உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 145 முதல் 146 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்" (திருப்பாடல்கள் 146:6)

திருப்பாடல்கள்

[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 145 முதல் 146 வரை

திருப்பாடல் 145

[தொகு]

அரசராம் கடவுள் போற்றி!

[தொகு]

(தாவீதின் திருப்பாடல்)


1 என் கடவுளே, என் அரசே!
உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.


2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.


3 ஆண்டவர் மாண்புமிக்கவர்;
பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்;
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.


4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு
உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.


5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும்
வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.


6 அச்சந்தரும் உம் செயல்களின்
வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.


7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை
நினைந்துக் கொண்டாடுவார்கள்;
உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.


8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;
எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.


9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.


10 ஆண்டவரே,
நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.


11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.


12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின்
பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.


13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்;
தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.


14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்.
தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.


15 எல்லா உயிரினங்களின் கண்களும்
உம்மையே நோக்குகின்றன;
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.


16 நீர் உமது கையைத் திறந்து
எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.


17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.


18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.


19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை
நிறைவேற்றுவார்;
அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து
அவர்களைக் காப்பாற்றுவார்.


20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும்
பாதுகாக்கின்றார்;
பொல்லார் அனைவரையும் அழிப்பார்.


21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக!
உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


திருப்பாடல் 146

[தொகு]

மீட்பராம் கடவுள் போற்றி!

[தொகு]


1 அல்லேலூயா!
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;


2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்;
என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.


3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;
உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.


4 அவர்களின் ஆவி பிரியும்போது
தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்;
அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.


5 யாக்கோபின் இறைவனைத் தம்
துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்;
தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.


6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும்
அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்;
என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! [*]


7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;
பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;
சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.


8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;
நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.


9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்;
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;
ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.


10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,
எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.
அல்லேலூயா!


குறிப்பு

[*] 146:6 = திப 4:24; 14:15.



(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 147 முதல் 148 வரை