திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
எலியாவின் விண்ணேற்பு (2 அர 2). வரை ஓவியம். (1886)?

2 அரசர்கள் (The Second Book of Kings) [1][தொகு]

முன்னுரை

'2 அரசர்கள்' என்னும் இத்திருநூல் பிளவுண்ட யூதா - இஸ்ரயேல் அரசுகளின் வரலாற்றை '1 அரசர்கள்' விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது.

இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டது:

(1) கி.மு. 850 முதல் கி.மு. 722 (சமாரியாவின் வீழ்ச்சி) வரையிலான வடக்கு - தெற்கு அரசுகளின் வரலாறு.
(2) சமாரியாவின் வீழ்ச்சியிலிருந்து, கி.மு. 586 (எருசலேமின் வீழ்ச்சி) வரையிலான யூதா அரசர்களின் வரலாறு. இந்நூல் யோயாக்கின் அரசனது விடுதலையுடன் முடிகிறது.

யூதா, இஸ்ரயேல் ஆகியவற்றின் அரசர்களும் மக்களும் ஆண்டவருக்கு அஞ்சி நடக்காததாலேயே அந்நாடுகள் பேரழிவுக்குள்ளாயின என்பதை இந்நூல் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறது. எருசலேம் வீழ்ச்சியுற்றதும், யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதும் இஸ்ரயேலரின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன.

இந்நூலில் எலியாவின் பதிலாளான இறைவாக்கினர் எலிசாவின் புதுமைகள் சிறப்பிடம் பெறுகின்றன.


2 அரசர்கள்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. பிளவுபட்ட நாடு (தொடர்ச்சி)

அ) இறைவாக்கினர் எலிசா
ஆ) யூதா, இஸ்ரயேல் அரசர்கள்
இ) சமாரியாவின் வீழ்ச்சி

1:1 - 17:41

1:1 - 8:15
8:16 - 17:4
17:5-41

560 - 594

560 - 575
576 - 592
592 -593

2. யூதா அரசு

அ) எசேக்கியாவின் ஆட்சி
ஆ) யோசியாவின் ஆட்சி
இ) யூதாவின் இறுதி அரசர்கள்
ஈ) எருசலேமின் வீழ்ச்சி

18:1 - 25:30

18:1 - 21:26
22:1 - 23:30
23:31 - 24:20
25:1-30

594 - 610

594 - 602
602 - 606
606 - 608
608 -610

2 அரசர்கள்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

எலியாவும் அரசன் அகசியாவும்[தொகு]

1 ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
2 அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் தூதரிடம், "நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, 'இக்காயம் எனக்குக் குணமாகுமா?' என்று கேட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினான்.
3 ஆனால் ஆண்டவரின் தூதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், "நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் தூதரைச் சந்தித்து அவர்களிடம், 'இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;
4 நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்" என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.


5 திரும்பி வந்த தூதரை நோக்கி, அரசன், "ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?" என்று அவர்களைக் கேட்டான்.
6 அதற்கு அவர்கள் மறுமொழியாக, "வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, 'நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்லுங்கள்' என்றார்" என்று கூறினர்.
7 அவன் அவர்களிடம், "உங்களைச் சந்திக்க வந்து உங்களிடம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்?" என்று கேட்டான்.


8 அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, "அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்" என்றனர். அப்பொழுது அவன், "அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!" என்றான். [1]
9 உடனே அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், "கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!" என்றான்.
10 எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, "நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!" என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.


11 அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று [2] எலியாவிடம், "கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!" என்றான்.
12 எலியா மறுமொழியாக, "நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!" என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது. [3]


13 அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, "கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஐம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!
14 வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!" என்று மன்றாடினான்.


15 அப்பொழுது ஆண்டவரின் தூதர் எலியாவிடம், "அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம்" என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.
16 அவர் அரசனை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் தூதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப்போவாய்; இது உறுதி!" என்றார்.


17 எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் [4] அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.
18 அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?'

குறிப்புகள்

[1] 1:8 = மத் 3:4; மாற் 1:6.
[2] 1:11 'மறுமொழி கூறி' என்பது எபிரேய பாடம்.
[3] 1:10-12 = லூக் 9:34.
[4] 1:17 யோராம் அகசியாவின் சகோதரன்.

அதிகாரம் 2[தொகு]

எலியாவின் விண்ணேற்பு[தொகு]


1 ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
2 எலிசா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னைப் பெத்தேலுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். எலிசா அவரை நோக்கி, "வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.


3 அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர் "ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்" என்று கூறினார்.
4 எலியா அவரை நோக்கி, "எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.
5 அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்" என்றார்.


6 மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
7 அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.
8 அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.


9 அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, "உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்" என்று கேட்டார். அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!" என்றார். [1]
10 எலியா அவரை நோக்கி, "நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது" என்றார்.
11 இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.
12 எலிசா அதைக் கண்டு, "என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!" என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார். [2]
13 மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.
14 பின்பு அவர், "எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?" என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.


15 எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழ்ந்தவற்றைக் கண்டு, "எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது!" என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
16 மேலும் அவரை நோக்கி, "இதோ! உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்!" என்றனர். அதற்கு அவர், "அவர்களை அனுப்ப வேண்டாம்" என்றார்.


17 ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், "அனுப்பிவையுங்கள்" என்றார். எனவே அவர்கள் ஐம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
18 எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், "போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா?" என்றார்.

எலிசாவின் வியத்தகு செயல்கள்[தொகு]


19 அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, "இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை" என்றனர்.
20 அதற்கு அவர் "ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள்" என்றார்.
21 அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, "இதோ! ஆண்டவர் கூறுகிறார்; இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது; நிலமும் பயன் தரும்" என்றார்.
22 அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.


23 அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, "வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ!" என்று ஏளனம் செய்தனர்.
24 எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.
25 பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினார்.

குறிப்புகள்

[1] 2:9 = இச 21:17.
[2] 2:12 = 2 அர 13:14.



(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை