உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
"லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை; நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும். தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்; ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன; ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின..." - செக்கரியா 11:1-2.


செக்கரியா (The Book of Zechariah)

[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11

[தொகு]


1 லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை;
நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.


2 தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்;
ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன;
ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின;
பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்;
ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.


3 அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது;
ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது;
இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது;
ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.

ஆயர் இருவர்

[தொகு]


4 என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே:
வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக!
5 விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்;
ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது.
அவற்றை விற்பவர்களோ, "ஆண்டவர் போற்றி! போற்றி!
எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது" என்று சொல்கிறார்கள்.
ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை.
6 "இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன்,"
என்கிறார் ஆண்டவர்.
இதோ! மனிதர் ஒவ்வொருவரையும்
அவரவர் அடுத்திருப்பார் கையிலும்
அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன்.
அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள்.
அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.


7 அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை
வணிகருக்காக மேய்க்கின்ற ஆயானானேன்;
நான் இரு கோல்களைக் கையிலெடுத்து,
ஒன்றிற்கு 'இனிமை' என்றும், மற்றதற்கு 'ஒன்றிப்பு' என்றும் பெயரிட்டு
அம்மந்தையை மேய்த்துவந்தேன்.
8 ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்;
நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்;
அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
9 அப்போது, 'இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை;
சாவது சாகட்டும்; அழிவது அழியட்டும்;
மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துத் தின்னட்டும்'
10 என்று நான் சொன்னேன்.
'இனிமை' என்ற என் கோலை எடுத்து,
மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி
அதை முறித்துப் போட்டேன்.
11 அன்றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று.
அவ்வாறெ என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும்
அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர்.
12 அப்போது நான் அவர்களை நோக்கி,
'உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்;
இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்' என்றேன்.
அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். [1]


13 ஆண்டவர் என்னிடம்,
"கருவூலத்தை [2] நோக்கி அதைத் தூக்கி எறி;
இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!" என்றார்.
அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து
ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். [3]
14 யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த
சகோதர ஒருமைப்பாடு முறியும்படி
'ஒன்றிப்பு' என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.


15 பின்பு ஆண்டவர் என்னை நோக்கி,
"அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை
இன்னொருமுறை எடுத்துக்கொள்" என்றார்.
16 ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்;
அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டான்.
சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்;
எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்;
நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்;
ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்;
அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.


17 ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஐயோ கேடு!
அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும்
வாள் வந்து விழட்டும்;
அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்;
அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.


குறிப்புகள்

[1] 11:12 = மத் 26:15.
[2]11:13 - "குயவர் நிலம்" என்பது எபிரேயப் பாடம் (மத் 27:9-10).
[3] 11:12-13 = மத் 27:9-10.

அதிகாரம் 12

[தொகு]

எருசலேமின் வருங்கால மீட்பும் வளமும்

[தொகு]


1 ஓர் இறைவாக்கு:
இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும்,
மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான
ஆண்டவர் கூறுவது இதுவே:
2 இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும்
போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக
நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்;
எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும்.
3 அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும்
எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்;
அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்;
உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும்
அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.
4 அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும்
அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
5 யூதா குடும்பத்தாரைக் கடைக்கண்ணோக்கி மக்களினங்களின் அனைத்துக் குதிரைகளின் கண்களையும் குருடாக்குவேன்.
அப்போது யூதா நாட்டின் குடும்பத்தலைவர்கள்,
எருசலேமில் குடியிருப்போரின் வலிமை
அவர்களுடைய கடவுளாகிய படைகளின் ஆண்டவரில்தான் இருக்கிறது என்று
தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்.


6 அந்நாளில் நான் யூதாவின் குடும்பத் தலைவர்களை
விறகுகளுக்கிடையில் வைத்த நெருப்புச்சட்டிபோலும்,
வைக்கோல் கட்டுகளுக்குள் தீப்பந்தம் போலும் ஆக்குவேன்;
அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களினங்கள் அனைத்தையும்
வலப்பக்கமும் இடப்பக்கமுமாய் அழித்தொழிப்பார்கள்;
எருசலேம் மக்களோ முன்பு இருந்த இடமாகிய
எருசலேமிலேயே குடியிருப்பார்கள்.


7 தாவீது குடும்பத்தாரின் மேன்மையும்
எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும்
யூதாவின் மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க
ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே
முதலில் விடுதலை அளிப்பார்.
8 அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு
ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்;
அந்நாளில் அவர்களுள் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத்
தாவீதைப்போலிப்பர்.
தாவீதின் குடும்பத்தார் கடவுளைப்போலும்
அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் தூதரைப்போலும் இருப்பர்.
9 அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும்
வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.


10 நான் தாவீது குடும்பத்தார்மேலும்,
எருசலேமில் குடியிருப்போர்மேலும்
இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன்.
அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்;
அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து
ஓலமிட்டு அழுபவரைப் போலும்,
இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும்
மனம் கசந்து அழுவார்கள். [1]
11 அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம்
மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின்
புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும்.
12 நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்;
தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும்,
அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,
நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும்,
அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,
13 லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும்,
அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,
சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும்,
அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.
14 எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும்
ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும்
அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள். [2]

குறிப்புகள்

[1] 12:10 = யோவா 19:37; திவெ 1:7.
[2] 12:10-14 = மத் 24:30; திவெ 1:7.


(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை