திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 31 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை. வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்?" - நீதிமொழிகள் 30:3-4.


நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 31 வரை

அதிகாரம் 29[தொகு]


1 பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர்
பிடிவாதமுள்ளவராகவே இருந்தால்,
அவர் ஒருநாள் திடீரென அழிவார்;
மீண்டும் தலைதூக்கமாட்டார்.


2 நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால்,
குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்;
பொல்லார் ஆட்சி செலுத்தினால்
அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.


3 ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்;
விலைமகளின் உறவை விரும்புகிறவர் சொத்தை அழித்துவிடுவார்.


4 நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்;
அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.


5 தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர்
அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.


6 தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்;
நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.


7 ஏழைகளின் உரிமைகளைச் காப்பதில்
நேர்மையாளர் அக்கறை கொள்வர்;
இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லாருக்குப் புரியாது.


8 வன்முறையாளர் ஊரையே கொளுத்திவிடுவர்;
ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.


9 போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார்,
இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.


10 தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்;
நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.


11 அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்கமாட்டார்;
ஞானமுள்ளவரோ பொறுமையோடிருப்பதால், அவர் சினம் ஆறும்.


12 ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச்
செவி கொடுப்பாராயின்,
அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.


13 ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு;
இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.


14 திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின்,
அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.


15 பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்;
தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள்
தாய்க்கு வெட்கக்கேட்டை வருவிப்பர்.


16 பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்;
அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.


17 உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து;
அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.


18 எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ,
அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரிவார்கள்;
நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.


19 வெறும் வார்த்தைகளினால் வேலைக்காரர் திருந்தமாட்டார்;
அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்.


20 பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா?
மூடராவது ஒருவேளை திருந்துவார்;
ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.


21 அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால்,
அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.


22 எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்;
அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.


23 இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்;
தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.


24 திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்;
அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்;
சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.


25 பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர்
கண்ணியில் சிக்கிக்கொள்வார்;
ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.


26 பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு;
ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?


27 நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்;
நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.


அதிகாரம் 30[தொகு]

ஆகூரின் மொழிகள்[தொகு]


1 மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்:
அவர் ஈத்தியேல், ஊக்கால் [2] என்பவர்களுக்குக் கூறிய வாக்கு:


2 மாந்தருள் மதிகேடன் நான்;
மனிதருக்குரிய அறிவாற்றல் எனக்கில்லை.


3 ஞானத்தை நான் கற்றுணரவில்லை;
கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.


4 வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்?
தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்?
கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்?
மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்?
அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன?
நீதான் எல்லாவற்றையும் அறிந்தவனாயிற்றே!


5 கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு
நம்பத்தக்கதாய் விளங்குகிறது;
தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு
அவர் கேடயமாயிருக்கிறார்.


6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே;
கூட்டினால் நீ பொய்யனாவாய்;
அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.


7 வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்;
நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.


8 வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்;
எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்;
எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.


9 எனக்கு எல்லாம் இருந்தால், நான்,
"உம்மை எனக்குத் தெரியாது" என்று மறுதலித்து,
"ஆண்டவரைக் கண்டது யார்?" என்று கேட்க நேரிடும்.
நான் வறுமையுற்றால், திருடனாகி,
என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.


10 வேலைக்காரரைப் பற்றி
அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே;
சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்;
நீயே குற்றவாளியாவாய்.


11 தந்தையைச் சபிக்கிற,
தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.


12 மாசு நிறைந்தவராயிருந்தும்
தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.


13 கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் -
இத்தகைய மக்களும் உண்டு.


14 பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி -
இவற்றை உடைய மக்களும் உண்டு;
அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்;
உலகிலுள்ள எளியோரைத் தின்று விடுவார்கள்.


15 அட்டைப்பூச்சிக்கு, "தா, தா" எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு;
ஆவல் தணியாத மூன்று உண்டு;
"போதும்" என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.


16 அவை: பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம்,
"போதும்" என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.


17 தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும்
வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும்
இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும்,
கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.


18 எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு:
என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.


19 அவை: வானத்தில் கழுகு மிதத்தல்,
கற்பாறைமேல் பாம்பு ஏறுதல்,
நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல்,
ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.


20 விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே:
தவறு செய்தபின் அவள் குளித்துவிட்டு,
"நான் தவறு எதுவும் செய்யவில்லை" என்பாள். [2]


21 உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று;
அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு;


22 அரசனாகிவிடும் அடிமை,
உண்டு திரியும் கயவன்,


23 யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண்,
உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.


24 சிறியவையாயினும்
ஞானமுள்ள சிற்றுயிர்கள் நான்கு உலகில் உண்டு:


25 எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்;
எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.


26 குறுமுயல்கள்: இவையும் வலிமையற்ற இனமே;
எனினும், இவை கற்பாறைகளுக்கிடையே
தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.


27 வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை;
எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.


28 பல்லி: இதைக் கைக்குள் அடக்கி விடலாம்;
எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.


29 பீடுநடை போடுபவை மூன்று உண்டு:
ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு:


30 விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும்
எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;


31 பெருமிதத்துடன் நடக்கும் சேவல்;
மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா;
படையோடு செல்லும் அரசன்.


32 நீ வீண் பெருமைகொண்டு மூடத்தனமாக நடந்திருந்தாலும்,
தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும்,
உன் வாயை பொத்திக்கொண்டிரு.


33 ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்;
மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்;
எரிச்சலூட்டினால் சண்டை வரும்.


குறிப்புகள்

[1] 30:1 - "ஈத்தியேல்" என்பதை
"கடவுளே, நான் சோர்ந்துபோனேன்" எனவும்,
"ஊக்கால்" என்பதை "நான் நொந்துபோனேன்"
எனவும் மொழிபெயர்க்கலாம். [2] 30:20 - "அவள் குளித்துவிட்டு" என்பதை
"அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு"
எனவும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 31[தொகு]

அரசனுக்கு அறிவுரை[தொகு]


1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்:
இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:


2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே,
என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய்,
நான் சொல்வதைக் கவனி.


3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செவழித்துவிடாதே;
அரசரை அழிப்பவர்களை அணுகாதே.


4 இலமுவேலே, கேள்,
அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று;
வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது.


5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்;
துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.


6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு;
மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.


7 அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும்;
தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.


8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு;
திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு.


9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு;
எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.

நல்ல மனையாள்[தொகு]


10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது;
அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.


11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்;
அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.


12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்;
ஒரு நாளும் தீங்கு நினையாள்.


13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்;
தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.


14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்;
அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.


15 வைகறையில் துயிலெழுவாள்;
வீட்டாருக்கு உணவு சமைப்பாள்;
வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.


16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்;
தன் ஊதியத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.


17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்;
அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.


18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்;
அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.


19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்;
நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.


20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள்.
வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.


21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது;
ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.


22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்;
அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.


23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்;
மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.


24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்;
வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.


25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்;
வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.


26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்;
அன்போடு அறிவரை கூறுவாள்.


27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்;
உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.


28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்;
அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.


29 "திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு;
அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே" என்று அவன் சொல்வான்.


30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்;
ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.


31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்;
அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக. (நீதிமொழிகள் நூல் நிறைவுற்றது)

(தொடர்ச்சி):சபை உரையாளர்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை