உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
"தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொப்பரை ஒன்றை எடுத்து வை; தண்ணீரை அதில் ஊற்று. உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு;...மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா;...இறைச்சித் துண்டுகளை வேகவை; எலும்புகளும் உள்ளிருக்கட்டும்." - எசேக்கியேல் 24:3-5

எசேக்கியேல் (The Book of Ezekiel)

[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23

[தொகு]

பாவத்தில் வீழ்ந்த சகோதரிகள்

[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 "மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.
3 அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர்.
தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன.
அவர்களின் கன்னிக் கொங்கைளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4 அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா;
இளையவள் பெயர் ஒகலிபா.
எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும்
பெண்மக்களையும் பெற்றெடுத்தனர்.
ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.
5 ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள்.
அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6 அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும்
அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும்
குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7 அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்;
தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8 எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை.
அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்;
அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்;
தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.
9 எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய
அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.
10 அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து,
அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு,
அவளை வாளால் கொன்று போட்டனர்.
பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள்.
இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.
11 அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள்.
இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.
12 அவளும் ஆளுநர், படைத்தலைவர்,
பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர்
ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.
13 அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன்.
இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.
14 ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட்டாள்.
சுவரில் சிவப்பாய்த் தீட்டப்பட்ட கல்தேய நாட்டு
ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
15 இடையில் கச்சை கட்டிக்கொண்டு
தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள்,
தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள
பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.
16 அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று
கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினாள்.
17 பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத்
தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர்.
அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து
தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.
18 அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத்
தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது,
நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்;
அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.
19 ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை
மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20 அவள் தன் காதலர்பால் காமுற்றாள்.
அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும்,
விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.
21 எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி,
உன் இளம் கொங்கைகளோடு விளையாடிய
இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.

இளையவள்மீது வரும் கடவுளின் நீதித் தீர்ப்பு

[தொகு]


22 ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன்.
இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய்.
அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.
23 பாபிலோனியர் கல்தேயர் யாவரையும்,
பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும்,
அசீரியரையும் வரச்செய்வேன்.
அவர்கள் அழகிய இளைஞராயும் ஆளுநர்களாயும்
படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர்.
அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.
24 அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர்.
தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன்
பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும்
தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய்
நாற்புறமும் உன்னைச் சூழந்துகொள்வர்.
நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன்.
அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.
25 நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன்.
அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர்.
அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர்.
எஞ்சியோர் வாளால் வீழ்வர்.
அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர்.
எஞ்சியோர் விழுங்கப்படுவர்.
26 மேலும் அவர்கள் உன் ஆடைகளை உரிந்து
உன் விலையுயர்ந்த அணிகளை எடுத்துக் கொள்வர்.
27 இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும்
வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வருவேன்.
இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய்.
எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.
28 ஏனெனில் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீ யாரை வெறுக்கிறாயோ, யாரிடமிருந்து மனம் கசந்து திரும்பினாயோ \
அவர்களிடமே உன்னை ஒப்புவிப்பேன்.
29 அவர்கள் வெறுப்போடு உன்னை நடத்துவர்.
நீ உழைத்துப் பெற்றவை அனைத்தையும் கவர்ந்துகொண்டு,
உன்னைத் திறந்த மேனியாகவும் வெறுமையாகவும் விட்டுச் செல்வர்.
உன் வேசித்தனம், காமவெறி, ஒழுக்கக்கேடு
ஆகியவற்றின் வெட்கக்கேடு வெளிப்படும்.
30 நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு
அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதால்
அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.
31 உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய்.
எனவே அவள் குடித்த கிண்ணத்தை உன் கையில் தருவேன்.


32 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்;
அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்;
நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.


33 குடிவெறியாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்!
உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம் துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!


34 குடிப்பாய்; அதை நீ குடித்து முடிப்பாய்!
அதனை உடைத்தெறிவாய் துண்டுகளாய்!
உன் மார்புகளைக் கீறிக்கொள்வாய்!
நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


35 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீ என்னை மறந்து உன்னிடமிருந்து என்னை ஒதுக்கிவிட்டதால்,
உன் காமவெறி மற்றும் வேசித்தனத்தின் விளைவுகளை நீயே சுமந்துகொள்.

இரு சகோதரிகள் மீதும் வரும் நீதித் தீர்ப்பு

[தொகு]


36 ஆண்டவர் எனக்கு மேலும் உரைத்தது:
"மானிடா ஒகோலாவையும் ஒகலிபாவையும் தீர்ப்பிடுவாயா?
அவ்வாறெனில் அவர்களின் அருவருப்பான செயல்களை எடுத்துக் கூறு.
37 ஏனெனில் அவர்கள் வேசித்தனம் செய்தனர்.
அவர்கள் கைகளோ இரத்தக் கறை படிந்தவை.
சிலைகளோடு அவர்கள் வேசித்தனம் செய்தனர்.
எனக்கெனப் பெற்றெடுத்த பிள்ளைகளைச்
சிலைகளுக்கு உணவாய்ப் படைத்தனர்.
38 இதற்கு மேலும் செய்தனர், அதே நேரத்தில்
எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி என் ஓய்வுநாள்களை இழிவுபடுத்தினர்.
39 அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர்.
என் தூயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர்.
என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
40 அவர்கள் தொலைவில்வாழ் மனிதருக்காகத் தூதர்களை அனுப்பினர்;
அவர்கள் வந்தபோது குளித்து, கண்களுக்கு மைதீட்டி,
அணிகலன்களை அணிந்து கொண்டனர்.
41 அழகான மஞ்சத்தில் அமர்ந்து அதன் முன்னால் இருந்த மேசையில்
எனக்குரிய நறுமணப்பொருள்களையும் எண்ணெயையும் வைத்தனர்.
42 களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது.
பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும்
அதனோடு சேர்ந்து கொண்டது.
அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள்.
அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.
43 அப்போது வேசித்தனத்தால் தளர்ந்துபோன
ஒருத்தியைக் குறித்து நான் உரைத்தேன்:
'அவர்கள் அவளை வேசியாய் நடத்தட்டும்,
ஏனெனில் அவள் இப்போது வேசிதான்.'
44 விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்;
ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.
45 ஆனால் நீதிமான்கள் அவர்களுக்கு
வேசித்தனத்தில் ஈடுபட்டுக் கொலை செய்த பெண்களுக்குரிய
தண்டனையைக் கொடுப்பர். ஏனெனில் அவர்கள் வேசிகள்தாம்.
இரத்தக்கறை அவர்கள் கைகளில் உள்ளது.


46 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
அவர்களை நடுக்கத்திற்கும் கொள்ளைக்கும் உள்ளாக்குமாறு
அவர்களுக்கு எதிராய் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டிவா.
47 அக்கூட்டமோ அவர்களைக் கல்லால் எறிந்து,
வாளால் வெட்டிச் சாய்க்கும்.
அவர்களின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கொன்று,
வீடுகளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
48 இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன்.
அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல்
காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.
49 நீங்களும் உங்கள் காமவெறி, சிலை வழிபாடு
ஆகிய குற்றங்களின் பாவவினையைச் சுமப்பீர்கள்.
அதன்மூலம் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்."


அதிகாரம் 24

[தொகு]

அருவருப்பான சமையல் சட்டி

[தொகு]


1 ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில்
ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.


2 "மானிடா! இந்த நாளை -
பாபிலோன் மன்னன் எருசலேமை முற்றுகையிட்ட இந்த நாளை - குறித்து வை. [*]


3 கலக வீட்டாருக்கு உவமை ஒன்றின் வழியாக எடுத்துக்கூறு;
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
கொப்பரை ஒன்றை எடுத்து வை; தண்ணீரை அதில் ஊற்று.


4 உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு;
தொடை, தோள்பகுதி ஆகிய நல்ல பாகங்களைப் போடு;
பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.


5 மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா;
விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு;
இறைச்சித் துண்டுகளை வேகவை; எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.


6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
குருதியைச் சிந்தும் நகருக்கு ஐயோ கேடு!
துருப்பிடித்த கொப்பரை இது; இதன் துரு நீங்கவே இல்லை;
ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு;
தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.


7 ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது;
வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்;
புழுதியில் மறையும்படித் தரையில் அதை ஊற்றவில்லை.


8 சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே
புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.


9 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு!
விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.


10 எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு;
நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை;
நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு; எலும்புகளும் கரியட்டும்.


11 பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை;
களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்;
அதன் அழுக்கு கரைந்து போகட்டும்;
அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.


12 அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது.
அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.
13 உன்னுடைய துரு காம வெறியாகும்.
ஏனெனில், நான் உன்னைத் தூய்மைப்படுத்த விழைந்தேன்.
ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை.
உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.
14 ஆண்டவராகிய நானே உரைத்தேன்:
நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பின்வாங்க மாட்டேன்.
இரக்கம் காட்ட மாட்டேன்; மனம் மாறமாட்டேன்.
உன் நடத்தைக்கு ஏற்பவும் உன் செயல்களுக்கு ஏற்பவும்
நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இறைவாக்கினர் மனையாளின் இறப்பு

[தொகு]


15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16 "மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை
உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்போகிறேன்.
ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.
17 மெதுவாய்ப் பெருமூச்சுவிடு!
இறந்தோர்க்காய்ப் புலம்பாதே!
உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்!
காலில் மிதியடியை அணிந்துகொள்!
உன் வாயை மூடிக்கொள்ளாதே!
இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணாதே!"
18 நான் மக்களிடம் காலையில் உரையாடினேன்.
மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.
19 அப்போது மக்கள் என்னிடம்,
'நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச்
சொல்ல மாட்டீரோ?' என்று கேட்டனர்.
20 எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது:
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும்,
இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்;
நீங்கள் விட்டுச்சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.
22 நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்;
நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்;
இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.
23 தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள்.
கால்களில் மிதியடிகள் இருக்கும்.
நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள்.
ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று
உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.
24 இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்.
இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
25 'மானிடா! நான் அவர்களிடமிருந்து அவர்களுடைய வலிமை,
மகிழ்ச்சி, மாட்சி, கண்களின் இன்பம்,
இதயத்தின் விருப்பம் ஆகியவற்றையும்
அவர்களுடைய ஆண்மக்கள் பெண்மக்கள் யாவரையும்
என்று எடுத்துக்கொள்கிறேனோ,
26 அன்று அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் ஓடிவந்து
இச்செய்தியை உனக்குச் சொல்வான்.
27 அப்போது உன் வாய் திறக்கப்படும்.
தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மௌனமாய் இருக்கமாட்டாய்.
இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய்.
நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.'


குறிப்பு

[*] 24:2 = 2 அர 25:1; எரே 52:4.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை