பதார்த்த குணங்கள் - செய்யுட்கள்

விக்கிமூலம் இலிருந்து

1. அகத்திக்கீரை

மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாந்
திருந்த வசனஞ் செரிக்கும்--வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு.

2. அகத்திப் பூ

புகைப்பித்த மும்அழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்அனலும் மாறும்--பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி.

3. அகத்திவேர்

நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனுஞ்
சொல்லகலுந் தாகமறுஞ் சொல்லவெனில்--மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகநத்தி னுள்ளெரிவு
மையெரிவும் போமென் றறி.

4. அகருமரம் (1)

நாசி யடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப்புடைகள் விட்டேகும்--பேசிற்
சுகரு மயக்குந் துணைமுலையாய் நல்ல
அகரு மரத்தா லறி.

5. அகருமரம் (2)

தளர்ந்தவி ருத்தருக்காந் தக்க மணத்தா
லுளைந்த சுரமுழுது மோடும்--வளந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்திய ரோசகம்போந்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று.

6. அக்கரகாரம்

அக்கர கார மதன்பே ருரைத்தக்கா
லுக்கிரகா லத்தோட மோடுங்காண்--முக்கியமாய்க்
கொண்டாற் சலமூருங் கொம்பனையே தாகசுரங்
கண்டாற் பயந்தோடுங் காண்

7. அக்ரோட்டு

பாரிலகு மக்ரோட்டின் பாலார்ந்த வெண்பருப்பைக்
கோரியுண் பார்க்குக் கொழுமையுண்டாம்--வேரிலுறும்
பட்டைக்குத் தொண்டைப்புண் பாற்சுரப்பு நீங்கிவிடும்
தட்டைக் கிருமியறுந் தான்.

8. அசுவகந்தி

கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு--விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம்அன லுண்டாம்
அசுவகந் திக்கென் றறி.

9. அசோகப் பட்டை

பாரிலசோ கப்பட்டை பாலதனிற் கூட்டிநீ
கோரிக் குடிநீராய் கொண்டக்கால்--நேரிழையே
வாதப் பெரும்பாடு வன்சீத பேதியுடன்
காத வழியோடுங் காண்.