திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: ...'நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன்.'" - எசாயா 28:16,17

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]


1 அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய,
பெரிய, வலிமைமிகு வாளால்
லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை -
லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை - தண்டிப்பார்;
கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை
அவர் வெட்டி வீழ்த்துவார். [*]


2 அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்;
அதைப்பற்றிப் பாடுங்கள்.


3 ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்;
இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்;
எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு
இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.


4 சினம் என்னிடம் இல்லை;
நெருஞ்சியையும் முட்புதரையும்
என்னோடு போரிடச் செய்தவன் எவன்?
நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று,
அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.


5 அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்;
என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும்,
என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.


6 வருங்காலத்தில் யாக்கோபு வேரூன்றி நிற்பான்;
இஸ்ரயேல் பூத்து மலருவான்;
உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான்.


7 அவனை அடித்து நொறுக்கியோரை
ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல்,
அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ?
அவனை வெட்டி வீழ்த்தியோரை
அவர் வெட்டி வீழ்த்தியதுபோல்,
அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ?


8 துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம்
அவர் அவனோடு போராடினார்;
கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால்
அவனைத் தூக்கி எறிந்தார்.


9 ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப்
பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்.
அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே:
சுண்ணாம்புக் கற்களை உடைத்துத்
தூள் தூளாக்குவது போல
அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்;
அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும்
நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.


10 அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது;
குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது.
பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது;
அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.


11 உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன;
பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெரிப்பர்;
ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது;
ஆதலால், அவர்களைப் படைத்தவர்
அவர்கள் மீது இரக்கம் காட்டார்;
அவர்களை உருவாக்கியவர்
அவர்களுக்கு ஆதரவு அருளார்.


12 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல்
எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்;
இஸ்ரயேல் மக்களே,
நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.


13 அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும்.
அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும்
எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர்.
எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.


குறிப்பு

[*] 27:1 = யோபு 41:1; திபா 74:14; 104:26.


அதிகாரம் 28[தொகு]

வடநாட்டிற்கு எதிரான எச்சரிக்கை[தொகு]


1 எப்ராயிமின் குடிவெறியரின்
மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு!
வாடுகின்ற மலராய்,
அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே!
பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே!
நறுமணம் பூசிய தலைவர்கள்
மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!


2 இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்;
அவன் கல்மழையென, அழிக்கும் புயலென,
கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து,
தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.


3 எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி
கால்களால் மிதிக்கப்படும்.


4 வாடுகின்ற மலராய்
அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது;
நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்;
இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்;
அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.


5 அந்நாளில் படைகளின் ஆண்டவரே,
தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும்
மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.


6 நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும்
நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு
போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார்.

எசாயாவும் யூதாவின் குடிகார இறைவாக்கினரும்[தொகு]


7 குருக்களும் இறைவாக்கினரும்
திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்;
மதுவால் தள்ளாடுகின்றனர்;
அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்;
திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்;
மதுவால் மயங்குகின்றனர்;
காட்சி காணுகையில் மருள்கின்றனர்;
நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!


8 மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன;
அழுக்குப் படியாத இடமே இல்லை!


9 "இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்?
யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்?
பால்குடி மறந்தோர்க்கா?
தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?


10 ஏனெனில் கட்டளை மேல் கட்டளை,
கட்டளை மேல் கட்டளை;
அளவு நூலுக்குமேல் அளவுநூல்,
அளவு நூலுக்குமேல் அளவுநூல்;
இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்" என்கின்றனர்.


11 ஆனால் குழறிய பேச்சும்
புரியாத மொழியும் கொண்டோர் மூலம்
ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.


12 "இதோ உள்ளது இளைப்பாற்றி;
களைத்தவன் இளைப்பாறட்டும்;
இதோ உள்ளது இளைப்பாற்றி"
என்று அவர்களுக்குச் சொன்னாலும்
செவி கொடுக்க மாட்டார்கள். [1]


13 ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக்
கட்டளைமேல் கட்டளையாகவும்
அளவுநூல்மேல் அளவு நூலாகவும்
இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்;
அவர்கள் புறப்பட்டுச் செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்;
நொறுக்கப்படுவர்;
கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

சீயோனின் மூலைக்கல்[தொகு]


14 ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே!
இகழ்வோரே!
ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.


15 "நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்;
பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.
பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும்
அவனால் எங்களை அணுக இயலாது.
ஏனெனில், பொய்ம்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;
வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்" என்று சொன்னீர்கள்.


16 ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே:
இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்;
அது பரிசோதிக்கப்பட்ட கல்;
விலையுயர்ந்த மூலைக்கல்;
உறுதியான அடித்தளமாய் அமையும் கல்;
"நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்." [2]


17 நீதியை அளவு நூலாகவும்,
நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன்.
பொய்ம்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்;
மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.


18 சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்;
பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது;
பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது
நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.


19 பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம்
உங்களை வாரிக்கொண்டு போகும்;
அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்;
அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.


20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது;
போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.


21 ஆண்டவர் பெராசிம் மலைமேல்
கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்!
கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல்
செயலாற்றக் கொதித்தெழுவார்!
தம் பணியை நிறைவேற்றுவார்!
விந்தையானது அவர்தம் செயல்!
புதிரானது அவர்தம் பணி! [3]


22 உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்;
ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு
படைகளின் ஆண்டவராகிய என் தலைவர்
இட்ட ஆணையை நான் கேட்டேன்.


23 செவி கொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்;
செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்:


24 விதைப்பதற்கென உழுபவர்கள்
நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா?
நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?


25 அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்
உளுந்தைத் தூவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ?
வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும்,
தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?


26 இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்;
அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்;


27 உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை;
சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை;
ஆனால் உளுந்து கோலாலும்
சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.


28 உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை;
அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை.
வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது,
அதை அவர்கள் நொறுக்குவதில்லை.


29 படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது;
அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;
செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.


குறிப்புகள்

[1] 28:11-12 = 1 கொரி 14:21
[2] 28:16 = திபா 118:22-23; உரோ 9:33; 10:11; 1 பேது 2:6.
[3] 28:21 = யோசு 10:10-12; 2 சாமு 5:20; 1 குறி 14:11.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 29 முதல் 30 வரை