திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
எஸ்தர் அரசி. ஓவியர்: அந்திரேயா தெல் கஸ்தாஞ்ஞோ. காலம்: 1420-1457. ஓவியம் வரைந்த ஆண்டு: சுமார் 1450. காப்பிடம்: புளோரன்சு.

எஸ்தர் (The Book of Esther) [1][தொகு]

முன்னுரை

'எஸ்தர்' என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை. எஸ்தர் என்னும் பெண், தன் மக்கள்பால் கொண்டிருந்த பேரன்பினால், அவர்கள் தங்கள் எதிரிகளால் அழிக்கப்படாதவாறு, மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது. 'பூரிம்' என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இதில் விளக்கப்படுகின்றன. கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூல் இன்னும் விரிவாகக் காணப்படுகிறது.


எஸ்தர்[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எஸ்தர் அரசி ஆதல் 1:1 - 2:23 754 - 757
2. ஆமானின் சதிகள் 3:1 - 5:14 757 - 760
3. ஆமான் கொல்லப்படல் 6:1 - 7:10 760 - 761
4. யூதர் தங்கள் எதிரிகளை முறியடித்தல் 8:1 - 10:3 761 - 764

எஸ்தர்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

அரசி வஸ்தி மன்னர் அகஸ்வேரை அவமதித்தல்[தொகு]


1 இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த
நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த
மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,
2 அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார். [1]


3 மூன்றாம் ஆண்டில் தம் குறுநில மன்னர்கள், அலுவலர் அனைவருக்கும்
விருந்தொன்று அளித்தார்.
பாரசீக, மேதியப் படைத் தளபதிகளும், உயர்குடி மக்களும்,
மாநிலத் தலைவர்களும் அவர்முன் வந்திருந்தனர்.
4 அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும்,
தம் மாண்பின் மேன்மைமிகு பெருமையையும்
நூற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.


5 அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின்
சூசான் தலைநகரிலிருந்த சிறியோர் முதல் பெரியோர் வரை
மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில்
ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.
6 அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள்,
வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும்
மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன.
வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள்
ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது
பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.
7 வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில்
அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர்.
அரச மேன்மைக்கு ஏற்பப்
பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.
8 திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது.
ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை.
விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு
அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.


9 அவ்வாறே அரசி வஸ்தியும்
மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.


10 ஏழாம் நாளன்று திராட்சை மதுவினால் மனம் பூரித்திருந்த மன்னர் அகஸ்வேர்
தம் முன்னிலையில் பணியாற்றிய அண்ணகர்களான
மெகுமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேத்தார், கர்க்கசு ஆகியோருக்கு,
11 பேரழகியான அரசி வஸ்தியின் எழிலை
மக்களும் தலைவர்களும் காணுமாறு
அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத்
தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
12 ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த
மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள்.
எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார்.
பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.


13 உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார்.
ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம்
கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.
14 கர்சனா, சேத்தார், அதிமாத்தா, தர்சீசு, மெரேசு, மர்சனா, மெமுக்கான், ஆகிய
பாரசீகத்தையும் மேதியாவையும் சார்ந்த ஏழு தலைவர்களும்
மன்னருக்கு மிக நெருக்கமானவர்கள்;
ஆட்சிப் பொறுப்பில் முதன்மை பெற்றோர்.
அவர்கள் மன்னரின் முகமாற்றத்தைக் கண்டனர்.
15 மன்னர் அகஸ்வேர்,
"அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப்படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச்
சட்டப்படி செய்ய வேண்டியது என்ன?" என்று வினவினார்.


16 மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது:
"அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித்
தலைவர் அனைவர்க்கு எதிராகவும்,
அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும் தவறிழைத்துவிட்டாள்.
17 அரசி வஸ்தியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும்.
அவர்கள் பார்வையில் அவர்களின் கணவர் இழிவுபடுத்தப்படுவர்.
ஏனெனில் 'மன்னர் அகஸ்வேர் அவளைத் தம்முன் வருமாறு பணித்தும்கூட
அவர்முன் அவள் வரவில்லையே!' என்பர்.
18 இன்றே அரசியின் நடத்தை பற்றிக் கேள்வியுறும் பாரசீக, மேதிய இளவரசிகளும்
தம் தலைவர்களிடமும் இதுபோன்றே கூறுவர்.
ஆதலின் ஏளனத்திற்கும் சினத்திற்கும் முடிவே இராது.
19 எனவே, அரசே! உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும்.
அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும்.
அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது.
அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!
20 அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட,
பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன்
சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்."


21 இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது.
மெமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.
22 அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும்
அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும்
ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியாகவும் எழுதிய மடல்களில்,
ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும் [2]
என்று கட்டளையிட்டிருந்தார்.


குறிப்புகள்

[1] 1:1 = எஸ்ரா 4:6.
[2] 1:22 'ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்ய வேண்டும் என்றும் தன் மக்களின் மொழியிலேயே பேச வேண்டும் என்றும்' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 2[தொகு]

எஸ்தர் அரசி ஆதல்[தொகு]


1 இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய
அவர் வஸ்தியையும் அவளது செயலையும்
அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.
2 அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர்
அவரை நோக்கிக் கூறியது:
"அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட
கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக!
3 அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும்
அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டுப்படி
மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக!
சூசான் அரண்மனையின் அந்தப்புரத்தில்
மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து,
தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!
4 மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே
வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள்."
இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.


5 சூசான் அரண்மனையில் மொர்தக்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.
6 அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்;
இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு,
பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன்
எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர். [1]
7 மொர்தக்காய் 'அதசா' என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார்.
அவர் அவருடைய சிற்றப்பன் மகள்;
தாய் தந்தையை இழந்தவர்;
எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்.


8 மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது,
இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு
ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த
ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
9 அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று
இவரது தயவைப் பெற்றார்.
அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து,
அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார்.
மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.


10 யாரிடம் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால்
எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.
11 ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி,
எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.


12 ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும்,
ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள்,
நறுமணப் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும்
பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின.
பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.
13 மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும்,
அந்தரப்புரத்திலிருந்து அரச மாளிகைக்குச் செல்லும்போது,
அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது. அதிகாரம் 18: 9. சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளில் தேசாதிபதிகளுக்கும் அதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலுமமந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் யூதருக்கும் அவர்கள் அட்ஷரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது. 10. அந்தக்கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின் குதிரைகள் மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது. 16. இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும் மகிழ்ச்சியும் களிப்பும் கனமும் உண்டாயிற்று.
14 அவள் மாலையில் சென்று,
மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்;
அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான
அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள்.
மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு
பெயர் சொல்லி அழைக்கும் வரை
மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.


15 அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர்
மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது,
பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல்,
காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.
16 அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில்,
பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில்,
அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.
17 பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார்.
கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார்.
எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து,
வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.
18 இவற்றிற்குப்பின்,
எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும்
தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார்.
மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை [2] நாளை அறிவித்துத்
தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.

மன்னரின் உயிரை மொர்தக்காய் காத்தல்[தொகு]


19 கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது,
மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.
20 மொர்தக்காய் கட்டளையிட்டவாறு,
எஸ்தர் தம் வழிமரபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார்.
அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே,
அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.


21 மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில்,
பிகதான், தெரேசு, என்ற இருவர் சினமுற்று
மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடினர்.
22 இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது.
இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற,
அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
23 உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது.
அவர்கள் இருவரும் தூக்கிலிடப்படனர்.
இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.


குறிப்புகள்

[1] 2:4 = 2 அர 24:10-16; 2 குறி 36:10.
[2] 2:18 'அரசியல் குற்ற மன்னிப்பு' எனவும் பொருள்படும்.


(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை