பட்டினத்தார்

விக்கிமூலம் இலிருந்து

பட்டினத்தார்

  • பக்கம் 30 - 96

பொது[தொகு]

கோயில் திரு-அகவல் 1[தொகு]

நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை (பொன்னம்பலம் = தில்லை)
நினைமின் மனனே நினைமின் மனனே

அலகைத் தேரின் அலமருகால் நின் (அலகை = உடலாகிய பேய்)
உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் (10)
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்

பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும் அனைத்து நினைக் கொன்றன (15)
தின்றனை அனைத்தும் அனைத்தும் நினைத் தின்றன
பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப்பெற்றன
ஓம்பினை அனைத்தும் அனைத்து நினை ஓம்பின
செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை
சுவர்க்கத்து இருந்தனை நரகில் கிடந்தனை (20)
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை

ஒன்றொன்று ஒழியாது உற்றனை அன்றியும்
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் (அற்புதம் என்பதன் எதிர்ச்சொல்)
என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை இதனுள்

பீளையும் நீரும் புறப்படும் ஒரு பொறி (கண்)
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி (காது)
சளியும் நீரும் தவழும் ஒரு பொறி (மூக்கு)
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி (வாய்)
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி (30) (மெய்)
சலமும் சீயும் சரியும் ஒருவழி
உள் ஊறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் (சட்டகம் = உடல்)

உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை (35)
ஒழிவருஞ் சிவபெரும் போக இன்பத்தை
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனது அற நினைவு அற இருவினை மலம் அற
வரவொடு செலவி அற மருள் அற இருள் அற
இரவொடு பகல் அற இகபரம் அற ஒரு (40)
முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத்து அரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கு என நெக்கு நெக்குருகித்
திருச் சிற்றம்பலத்து ஒளிரும் சிவனை

நினைமின் மனனே நினைமின் மனனே (45)
சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே

கோயில் திரு-அகவல் 2[தொகு]

காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து (5)

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்கும் கானகம்
சலமலப் பேழை இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை (10)
நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது
பூற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம் ஓடும் மரக்கலம் (15)
மாயா விகாரம் மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை (20)
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழுகொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் (25)
பிணமாய்க் கிடக்கும் பிண்டம் பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி
கால் எதிர் குவித்த பூளை காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம் (30)
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்
நீரில் குமிழி நீர்மேல் எழுத்து
கண் துயில் கனவில் கண்டகாட்சி
அதனினும் பொல்லா மாயக் களங்கம்
அமையும் அமையும் பிரானே அமையும் (35)
இமய வல்லி வாழி என்று ஏத்த
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டு கொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே

கோயில் திரு-அகவல் 3[தொகு]

பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும் படைத்து உடையவன் தலைபறித்து (5)

இடக்கையில் அடக்கிய இறைவ நின் அடைக்கலம்
செய்யபொன் னம்பலச் செல்வ நின் அடைக்கலம்
ஐய நின் அடைக்கலம் அடியன் நின் அடைக்கலம்
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்

விழுப்பொருள் அறியா வழுக்குறு மனனும் (10)
ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்

தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின (15)
இகலும் கொலையும் இழிப்புறு புன்மையும்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும் ஐம்பொறி முயக்கமும்
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை

உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை (20)
எல்ம்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங்குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறு புழுக் குரம்பையை
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்

தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் (25)
கொல்ப்படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியைக்
கோபத் தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை

ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை (30)
புலராக் கவலை விளைமரப் பொதும்பை
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தை
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயங்குந் திகிரியைக்

கடுவெளி உருட்டிய சகடக்காலைப் (35)
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப் (40)

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுது நின்
அடிமலர் கமலத்துக்கு அபயம் நின் அடைக்கலம்
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்
இமையா நாட்டத்து இறையே அடைக்கலம் (45)

அடியார்க்கு எளியாய் அடைக்கலம் அடைக்கலம்
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே அடைக்கலம்
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள்புரியும் (50)
எம்பெருமான் நின்இணை அடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே (52)

கச்சித் திரு அகவல்[தொகு]

திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் (5)

மானிடர்க்கெல்லாம் யானெடுத்துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் (10)

துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் (15)

மலமும் சலமும் வழும்புத் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலையென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி (20)

நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கியற்றும் (25)

அங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
 
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும் (30)
அன்ன முங் கறியும் அசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்

தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் (35)
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகும் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்

வெய்ய வதரும் பேணும் விளையத் (40)
தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்

தோலும் இறைச்சுயும் துதைந்து சீப்பாயும் (45)
காமப் பாழி கருவிளை கழனி
தூமைக் கடவழி தொளைபெறு வாயில்
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்
நச்சிக் காமுக நாய் தான் என்றும் (50)
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி
புண் இது என்று புடவையை மூடி

உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண் (55)
மால் கொண்டு அறியா மாந்தர் புகும்வழி
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி

பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி (60)
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிது என வேண்டா
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி

மெச்சிச் சிவபத வீடருள் பவனை (65)
முத்தி நாதனை மூவர் முதல்வனை
அண்ட ரண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே (70)

திரு ஏகம்ப மாலை[தொகு]

1-5[தொகு]

அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லம்
துறந்தான் அவனின் சதகோடி உள்ளத் துறவுடையோன்
மறம் தான் அறக் கற்று அறிவோ டிருந்து இரு வாதனையற்று
இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே (1)

கட்டியணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2)

கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையையெடுத்து
அப்புறந் தன்னில் அசையாமல் முன் வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில் நீத்துப் பின் வந்து உறங்குவளை
எப்படி நான் நம்பு வேன் இறைவா கச்சி ஏகம்பனே (3)

நன்னாரில் பூட்டிய சூத்திரப் பாவை நல் நார் தப்பினால்
தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப் போல்
உன்னா லியானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னால் இங்காவதுண்டோ இறைவா கச்சி ஏகம்பனே (4)

நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சி ஏகம்பனே (5)

6-10[தொகு]

பொல்லா தவன் நெறி நில்லாதவன் ஐம் புலன்கள் தமை
வெல்லா தவன் கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கன்பு
இல்லா தவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே (6)

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவதில்லை இடை நடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங்குலாமருக்கு என் சொல்லு வேன் கச்சி ஏகம்பனே (7)

அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால்
சொன்ன விசாரம் தொலையா விசாரம்நல் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரம்இப் பாவிநெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே (8)

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி ஏகம்பனே (9)

மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப் பின் தாயைமறந்
தேயும தேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனை (10)

11-15[தொகு]

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கோது வேன் எழுத்து அஞ்சுஞ் சொலேன் தமியேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக்கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ இரையெதுக்கோ இறைவா கச்சி ஏகம்பனே (11)

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமல் சுகமென்று நாடும் இத் துற்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே (12)

ஊருஞ்ச தமல்ல உற்றார் சதமல்ல உற்று பெற்ற
பேருஞ்ச தமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செலவஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே (13)

சீறும் வினையது பெண்உரு வாகித் திரண்டுருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகிக் கொடுமையினால்
பூறும் மலமும் உதிரமுஞ் சாயும் பெருங்குழி விட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவா கச்சி ஏகம்பனே (14)

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்தில் குணத்தில் அருளில் அன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகும் கச்சி ஏகம்பனே (15)

16-20[தொகு]

பருத்திப் பொதியினைப் போல் வயிறு பருக்குத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின் றார் துறந்தோர் தமக்கு
இருத்தி அமுதிடமாட்டார் அவரை இம்மாநிலத்தில்
இருத்திக்கொண்டு ஏன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே (16)

பொல்லா இருளகற்றும் கதிர் கூகையென் புண் கண்ணினுக்கு
அல்லா இருந்திடு மாறொக்கு மேஅறி வோ ருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவா கச்சி ஏகம்பனே (17)

வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார் வழக் குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடுவார் தினந் தேடி ஒன்றும்
மாதுக்களித்து மயங்கிடு வார்விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர்பிறந் தார் இறைவா கச்சி ஏகம்பனே (18)

ஓயாமல் பொய் சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப் பெற்ற
தாயாரை வைவர் சதி ஆயிரஞ் செய்வர் சாத்திரங்கள்
ஆயார் பிறர்க்குப காரஞ்செய் யார் தமை அண்டினர் கொன்று
ஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே (19)

அப்பென்றும் வெண்மைய தாயினும் ஆங்கு அந் நிலத் தியல்பாய்த்
தப்பின்றி யேகுண வேற்றுமைதான் பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவனிலும்
இப்படி யேநிற்பன் எந்தை பிரான் கச்சி ஏகம்பனே (20)

21-25[தொகு]

நாயாய்ப் பிறந்திடில் நல் வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயிற்றில் நாராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயா மரமும் வறளாங் குளமும் கல்ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே (21)

ஆற்றில் கிடைத்த புளியாக்கிடாமல் என் அன்பை எல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுரம் மூன்றெரித்துக்
கூற்றைப் பணி கொளுந் தாளுடையாய் குன்றவில் உடையாய்
ஏற்றுக் கொடியுடையாய் இறைவா கச்சி ஏகம்பனே (22)

பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசம் பிடித்திட் டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே (23)

 நாவார வேண்டும் இதஞ் சொல்லுவார் உனை நான் பிரிந்தால்
சாவேன் என் றேயிருந்தொக்க உண்பார்கள்கை தான்வறண்டால்
போய்வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ இறைவா கச்சி ஏகம்பனே (24)

கல்லார் சிவகதை நல்லோர் தமக்குக் கனவிலும் மெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குரு சொன்னபடி
நில்லார் அறத்தை நினையார் நின் நாமம் நினைவில் சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே (25)

26-30[தொகு]

வானமு தத்தின் சுவையறியாதவர் வண்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்கு
ஈனமு தச் சுவை நன்றல்லவோ கச்சி ஏகம்பனே (26)

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்கொட்டுலை ஊன் பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட்டேன் இறைவா கச்சி ஏகம்பனே (27)

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந் தோடம் செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவும்மற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே (28)

முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை ஓலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளி மயக்கே செய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவா கச்சி ஏகம்பனே (29)

பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குள்
பறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடிஅப் பாவையர் க்கீந்து
இறந்திட வோபணித் தாய் இறைவா கச்சி ஏகம்பனே (30)

31-35[தொகு]

பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சார்ஐம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தான்றறுப் பின் முன் அற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேன் இறைவா கச்சி ஏகம்பனே (31)

நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லார் நற் கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லாம் முடிந்தபின் சொல்லுகண் டாய் கச்சி ஏகம்பனே (32)

சடக்கடத் துக்கு இரை தேடிப் பலவுயிர் தம்மைக் கொன்று
விடக்கடித் துக்கொண் டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படக்கடித் தின்றுழல் வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக் கும்பொழு தேது செய்வார் கச்சி ஏகம்பனே (33)

நாறம்உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர் தம்
கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள் வாய் இறைவா கச்சி ஏகம்பனே (34)

சொக்கிட்டு அரண்மனைப் புக்குள் திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பது போல் சிவ நிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடிச்சிக்கும்
எக்குப் பெருத்தவர்க்கு என் சொல்லு வேன் கச்சி ஏகம்பனே (35)

36-40[தொகு]

விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்ன மிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப் போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில்
இருந்தாவ தேது கண்டாய் இறைவா கச்சி ஏகம்பனே (36)

எல்லாம் இறிந்து படித்தே இருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுண ராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப் பின்
எல்லாம் சிவன்செயலே என்பர் காண்கச்சி ஏகம்பனே (37)

பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவார் பூவை அன்னாள்
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப் பூசியாத உலுத்த ரெல்லாம்
என்னை யிருந்து கண்டாய் இறைவா கச்சி ஏகம்பனே (38)

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும்பவ மேசெய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள்
நெடும்பனை போல வளர்ந்து நல்லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத் தாய் இறைவா கச்சி ஏகம்பனே (39)

கொன்றேன் அனேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்று கொன்று
தின்றேன் அதன்றியுந் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே
நின்றேன் நின் சன்னதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே (40)

41-43[தொகு]

ஊர் இருந்தென் நல்லோர் இருந்தென் உபகாரமுள்ள
பேர் இருந்தென் பெற்றதாய் இருந்தென் மடப்பெண் கொடியாள்
சீரிருந்தென்ன நற்சிறப்பிருந்தென்ன இத் தேயத்தினி
லேறுருந்தென்ன வல்லாய் இறைவா கச்சி ஏகம்பனே (41)

வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லாலெறியப் பிரம்பாலடிக்கக் களிவண்டு கூர்ந்
தல்லாற்பொழிற்றில்லை அம்பலவாணர்க் கோர் அன்னை பிதா
இல்லாததாலல்லவோ இறைவாகச்சி ஏகம்பனே (42)

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடி யேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே. (43)

திருத் தில்லை[தொகு]

1-5[தொகு]

காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்கும் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
பொம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ என் செய்வேன் தில்லை சங்கரனே (1)

சோறிடும் நாடு துணிதருங் குப்பை தொண்டன் பரைக்கண்
டேறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை எப்பொதும்
நீறிடும் மேனியர்சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம் என் உள்ளமுமே (2)

அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவமுஞற் றாமல்நிட் டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல் செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே (3)

ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே (4)

பாராமல் ஏற்பவர்க் கில்லையென் னாமல் பழுது சொல்லி
வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து
பேராமல் சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே (5)

6-10[தொகு]

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல் சூத்திரங் கோள்களவு
கல்லாமல் கைதவ ரோடு இணங் காமல் கனவி னும்பொய்
சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே (6)

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவாரில்லையே (7)

காலை உபாதி மலஞ்சலமாம் அன்றிக் கட்டுச்சியிற்
சால உபாதி பசிதாகம் ஆகும்முன் சஞ்சிதமாம்
மாலை உபாதி துயில் காமமாம் இவை மாற்றிவிட்டே
ஆலம் உகந்தருள் அம்பலவா என்னை ஆண்டருளே (8)

ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
பாயும் இடபம் கடிக்கும் அரவம் பின்பற்றிச் சென்றால்
பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின் தொடரும்
போயென்செய் வாய்மனமே பிணக் காடவர் போமிடமே (9)

ஓடும் எடுத்து அதன் ஆடையும் சுற்றி உலாவி மெள்ள
வீடுகள் தோறும் பலிவாங்கியே விதி யற்றவர்போல்
ஆடும் அருள் கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்ன காண் சிவ காம சவுந்தரியே (10)

11-15[தொகு]

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப்பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே (11)

அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம் பெற லாம் வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகாணும் நாங்கள் அவர் காணும் எங்கள் குலதெய்வமே (12)

தெய்வச் சிதம்பர தேவா உன் சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே
மெய் வைத்த செல்வமெங்கே மண்ட லீகர்தம் மேடையெங்கே
கைவைத்த நாடக சாலையெங்கே இது கண் மயக்கே (13)

உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித் தொருவர் தம்மைக்
கெடுப்பானும் ஏதென்று கேள்வி செய்வானும் கதியடங்கக்
கொடுப்பானும் தேகி என்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று
தடுப்பானும் நீயல்லை யோ தில்லை ஆனந்தத் தாண்டவனே (14)

வித்தாரம் பேசினும் சோங்கேறி னும்கம்ப மீதிருந்து
தத்தாஎன் றோதிப் பவுரிகொண்டாடினும் தம்முன் தம்பி
ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ தில்லையுள் நிறைந்த
கத்தாவின் சொற்படி யல்லாது வேறில்லை கன்கங்களே (15)

16-20[தொகு]

பிறவாதிருக்க வரம்தரல் வேண்டும் பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண் இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிருமன மே அதுகாண் நல் மருந்துனக்கே (16)

தவியா திரு நெஞ்சமே தில்லை மேவிய சங்கரனைப்
புவியார்ந்திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை
அவியா விளக்கைப் பொன்னம்பலத் தடியை ஐந்தெழுத்தால்
செவியாமல் நீசெபித்து தால்பி றவாமுத்தி சித்திக்குமே (17)

நாலின் மறைப் பொருள் அம்பல வாணரை நம்பியவர்
பாலில் ஒருதரம் சேவிக்கொ ணாதிருப் பார்க் கருங்கல்
மேலில் எடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர் மீண்டுமொரு
காலில் நிறுத்துவர் கிட்டியும் தாம் வந்து கட்டுவரே (18)

ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பலவாணர் தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே (19)

அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்
கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக்காணக் கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ் செய்திருக்கின் றனவே (20)

திருச்செங்காடு[தொகு]

நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே
இருப்பார் திருவுளம் எப்படி யோ இன்னம் எத்தனை அன்னைக்
கருப்பா சயக்குழிக்கே தள்ளு மோகண்ணன் காணரிய
திருப்பாத மேதருதெரி யாது சிவன் செயலே (1)

திருவொற்றியூர்[தொகு]

ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்
செய்யுந் திருவொற்றி யூர் உடையீர் திரு நீறுமிட்டுக்
கையுந் தொழப் பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியமே (1)

சுடப்படு வார் அறி யார்புரம் மூன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே (2)

திருவிடை மருதூர்[தொகு]

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசு ற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரை (1)

தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும் பகை தன்னுடைய
சேயும் பகை உறவோரும் பகை இச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங் காதலினால்
தோயுநெஞ்சே மருதீசர் பொன் பாதஞ் சுதந்தரமே (2)

திருக்கழுக்குன்றம்[தொகு]

காடோ செடியோ கடல்புறமோ கனமே மிகுந்த
நாடோ நகரோ நகர்நடுவோ நலமே மிகுந்த
வீடோ புறந்திண்ணை யோ தமியேன் உடல் விழுமிடம்
நீள்தோய் கழுக்குறிலீசா உயிர்த்துணை நின்பதமே (1)

திருக்காளத்தி[தொகு]

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைச் சுற்றி
முத்தும் பவளமும் பூண்டு ஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே (1)

பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு பொன் படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன்மை யைப் போல்
உன்னால்பிர யோசனம் வேணதெல் லாம்உண் டுனைப்பணியும்
என்னால்பிர யோசனம் ஏதுண்டு காளத்தி யீச்சுரனே (2)

வாளால் மகவரி ந்துஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டு செய்து
நாளாறில் கண்இடத்து அப்பவல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி யப்பருக்கே (3)

முப்போது அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும்
அப்போது கண்கலக் கப்படவும் வைத்தாய் ஐயனே
எப்போது காணவல் லேன் திருக் காளத்தி ஈச்சுரனே (4)

இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர் ந்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள் பொன் முகலிக்
கரைக்கேகல் லாலநிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே (5)

நாறும் குருதிச் சலதாரை நாள் தொறும் சீ
யூறும் மலக்குழி காமத்துவாரம் ஒளித்திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம் விட்டு
ஏறும் பதந்தருவாய் திருக்காளத்தி ஈச்சுரனே (6)

கைலாயம்[தொகு]

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே கழல் நம்பினேன்
ஊன்சாயும் சென்மம் ஒழித்திடு வாய்கர வூரனுக்காய்
மான்சாயச் செங்கைமழுவலஞ் சாயவனைந்த கொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக் கொழுந்தே (1)

இல்லம் துறந்து பசிவந்த போது அங்கு இரந்து நின்று
பல்லும் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பதென் றோ கயிலாயத்தனே (2)

சீனந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும் அற்று நினையாமையும ற்று நிர்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப் பேன் அத்தனே கயிலாயத்தனே (3)

கையார ஏற்றுநின் றுஅங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துஉடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா என்று ஓலம் இடுவது என்றோ கயிலாயத்தனே (4)

நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்து உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற்று ஆனந்த மேற்கொண்டு மார்பில்கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே (5)

செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லாயில் புக்கிட ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேன் அத்தனே கயிலாயத்தனே (6)

மந்திக் குருளையொத் தேன்இல்லை நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்தனே கயிலாயத்தனே (7)

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல்அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே (8)

மதுரை[தொகு]

விடப்படு மாஇப் பிரபஞ்ச வாழ்க்கையை விட்டுமனம்
திடப்படு மோ நின் அருளின்றி யேதினமே அலையக்
கடப்படுமோ அற்பர் வாயிலில்சென் றுகண்ணீர்த்ததும்பிப்
படப்படு மோ சொக்க நாதா சவுந்திர பாண்டியனே (1)

பொது, மெய்யுணர்வு[தொகு]

1[தொகு]

உடைகோ வணம் உண்டு உறங்கப் புறந்திண்ணை யுண்டு உணவிங்கு
அடைகாய் இலையுண்டு அருந்தத் தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே (1)

வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே
ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே (2)

நாடிக்கொண்டு ஈசரை நாட்டமுற் றாயிலை நாதரடி
தேடிக்கொண்டாடித் தெளிந்தாயிலை செக மாயைவந்து
மூடிக் கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த வென்றும்
பீடிப்பையோ நெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தர்களே (3)

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே (4)

கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ கெடுவீர் இந்த மானுடமே (5)

6[தொகு]

சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்துவிட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே (6)

வினைப்போகமே ஒருதேகங் கண்டாய் வினைதான் ஒழிந்தால்
தினைப்போ தளவும்நில் லாதுகண்டாய் சிவன் பாதம்நினை
நினைப்போரை மேவு நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவருண்டோ மன மே எனக்கு உற்றவரே (7)

பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டி என்கொய்குழ லாள் கையில் முன் கொடுத்து
கட்டியிருந்த கனமாயக்காரி தன் காமம் எல்லாம்
விட்டுப் பிரியென் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே (8)
 
சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும்
போதுற்ற பூசலுக்கு என்செய லாம் செய்த புண்ணியத்தால்
தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே (9)

வாதுற்ற திண்புயர்அண் ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே (10)

11[தொகு]

வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே (11)

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்
தனையாள என்றும் பரலைகம் சித்திக்கும் சத்தியமே (12)

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அயும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே (13)

சீயும் குருதிச் செழு நீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போதுபகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே (14)

சிதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை தினம் இரந்து
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு நினைவெழுந்தால்
வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு இந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே (15)

16[தொகு]


ஆறுண்டு தோப்புண்டு அணிவீதி அம்பலம் தானு முண்டு
நீறுண்டு கந்தை நெடுங்கோ வணமுண்டு நித்தம் நித்தம்
மாறுண்டு உலாவிமயங்கும் நெஞ்சே மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப்பின் செம்மா இருக்கச் சுகமும் உண் டே (16)

உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே நமக்குக் குறைவில்லையே (17 )

மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள்மனமே
ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே (18)

மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டை யுண்டோ நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே (19)

ஒன் றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வ மெல்லாம்
அன்றென் றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென் றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென் றிரு மனமே உனக்கே உபதேசமிதே (20)

21[தொகு]

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே (21)

என்செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன்செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங் ஙனமே வந்து மூண்டதுவே (22)

திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடி வந்து
பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்
கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை
உருவாக்கிக் கொள்ள வல்லோ இங்ஙனேசிவன் உற்றதுவே (23)

விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும்இரேன் மெய்கெடாத நிலை
தொட்டேன் சகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும் பரம் என்னிடத்தேவந்து இங்கு எய்தியதே (24)

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்றுகண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே (25)

26[தொகு]

எரிஎனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரிஎனக்கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரிஎனக்கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறு எனக்கே (26)

அண்ணல்த ன்வீதி அரசிருப்பாகும் அணி படையோர்
நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும் நண்ணும் இவ்வூர்
துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான சுகமுமெல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே (27)

என் பெற்ற தாயாரும் என்னைப் பிண மென்று இகழ்ந்து விட்டார்
பொன்பெற்ற மாதரும் போ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே (28)

கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப்
பொறை யுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந் திண்ணையும்
தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே (29)

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே (30)

31[தொகு]

வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல் நாறும் இந்திரியச்சேறு சிந்திப்
பாய் நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே (31)

உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்த சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே (32)

ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால்
வாதைப் பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே (33)

சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று
கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மன மடங்கப்
பரப்பற்றி ருப்பதன் றோ பரமா பரமானந்தமே (34)

பேய்போல் திரிந்து பிணம்போல்கிடந்து இட்ட பிச்சை யெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்
தாய்போல் கருதித் தமருபோல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண் டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே (35)

36[தொகு]

விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீணனிட்ட
முடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்
சடக்கே கருவி தளர்ந்துவிட்டால் பெற்றத் தாயுந்தொடாத்
தொடக்கே உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகமெனக்கே (36)

அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை
தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பழனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ சலியாது இரு என் ஏழைநெஞ்சே (37)

செல்வரைப் பின் சென றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக்காட்டி பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே (38)

ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம்படங்கப்
போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந் திண்ணையில்
சாரீர் அனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகம்நகைக்க
ஏரீர் உமக்கு அவர் தாமே தருவர் இணையடியே (39)

நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந்தா யில்லை மாமறை நூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே (40)

41[தொகு]

ஓங்காரமாய் நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
ஆங்கார மானவர்க் கெட்டாக் கனி வந்தமர்ந்திடுமே (41)

விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம்பால் அணுகாது பரமானந்தமே
கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ
மதியர் திருமனமே இது காண்ஃ நல் மருந்துனக்கே (42)

நாய்க்குண்டு நமக்குண்டு பிச்சை நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம் மதி யாமல் வரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே (43)

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே (44)

நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்நெஞ்சமே
ஏன் இப்படி கெட் டுழல்கின்றாய் இனி ஏதுமில்லா
வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே (45)

46[தொகு]

அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிருந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே (46)

தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்
நீயாரு நானார் எனப்பகர் வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயுமல்லாமல் பின்னையேது நட் பாமுடலே (47)

ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி
தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால்
பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை
நீயும் அறிந்திலையோ பொருள் தேட நினைந்தனையே (48)

பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற் காட்சிக்கல்ல
சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தை கெட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே (49)

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்தது வே (50)

51[தொகு]

எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் சொல்லுக்கு எவர் அழுவார்
கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப்
பெருமுட்டுப் பட்டவர் போல் அழும் பேதையீர் பேத்துகிறீர்
ஒருமுட்டும் வீட்டும் அரன் நாமம் என்றைக்கும் ஓதுமினே (51)

மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந் தீ
ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே (52)

ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
போயாகிலும் உண்மையைத் தெரிந்தாயில்லை பூதலத்தில்
வேயார்ந்த தோளியர் காமவிகாரத்தில் வீழ்ந்தழுந்திப்
பேயாகி விழிக்கின் றனை மனமே என்ன பித்துனக்கே (53)

அடியார் உறவும் அரன் பூசை நேசமும் அன்புமன்றிப்
படி மீதில் வேறு பயனுமுளதோ பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக்கலங்கள்
தடியால் அடியுண்ட வாறொக்கும் என்றினஞ் சார்ந்திலரே (54)

ஆங்காரப் பொக்கிசம் கோபக் களஞ்சியம் ஆணவத்தால்
நீங்கா அரண்மனை பொய்வைத்த கூடம் விண் நீடிவளர்
தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்
பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே (55)

56[தொகு]

ஒழியாப்பி றவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற தெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
மழுமான் கரத்தனை மால் விடையானை மனத்தில் உன்னி
விழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டு மென்றே (56)

நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ
பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ பெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவர் ஆர் அருந்துவர் ஆர் அதுபோல் உடம்பு
தீக்கிரையாவ தல்லால் ஏதுக்கு ஆம் இதைச் செப்புமினே (57)

கச்சில் கிடக்கும் கன தனத்தில் கடைக்கண்கள் பட்டே
இச்சித் திருக்கின்ற ஏழை நெஞ்சே இமவான் பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணா முலை பங்கர் பாதத்திலே
தைச்சுக் கிடமனமே ஒரு காலும் தவறில்லையே (58)

மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய்யன்று காண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே (59)

சற்றாகிலும் தன்னைத் தான்றியாய் தனை ஆய்ந்தவரை
உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில் சென்று என்
பெற்றாய் மடநெஞ்சமே உனைப் போல் இல்லை பித்தனுமே (60)

61[தொகு]

உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் னெனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே யிருந்துவதுள் இண்மை யென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே (61)

கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரியே கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே (62)

ஒரு நான்குசாதிக்கும் மூவகை தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோவத் திசை முகனால்
வருநாளில் வந்திடுமந்தக்கண்ணாளன் வகுப்பொழியக்
குருநாதனாணைக் கண்டீர் பின்னையேதுக் குவலயத்தே (63)

பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின் றேன் அறிவில்லேன்
பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின் றவது நீயே (64)

தாயார்[தொகு]

தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை

1-5[தொகு]

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென் றபோதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி (1)

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் (2)

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் (3)

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன் (4)

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு (5)

6-10[தொகு]

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளி தனை வைப்பேபோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம் வைத்து மூத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு (6)

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே (7)

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை (8)

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய் (9)

வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் (10)

நினைவோட்டம்[தொகு]

1-3[தொகு]

வெளிப்பட்டபின் பாடிய தலப்பாடல்கள்

மென்று விழுங்கி விடாய்க் கழிக்கநீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே –நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து (1)

கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் – தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு (2)

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப்புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் – கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி (3)

4-6[தொகு]

வாவிஎல்லாம் தீர்த்த (ம்) மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கண நாதர் – பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத் தோர்
ஓதும் திருவொற்றியூர் (4)

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென் {று}
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடுவீர் (5)

எருவாய்க்கு இருவிரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்கோ கண்கலக்கப் பட்டாய்த் திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ (6)

7-9[தொகு]

எத்தனை ஊர் எத்தனை வீ {டு} எத்தனை தாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் கலையா ற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ (7)

அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா மெத்தன்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் ற்றி
இசிக்குதையா காரோணரே (8)

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு (9)

10-12[தொகு]

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னம் ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற்கா (10)

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணுமயன்
கையா றவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவையாறா (11)

காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு (12)

வெண்பா[தொகு]

1-5[தொகு]

சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
சுறந்த இடத்தை நாடுதே கண் (1)

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு – நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை (2)

வாசற் படிகடந்து வாராத பிச்சைக்கு இங்
காசைப் படுவதில்லை அண்ணலே – ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல் (3)

நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலை தான் அங்கிருப்பதுவும் – பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவதும் தானே சுகம் (4)

இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் – பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி (5)

6-10[தொகு]

விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத் தார் பட்டது பட் {டு}
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம் (6)

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மட நெஞ்சமே
செத்தாரைப் போலே திரி (7)

வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது
கட்டளையும் கைப்பணமும் காணாதே – இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன்
இற்றெனவே வைத்த இனிப்பு (8)

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சமே
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் – சொப்பனம்போல்
விக்கிப் பற்கிட்டக் கண்மெத்த பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச் செத் துக்கொட்டக் கண்டு (9)

மேலும் இருக்க விரும்பினையே – வெள்விடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்டஉடல்
கட்டை இட்டுச் சுட்டு சுட்டுவிடக் கண்டு (10)

11-15[தொகு]

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே
அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே வன் கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு (11)

இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு (12)

முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ
நாம்பூமி வாழ்ந்த நலம் (13)

எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண்தின்ப தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே
மேலைக் குடியிருப்போமே (14)

எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம் அறியீர் எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின்
சித்த நிராமயமா மே (15)

16-19[தொகு]

எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்டமுலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய் (16)

இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் (17)

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ வித்தகமாய்
காதிவிளை யாடி இரு கைவீசி வந்தாலும்
தாதி மனம் நீர்க்குடத்தே தான் (18)

மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என் செய்வாள் பின் (19)

நெறி[தொகு]

நாப்பிளக்கப் பொய் உரைத்துநவ நிதியம் தேடி நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே (20)

மத்தளை தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் கானா நிமிலனே நீ இன்றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே (21)

வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழி கொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ குயவன் தானும் கூழையோ
நிடுநின்றானும் வீணனோ நகரம் சூறை ஆனதே (22)

மண்ணும் உருகும் மரம்உருகும் மாயை உருகும் மால் உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேதவகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்ந்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே (23)

முதல்வன் முறையீடு[தொகு]

1-10[தொகு]

கன்னி வனநாதா – கன்னி வனநாதா

மூலம் அறியேன் முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா (1)

அறியாமை யாம்மலத்தால் அறிவு முதல் கெட்டனடா
பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா (2)

தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா (3)

மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா (4)

(கன்னி வனநாதா – கன்னி வனநாதா)

மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே (5)

மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே (6)

வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே (7)

மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே (8)

கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே (9)

மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
சோற்றுக் குழியும் இன்னம் தூரனே என்குதே (10)

11-20[தொகு]

(கன்னி வனநாதா கன்னி வனநாதா)

ஐந்து புலனும் அடங்கேனே என்குதே
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே (11)

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள் தோறும் எண்ணுதே (12)

அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
கைச்சும் இன்னு மானங் கழலேனே என்குதே (13)

நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே (14)

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே (15)

அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே (16)

நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
உரகப் படத்தல்குல் உனைக்கெடுப்பேன் என்குதே (17)

குரும்பை முலையும் குடிகெடுப்பேனே என்குதே
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே (18)

மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா (19)

கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா (20)

21-30[தொகு]

(கன்னிவனநாதா கன்னிவனநாதா)

புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ
கல்லாய் மரமாய்க் கழிந்த நாள் போதாதோ (21)

கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ (22)

பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ
வேதனை செய்தானவராய் வீந்தநாள் போதாதோ (23)

அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ (24)

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்ற நாள் போதாதோ (25)

நோய் உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்த நாள் போதாதோ (26)

ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ
ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ (27)

பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ (28)

நில்லாமைக்கே அழுது நின்ற நாள் போதாதோ
எல்லாரும் என்பாராம் எடுத்த நாள் போதாதோ (29)

காமன் கணையால் கடைப்பட்டல் போதாதோ
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ (30)

31-40[தொகு]

நான் முகன்பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ (31)

உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ
வருத்தம் அறிந்தையிலை வாவென்று அழைத்தையிலை (32)
(கன்னிவன நாதா கன்னி வனநாதா)

பிறப்பைத் தவிர்த்தயிலை பின்னாக கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டையிலை (33)

பாசம் எரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை
பூசிய நீற்றைப் புனை என்று அளித்தையிலை (34)

அடிமை என்றஃ சொன்னையிலை அக்கமணி சந்தையிலை
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை (35)

உன்னில் அழைத்தயிலை ஒன்றாகிக் கொண்டையிலை
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தயிலை (36)

ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை (37)

நாமம் தரித்தையிலை நான் ஒழிய நின்றையிலை
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை (38)

முத்தி அளித்தையிலை மோனம் கொடுத்தையிலை
சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை (39)

தவிப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை (40)

41-50[தொகு]

நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை
துன்றங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை (41)

கட்ட உலகக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை
நிட்டையிலே நில் என்று நீ நிறுத்திக் கொண்டையிலே (42)

(கன்னி வனநாதா கன்னி வனநாதா)

கடைக்கண் அருள் தாடா கன்னிவன நாதா
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா (43)

காதல் தணியேனா கண்டு மகிழேனோ
சாதல் தவிரேனோ சங்கடம் தான் தீரேனோ (44)

உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ
பொன் அடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ (45)

ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ
பாங்கான தண்டை பலமணிழும் பாரேனோ (46)

வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ
சூரர் கண்டு போற்றும்அந்த சுந்தரத்தைப் பாரேனோ (47)

இடையில் புலித்தோல் இருந்த நலம் பாரேனோ
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ (48)

ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ (49)

மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா (50)

51-60[தொகு]

கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ (51)

அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ
திரு நயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ (52)

செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ (53)

முல்லை நிலவெறிக்கும் மூரல் ஒளி பாரேனோ
அல்லார் புகுவத்து அழகுதனைப் பாரேனோ (54)

மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ
சகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ (55)

கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
பொங்கு அரவைத் தான் சடாயில் பூண்ட விதம்பாரேனோ (56)

சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ (57)

கொக்கிற்கு சூடி நின்று கொண்டாட்டம் பாரேனோ
அக்கினியை ஏந்தி நின்ற ஆனந்தம் பாரேனோ (58)

தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ
தாக்கும் முயலகன் மேல் தாண்டதவத்தைப் பாரேனோ (59)

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ (60)

61-70[தொகு]

அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ (61)

சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ (62)

(கன்னி வன நாதா கன்னி வனநாதா )

கெட்ட நாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா
பட்ட நாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ (63)

நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ (64)

வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ (65)

வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ (66)

ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ
ஊனம் அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ (67)

என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளேடா
பின்னை எனக்கு நீயல்லாமல் பிறிதிலையே (68)

( கன்னி வனநாதா – கன்னி வனநாதா )

அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ (69)

உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ (70)

71-72[தொகு]

ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ (71)

வாக்குமனா தீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள் குருவே நின் தாள் இணைக்கே யான் போற்றி (72)

அருள் புலம்பல்[தொகு]

மகளை முன்னிலையாகக் கொண்ட அருள் புலம்பல்

1[தொகு]

ஐங்கரனைத் தெண்டனிட்டே அருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டி எனை (1)

கொள்ளைப் பிறப்பு அறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி (2)

ஆதாரம் ஓராறும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதான கோட்டை எல்லாம் சுட்டான் துரிசு அறவே (3)

மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி (4)

என்னோடு உடன் பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி (5)

6[தொகு]

எல்லாரும் பட்டகடன் என்று தொலையுமடி
சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி (6)

மண்முதலாம் ஐம்பூதம் மாண்டுவிழக் கண்டேன்டி
விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேன்டி (7)

நீங்காப் புலன்கள் ஐந்தும் நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டு விழக் கண்டேண்டி (8)

மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரசத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி (9)

ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி
போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை (10)

11[தொகு]

வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே (11)

மூன்று வகைக் கிளையும் முப்பத் தறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி (12)

குருவாகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ (13)

கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன் பதியாண்டு இருந்தேண்டி (14)

எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி (15)

16[தொகு]

உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்
அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபதுபேர் பட்டார்கள் (16)

ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி (17)

தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி (18)

ஓங்காரம் கெட்டதடிஉள்ளதெல்லாம் போச்சுதடி
ஆங்காரம் கெட்டதடி அடியோடு அறுத்தாண்டி (19)

தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி
இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி (20)

21[தொகு]

முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி (21)

என்னையே நான் அறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னையறியத் தலம் எனக்குச் சொன்னாண்டி (22)

தன்னை அறிந்தேண்டி தனிக்குமரி ஆனேண்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ (23)
 
வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி ஆனேண்டி
காட்டுக்கு எரித்தநிலா கனவாச்சே கண்டதெல்லாம் (24)

நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பாட்டலவோ
பகையாரோ கண்டவர்கள் பார்த்தாருக்கு ஏச்சலவோ (25)

26[தொகு]

இந்நிலமை கண்டாண்டி எங்கும் இருந்தாண்டி
கன்னி அழித்தாண்டி கற்பைக் குலைத்தாண்டி (26)

கற்புக் குலைத்தமையும் கருவோ அறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும் போதம் இழந்தமையும் (27)

என்ன வினைவருமோ இன்னம் எனக்கு என்றறியேன்
சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி சோர்வறவே (28)

கங்குபகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி
பங்கம் அழித்தாண்டி பார்த்தானைப் பார்த்திருந்தேன் (29)

சாதியில் கூட்டுவரோ சாத்திரத்துக்கு உள்ளாமோ
ஓதி உணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி (30)

31[தொகு]

என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில் (31)

கொன்றாரைத் தின்றேனோ தின்றாரைக் கொன்றேனோ
எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ (32)

சாதியில் கூட்டுவரோ சமயத்தோர் எண்ணுவரோ
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி (33)

கண்டார்க்குப் பெண்ணலவோ காணார்க்கும் காமமடி
உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ (34)

கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் கொள்ளுவரோ
விண்டவர்கள் கண்டவரோ கண்டவர்கள் விண்டவரோ (35)

36[தொகு]

பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ
தொண்டாய தொண்டர்உளம்தோற்றி ஒடுங்குமதோ (36)

ஓத எளிதோ ஒருவர் உணர்வரிதோ
பேதம் அற எங்கும் விளங்கும் பெருமையன் காண் (37)

வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்
நோக்க அரியவன் காண் நுண்ணியரில் நுண்ணியன் காண் (38)

சொல்லுக்கு அடங்காண் காண் சொல்லிறந்து நின்றவன் காண்
கல்லுள் இருந்த கனல் ஒளிபோல நின்றவன் காண் (39)

சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன்காண்
ஏட்டில் எழுத்தோ எழுதினவன் கைப்பிழையோ (40)

41[தொகு]

சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
அம்மா பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி (41)

பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி
கோத்த நிலைகுலைந்த கொள்கை அறியேண்டி (42)

மஞ்சனம் ஆட்டி மலர் பறித்துச் சாத்தாமல்
நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி (43)

பாடிப்படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி (44)

மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண் (45)

46[தொகு]

அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண் (46)

சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே (47)

பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி
ஒத்த இடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி (48)

செத்தாரை ஒத்தேண்டி சிந்தை தெளிந்தேண்டி
மற்றாரும் இல்லையடி மறுமாற்றம் காணேண்டி (49)

கல்வியல்ல கேள்வியல்ல கைகாட்டும் காரணம்காண்
எல்லாயள வற்றதடி எங்கும் நிறைந்ததடி (50)

51[தொகு]

வாசா மகோசரத்தை மருவி இடம் கொண்டாண்டி
ஆசூசம் இல்லாண்டி அறிவுக்கு அறிவாண்டி (51)

பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி (52)

தித்திக்க ஊறுமடி சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி (53)

உள்ளுணர்வாய் நின்றவர் தம் உணர்வுக்கு உணர்வாண்டி
எள்ளளவும் உள்ளத்தில் ஏறிக்குறையாண்டி (54)

தூரும் தலையும் இலான் தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி (55)

56[தொகு]

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி (56)

வாக்கும் மனமும் வடிவம் இலா வான் பொருள் காண்
போக்கும் வரவும் இலான் பொருவரிய பூரணன் காண் (57)

காட்சிக்கு எளியான் காண் கண்டாலும் காணான்காண்
மாட்சி மனம் வைத்தார்க்கு மாணிக்கத்துள் ஒளி காண் (58)

வாழ்த்தி அவனை வழிபட்டால் மன்னுயிர்கள்
தோற்றம் அறியான் காண் சொல் இறந்த சோதியன்காண் (59)

ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான் (60)

61[தொகு]

அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண் (61)

எந்நாளும் இந்நாளும் இப்படியாய் அப்படியாய்ச்
சொன்னாலும் கேளான் காண் தோத்திரத்தில் கொள்ளான் காண் (62)

ஆத்தாளுக்கு ஆத்தாளாம் அப்பனுக்கு அப்பனுமாம்
கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல் காண் (63)

இப்போ புதிதோடி எத்தனை நாள் உள்ளதடி
அப்போதைக்கு அப்போது அருளறிவும் தந்தாண்டி (64)

பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி
குற்றம் அறுத்தாண்டி கூடிஇருந்தாண்டி (65)

66[தொகு]

வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும் (66)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல்
தாழாமல் தாழ்ந்தேண்டி சற்றும் குறையாமல் (67)

பொய்யான வாழ்வு எனக்குப்போது மெனக் காணேண்டி
மெய்யான வாழ்வு எனக்கு வெறும் பாழாய் விட்டதடி )68)

கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி
என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி (69)

சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள் (70)

71[தொகு]

கண்மாயம் இட்டாண்டி கருத்தும் இழந்தேண்டி
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி (71)

என்ன சொல்லப் போறேன் நான் இந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு காய்த்ததடி கண்ணார (72)

ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி
சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி (73)

இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்றறிந்து
அந்தசுகா தீதத்து அரும்கடலில் மூழ்கினண்டி (74)

இரும்பின் உறைநீர் போல எனைவிழுங்கிக் கொண்டாண்டி
அரும்பில் உறைவாசனை போல் அன்றே இருந்தாண்டி (75)

76[தொகு]

அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி (76)

கடல்நீரும் ஆறும்போல் கலந்துகரை காணேண்டி
உடலும் உயிரும் போல் உள் கலந்து நின்றாண்டி (77)

பொன்னும் உரை மாற்றும்போல் பொருவு அரிய பூரணன் காண்
மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள் ஒளிபோல் (78)

கங்குகரை இல்லாண்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும் அளவில்லாண்டி ஏகமாய் நின்றாண்டி (79)

தீவகம் போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்
பாவகம் ஒன்று இல்லாண்டி பார்த்த இடம் எல்லாம் பரன் காண் (80)

81[தொகு]

உள்ளார்க்கும் உள்ளாண்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப்பலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி (81)

அப்பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தாண்டி
இப்பிறப்பில் வந்தான் இவனாகும் மெய்ப்பொருள் காண் (82)

நீர் ஒளிபோல் எங்கும் நிறைந்த நிராமயன் காண்
பார் ஒளிபோல் எங்கும் பரந்த பராபரன் காண் (83)

நூலால் உணர்வரிய நுண்மையினும் நுண்மையன் காண்
பாலூறு சர்க்கரை போல் பரந்தபரி பூரணன் காண் (84)

உளக்கண்ணுக்கு அல்லால் ஊன் கண்ணாள் ஒருமதோ
விளக்குச் சுடர் ஒளிபோல் மேவி இருந்தாண்டி (85)

86[தொகு]

கல்லுள் இருந்த கனல் ஒளிபோல் காரணமாய்ப்
புல்லி இருந்தும் பொருவு அரிய பூரணன் காண் (86)

பொற்பூவும் வாசனைபோல் போதம் பிறந்தார்க்குக்
கற்பூவும் வாசனை போல் காணாக்கய வருக்கு (87)

மைக்குழம்பும் முத்தும்போல் மருவி மறவாதவர்க்குத்
கைக்குள் கனியாகும் கரு அறுத்த காரணர்க்கு (88)

பளிங்கில் பவளமடி பற்று அற்ற பாவலர்க்குக்
கிளிஞ்சிலை வெள்ளி என்பார் கிட்டாதார் கிட்டுவரோ (89)

ஏட்டுக்கு அடங்கீண்டி எழுத்தில் பிறவாண்டி
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி (90)

91[தொகு]

பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி
நஞ்சு பொதிமிடற்றான் நயனத்து அழல்விழியான் (91)

அகம் காக்கும் புறம் காக்கும் அளவிலா அண்டமுதல்
செகம் காக்கும் காணாத்திசை பத்தும் காக்குமடி (92)

பேசாப் பிரமமடி பேச்சிறந்த பேரொளி காண்
ஆசா பாசங்கள் அணுகாத பேரொளி காண் (93)

தேசம் இறந்தவன் காண் திசை இறந்த தென்கடல் காண்
ஊசி முனை இன்றி இல்லா உருப்பொருள் காண் (94)

சிப்பியில் முத்தொளிகாண் சின் மய நோக்கு இல்லர்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும் பொருள் காண் (95)

96[தொகு]

ஆல விருட்சமடி அளவிலாச் சாகையடி
மேலாம் பதங்கள் விசும்பு ஊடுருவும் மெய்ப்பொருள்காண் (96)

வங்கிசம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்
அங்கிசமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண் (97)

நாமநட்டம் ஆனதடி நவில இடம் இல்லையடி
காமனைக் கண்ணால் எரிக்கக் கனல்விழித்த காரணன் காண் (98)

கொட்டாத செம்பொனடி குளியாத் தரளமடி
எட்டாத கொம்பிலடி ஈப்புகா தேனமுதம் (99)

காணிப்பொன் னாணியுடன் கல்லுரை மாற்றுஇன்ன தென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி (100)

101[தொகு]

அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான் சற்றுப் பேசாப் பிரமமடி (101)

கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி (102)

வேதப் புரவியடி விரைந்தோடியும் அறியார்
காதற்ற ஞானமடி காண்பார் கருத்துடையோன் (103)

பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி (104)

ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி (105)

106[தொகு]

சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டி எனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி (106)

தான் என்னைப் பார்த்தாண்டி தன்னைத் தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி நவில இடம் இல்லையடி (107)

இன்றிலிருந்துநாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி (108)

பார்க்கில் எளிது அலவோ பற்றற்ற பற்று அலவோ
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி (109)

இத்தனை காலமடி இறந்து பிறந்ததெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில் உறை நீரானேன் (110)

111[தொகு]

எக்காலம் பட்டதடி இறந்து பிறந்த தெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில் (111)

காலம் கழிந்ததடி கர்மம் எல்லாம் போச்சுதடி
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி (112)

முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண் எனை விழுங்கிக் கொண்டான் காண் (113)

பாலின்கண் நெய் இருந்தாற்போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறிவிழுங்கிக் கொண்டாண்டி (114)

செத்தபடம் ஆனேண்டி தீ இரும்பில் நீரானேன்
ஒத்தவிட நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன் (115)

116[தொகு]

ஒப்பும் உவமையும் அற்ற ஒரு அரிதாய பொருள்
இப்புவி நில்குருவே என்னவந்தோன் தாள் வாழி (116)

ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுதருள் வாரீ (117)

இறந்த காலத்து இரங்கல்[தொகு]

1[தொகு]

வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லாச் சதுர் இழந்து கேட்டேனே (1)

மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலைகீழாய்த் தான் நடந்து கெட்டேனே (2)

வழக்குத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் மதி இழந்து கெட்டேனே (3)

ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே (4)

ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிக்
பாசாங்குபேசிப் மதி இழந்து கெட்டேனே (5)

6[தொகு]

குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே (6)

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டீர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே (7)

பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று
பண ஆசையாலே மதி இழந்து கெட்டேனே (8)

கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்து கெட்டேனே (9)

எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் மதி இழந்து கெட்டேனே (10)

11[தொகு]

சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே (11)

தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வுஇல்லாமல் இன்பம் என்று மாண்டேனே (12)

தோல் எலும்பு மாங்கிஷமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே (13)

போக்கு வரத்தும் பொருள் வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே (14)

நெஞ்சோடு புலம்பல்[தொகு]

1[தொகு]

மண் காட்டிப் பொன் காட்டி மாய இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுமின்ற தேசிகனைப் போற்றாமல்
கண் காட்டும் வேசியர் தம்கண் வலையில் சிக்கி மிக
அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே (1)

புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணி யோனாணி நீங்காமல்
இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும்
முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே (2)

முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு என்று ஈயாமல்
துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே (3)

அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே (4)

முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே (5)

6[தொகு]

மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே (6)

கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே (7)

முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கே வருமோ
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன் போல் காட்சியுற்றாய் நெஞ்சமே (8)

பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்
துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணிவளையும் காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே (9)

மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப்
போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே (10)

11[தொகு]

அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்
வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வாராமல்
நெஞ்சரணத்தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே (11)

அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெரு வாழ்வை நம்பிச்
சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே (12)

உற்றார் ஆர் பெற்றார் ஆர் உடன் பிறப்பு ஆர் பிள்ளைகள் ஆர்
மற்றார் இருந்தால் என் மாளும் போது உதவுவேரா
கற்றா இழந்த களம் கன்றது போலவே உருகிச்
சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே (13)

வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப்பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே (14)

சந்தனமும் குங்குமமும் சாந்தும் பரிமளமும்
விந்தைகளாகப் பீசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே (15)

16[தொகு]

காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து
பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே (16)

நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே (17)

சின்னஞ்சிறு நுதலாள் செய்த பல வினையால்
முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி
வன்னம் தள தளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே (18)

ஓட்டைத் துருத்தியை உடையும் புழுக் கூட்டை
ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப் போற்றியே
வீட்டைத் திறந்து வெளியை ஒளி யால் அழைத்துக்
காட்டும் பொருள் இதென்று கருதிலையே நெஞ்சமே (19)

ஊன் பொதிந்த காயம் உளைந்த புழுக் கூட்டைத்
தான் சுமந்த தல்லால் நீ சற்குருவைப் போற்றாமல்
கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு
மீன் பரந்தால் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே (20)

21[தொகு]

உடக்கை ஒருத்தி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொரும் அங்குவர மாட்டாதே (21)

தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்ததான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே (22)

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முலை மாதர்வலைக் குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே (23)

அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே (24)

ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே (25)

26[தொகு]

ஏணிப் பழுஆம் இருளை அறுத் தாள முற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்
ஆணி அற்ற மாமரம்போல் ஆகினனே நெஞ்சமே (26)

கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்ட மெல்லாம்
காத்தப் படியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி
ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே (27)

நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலை தொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்
வலைபட்டு உழலுகின்றமான் போல் பரதவித்துத்
தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே (28)

முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்
இடைக்கும் நடைக்கும் இதம்கொண்ட வார்த்தைசொல்லி
அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே நாய் அனையேன்
விடக்கை இழந்த மிருகமது ஆனேனே (29)

பூவாணர் போற்றும் புகழ்மதுரைச் சொக்கரது
சீர் பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் புலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே (30)

31[தொகு]

பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்
தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாகி
வித்திட்டாய் நெஞ்சே விடவும் அறியாயே (31)

அஞ்சும் உருவாகி ஐம்மூன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே (32)

ஊனம் உடனே அடையும் புழுக்கூட்டை
மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருதந் தேசம் விட்டுப்
போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே (33)

ஊறை இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை
வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்
றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே (34)

அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியதுபோல் ஆனேனே (35)

36[தொகு]

தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே (36)

விலையாகிப் பாண்டுக்கு வீறடிமைப் பட்டதுபின்
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே (37)

பூரண மாலை[தொகு]

1[தொகு]

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே (1)

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரசமே (2)

நாவிக் கமல நடு நெடுமால் காணாமல்
ஆவி கெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே (3)

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே (4)

விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே (5)

6[தொகு]

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே (6)

நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கி பொறி அழிந்தேன் பூரணமே (7)

உச்சிவெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே (8)

மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே (9)

இடைபிங்கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே நானும் தயங்கினேன் பூரணமே (10)

11[தொகு]

ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே (11)

மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே (12)

பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே (13)

தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்து களும்
உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே (14)

இந்த உடல் உயிரை எப்போ தும்நான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே (15)

16[தொகு]

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே (16)

சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல் பயன் அழிந்தேன் பூரணமே (17)

மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே (18)

தனி முதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே (19)

ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே (20)

21[தொகு]

வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே (21)

கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே (22)

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே (23)

எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே (24)

எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் நானும் பிறந்து இறந்தேன் பூரணமே (25)

26[தொகு]

பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே (26)

உற்றார் அழுதுஅலுத்தார் உறன் முறையர் சுட்டலுத்தார்
பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே (27)

பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து நான்
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே (28)

எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் சனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே (29)

என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே (30)

31[தொகு]

கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே (31)

செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே (32)

எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை நீர வரம் அருள்வாய் பூரணமே (33)

எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே (34)

சாதி பேதங்கள் தனை அறியமாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே (35)

36[தொகு]

குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத்துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே (36)

அண்ட பிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே (37)

சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே (38)

ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே (39)

என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தால்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே (40)

41[தொகு]

நரம்பு தசை போல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே (41)

சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்து
நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே (42)

குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய்
அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே (43)

ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே (44)

இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே (45)

46[தொகு]

மூலவித்தாய் நின்று முளைத்து உடல் தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே (46)

உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே (47)

தாயாகி தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே (48)

விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே (49)

ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே (50)

51[தொகு]

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே (51)

பொய்யாய்ப் புவியாய் புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே (52)

பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே (53)

முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே (54)

ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே (55)

56[தொகு]

வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே (56)

ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எலாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே (57)

மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே (58)

சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே (59)

பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற அளவறி யேன் பூரணமே (60)

61[தொகு]

வானில் கதிர்மதியாய் வளர்ந்து பின் ஒன்று ஆனது போல்
ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப் பறியேன் பூரணமே (61)

பொய்யும் புலையும் மிகப் பொருந்தி வீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே (62)

நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னைப் பதம் அறியேன் பூரணமே (63)

கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே (64)

வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எலாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே (65)

66[தொகு]

வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே (66)

தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே (67)

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே (68)

நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே (69)

மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே (70)

71[தொகு]

உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே (71)

சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னும் ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே (72)

முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே (73)

என்னதான் கற்றால் என் எப்பொருளும் பெற்றால் என்
உன்னை அறியாதார் உய்வரோ பூரணமே (74)

கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே (75)

76[தொகு]

வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே (76)

ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குண்டுவாய் இருந்த
சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே (77)

மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சென்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே (78)

பரம் என்பார் பானு என்பார் பாழ்வெளியாய் நின்ற
வரம் என்பார் உன்றன் வழி அறியார் பூரணமே (79)

எத்தனை பேரோ எடுத்தெடுத்துத்தான் உரைத்தார்
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே (80)

81[தொகு]

நகாரமகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே (81)

மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே (82)

உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே (83)

வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே (84)

சந்திரனை மேகமது தான் மறைத்த வாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே (85)

86[தொகு]

செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே (86)

நீர் மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே (87)

நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே (88)

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (89)

மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே (90)

91[தொகு]

பூசையுடன் புவனபோகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே (91)

படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே (92)

மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே (93)

அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே (94)

நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன் பூரணமே (95)

96[தொகு]

பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே (96)

சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிபே தங்கள் என்றும்
பாந்தம் என்றும் புத்தியென்றும் படைத்தனையே பூரணமே (97)

பாசம் உடலாய்ப் பசு அதுவும்தான் உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே (98)

ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே (99)

நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே (100)

101[தொகு]

முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே (101)

பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே (102)

நெஞ்சோடு மகிழ்தல்[தொகு]

1[தொகு]

அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய் நெஞ்சமே (1)

அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய் நெஞ்சமே (2)

அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே நெஞ்சமே (3)

பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே நெஞ்சமே (4)

களவிறந்து கொலையிறந்து காண்பனவும் காட்சியும் போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே (5)

6[தொகு]

பேச்சிறந்து சுட்டிறந்து பின்னிறந்து முன்னிறந்து
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய் நெஞ்சமே (6)

விண்ணிறந்து மண்ணிறந்து வெளியிறந்து ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய் நெஞ்சமே (7)

பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உன் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே (8)

ஊரிறந்து பேரிறந்து ஒளியிறந்து வெளியிறந்து
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே (9)

ஆண் பெண் அலியென்று அழைக்க அரிதாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே (10)

11[தொகு]

ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே (11)

ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே (12)

விருப்பு வெறுப்பு இல்லா வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே (13)

ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே (14)

உடனாகவே இருந்து உணர அரியானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே நெஞ்சமே (15)

16[தொகு]

நெடியகத்தைப் போக்கி நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே நெஞ்சமே (16)

மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில்
பாலூறும் மென்சிவைபோல் பற்றினையே நெஞ்சமே (17)

நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல்
ஊரோடுபேர் இல்லானோடு ஒன்றினையே நெஞ்சமே (18)

இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடியே இருக்கச்
செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே நெஞ்சமே (19)

மேலாம் பதங்கள் எல்லாம் விட்டு விட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே நெஞ்சமே (20)

21[தொகு]

கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய் நெஞ்சமே (21)

கற்றவனாய்க் கேட்டவனாய்க் காணானாய்க் காண்பவனாய்
உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே (22)

நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய்
சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே (23)

விட்டிடமும் தொட்டிடமும் விண்ணிடமும் மண்ணிடமும்
கட்டும் ஒரு தன்மை எனக் கண்ணுற்றாய் நெஞ்சமே (24)

எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே நெஞ்சமே (25)

26[தொகு]

வாக்கிறந்து நின்ற – மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலை செய்தாய் நெஞ்சமே (26)

எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து
சித்தாய் சித்தினிடம் சேர்ந்தனையே நெஞ்சமே (27)

தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்த
வாழாதே வாழ மருவினையே நெஞ்சமே (28)

உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே (29)

வாதனை போய் நிட்டையும் போய் மாமௌன ராச்சியம் போய்
பேதம் அற நின்ற இடம் பெற்றனையே நெஞ்சமே (30)

31[தொகு]

இரதம் பிரிந்து கலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே நெஞ்சமே (31)

சோதியான் சூழ்பனி நீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீ பெற்றாய் நெஞ்சமே (32)

உடல் கூற்று வண்ணம்[தொகு]

இசை[தொகு]

தனதன தான தனதன தான

தந்ததனந்தன தந்ததனந்தன

தனன தனந்த தனன தனந்த

தானன தானன தானன தந்த –

தந்ததனதான தனதானனா

1[தொகு]

ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து – (1)

பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்து திரண்டு பதும அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய்வாய் செவி கால் கைகள் என்ற – (2)

உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும்நாளும் அறிந்து – (3)

மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்தி
உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓரறிவீரறி வாகி வளர்ந்து – (4)

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாஇருபோவென நாமம் விளம்ப – (5)

6[தொகு]

உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரோ டோடி நடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே – (6)

உயர் தருஞான குரு உபதேசம் முத்தமிழின்கலை
யும் கரைகண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து (7)

மயிர்முடிகோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
கொண்டை புனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க – (8)

மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழி கொண்டு சுழிய எறிந்து
மாமல் போல் அவர் போவது கண்டு – (9)

மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி – (10)

11[தொகு]

ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம் இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து – (11)

வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல் விழுந்து இரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிராத குரோதம் அடைந்து –
செங்கையினில் ஓர் தடியும் ஆகிழே – (12)

வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் பொழிந்து – (13)

துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு (14)

கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து – (15)

16[தொகு]

தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதென நொந்து – (16)

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியெனதொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற – (17)

கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று –
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே – (18)

வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து – (19)

வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து (20)

21[தொகு]

பழையவர் காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று – (21)

பலரையும் ஏவி முதியவர் தராமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை (22)

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து – (23)

விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை –
நம்பும் அடியேனை இனி ஆளுமே (24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பட்டினத்தார்&oldid=1471619" இலிருந்து மீள்விக்கப்பட்டது