திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஆபிராமும் லோத்தும் பிரிதல் (தொநூ 13). கற்பதிகை ஓவியம். ஆண்டு: 432-440. காப்பிடம்: புனித மரிய பெருங்கோவில், உரோமை.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 16 வரை

அதிகாரம் 13[தொகு]

பிரிந்து செல்வோம் என லோத்திடம் ஆபிராம் கேட்டுக் கொள்ளல், ஜேன் விக்டர் ஓவியம், 1655-65
  1. ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
  2. அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
  3. நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.
  4. தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
  5. ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
  6. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
  7. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
  8. ஆபிராம் லோத்தை நோக்கி, "எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில் நாம் உறவினர்.
  9. நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்" என்றார்.
  10. லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது. [1]
  11. லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர்.
  12. ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
  13. ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.
  14. லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
  15. ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன். [2]
  16. உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
  17. நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்" என்றார்.
  18. ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.


குறிப்புகள்

[1] 13:10 = தொநூ 2:10.
[2] 13:15 = திப 7:5

அதிகாரம் 14[தொகு]

ஆபிராமும் மெல்கிசெதேக்கும் சந்தித்தல், ஆபிராம் கவச உடையில் மண்டியிட்டுள்ளார். மெல்கிசெதேக் மன்னர் அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வருகிறார். டச்சு ஓவியம், 1510-20

ஆபிராம் லோத்தை மீட்டல்[தொகு]

1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,

2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.

3அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

5 ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்

6 சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

7அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.

8அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,

9ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும் - ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.

10இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.

11வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

12அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

13தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.

14தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

15அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.

16அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.

ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கின் ஆசி[தொகு]

17ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான். 18அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். 19அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!

20உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார். [*]

21சோதோம் அரசன் ஆபிராமிடம், "ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.

22அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:

23'நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்' என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

24இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்" என்றார்.


குறிப்பு

[*] 14:18-20 = எபி 7:1-10

அதிகாரம் 15[தொகு]

ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை[தொகு]


1 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்,
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது:
"ஆபிராம்! அஞ்சாதே.
நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்.
உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."
2 அப்பொழுது ஆபிராம்,
"என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்?
எனக்கோ குழந்தையே இல்லை!
தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின்
என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
3 நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால்
என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்" என்றார்.
4 அதற்கு மறுமொழியாக,
"இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான்.
ஆனால் உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்"
என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
5 அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து,
"வானத்தை நிமிர்ந்து பார்.
முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்.
இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார். [1]
6 ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.
அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். [2]


7 ஆண்டவர் ஆபிராமிடம்,
"இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க
உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து
இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்.
8 அதற்கு ஆபிராம்,
"என் தலைவராகிய ஆண்டவரே,
இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை
எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார்.
9 ஆண்டவர் ஆபிராமிடம்,
"மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு,
மூன்று வயதுள்ள செம்மறியாடு,
ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார்.
10 ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து,
அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி,
ஒவ்வொரு பகுதியையும் அதற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார்.
ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை.
11 துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது
ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.


12 கதிரவன் மறையும் நேரத்தில்
ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது.
அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. [3]
13 ஆண்டவர் ஆபிராமிடம்,
"நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது:
உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர்.
அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள்
அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். [4]
14 அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத்
தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்.
அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன்
அந்நாட்டை விட்டு அவர்கள் வெளியேறுவர்.
15 நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக
உன் மூதாதையரிடம் சென்றபின்,
நல்லடக்கம் செய்யப்படுவாய்.
16 நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர்.
ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை
இன்னும் முழுமை அடையவில்லை" என்றார்.


17 கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது.
அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும்
எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும்
அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து,
"எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள [5]
19 கேனியர், கெனிசியர், கத்மோனியர்,
20 இத்தியர், பெரிசியர், இரபாவியர்,
21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர்
ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.


குறிப்புகள்

[1] 15:5 = உரோ 4:18; எபி 11:12.
[2] 15:6 = உரோ 4:3; கலா 3:6; யாக் 2:23.
[3] 15:12 = யோபு 4:13,14.
[4] 15:13 = விப 1:1-14; திப 7:7.
[5] 15:18 = திப 7:5.


அதிகாரம் 16[தொகு]

சாராய் தன் பணிப்பெண்ணை ஆபிரகாமுக்கு மனைவியாய் அளித்தல், ஜோசப் மேரி வியன்ஸ் ஓவியம், 1749

ஆகாரும் இஸ்மயேலும்[தொகு]


1 ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை.
சாராய்க்கு ஆகார் என்ற எகிப்தியப் பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
2 சாராய் ஆபிராமிடம்,
"ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார்.
நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும்.
ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்" என்றார்.
ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.
3 ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின்,
அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத்
தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
4 அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள்.
தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும்
தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
5 அப்பொழுது சாராய் ஆபிராமிடம்,
"எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும்.
நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண்,
அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து
என்னை ஏளனமாக நோக்குகிறாள்.
ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்" என்றார்.
6 ஆபிராம் சாராயிடம்,
"உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள்.
உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்" என்றார்.
இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார்.
ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.


7 ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த
ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார்.
அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.
8 அவர் அவளை நோக்கி,
"சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்?
எங்கே போகின்றாய்?" என்று கேட்டார்.
அதற்கு அவள்,
"என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்" என்றாள்.
9 ஆண்டவரின் தூதர் அவளிடம்,
"நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று
அவளுக்குப் பணிந்து நட" என்றார்.
10 பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம்,
"உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப்
பெருகச் செய்வேன்" என்றார்.
11 மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம்,
"இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
அவனுக்கு 'இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய்.
ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
12 ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான்.
எல்லோரையும் அவன் எதிர்ப்பான்.
எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள்.
தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்" என்றார்.
13 அப்பொழுது, 'என்னைக் காண்பவரை
நானும் இங்கே கண்டேன் அல்லவா?'
என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை,
'காண்கின்ற இறைவன் நீர்' என்று பெயரிட்டழைத்தாள்.
14 ஆகவே, அந்தக் கிணற்றிற்கு
'பெயேர் லகாய்ரோயி' [1] என்ற பெயர் வழங்கலாயிற்று.
அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.
15 ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள்.
ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம்
'இஸ்மயேல்' என்று பெயரிட்டார். [2]
16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது
அவருக்கு வயது எண்பத்தாறு.


குறிப்புகள்


[1] 16:14 எபிரேயத்தில், 'என்னைக் காண்கின்ற வாழ்பவரின் கிணறு' என்பது பொருள்.
[2] 16:15 = கலா 4:22.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை