும்நாளில் அவர் 'வேளூர்க்கலம்பகம்' எனும் கலம்பகநூலைப் படைத்து, அக்கோயிலிலேயே அதனை அரங்கேற்றித் தமிழ் உலகுக்கு வளம் சேர்த்தார்.
மீண்டும் தில்லையில்:
இறுதிக்காலத்தில் தமக்கு முன்னர்ப் படிக்காசு அளித்து உதவிய தில்லைப்பெருமானின் திருவடியையே தினந்தோறும் தரிசிக்கவேண்டுமென்ற அவாவினால், அவர் மீண்டும் தில்லையை அடைந்து அங்கே ஒரு திருமடம் அமைத்துத் தினந்தோறும் நடராசப் பெருமானைத் தரிசித்து வரும்போது, அப்பெருமானும் நம் புலவருக்கு நாளும் பொற்காசு மீண்டும் படியில் வைத்து அருளி வந்தார். இவ்விதம் இறைவனிடம் 'பொருளும், அருளும்' பெற்று நல்வாழ்வு வாழ்ந்த படிக்காசுப்புலவர், மாணாக்கர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியப்பணியும் செய்துவந்தார். பின்னர்க் 'கோயில்' எனும் சிறப்பினைப் பெற்ற சிதம்பரத்திலேயே இறுதிநாள் வரை வாழ்ந்திருந்து இறுதியில் கூத்தப்பெருமானின் திருவடியடைந்தார் படிக்காசுப்புலவர். இதுவே அவர்பற்றி மரபுவழியாக நமக்குக் கிடைக்கும் வரலாறாகும். இனி அவர் அருளிய தண்டலையார் சதகம் நூலைக் காண்போம்!
:படிக்காசுப்புலவர் பாடிய
தண்டலையார் சதகம்
[தொகு](பிழையில்லாப்பதிப்பு)
[தொகு]காப்பு
[தொகு]சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத் தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபாகன் தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்ட மிசைந்தபழ மொழிவிளக்கம் இயம்பத் தானே.
வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல் விளம்பியசொல் மிகுபு ராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல் இசைந்தபொருள் எல்லா நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன் அகத்தெனக்குத் துணைசெய் வானே!
அவையடக்கம்
[தொகு]வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள் முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவதனில் ஊசிவிற்கும் வினைய தாமே!
நூல்
[தொகு]நூல்
[தொகு]பாடல்:01 (வரமளிக்கும்)
[தொகு]வரமளிக்கும் தண்டலையார் திருக்கோயிலுட் புகுந்து வலமாய் வந்தே
ஒருவிளக்கா கிலும்பசுவின் நெய்யுடன்தா மரைநூலின் ஒளிர வைத்தாற்
கருவிளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை கைலாசங் காணி யாகும்
திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையும் தீரும் தானே! (01)
பழமொழி: "திருவிளக்கிட்டாரைத் தெய்வமறியும்", "விளக்கிட்டால் வினைதீரும்"
பாடல்: 02 (கூன்செய்த)
[தொகு]கூன்செய்த பிறையணியும் தண்டலையார் கருணைசெய்து கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தார் உபகாரம் என்னால் உண்டோ
ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் வளர்ந்தேற உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யுமதை மறந்தி டாதே. (02)
பழமொழி: வான்செய்த உதவிக்கு வையகம்தான் என்னசெய்யும்? (வான்-மழை; வையகம்-உலகம்)
=உலகத்தை வாழவைக்கும் மழைக்கு நன்றிகாட்ட உலகமக்கள் என்னசெய்ய முடியும்? என்றுபொருள்.
பாடல்: 03 (அட்டதிசை)
[தொகு]அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும் பாதாளம் அதிற்சென் றாலும்
பட்டமென வானூடு பறந்தாலும் என்னஅதிற் பயனுண் டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா ரேமுன்னாட் பெரியோர் கையில்
இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ தில்லை தானே!(03)
பழமொழி: இட்டபடி அல்லாமல் வேறு ஆசைப்பட்டால் கிடைத்திடுமோ?
(உள்ளதுதான் கிடைக்கும்/கிடைப்பதுதான் கிடைக்கும்/ ஒட்டுவதுதான் ஒட்டும்- என இது இன்றும் வழக்கி்ல் உள்ளது)
பாடல்: 04 (தன்மமதை)
[தொகு]தன்மமதைச் செயல்வேண்டும் தண்டலைநீள் நெறியாரே தயவு செய்வார்
வன்மவினை செயல்வேண்டா பொய்வேண்டா பிறரையொன்றும் வருத்தல் வேண்டா
கன்மநெறி வரல்வேண்டா வேண்டுவது பலர்க்கும்உப காரம் ஆகும்
நன்மைசெய்தார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று நலிவர் தாமே. (04)
பழமொழி: நன்மைசெய்தார் நன்மைபெறுவர் தீமைசெய்தார் தீமை பெறுவர்.
(இது, 'நல்லதுசெய்தால் நல்லது கிடைக்கும் கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும்' என்று இன்றும் மக்கள் வாய்மொழியாக வழங்கி வருகின்ற ஒன்று)
பாடல்: 05 (புல்லறிவு)
[தொகு]புல்லறிவுக் கெட்டாத தண்டலையார் வளம்தழைத்த பொன்னி நாட்டில்
சொல்லறமா தவம்புரியும் சௌபரியும் துறவறத்தைத் துறந்து மீண்டான்
நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை மனைவியுடன் நடத்தி நின்றால்
இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல் இயற்கை தானே. (05)
பழமொழி: இல்லறமே பெரிது. (சௌபரி- ஒருமுனிவன்; இல்லறமே சிறந்தது என்று உணர்ந்து, துறவறத்தைத் துறந்து இல்லறம் பூண்டவர்)
'கொன்றை வேந்தன்' எனும்நூல், இல்லறமல்லது நல்லறமன்று என்று கூறும்.
பாடல்: 06 (முக்கணர்)
[தொகு]முக்கணர்தண் டலைநாட்டில் கற்புடைமங் கையர்மகிமை மொழியப் போமோ
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி வில்வேடனை எரித்தாள் ஒருத்திமூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு பரிதடுத்தாள் ஒருத்தி மூவர்பண்டு
கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா என்றொருத்தி கூறி னாளே. (06)
பழமொழி: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
கற்புடை மங்கையர்:
- எரிகுளிர வைத்தாள்- சீதை;
- வேடனை எரித்தாள்- தமயந்தி;
- அமுதளித்தாள்- அத்திரி முனிவர் மனைவி 'அநுசூயை';
- எழுபரிதடுத்தாள்- நளாயினி;
- "கொக்கென்று....கொங்கணவா" என்று கூறினவள்- வள்ளுவர் மனைவி 'வாசுகி'.
பாடல்: 07 (நன்றிதரும்)
[தொகு]நன்றிதரும் பிள்ளையொன்று பெற்றாலும் குலமுழுதும் நன்மை உண்டாம்
அன்றியறி(வு) இல்லாத பிள்ளையொரு நூறுபெற்றும் ஆவ துண்டோ
மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன் வருடந் தோறும்
பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பலனுண் டாமே. (07)
பழமொழி: பன்றிபல குட்டி போட்டால் என்ன? யானையின் ஒருகுட்டிக்கு இணையாமோ?
'பன்றிபலகுட்டி போட்டாற்போல' என்று இன்றும் உலகவழக்கில் உண்டு.
பாடல்: 08 (அல்லமரும்)
[தொகு]அல்லமருங் குழலாளை வரகுணபாண் டியராசர் அன்பால் ஈந்தார்
கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊனமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார்
சொல்லியதண் டலையார்க்குக் கீரையுமா வடுவுமொரு தொண்டர் ஈந்தார்
நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக்(கு) என்றதனை நல்கு வாரே. (08)
பழமொழி: நல்லதுகண்டால் நாயகனுக்குக் கொடுப்பர். (நாயகன்=இறைவன்)
பாடல்: 09 (திருவிருந்த)
[தொகு]திருவிருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்து நல்லோர்
ஒருவிருந்தா கிலுமின்றி உண்டபகல் பகலாமோ உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரஞ் செய்தனுப்பி இன்னமெங்கே பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா(து) உணுஞ்சோறு மருந்து தானே.(09)
பழமொழி: விருந்தில்லாத சோறு மருந்து.
பாடல்: 10 (பொற்குடையும்)
[தொகு]பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும் கொடுப்பதென்ன பொருளோ என்று
நற்கமல முகமலர்ந்தே உபசாரம் மிக்கஇன்சொல் நடந்தால் நன்றே
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார் வளநாட்டில் கரும்பின் ஏய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை தானே. (10)
பழமொழி: சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்தாற்போலே.
பாடல்: 11 (குறும்பெண்ணா)
[தொகு]குறும்பெண்ணா(து) உயர்ந்தநல்லோர் ஆயிரம்சொன் னாலும்அதைக்குறிக் கொளாமல்
வெறும்பெண்ணா சையில்சுழல்வேன் மெய்ஞ்ஞானம் பொருந்தியுனைவேண் டேன்அந்தோ
உறும்பெண்ணார் அமுதிடஞ்சேர் தண்டலைநீள் நெறியே யென்உண்மை தேறில்
எறும்பெண்ணா யிரமப்பாற் கழுதையுங்கை கடந்ததென்றோன் எண்ணந் தானே. (11)
பழமொழி: 'எறும்பு எண்ணாயிரம் போனது அப்பால் கழுதையும் கைகடந்தது, என்றாற் போல'.
பாடல்: 12 (துப்பிட்ட)
[தொகு]துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும் பெரிதாகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினையளவு செய்தநன்றி பனையளவாச் சிறந்து தோன்றும்
கொப்பிட்ட உமைபங்கர் தண்டலையார் வளநாட்டில் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கடமை உளவரையும் நினைக்குமிந்த உலகம் தானே. (12)
பழமொழி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பாடல்: 13 (மேட்டுக்கே)
[தொகு]மேட்டுக்கே விதைத்தவிதை வீணருக்கே செய்தநன்றி மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை பரத்தையர்க்கே தேடியிட்ட வண்மை எல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார் வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கே எரித்தநிலா கானலுக்கே பெய்தமழை கடுக்கும் தானே. (13)
பழமொழி: காட்டுக்கு எரித்தநிலா, கானலுக்குப்பெய்த மழை போல
பாடல்: 14 (சங்கையற)
[தொகு]சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும்
அங்கண்உல கினில்சிறியோர் தாமடங்கி நடந்துகதி யடைய மாட்டார்
திங்களணி சடையாரே தண்டலையா ரேசொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக் காயா காதே. (14)
பழமொழி: கங்கையிலே படர்ந்தாலும் பேச்சுரைக்காய் நல்லசுரைக்காய் ஆகாது.
பாடல்: 15 (உழையிட்ட)
[தொகு]உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும் வெகுளிவிட்டும் உலக வாழ்வில்
பிழைவிட்டும் இன்னமின்னம் ஆசைவிடாது அலக்கழியப் பெற்றேன் அந்தோ
தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீள் நெறியேஎன் றன்மை யெல்லாம்
மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை யாயிருந்த வண்ணந்தானே. (15)
பழமொழி: மழைவிட்டும் தூவானம் விடவில்லை.
பாடல்: 16 (கொச்சையிற்)
[தொகு]கொச்சையிற்பிள் ளைக்குதவும் தண்டலையார் வளநாட்டில் கொடியாய் வந்த
வச்சிரன்பிள் ளைக்குமுன மாதவனே புத்திசொன்னான் வகையும் சொன்னான்
அச்சுதப்பிள் ளைக்குமந்த ஆண்டவரே புத்திசொன்னார் ஆத லாலே
துர்ச்சனப்பிள் ளைக்(கு)ஊரார் புத்திசொல்லு வார்என்றே சொல்லு வாரே. (16)
பழமொழி: துர்ச்சனப்பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்.
- கொச்சையிற்பிள்ளை- திருஞான சம்பந்தர்;
- கொச்சை= சீர்காழி;
- கொடி- காகம்;
- வச்சிரன்பிள்ளை- இந்திரன்மகன்;
- மாதவன்- இராமபிரான்;
- அச்சுதப்பிள்ளை- திருமால்;
- ஆண்டவர்- சிவபெருமான்.
பாடல்: 17 (கறுத்த)
[தொகு]கறுத்தவிடம் உண்டருளும் தண்டலையார் வளநாட்டில் கடிய தீயோர்
குறி்த்துமனை யாள்அரையில் துகிலுரிந்தும் ஐவர்மனம் கோபித் தாரோ
பறித்(து)உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும் அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே ஆள்வார் பொங்கினவர் காடுறைந்து போவர் தாமே. (17)
பழமொழி: பொறுத்தவர் பூமி ஆள்வார்,பொங்கினவர் காடாள்வார்.
பாடல்: 18 (அள்ளித்)
[தொகு]அள்ளித்தெண் ணீறணியுந் தண்டலையார் வளநாட்டில் ஆண்மை உள்ளோர்
விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர் அழகுடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்(று)அழன்று நமக்கில்லை எனவுரைத்(து)இங்(கு) உழல்வார் எல்லாம்
பிள்ளைபெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறியும் பெற்றி யோரே. (18)
பழமொழி: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாளாம்
பாடல்: 19 (மண்ணுல)
[தொகு]மண்ணுலகா ளவும்நினைப்பார் பிறர்பொருள்மேல் ஆசைவைப்பார் வலிமை செய்வார்
புண்ணியம்என் பதைச்செய்யார் கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார்
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார் வகுத்த விதிப்படி யல்லாமல்
எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும் இயற்கை தானே. (19)
பழமொழி: எண்ணமெல்லாம் பொய்யாம் மௌனமே மெய்யாம்.
பாடல்: 20 (சொன்னத்தை)
[தொகு]சொன்னத்தைச் சொல்லுமிளங் கிள்ளைஎன்பார் தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன்(று) இல்லாத ஈனர் எல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல் முறைபேசிச் சாடை பேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து மொழிவர் தாமே.(20)
பழமொழி: முன்னுக்கொன்றாய்ப் பின்னுக்கொன்றாய்ப் பேசுவார் முகத்தில் விழிக்கக் கூடாது.
பாடல்: 21 (கொடியருக்கு)
[தொகு]கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலுந் தெரியாது கொடையில் லாத
மடையுருக்கு மதுரகவி யுரைத்தாலும் அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்
படியளக்குந் தண்டலைநீள் நெறியாரே உலகமெலாம் பரவி மூடி
விடியன்மட்டும் மழைபெயினு மதினோட்டாங் கிளிஞ்சின் முளைவீசி டாதே. (21)
பழமொழி: விடியவிடிய மழைபெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது
பாடல்: 22 (செங்காவி)
[தொகு]செங்காவி மலர்த்தடஞ்சூழ் தண்டலைநீள் நெறியாரேநின் செயலுண் டாகில்
எங்காகில் என்அவரவர் எண்ணியஎல் லாமுடியும் இல்லை யாகில்
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால் வெளளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே ஆகும் தானே. (22)
பழமொழி: ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோடுதான்/ தன்பாவம் தன்னோடுதான்
பாடல்: 23 (தாயறிவாள்)
[தொகு]தாயறிவாள் மகளருமை தண்டலைநீள் நெறிநாதர் தாமே தந்தை
யாய்அறிவர் எமதருமை பரவையிடம் தூதுசென்ற(து) அறிந்திடாரோ
பேயறிவார் முழுமூடர் தமிழருமை அறிவாரோ பேசு வாரோ
நாயறியாது ஒருசந்திச் சட்டிபா னையினந்த ஞாயம் தானே. (23)
பழமொழி: நாய்க்குத் தெரியுமோ ஒருசந்திப்பானை?/ நக்குற நாய்க்குச் செக்குந்தெரியாது, சிவலிங்கமும் தெரியாது!
பாடல்: 24 (கட்டுமாங்)
[தொகு]கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின் கனிகள்உப கார மாகும்
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவுஞ் சடையாரே தண்டலையா ரேசொன்னேன் வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலு மென்னுண் டாமே. (24)
பழமொழி: எட்டிபழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
பாடல்: 25 (ஓதரிய)
[தொகு]ஓதரிய தண்டலையார் அடிபணிந்து நல்லவனென் றுலக மெல்லாம்
போதமிகும் பேருடனே புகழ்படைத்து வாழ்பவனே புருட னல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த பூதமென இருந்தா லென்ன
காதவழி பேரில்லான் கழுதையோ(டு) ஒக்குமெனக் காண லாமே. (25)
பழமொழி: காதவழி பேரில்லான் கழுதைக்கொப்பான்
பாடல்: 26 (பரியாமல்)
[தொகு]பரியாமல் இடுஞ்சோறும் ஊமைகண்ட கனவும்போல் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும் இல்லாதான் அறியுமோதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள் நெறியாரே கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு குறித்ததெனச் செப்ப லாமே.
பழமொழி: செவிடன்காதில் ஊதிய சங்குபோல.
பாடல்:27 (முன்னரிய)
[தொகு]முன்னரிய மறைவழங்குந் தண்டலையார் ஆகமத்தின் மொழிகேளாமல்
பின்னுயிரை வதைத்தவனும் கொன்றவனும் குறைத்தவனும் பெற்றுளோனும்
அன்னெறியே சமைத்தவனும் உண்டவனும் நரகுறுவ தாத லாலே
தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவதும் தக்க தாமே. (27)
பழமொழி: தன்னுயிர்போல் மன்னுயிர்க்கு இரங்கவேண்டும்
பாடல்: 28 (உருவெடுத்த)
[தொகு]உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும் வளர்க்கவுடல் உழல்வ தல்லான்
மருவிருக்கு நின்பாத மலர்தேடித் தினம்பணிய மாட்டேன் அந்தோ
திருவிளக்கு மணிமாடத் தண்டலைநீள் நெறியெயென் செய்தி யெல்லாம்
சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லாத் தன்மை தானே. (28)
பழமொழி: சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை.
பாடல்: 29 (காதிலே)
[தொகு]காதிலே திருவேடங் கையிலே செபமாலை கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள் மனதிலே கரவடமாம் வேடமாமோ
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள் நெறியாரே மனிதர் காணும்
போதிலே மவுனமிராப் போதிலே ருத்ராக்கப் பூனை தானே. (29)
பழமொழி: உருத்திராட்சப் பூனை போல ;
- ருத்ராட்சம்=உருத்திராக்கம்.
பாடல்: 30 (மானொன்று)
[தொகு]மானொன்று வடிவெடுத்து மாரீசன் போய்மடிந்தான் மானே யென்று
தேனொன்று மொழிபேசிச் சீதைதனைச்சிறையிருக்கத் திருடிச்சென்றோன்
வானொன்றும் அரசிழந்தான் தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர்
தானொன்று நினைக்கையிலே தெயவமொனறு நினைப்பதுவும் சகசந்தானே. (30)
பழமொழி: தானொன்றுநினைக்கத் தெய்வமொன்றுநினைக்கும்./நாமொன்றுநினைக்கத் தெய்வமொன்றுநினைக்கும்
பாடல்: 31 (கைசொல்லும்)
[தொகு]கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுரியார் தண்டலையார்க் காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது பொருள் நில்லாது
மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர் பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதிலை மெய்ம்மை தானே. (31)
பழமொழி: மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வானோ?
பாடல்: 32 (அந்தணரை)
[தொகு]அந்தணரை நல்லவரைப் பரமசிவ னடியவரை அகந்தை யால்ஓர்
நிந்தனைசொன் னாலும்என்ன வைதாலும் என்னவதின் நிடேதம் உண்டோ
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள் நெறியாரே துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த போதிலென்ன தாழ்ச்சி தானே. (32)
பழமொழி: சந்திரனைப்பார்த்து நாய் குரைத்தால்ஆவதென்ன?
பாடல்: 33 (கோடாமல்)
[தொகு]கோடாமல் பெரியவர்பால் நடப்பதன்றிக் குற்றமுடன் குறைசெய் தோர்கள்
ஆடாகிக் கிடந்தவிடத் ததன்மயிரும் கிடவாமல் அழிந்து போவார்
வீடாநற் கதியுதவும் தண்டலையா ரேசொன்னேன் மெய்யோ பொய்யோ
கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக் கேடான கொள்கை தானே. (33)
பழமொழி: கோடாலிக்காம்பு தன் குலத்துக்கீனம்/ குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
பாடல்: 34 (சின்னமெங்கே)
[தொகு]சின்னமெங்கே கொம்பெங்கே சிவிகையெங்கே பரியெங்கே சிவியா ரெங்கே (சிவியார்=பல்லக்குத் தூக்குவோர்/ஓச்சாதியார்)
பின்னையொரு பாழுமில்லை நடக்கைகுலைந் தாலுடனே பேயே யன்றோ (நடக்கை=ஒழுக்கம்)
சொன்னவிலும் தண்டலையார் வளநாட்டில் குங்குலியத் தூபம் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தால் கும்பிடெங்கே வம்பரிது தனையெண் ணாரே.
பழமொழி: சன்னதம் குலைந்தால் கும்பிடெங்கே கிடைக்கும்
பாடல்: 35 (சிறுபிறை)
[தொகு]சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ் பொன்னிவளஞ் செழித்த நாட்டில்
குறையகலும் பெருவாழ்வும் மைந்தருமக் களும்பொருட்டாக் குறித்தி டாமல்
மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும்சேர் மகிமை யாலே
துறவறமே பெரிதாகும் துறவிக்கு வேந்தனொரு துரும்பு தானே. (35)
பழமொழி: துறவிக்கு வேந்தனும் துரும்பு.
(ஒப்புமை: ஒளவையார் பாடல் ஒன்று கீழ்வருமாறு:
- போந்த உதாரனுக்குப் பொன்துரும்பு வீரருக்குச் (உதாரன்=வள்ளல்)
- சேர்ந்த மரணஞ் சிறுதுரும்பாம் -ஆய்ந்த
- அறிவோர்க்கு நாரியரும் துரும்பாம் இல்லத்
- துறவிக்கு வேந்தன் துரும்பு.)
பாடல்: 36 (பேரிசைக்கும்)
[தொகு]பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தருமா தருஞ்சூழப் பிரபஞ் சத்தே
பாரியையுற் றிருந்தாலும் திருநீற்றில் கழற்காய்போல் பற்றில் லாமல்
சீரிசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை நினைக்கின் முத்தி சேரலாகும்
ஆரியக்கூத் தாடுகினும் காரியமேல் கண்ணாவ தறிவு தானே. (36)
பழமொழி: ஆரியர் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பர்
பாடல்: 37 (இரந்தனை)
[தொகு]இரந்தனையித் தனைநாளும் பரந்தனைநான் என்றலைந்தாய் இனிமேலேனும்
கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி யிருந்தனையேல் உள்ளவெலாம் உண்டாம் உண்மை
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல் தண்ணீரும் வார்ப்பர் தாமே. (37)
பழமொழி: மரம்வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
பாடல்: 38 (நாற்கவியும்)
[தொகு]நாற்கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்துசெங்கோல் வழுவாமல் புவியாளும் வண்மை செய்த
தீர்க்கமுள்ள அரசனையே தெய்வமென்பார் கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனுந்தன் மந்திரியும் ஆழ்நரகின் மூழ்கு வாரே.(38)
பழமொழி: செங்கோல் மன்னன் தெய்வமாவான்.
ஒப்புமைப் பகுதி: நீதிநெறிவிளக்கம்
- குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
- புதல்வர்க்குத் தந்தையும் தாயும் அறவோர்க்(கு)
- அடிகளே தெய்வம் அனைவர்க்கும் தெய்வம்
- இலைமுகப் பைம்பூண் இறை.
பாடல்: 39 (ஓதரிய)
[தொகு]ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக் கழகாகும் உலகில் யார்க்கும்
ஈதலுட னறிவுவந்தால் இனியகுணங் களுக்கழகாய் இருக்கும் அன்றோ
நீதிபெறு தண்டலையார் திருநீறு மெய்க்கழகாய் நிறைந்து தோன்றும்
காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே அழகாகிக் காணும் தானே. (39)
பழமொழி: காதிலணி கடுக்கன் முகத்தினுக்கு அழகு
பாடல்: 40 (பாரதியார்)
[தொகு]பாரதியார் அண்ணாவி புலவரென்பார் கல்வியினிற் பழக்க மில்லார்
சீரறியார் தளையறியார் பல்லக்கேறுவர்புலமை செலுத்திக் கொள்வார்
ஆரணியும் தண்டலைநீள் நெறியாரே இல்க்கணநூல் அறியா ரேனும் (ஆர்=அத்திப்பூ)
காரிகை யாகிலும்கற்றுக் கவிசொல்லார் பேரிகொட்டக் கடவார் தாமே. (40)
பழமொழி: காரிகை கற்றுக் கவிதைசொல்லார் பேரிகைகொட்டிப்பிழைப்பது நன்று.
பாடல்: 41 (அருண்மிகுந்த)
[தொகு]அருண்மிகுந்த ஆகமநூல் படித்தறியார் கேள்வியையும் அறியார் முன்னே
இருவினையின் பயனறியார் குருக்களென்றே உபதேசம் எவர்க்கும் செய்வார்
வரமிகுத்த தண்டலைநீள் நெறியாரே அவர்கிரியா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி காட்டிவரும் கொள்கை தானே. (41)
பழமொழி: குருடனுக்குக் குருடன் வழிகாட்டியது போல.
பாடல்: 42 (நேற்றுள்ளார்)
[தொகு]நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ ஆதலினால் நினைந்த போதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி வைப்பதறி வுடைமை அன்றோ
கூற்றுள்ள மலையவரும் தண்டலையா ரேசொன்னேன் குடபால் வீசும்
காற்றுள்ள போதெவருந் தூற்றிக்கொள் வதுநல்ல கருமந் தானே. (42)
பழமொழி: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
பாடல்: 43 (வர்க்கத்தார்)
[தொகு]வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான வடிவ மானோர்
கற்கட்டா கியமடமுங் காணியுஞ்செம் பொனுந்தேடுங் கரும மெல்லாம்
பொற்கொத்தாஞ் செந்நெல் வயல்தண்டலை யாரே சொன்னேன் பொன்னாடாகும்
சொற்கத்தே போம்போதுங் கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்த வாறே. (43)
பழமொழி: சொர்க்கத்திற்குப் போம்போது கக்கத்திலே ராட்டினத்தைச் சுமந்தாற்போல்.
பாடல்: 44 (ஆம்பிள்ளாய்)
[தொகு]ஆம்பிள்ளாய் எனக்கொடுக்கும் பெரியோரை யடுத்தவர்கள்அவனிக் கெல்லாம்
நாம்பிள்ளாய் அதிகமென்பார் நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளாய் எனுமேனித் தண்டலையார் பூடணமாய் வளர்ந்த நாகம்
ஏன்பிள்ளாய் கருடாநீ சுகமோவென் றுரைத்தவிதம் என்ன லாமே. (44)
பழமொழி: கருடா சுகமா என்றுநாகம் கேட்டதுபோல.
பாடல்: 45 (வடியிட்ட)
[தொகு]வடியிட்ட புல்லர்தமை யடுத்தாலும் விடுவதுண்டோ மலிநீர்க்கங்கை
முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற் பெருவாழ்வு முழுதுமுண்டாம்
மிடியிட்ட வினைதீர்க்கும் தெய்வமிட்டு விடியாமல் வீணர் வாயிற்
படியிட்டு விடிவதுண்டோ அவரருளே கண்ணாகப் பற்று வீரே. (45)
பழமொழி: ஆருக்குஆரிட்டு விடியும் தெய வமிட்டால் விடியும்.
பாடல்: 46 (பொலியவளம்)
[தொகு]பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள் நெறிபாதம் போற்ற நாளும்
வலியவறஞ் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர் வந்து கூடி
மெலியஅறைந் திடும்பொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும் விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ என்செய் வீரே. (46)
பழமொழி: எலியழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடுமோ?
பாடல்: 47 (மற்றவரோ)
[தொகு]மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார் நக்கீரர் வலிய ராகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா யகரடுத்து விளம்பும் போதில்
பற்றுளதண் டலைவாழும் கடவுளென்றும் பாராமல் பயப்ப டாமல்
நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே குற்றமென நிறுத்தி னாரே. (47)
பழமொழி: நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.
பாடல்: 48 (சீரிலகும்)
[தொகு]சீரிலகும் தண்டலையார் திருவருளால் அகமேறிச்செழித்த நாளில்
பாரியென ஆயிரம்பேர்க் கன்னதா னங்கொடுக்கும் பலனைப்பார்க்க
நேரிடும்பஞ் சந்தனிலே எவ்வளவா கிலும்கொடுத்தால் நீதி யாகும்
மாரிபதின் கலநீரில் கோடைதனில் ஒருகுடநீர் வண்மைதானே. (48)
பழமொழி: மழைக்காலத்தில் பத்துகலம்நீர் கொடுப்பதிலும், கோடைக்காலத்தில் ஒருகுடநீர் கொடுப்பதே உயர்வாம்.
பழமொழி: 49 (பிறக்கும்போது)
[தொகு]பிறக்கும்போது ஒருபொருளும் கொடுவந்த தில்லைஉயிர் பிறந்து மண்மேல்
இறக்கும்போ திலும்கொண்டு போவதில்லை என்றுசும்மா இருந்து வீணே
சிறக்கும்தா யினும்அருள்வார் தண்டலையிற் சேராமல் தேச மெல்லாம்
பறக்கும்கா கம(து)இருக்கும் கொம்பறியா(து) எனத்திரிந்தோர் பயன்பெ றாரே. (49)
பழமொழி: பறக்கும்காகம் இருக்கும் கொம்பறியாது.
பழமொழி: 50 (வைதிடினும்)
[தொகு]வைதிடினும் வாழ்த்திடினும் இன்பதுன்பம் வந்திடினும் வம்பு கோடி
செய்திடினும் தண்டலைநீள் நெறியார்தம் செயலென்றே தெளிவ தல்லால்
மெய்தவிர அவர்செய்தார் இவர்செய்தார் எனநாடி வெறுக்க லாமோ
எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த கருமமென்ன இயம்புவீரே. (50)
பழமொழி: எய்தவரிருக்க அம்பை நோவதேன்?
பழமொழி: 51 (வாங்காலம்)
[தொகு]வாங்கால முண்டசெழுந் தண்டலையார் அடிபோற்றி வணங்க நாடிப்
போங்காலம் வருமுன்னே புண்ணியஞ்செய் தரியகதி பொருந்து றாமல்
ஆங்காலம் உள்ளவெலாம் விபசாரம் ஆகியறி(வு) அழிந்து வீணே
சாங்காலம் சங்கரா சங்கரா எனின்வருமோ தருமந் தானே. (51)
பழமொழி: ஆங்காலம் அவிசாரியாடிச் சாங்காலம் சங்கரா என்பதுபோல்.
பழமொழி: 52 (சுற்றமாய்)
[தொகு]சுற்றமாய் நெருங்கியுள்ளார் தனையடைந்தார் கற்றறிந்தார் துணைவே றில்லா
உற்றவே தியர்பெரியோர்க் குதவியன்றிப் பிறர்க்குதவும் உதவி யெல்லாம்
சொற்றநான் மறைபரவும் தண்டலையா ரேசொன்னேன் சுமந்தே நொந்து
பெற்றதாய் பசித்திருக்கப் பிராமணபோ சனநடத்தும் பெருமை தானே. (52)
பழமொழி: பெற்றதாய் பசித்திருக்கப் பிராமணபோசனம் செய்ததுபோல.
பழமொழி: 53 (துன்மார்க்கர்க்கு)
[தொகு]துன்மார்க்கர்க்(கு) ஆயிரம்தான் சொன்னாலும் மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்
சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலுமளவே மெய்யதனிற் தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறைபுகழும் தண்டலையா ரேசொன்னேன் பதமே யான
நன்மாட்டுக் கோரடியாம் நற்பெண்டீர்க் கொருவார்த்தை நடத்தை யாமே.
பழமொழி: நன்மாட்டுக்கோரடியாம், நற்பெண்டிர்க்கொரு வார்த்தை.
பழமொழி: 54 (கரப்பார்க்கு)
[தொகு]கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை செங்கோலிற் கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால் நரகமில்லை பொய்யி தன்றால்
உரப்பார்க்கு நலம்புரியும் தண்டலையா ரேசொன்னேன் ஒருமை யாக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ ஒருக்காலும் இல்லை தானே. (54)
பழமொழி: இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.
பழமொழி: 55 (படுங்கோலம்)
[தொகு]படுங்கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும் பங்கஞ் செய்வார்
நெடுங்கோளும் தண்டமுமா வீணாக வீணனைப்போல் நீதிசெய்வார்
கொடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ மழையுண்டோ கேள்வி யுண்டோ
கொடுங்கோல்மன் னவனாட்டில் கடும்புலிவாழும் காடு குணமென் பாரே. (55)
பழமொழி: கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டைவிடக் கடும்புலி வாழும் காடுநன்று
பழமொழி: 56 (உள்ளவரைக்)
[தொகு]உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று வாழ்ந்தோரும் உறைபெற் றோரும் (உறை=பொருள், இங்குக் கையூட்டு, லஞ்சம்)
தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப் பழித்தோரும் சாய்ந்தே போவார்
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி பணிந்தோரும் பாடி னோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட நல்லோரும் பெருகு வாரே. (56)
பழமொழி: பிள்ளைகளைப்பெற்றோரும், பிச்சையிட்ட நல்லோரும் பெருகி வாழ்வார்
பழமொழி: 57 (விற்பனர்க்கு)
[தொகு]விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக் கண்ணோட்ட மிகவும் செய்வார்
சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியாது இறுமாந்து துன்பம் செய்வார்
பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா ரேசொன்னேன் பண்பில் லாத
அற்பருக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரி குடைமேல் ஆகுந்தானே. (57)
பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்
பழமொழி: 58 (விசையமிகு)
[தொகு]விசையமிகும் தண்டலையார் வளநாட்டில் ஒருத்தர்சொல் லைமெய்யா வெண்ணி
வசைபெருக் அநியாயம் செய்துபிறர் பொருளையெல்லாம் வலிய வாங்கித்
திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மமென்றும் தானமென்றும் செய்வ தெல்லாம்
பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா னங்கொடுக்கும் பண்பு தானே. (58)
பழமொழி: பசுவைக் கொன்று செருப்பைத் தானம் பண்ணினானாம்.
பாடல்: 59 (சிறியவரா)
[தொகு]சிறியவரா முழுமூடர் துரைத்தனமாய் உலகாளத் திறம்பெற் றாலும்
அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமுள் ளுடையோர்கள் ஆக மாட்டார்
மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா ரேசொன்னேன் வாரி வாரிக்
குறுணிமைதா னிட்டாலும் குறிவடிவம் கண்ணாகிக் குணங்கொ டாதே. (59)
பழமொழி: குறுணிமை இட்டாலும் குறிதான் கண்ணாமோ? (குறி= பெண்குறி)
பாடல்: 60 (கற்றவர்க்கு)
[தொகு]கறறவர்க்குக் கோபமில்லை கடந்தவர்க்குச் சாதியில்லை கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பமில்லை நல்லவருக் கொருநாளும் நரகமில்லை
கொற்றவருக் கடிமையில்லை தண்டலையார் மலர்ப்பாதம் கும்பிட்டேத்தப்
பெற்றவர்க்குப் பிறப்பில்லை பிச்சைச்சோற் றினுக்கில்லை பேச்சுத் தானே. (60)
பழமொழி: பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சில்லை
பாடல்: 61 (பரங்கருணை)
[தொகு]பரங்கருணை வடிவாகும் தண்டலையார் வளநாட்டில் பருவம் சேர்ந்த
சரங்குலவு காமகலை தனையறிந்த அதிரூபத் தைய லாரை
வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக் கேகொடுத்தால் வாய்க்கு மோதான்
குரங்கினது கையில்நறும் பூமாலை தனைக்கொடுத்த கொள்கை தானே. (61)
பழமொழி: குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற்போல்
பாடல்:62 (பிரசமுண்டு)
[தொகு]பிரசமுண்டு வரிபாடும் தண்டலையார் வளநாட்டில் பெண்க ளோடு
சரசமுண்டு போகமுண்டு சங்கீத முண்டுசுகந் தானே யுண்டிங்கு
உரைசிறந்த வறுமையுண்டோ இடுக்கமுண்டோ ஒன்றுமில்லை உலகுக் கெல்லாம்
அரிசியுண்டேல் வரிசையுண்டாம் அக்காளுண் டாகில்மச்சான் நண்புண் டாமே. (62)
பழமொழி: அக்காளுண்டானால் மச்சான் உறவுண்டு
பாடல்: 63 (தத்தை)
[தொகு]தத்தைமொழி உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம் தழைத்த நாட்டில்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே நீதியில்லை வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்லும் மந்திரியல் லாதொருவர் போதிப் பாரோ
நித்தலும்உண் சோற்றில்முழுப் பூசணிக்காய் மறைத்ததுவு நிசம தாமே. (63)
பழமொழி: முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தாற்போல
பாடல்: 64 (நேசமுடன்)
[தொகு]நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந் திங்கிதமா நிருபர் முன்னே
பேசுவதே உசிதமல்லால் நடுவிலொரு வன்குழறிப் பேசல் எல்லாம்
வாசமிகும் தண்டலைநீள் நெறியாரே அபிடேக மலிநீர் ஆட்டிப்
பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட் டோட்டுவது போலும் தானே. (64)
பழமொழி: சிவபூசையில் கரடி விட்டதுபோல்/ சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல
பாடல்: 65 (மண்ணுலகில்)
[தொகு]மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில் கெடுப்பதற்கு மனதி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே கெடுவ(ன்)என்ப(து) உண்மை யன்றோ
தென்னவன் சோழன்பணியும் தண்டலைநீள் நெறியாரே தெரிந்து செய்யும்
தன்வினைதன் னைச்சுடஓட் டப்பம்வீட் டைச்சுடவும் தான்கண் டோமே.
பழமொழி: தன்வினைத் தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.