பாற்கடல்/அத்தியாயம்-13

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search




13

ப்ளேக் — Plague

ந்த பயங்கர நோயை நாட்டை விட்டே அடியோடு விரட்டிவிட்டதாக இடையே பத்திரிகைகளில் அரசாங்கத்தின் கொக்கரிப்பு. மார்தட்டல், அடிபட்டதாக எனக்கு நினைப்பு. இதன் உண்மை, தற்போதைய நிலவரம் அறியேன். சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர், அதனால் அடிபட்டுவிட்ட என் பெற்றோர் வாயிலாக விட்டுவிட்டுத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

பெங்களூர், கோயமுத்தூர்தான் Plagueக்குப் பேர் போனதாம். சுவரோரம் எலி செத்துக்கிடந்தது அங்கே, இங்கே என்று தகவலாகவோ, வதந்தியாகவோ கேட்டாலே போதும். ஜனங்கள் வீடுகளைக் காலி பண்ணிக்கொண்டு தெருவே வெறிச்சோடிவிடுமாம். ஆனால் நோயின் விபரீதத்தை முற்றும் உணராமையால் என் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட்டனரோ, இல்லை - அண்டை வீட்டார் என்ன செய்கிறார்கள் பார்த்துக்கொண்டு நாமும் நடக்கலாம் என்று தயங்கினார்களோ, என்னவோ, சுப்ரமணியணுக்கு ஜுரம் கண்டுவிட்டது.

கடுமையான காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்நோயின் போக்கு எப்படி என்று அண்ணாவின் கண்ணீரில் கலந்த வார்த்தையில் என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அந்தச் சோகத்தில் அந்த விவரங்கள் முழுக்க நினைவில் நிற்கவில்லை. நின்றவரை இங்கு விஸ்தரிக்கவும் எனக்கு மனம் இல்லை. விரசமான கோரத்தை விவரிப்பதில் புண்ணியம் என்ன? ஏதோ ஒரு சமயத்தில் அம்மாவே என்னைத் தனியே அழைத்துத் தன்னையோ அண்ணாவையோ அதுபற்றிக் கிளறிக் கிளறிக் கேட்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டாள்.

ஊரிலிருந்து யாராவது வந்தார்களா ? வர அனுமதிக்கப்பட்டனரா ? தெரியாது.

பக்கத்திலிருந்தவர் இரக்கம் பார்த்த துணையா? உதவியா? தெரியாது.

இதற்கு இடுகாடா? சுடுகாடா ? தெரியாது.

எதுவோ அதனின்று திரும்பிய அம்மாவின் துக்கத்தைக் காட்டிலும் அண்ணாவுக்குக் கண்டுவிட்ட அதிர்ச்சிதான் சொல்லப் போதாதென்று அம்மா சொல்கிறாள். இதுபற்றி விலக்க முடியாதபடி எப்போதேனும் பேச்சு நேரிடும் போதெல்லாம் அண்ணாவுக்குக் கண் தளும்பும். “ராமாமிருதம், ஏமாந்து விட்டேண்டா!“ — அப்பாவுடன் பேச்சைத் தொடர வேண்டாமென எனக்கு ஜாடை காட்டுவாள்.

அண்ணாவுக்கு ஏதோ குற்ற உணர்வில் trauma. அண்ணா வீடு வீடாகப் படியேறி, “ஏ சுப்ரமணியா! சுப்ரமணியா !” என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டாராம்.

அம்மாவின் நிலை எப்படியிருக்கும் ! நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.

பகவானுக்கு அநாதி என்று ஒரு பெயர் உண்டு.

அநாதிக்குப் பெண்பால் அநாதையா? அல்ல, இது வேறா?

அனாத பந்தோ!

அடியே பெருந்திருவே, இப்படியெல்லாம் பண்ணாவிட்டால், உன்னை நாங்கள் மறந்துவிடுவோமா?

அண்ணாவை ஒருவாறு சமாதானப்படுத்தித் தெருவிலிருந்து வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு எந்த டாக்டர் அகப்படுவான் என்று தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்து அவர் அண்ணாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “அதிர்ச்சிதான். வேறு கவலைக்கிடமாக எனக்கு ஏதும் படவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலையிலிருந்து அவர் உடனே மாற வேண்டும். உடனே ஊருக்குப் போய்விடுங்கள்.”

ஆகையால் அன்றே இரவோடு இரவாய்...

ரயிலில், சுந்தரத்துக்கு ஜுரம் கண்டுவிட்டது.

அம்மாவின் விழிகள் திகிலில் சுழல்கின்றன. மாறி மாறித் தம்பியைப் பார்க்கிறாள்.

மழுக் காய்ச்சலில் பையன் நினைவிழந்து கிடக்கிறான்.

அண்ணா அவனைப் பார்க்கிறார். அடுத்து அம்மாவைப் பார்க்கிறார்.

நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.

“No no. no. no“

அம்மா, அழுத்தமாக, அண்ணாவின் கையைப் பிடிக்கிறாள்.

உஷ், மூச் - விஷயம் தெரிந்தால் அப்படியே இறக்கி விட்டு விடுவான்கள்.

அவள் சோதனையில் இது ஒரு விதம், சோதனையிலேயே சோதனை முயற்சி.

புயல் கடலில் உருவாகிறது. அலைகள் மதில்கள் உயரம் எழுகின்றன. மதில்கள் உடைந்து சரிகின்றன. ஒவ்வோர் அலையும் தனித் தனிக் கடலாகிறது. அலை நடுவே ஓடம் சாய்கிற சாய்வில் கவிழ்ந்துவிடும் போல் ஒருக்களிக்கிறது. கவிழ்ந்தாலே தேவலை, ஆனால் கவிழவில்லை. தத்தளிக்கிறது.

நான் கடலில் மட்டும் இல்லை. உன் வயிற்றின் உள்ளும் இருந்தேன். உன் வயிறு சாதாரணமா? கடலினும் பெரிது. அங்கேதான் எனக்கு ஒளிவிடம், கடலிலும்கூட.

இதுகாறும், பௌர்ணமியின் நடுநிலவில், அலை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டும்தான் உயிர். ஆனால் அதற்குள் அதன் விளைவைப் பார்.

அழகிய அந்தி மந்தாரம் காட்டிய மேகங்கள்தாம் இப்போது உடைப்புக் கண்டு கொட்டுகின்றன. பெரும் பெரும் மழைத் தூறல்கள் சாட்டைகள், நெடும் நெடும் தூலங்கள், உருவிய ராக்ஷஸ வாள்கள், பாம்பு வால்கள், சில்லிப்பே, நெருப்பினும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் விளாசுகின்றன, விழுகின்றன. 'சொடேர்! சொடேர் உருவி உருவி அடிக்கின்றன. துளைக்கின்றன. கூடவே விதியின் விளையாட்டில் சேர்ந்துகொண்ட இந்த முக்கூடலில், அலைகடல் படும் பாடில், அதன் நடுவே படகு எம்மாத்திரம்? பம்பரமாய்ச் சுழல்கிறது, பந்தாடுகிறது. புயலென்றால் இப்படித்தான் இருக்க வேணுமா? அடி மகளே, அடி அசடே, பின் எப்படி? என் சினமேதான் நான். பாற்கடலை நீங்கள் மட்டும் கடைவதாக உங்கள் நினைப்பா? நோகாமல் அடி, ஓயாமல் அழுகிறேன் என்கிற உங்கள் கடையலில் அமுதம் காண்பதெப்போ? பார், என் கடையலைப் பார்! ஆனால் நான் கடைந்து, நீங்கள் காணப்போகும் அமுதத்தில் எனக்குப் பங்கு கிடையாது. ஏன், அதுதான் பாற்கடல் நியாயம். நான் அசுரன், பாம்பின் தலைப் பக்கம் பிடித்துக் கடைகிறேன். வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தலை ஒரு சில முறைகளேனும் தெரிய வேண்டாமா?

நான் மடிவதற்குள் இழைக்கும் சின்னாபின்னமே என் பழிவாங்கல், நான் மடிவேன், உயிர் பெறுவேன். மறுபடியும் வருவேன், போவேன். எதிர்பாராத சமயத்தவன் நான். இதுதான் புயல்; அதுதான் நான்.

வீசும் புயலில், ஓயாத மழையும், நொறுங்கும் இடியும், வானத்தின் வயிற்றைக் கிழிக்கும் மின்னலும், இருளின் வீக்கமும் அன்றி, இரவு எது? விடிவு எது? இருள் எது?

புயல் எப்போது கடந்தது? எந்தக் கரையைக் கடந்தது? அங்கு எத்தனை கிராமங்களை விழுங்கிற்று?

கடலின் சினப்பு தணிந்தபாடில்லை. வீங்கி, குமுறி, உள்ளுக்கே 'விண் விண்….'

நாசம் தன் கூத்தை இங்கு ஆடிவிட்டு அடுத்த இடம் தேடிப் போய்விட்டது.

பத்தே நாட்களில் சுந்தரம், சுப்ரமணியனை இழந்த பின்னர், வாழ்க்கையைப் போஷிக்கும் சில சந்தோஷ ஊற்றுகள் என் பெற்றோர்களின் நரம்புகளில் வற்றிவிட்டன என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஒரு கவிதை The wreck of the Hesperus (பையன் பருவத்தில் படித்தது. தலைப்பு தப்பாயிருப்பின் திருத்தம் கோருகிறேன்)

கப்பல் தேசத்தில், இங்கிலாந்தின் அரசன் முதலாம் எட்வர்டின் மகன் மூழ்கிவிடுகிறான். தகப்பனைப் பற்றிக் கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது;

He never smiled again.

அண்ணாவும் அம்மாவும் சிரிக்காமல் இல்லை. அண்ணா தமாஷ் பண்ணாமல் இல்லை. குடும்பத்தின் சந்தோஷங்களில் இருவரும் பங்கு கொள்ளாமலில்லை. கல்யாணம் கார்த்தி என்று வெளி விசேஷங்களுக்குப் போகாமல் இல்லை. சபை நடுவே கலகலப்பாக இல்லாமல் இல்லை. துக்கத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை. வாழாமல் இல்லை. ஆனால்?

ஆனால் –

இருவர் ரத்த ஓட்டத்திலும் துயரக் குமிழி ஒன்று உருவாகி, ரத்தக் குழாயை அடைக்காமல், ஆனால் உடையாமல், கரையாமல் எஞ்சிய வாழ்நாள் பூராவும் தங்கிவிட்டது. ஓ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இந்தச் சோகத்தோடு பங்கு தீர்ந்துவிட வில்லை. அண்ணாவைச் சாவு முன்னால் ஆட்கொண்டதோ மற்ற இடிகளினின்று பிழைத்தார். இல்லாவிடின் அவர் தாளக்கூடியவர் அல்ல. அம்மா நிறைய அனுபவித்துவிட்டாள். ஆனால் முதல் துயரம் (அல்லது முதல் காதல்) பிறவியின் முதல் கவிதையாக அமைந்து விடுகிறது.

எழுதினால்தான் கவிதை அல்ல. வார்த்தைகள்தான் கவிதை அல்ல. கவிதையென்று தானே உணர்ந்தால் தான் கவிதை அல்ல. சிறுவயதிலேயே அம்மா தாயை இழந்தாள். அதற்கும் முன்னர் தந்தையை இழந்தாள். ஆனால் அந்தத் துயரங்கள் அவளுடைய கவிதை அல்ல. அண்ணாவுக்கும் அம்மாவுக்குமிடையே காதல் கண்டதால் அவர்கள் திருமணம் நடந்தது என்றில்லை. ஆகையால் அவர்கள் திருமணமும் கவிதையில்லை. உண்மையின் - இல்லை, அது சொல்வதும் போதாது - சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கின்றது. கோடரி மேல் மரம் வளர்ந்துவிடுகிறது. ஆனால் உள்ளே கோடரி பாய்ந்த இடத்தில், பாய்ந்தபடி, பத்திரமாய்.

இந்த முதல் கவிதைக்கும் தேவியின் பாதகமலங்களுக்கும் ஏதோ பற்று இருக்கிறது. அவள் சரணம் பட்ட மாத்திரத்தில் மலரின் இதழ்கள் மேல் இதயத்தின் ரத்தச் சொட்டுகள் குங்குமச் சிதறுகளாக மாறிவிடுகின்றன.

அதை ஏற்று, அவளே நெஞ்சில் நட்டுவிடுகிறாள். அங்கு அது தெறித்துக்கொண்டு கமழ்ந்துகொண்டு, இதர சமயத்தில் இதயப் புதரில் மறைந்துகொண்டு, தனிப் பூவாய்ப் பூத்துக்கொண்டே விளங்குகிறது. ஓ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக் காலம் எழுதி என்ன? என் பற்றாக்குறை நெஞ்சை அடைக்கிறது.

“அந்தக் குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு சுகத்தை அறியவில்லை! அண்ணா வெளியூரில் படிப்பு, பிறகு உத்தியோகம் சாக்கில், எப்படியோ ஒதுங்கியே இருந்துவிட்டான். தாய் தகப்பனை இழந்தபின் சிறுசிலிருந்தே இவர்கள் என்னோடு ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டார்கள். விடிவு காணும் வேளையில், குழந்தைக் கைப்பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி, திடுதிப்புனு இருவரையும் தோத்துட்டு நிக்கறேன். இப்படிப் போகணும்னு இருந்தால், இதுகள் பிறப்பானேன்? பிறவியின் வீணோடு எனக்குச் சமாதானம் பண்ணிக்கொள்ள முடியவில்லை. இந்த ஆற்றாமையைக் கேட்பதற்கு ஆள் இல்லையே! தெய்வத்தைக்கூட என்னால் இனி அளவோடுதான் நம்ப முடியும். அது சர்வ வல்லமை உள்ளதல்ல. பல விஷயங்கள் அதன் வசத்தில் இல்லை. என்னவோ திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த ஒரு மூலை, அதோடு சரி. தெய்வத்தின்மேல் பழி போடுவதில் அர்த்தமில்லை. நான் அறியாதவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்.”

தன்னை அறியாமலே அப்பவே, அம்மா வாழ்க்கைக் கோடுகளைப் பற்றி, ஒரு தத்துவ முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு வயது ஏற ஏற, அவளை ஒரு தோரணை சூழ்ந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன். ஆனால் அது தோரணையில்லை. விஷயங்களை எடை போட்டு ஒதுக்கிவிட்ட ஒரு விரக்தி. “ஆ, இது இவ்வளவு“ “ஓ, இது இவ்வளவுதானா?”

எதிர்த் தராசில் எடை கட்டியிருப்பது தம்பிகளின் சாவு - நல்லது பொல்லாது, எல்லாவற்றுக்கும் அதுவே தான் எடை. இது சுயபிரக்ஞையில் எல்லாருக்கும் வெளிப்படையாக நடக்கவில்லை. உள்ளுணர்வில் தோய்ந்து, விஷயங்களை நோக்கும் பாவனையில், நடைமுறையில் காண முடிந்தது என்றே சொல்லிக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் Double event என்று ஒரு பிரயோகம் உண்டு - இரட்டைப் பிறவியைத் தெரிவிப்பதற்கு. ஆனால் இந்தக் குடும்பத்தில் அது இரட்டைச் சாவு எனத்தான் பொருள் கண்டது. ஏதோ குடும்பச் சாபம் போல், அவை அடுத்தடுத்தோ அல்லது நெருக்கத்திலோ நேரும். ஏதோ முறையில் விதியால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களாகி விட்டோம். உடனே இங்கே, இவ்வரலாற்றில் இடம் கண்டுகொள்ளட்டும்.

“லா.ச.ரா.வின் எழுத்தில் எப்பவும் சாவின் நிழல் ஆடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.“ இப்படி ஒரு விமரிசனம்.

ஏன் இராது? எனக்கு அறியாத வயதிலிருந்தே சுந்தரம் - சுப்ரமணியன் சாவில் ஆரம்பித்த தொடர்பு.

“ரெயில் விபத்து, கொள்ளைக் கூட்டத்தாரால் சுட்டுக் கொலை, புயல், தீ, அங்கே உள்நாட்டுக் கலகம், இங்கே assassination, அதோ கொரியா என்று whole sale கனக்கில் வாரிக்கொண்டு போகையில், உயிரே மலிவாகிவிட்ட இந்நாளில், தனிச் சாவுக்கு என்ன பூச்சூட்டல்? இதெல்லாம் இலக்கியம் பண்ணுகிறோம் என்று ஒரு பம்மாத்து. எங்களைத் தங்களோடு எப்பவும் இருத்தி வைத்துக்கொள்ள ஒரு பயமுறுத்தல். இதற்கெல்லாம் நாங்கள் மசிந்துவிடுவோமா? போகிறவாளைத் தடுக்க முடியுமா? இதோ நான் வெளியே போகிறேன். உயிருடனோ, உருப்படியாகவோ திரும்பி வருகிறேன் என்பது என்ன நிச்சயம்? உங்களுக்கு நாளை என்பது இருந்தது. அதனால் நம்பிக்கையைக் கொண்டாடுகிறீர்கள். அதனாலேயே சாவையும் கொண்டாடுகிறீர்கள். எங்களுக்கு நாளை என்பது இல்லை. ஆகையால் கொண்டாடுவதற்கு உயிரும் இல்லை, சாவும் இல்லை. கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. பிய்த்துக் கொண்டு போவது ஒன்றைத் தவிர. ஏன் பிறந்தாய்? இறப்பதற்குத்தான் பிறந்தோம். இதற்குள்ளேதான் கராட்டே, Kungfu எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். Elvis Presley பாட்டு பாட வேண்டும். Guitar வாசித்திக் கொண்டே ஆட வேண்டும். ஹஹ் ஹா! சச்சாச்சா சச்சாச்சா - சொடுக்கு விரலை ! ஓடி இடுப்பை ! jug jug, jig jig Whoope ஒரு Valentino என்ன, James Dean என்ன, Bruce Lee என்ன, இவர்களைப் போல் பொட்டென்று போய்விட வேண்டும், அப்போதுதான் என்னைச் சுற்றி ஒரு cult வளரும்.“

எதிர்ப்பதற்கென்றே எதிர்ப்பு என்பதோடல்லாமல், இதுவே ஒரு தத்துவம், இயக்கம், ஏக்கம்!

ரி, முகிலாம்பரி, சோகாபரணம் என்கிற மாதிரி வழக்கில் இல்லாத ராக ப்ரஸ்தாரத்தில் இறங்கிவிட்டு, நேயர்கள் இன்னும் அதிகப்படியான குழப்பத்துக்கும் வேதனைக்கும் ஆளாகுமுன், ரஞ்சகமான ஒரு துரித உருப்படிக்கு நேரம் வந்துவிட்டது என்று எனக்கே தோன்றுகிறது. ஆ!

ஓவியர் ஸுபாவைப் பற்றிக் கொஞ்ச நேரம். எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

அந்த நாள், 'அமுதசுரபி'யின் ஆஸ்தான எழுத்தாளனாக நான் விளங்கியபோது, ஸுபாதான் எனக்கு இன்றியமையாத பக்கவாத்தியக்காரர். சித்திரங்கள் இல்லாமல் பத்திரிகையில்லை என்கிற நிலை வெகு நாட்களாக இருந்து வருகிறது. அதுவும் இப்போது சித்திரங்களின் ஆதிக்கம் முன்னிலும் ஓங்கி, அதில் விதவிதமான பாணிகள், விஷயத்துக்கேற்ற சித்திரக்காரர், சித்திரக்காரருக்கேற்ற விஷயம் என்கிற மாதிரியெல்லாம் வளர்ந்து, நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற நிலையில் இருக்கிறது. வியாபார ரீதியில், விஷயத்தைக் காட்டிலும் சித்திரங்களின் இடம் இப்போது கெட்டி. இந்த நிலைமையில் என் தனி அபிப்பிராயம் அதிகப்பிரசங்கம். அவசியமற்றது, எந்தச் சமயத்திலும் அது முக்கியமும் இல்லை.

எழுத்தைப் படிக்கையில், வரிகளுக்கிடையே, எழுதாத சொற்கள், வாசகனின் யூகத்துக்கு எப்படி ஒளிந்திருக்கின்றனவோ, அதேபோல் சித்திரத்தில் வரையாத கோடுகளுக்குள் காட்டாத மேனி காத்துக்கொண்டிருக்கிறது என்பது என் துணிபு. ஆகவே இரண்டும் இணைந்த கலவையில், சித்திரக்காரரின் ஒத்துழைப்புடன் புதுமையாக ஏதேனும் செய்வதோடல்லாமல் என் எழுத்தின் (அழுத்தம் உச்சரிப்பு - 'என்') வீச்சை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது என்பதுதான் என் குறி எழுதாத வார்த்தைகளையும் காட்டாத மேனியையும் தேடுவோனின் ஆர்வத்தையும் தூண்டும்படி இருத்தல் வேண்டும். சித்திரமும் செந்தமிழும் இணைந்து இழைக்கும் ரஸவாதம் ஓவியனுக்கும் எழுத்தாளனுககுமிடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஒருமைப்பாடு, குறிப்பறிந்துகொள்ளும் தன்மை, கொஞ்சம் கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து, எல்லாமே தேவை. இந்த எதிர்பார்ப்பு அதிகப்படிதான். எல்லாமே முடிந்தவரைதான். முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போமே!

51, 52 வாக்கில், 'அமுதசுரபி'யில் பஞ்சபூதக் கதைகள் எனும் சோதனை முயற்சியில் ஜலத்தைப் பிரதான பாத்திரமாக உருவகப்படுத்தி, தரங்கிணி என்கிற தலைப்பில் முதல் கதை வெளிவந்தது. என் சாதகத்தில், இந்த வரிசை ஒரு முக்கியமான முனையெனக் கருதுகிறேன் என்று இப்போதைக்குச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

தரங்கிணிக்கு முகப்புப் படமாக என் மனக்கண் கண்ட காட்சி பாறைகளில், படிப்படியாக இறங்கிப் பொங்கிச் சுழித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியில், அந்த ஜலத்திலிருந்தே தரங்கிணி என்ற வார்த்தையின் எழுத்துக்கள் தனித்தனியாகத் திரண்டு, உருண்டு, உக்ரகமாகப் பிதுங்குகின்றன. இந்த ideaவை ஸுபா விடம் தெரிவித்துச் சித்திரமாக்கும்படிக் கேட்டேன்.

சரியென்று தலையை ஆட்டினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, என் idea சாத்தியமில்லையென்று அவர் தெரிவித்ததும் எனக்குப் பெருத்த ஏமாற்றந்தான். வழக்கப்படி ஒரு பெண் முகம் முகப்பாக அமைந்ததும் எனக்குப் பெருத்த கோபமுந்தான். இஷ்டப்படி எதையேனும் வரைந்துவிட்டாலும் கலர், Block, அச்சு என்கிற கட்டங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நான் அறியமாட்டேன். கற்பனைக்கு உள்ள துராசையும், சுயநலமும் சொல்லுபடி போகாது. ஆயிரம் எண்ணலாம், எத்தனையோ பிரயாசையில் ஒன்று தேறினால் புண்ணியம். மிச்சம் அத்தனையும் பிந்துசேதம். ஆகையால் எங்களையும் இளகிய கண்ணுடன் பார்க்க நியாயம் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸுபாவின் பெரும் வெற்றிகளில் ஒன்று, 'கங்கா' எனும் கதைக்கு அவருடைய முகப்புச் சித்திரம். வெள்ளி மணிகள் கிண்கிணிக்க கோயில் சிற்பக் கதவுகள் மெதுவாகத் தாமாகத் திறக்கின்றன. உள் இருளில் இரண்டு ஜாலர்கள் ஒன்றோடொன்று அறைகின்றன. அந்த நாள் S.S.L.C. முடித்த ஒரு பையனின் இதயத்தில் முதல் முதலாகக் காதலின் பிறப்பை இந்த உருவகத்தில் தான் எழுதியிருந்தேன். ஸுபாவின் சித்திரம் தனித் தன்மையில், கதைக்கு வலுவூட்டமாக அமைந்ததோடல்லாமல், அதன் ஸ்தலத்தில், இலக்கியத் தடத்தையும் பெற்றுவிட்டது என்பது என் கருத்து மட்டும் அல்ல பலருக்கு ஏற்பட்ட பாதிப்பு.

அடுத்து எனக்கு முழுத் திருப்தியை அளித்தது அவர் என் ஜனனி முதல் கதைத் தொகுதியின் முதல் பதிப்பின்மேல் மூடிக்கு Wrapper வரைந்த கலர்ச் சித்திரம். அதற்கு idea கூட நான் கொடுக்க்வில்லை. ஆனால் அற்புதமாக அமைந்தது. வளைவரிசையில் அகல் ஜோதிகளின் சுடரையும் செந்தழலையும் கலர் block வெற்றியோடு எடுத்தது. தொகுதியின் தலைப்புக் கதையின் தகுதிக்கேற்பப் படம், லேசான அரூபத்துடன் (abstractness) ஜ்வலித்தது. வியாபர ரீதியில் அந்தப் பதிப்பு படுதோல்வி. ஆனால் இப்போது அது ஒரு collector's item ஆகிவிட்டது.

பிறகு எனக்கு உத்தியோகத் தொந்தரவு, வெளியூர் மாற்றல். அதனால் சுமக்க வந்த பொறுப்புகள் எல்லாம் சேர்ந்து அமுதசுரபியையும் என்னையும் சில வருடங்கள் பிரித்து வைத்தமையால், என் கதைகளுக்கும் ஸுபாவின் படங்களுக்கும் தொடர்பு அற்றுப் போய்விட்டது.

பிறகு இப்போது 'பாற்கடல்' தொடர் கட்டுரை வெளிவரத் தொடங்கி, முதலிதழில் அவர் சித்திரத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்தித்ததும் எனக்கு என் பழைய நண்பனைப் பார்க்கும் சந்தோஷம். அவருடைய அலங்கார வேலை (Decorative work) எப்பவுமே சிறப்பாக இருக்கும். தேவர்களும் அசுரர்களும் மலையைக் கட்டி இழுக்கிறார்கள். பழைய ஓவியம் பார்ப்பது போல எனக்கு ஒரு பிரமை தட்டிற்று. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் தவிர, ஸுபாவின் துணுக்குச் சித்திரங்கள் துணுக்குச் சித்திரங்கள் அல்ல) ஒரு 'ஸ்பெஷாலிட்டி'யாக நான் கருதுகிறேன்.

ஈதெல்லாம் இருக்கட்டும். அல்லது போகட்டும் - இவையெல்லாம் ஸுபா பாணியில், அவரிடம் எதிர் பார்க்கக்கூடியதுதான்.

முன் அத்தியாயங்கள் ஒன்றில் குண்டிலினி சக்தியின் விழிப்பைப் பற்றி எழுதியிருந்தேன். தபாலில் வந்ததும், அந்த இதழைப் பிரித்ததும், தற்செயலாக அது திறந்தது பாற்கடல் தொடங்கும் பக்கத்தில். எனக்குச் 'சுரீல்' என்றது. ஸர்ப்பம் பக்கத்திலிருந்து பிதுங்கிச் சீறிற்று குண்டிலினியின் விழிப்பையே படமாக்கி யிருந்தார்.

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தவுடன் பால், சத்தும் சக்கையுமாகப் பிரிவது போல, ஸுபாவின் மேல் அபிமான எண்ணம் தனிப்பிரிந்து, அவர் இழைத்திருக்கும் சித்திரம், ‘என்னை எனக்காகவே பார்!’ என்று என் காதைத் திருகி என் முகத்தைத் தன் பக்கம் திருப்புவது போல் ஓர் உணர்ச்சி துவக்கத்திலிருந்து பென்சிலைத் தூக்காமல் ஒரே கோட்டில், பிசிரில்லாமல், அதிமந்திரத்திலிருந்து ஒரே தம்மில் மேல் பஞ்சமத்துக்குப் போனதுபோல், கனமாக ஜியோமதியின் சுத்தத்துடன், திடீரென்று ஸர்ப்பம் கடித்துவிட்டது. ‘சுரீல்’ - உண்மை சுடும் என்பார்கள். இந்தக் கோட்டில், இதுவரை நான் ஸுபாவிடம் பழக்கப் படாத ஒரு புதுத் துணிச்சல், அரூபம் ஒரு புது விழிப்பு இது என் கண்களுக்குச் சதை உரிப்பா அல்லது ஸுபாவின் சட்டை உரிப்பா?

அடுத்து மே இதழில் வெளிவந்த பகுதியில், மதுரை மாநகரின் எழிலை, நான் ஒரு மாதமாக உருவகப்படுத்தியிருந்ததை அவர் காட்டியிருந்ததைக் கண்டவுடன் குலுங்கிப் போனேன். கோபுரம் பின்னணியில் ஓங்க, ஸ்திரீயை இடுப்பில் குடத்துடன், நான் விவரித்திருந்தபடியே தீட்டியிருந்தார். அம்பாளே, மாறுவேடத்தில் நகர் சோதனைக்குக் கோவிலினின்று புறப்பட்டு விட்டாற்போல் இருந்தது.

சமீபத்தில் மறுபடியும் என்னை நெஞ்சை உருக்கியது, அவர் சித்திரத்தில் வடித்திருந்த என் தாயாரின் சிந்தனைப் போஸ் - உதட்டின்மேல் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பொத்திக்கொண்டு.

நானும் இப்போதெல்லாம் சுருக்க உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் என்கிறது ஒரு பக்கமிருக்க, ஸுபா, நீங்களும் ஒரு ‘அஸாமி’ ஆகிவிட்டீர்கள்; பரஸ்பரப் பாராட்டுச் சங்கம் என்று ஏளனம் செய்பவர் செய்யட்டும். ஸுபா என்னைவிட 10, 15 வயதேனும் சிறியவர். ஆனால் சிறியோரெல்லாம் சிறியோரல்லர்.

பெரியோரைப் புகழ்வோம்.

நான் பிறந்து அங்கு வளர்ந்தவரை ஞாபக சக்தி எம்மட்டு, பெங்களூர் நினைவுகளை எட்டுகிறது? ஒரு ஸ்வாரஸ்யமான பயிற்சி, பகீரதப் பிரயத்தனம் பண்ணிப் பார்க்கிறேன். சுந்தரம், சுப்ரமண்யம் முகங்களை நினைவுபடுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்களுடன் கூடவே வளர்ந்த கார்த்திகேயச் சித்தப்பா, அப்பளாக்குடுமி, கழுத்துவரை பொத்தானிட்ட சொக்காய், இடுப்பில் ஒற்றை வேட்டியுடன் பளிச்சென்று நினைவில் தெளிகிறார். மூளையின் அபார சக்தி, அதேசமயம் அதன் கிறுக்குகளையும் என்றுமே அளவிட முடியாது போலும். Magic lantern side போலும் frameகள் எழுகின்றன. அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்த முடியவில்லை, விவஸ்தை தெரியவில்லை.

மாலை வேளை, கூடத்தில் எதிர்எதிராக இரண்டு வரிசைகள் மாமிகள், தனித்து நாலைந்து ஆண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வரிசைகளின் ஒரு முனையில் சுவரோரம் கிருஷ்ணன் படம் மாலையிட்டுக் கோலமிட்ட மனைமீது சுவர்மேல் சார்த்தியிருக்கிறது. எதிரே குத்துவிளக்கு எரிகிறது.

எனக்குப் பஞ்சகச்சம் உடுத்தி, அதன்மேல் பட்டுச் சவுக்கம் கட்டி, கிருஷ்ணன் கொண்டை கட்டி, நாமமிட்டு (கொழு கொழு கண்ணே!) மார்பில் சந்தனம், கழுத்தில் அம்மா சங்கிலி, காலில் சதங்கை, ஜாலரா தட்டிக்கொண்டு (சலங்கையும் ஜாலராவும் எனக்கென்றே வாங்கியவை) - 'கண்டவலே, மூச்சவலே’ என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு, சதங்கை ஒலிக்கக் குதிக்கிறேன். ஸங்கீத உபன்யாசம் கேட்டு வீட்டுக்குத் திரும்பியதன் விளைவு! அம்மா, பக்தி சிரத்தையுடன், எல்லோருக்கும் சுண்டல் கேஸரி விநியோகம் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.

லால்பாக் - நடுவில் ஏதோ கண்ணாடியாலேயே மண்டபம் போல் ஏதோ தெரிகிறது.

பிசிர் தட்டிக்கொண்டு ஏதேதோ மைதானங்கள் கட்டடங்கள் கோபுரங்கள், தோட்டங்கள்.

Zoo, பணியாள் யாரோ, அண்ணாவிடம் காசு வாங்கிக்கொண்டு புலி வாயில் கோலைக் கொடுக்கிறான். பாதத்தால் கோலைத் தட்ட முயன்று புலி கர்ஜிக்கிறது. தலையை ஆட்டி ஆட்டி. பயமாயிருக்கிறது. அழகாயிருக்கிறது. சந்தோஷமாயிருக்கிறது.

தோ ஒரு ஹால், சுவர்களை அடைத்த அலமாரிகளை அடைத்துப் புத்தகங்களாக, வெறும் புத்தகங்களாகவே முளைத்திருக்கின்றன. ஹாலில் மேசைகள், நாற்காலிகள், தெளித்தாற்போல் அங்குமிங்குமாக நாலைந்து பேர் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். மேசைகளிலும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அண்ணா புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, நகங்களைக் கடித்துக்கொண்டு, நான் பொறுமை இழந்து கொண்டிருக்கிறேன். குழந்தை இன்னும் "bore." என்று சொல்லிக்கொண்டே பிறக்கக் கற்றுக்கொள்ளவில்லை.

என் எதிரே ஒரு ஐரோப்பியப் பாதிரி படித்துக் கொண்டிருக்கிறார். மெத்தை உறைபோல் எவ்வளவு நீண்ட அங்கி! அவ்வப்போது முகம் நிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார். அவர் விழி நீலம் எனக்குப் புதுமையாக இருக்கிறது. சற்று நேரம் பொறுத்து என் பக்கமாகச் சாய்ந்து என் தலைமயிருள் கைவிட்டுச் செல்லமாகத் துழாவுகிறார். அண்ணாவைப் பார்த்து என்னவோ இங்கிலீஷில் சொல்கிறார். அண்ணா பதில் சொல்கிறார். இருவரும் என்னவோ பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.

ண்ணாவும் அம்மாவும் கூடத்தில் நிற்கிறார்கள். ஏதோ உணர்ச்சிவசத்தில், நான் அங்கு இருப்பதைக்கூட மறந்து அம்மா அண்ணாவின் கையைப் பற்றுகிறாள். ”ஒண்ணும் கவலைப்படாதீர்கள். பெருந்திரு கைவிட மாட்டாள். தாராமல் இருப்பாளோ, அவள் என்ன சத்தியம் மறந்தவளோ? - பாடுகிறாள்.

வேலுசாமி வாத்தியார் அண்ணாவின் சஹ டீச்சர், நண்பர்; அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வந்தாலே அம்மாவுக்கு முகம் சுண்டும். அண்ணாவுடன் சேர்ந்தே பள்ளிக்குக் கிளம்புவார். சில சமயங்கள் அண்ணாவுடன் சாப்பிட உட்கார்ந்துவிடுவார். முனகிக் கொண்டே அம்மா, அவர் இலையை எடுத்து எறிந்து விட்டுப் பல முறை சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்வாள். அவர் உட்கார்ந்த இடத்தில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வாள். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் சண்டை. அம்மாவின் ஆத்திரத்தைக் கண்டு அண்ணா போக்கடாத்தனமாகச் சிரிப்பார், நாக்கைக் கன்னத்துள் துழாவிக்கொண்டு.

”என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? நான் 'வா’ என்று அழைக்கவில்லை. வந்த ஆளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியுமா? பயந்தால் என்ன செய்கிறது? இதற்கெல்லாம் தப்பிப் பிழைச்சு வந்தால்தான் பிள்ளை ?”

”இதோ பாருங்கள், அவன் பண்றதை?”

நான் வேலுசாமி ஸார் போலவே விரல்களை மடக்கிக் கொண்டு, மூக்கைச் சொரிந்துகொள்கிறேன். அம்மா முதுகில் ரெண்டு வைக்கிறாள். பலமான அறைகள்தான்.

ணிகள், கண்ணாடிக் குழல்கள் துணியில் தைக்கக் கற்றுக் கொடுக்கும் டீச்சரம்மா, கூந்தல் பொடி வங்கியில் எப்பவும் பரட்டையாகவே இருக்கிறது. மாமி வற்றல் காய்ச்சியாக, காய்ந்த ரொட்டிபோல் ஒட்டி உலர்ந்து...

அப்புறம், பாகீரதி மாமி என்று ஒரு பேரும் ஆளும் நினைவில் தட்டுப்படுகின்றன. எப்பவும் சிரித்த முகம். அடிக்கடி என்னைத் தூக்கி வைத்துக்கொள்வாள். பின்னால் தெரிய வந்தது. அவளுக்குக் குழந்தையில்லை. ஆத்துக்காரரும் வயணமில்லையாம். ரொம்ப சிரமம். அம்மா தன்னால் இயன்ற உதவி குழம்பு, ரசம், மிஞ்சிப் போன பழையதுகூட மாமி வாங்கிக் கொள்வாள் போலிருக்கிறது.

நாங்கள் குடியிருந்த இடம், விவரங்களுடன் எழுகின்றது. எங்கள் வாசற்கதவைத் திறந்தவுடனேயே கூடம். அடுத்து இரண்டு படிகள் கீழ் இறங்கிப் பள்ள மட்டத்தில் சமையலறை, உடனே இரண்டு படிகள் ஏறிக் கூடத்துக்கு நேர் எதிரில், அதேசமத்தில் அறை. அதில்தான் பெட்டி, படுக்கை வேறு கனவாரியான சாமான்கள் இருக்கின்றன.

கூடத்தில், இரு சிறார்கள் ஒரு பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அம்மா அடுப்பங்கரையில் வேலையாக இருக்கிறாள். குழந்தை எங்கள் பராக்குக்கு மசிவதாக இல்லை. அழுகிறாள். அப்பா, என்ன உரத்த குரல் ! காதைப் பொளிகிறது. அப்பா, என்ன நிறம்! காய்ந்த சந்தனம் போன்ற வெள்ளை, எங்களுக்குத் தங்கை வந்திருக்கிறாள், பானு.

ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானுமதி.

எலி வேட்டை இப்படித் தனித் தலைப்புக் கேட்கும் இந்த விஷயத்தின் நினைப்பில், அருவருப்பில் இப்பவும் உடல் கூசுகிறது. ஆனால் இதைத் தப்ப வழியில்லையே. என்ன செய்வேன்?

சமையலறை தாண்டிய படுக்கையறையில் எல்லோரும் படுத்துக் கொண்டிருக்கிறோம். வெடுக்கென்று விழித்துக்கொள்கிறேன். ஏதோ சத்தம்தான் என்னை எழுப்பி விட்டிருக்கிறது.

“விழுந்துடுத்து!” கார்த்திகேயன் அறை கூவுகிறான். (சித்தப்பா என்று ஒருநாளும் என் சித்தப்பாவை நான் அழைத்ததில்லை. அதுவும் அந்த வயதில் இருவருக்குமே மரியாதையைக் கடைப்பிடிக்க வயதில்லை)

சமையலறைக்குப் போய் எலிக் கூண்டுடன் திரும்புகிறான்.

கூண்டுக் கதவின் அடியிலிருந்து வால் நீண்டு தொங்குகிறது. அவன் காலைச் சுற்றிக்கொண்டு பூனையும் வருகிறது. கூண்டைக் கீழே வைக்கிறான். பூனை கூண்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதனின்று ஏதோ தினுசான முனகல் சப்தங்கள் கிளம்புகின்றன.

'ஆ!' அண்ணா சுவர் மூலையில் சார்த்தியிருக்கும் தடியான கழியை எடுத்துக் கொள்கிறார். ஊர்கோலமாக, முதலில் கார்த்திகேயன், எலிக்கூண்டுடன், உடனே பூனை, அடுத்து அண்ணா அறையை விட்டு வெளியே போகின்றனர். அறை வாசல் தாண்டியதும் அண்ணா ஜாக்கிரதையாகக் கதவை மூடுகிறார். எனக்கு பயமாயிருக்கிறது. துக்கமாயிருக்கிறது. அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன். அம்மா முகமும் ஏதோ தினுசில் மாறியிருக்கிறது. என்னை அணைத்துக்கொள்கிறாள். அவள் நாட்டம் மற்ற இரு குழந்தைகளையும் அணைத்துக் கொள்கிறது. சிவாவும் பானுவும் அயர்ந்து தூங்குகின்றனர்.

பின்னர் –

தாக்கல் மோக்கல் இல்லாமல், நினைவில் ஒரு படம் எழுகிறது. எல்லோருமாக ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றி - சரியாக உட்காரக்கூட இடமில்லை - நிறைய மூட்டை முடிச்சுகள். மூடிமேல் ஆணி அறைந்த ஜாதிக்காய்ப் பெட்டிகள்.

டிக்கெட் பரிசோதகர் check பண்ணிக்கொண்டிருக்கிறார். நான் உட்கார்ந்து கொண்டிருக்கும், கயிறு கட்டியிருக்கும் படுக்கையைக் காலில் உதைத்து,”இதனுள் என்ன?” என்று கேட்கிறார்.

”அம்மி!” - என்கிறேன். அண்ணா என்னை முறைத்துவிட்டு, இரண்டு படி அரிசி தலைகாணி உறையில் தைத்துப் போட்டிருக்கிறோம்.”

”இல்லை அம்மிதான்!” நான் ஆத்திரத்துடன் சாதிக்கிறேன். “நான்தான் பார்த்தேனே! என் அடியில் கெட்டியா இருக்கே!”

டிக்கெட் பரிசோதகர் சிரித்துக்கொண்டே, கேட்காதது மாதிரி எங்களைத் தாண்டிச் செல்கிறார். அவர் தலை மறைந்ததும் அண்ணா என் தலையில் அடிக்கிறார்.

”உன் பிள்ளை லக்ஷணத்தைப் பார்!” அம்மாவைக் கடிக்கிறார். அம்மா சிரிக்கிறாள். “குழந்தையைத் தலையில் அடிக்காதேங்கோ, ஆகாது.”

ஒரு பெரிய ஸ்டேஷனில் இறங்குகிறோம். வேறு ரெயில்களும் வருகின்றன, போகின்றன. பிரயாணிகள் இறங்குகிறார்கள். ஏறிக்கொள்கிறார்கள். ஒரே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. பார்க்கப் பார்க்க அலுக்கவே இல்லை.

“என்ன அமிர்தகடேசா, செளக்கியமா?” அம்மா தான் விசாரிக்கிறாள். கட்டை குட்டையாக, கறுப்பாக ஒருவர் எங்களை நோக்கி வந்து, ஆசையுடன் என் கையைப் பிடிக்க முயல்கிறார். நான் கையை இழுத்துக் கொள்கிறேன்.

”சித்தப்பாடா”

”ஜட்கா காத்திண்டிருக்கு. நீங்கள் முன்னாலே போங்கோ - இந்தப் பெரிய சாமானை எல்லாம் ஏத்திண்டு பின்னாலே நான் வரேன்.”

அண்ணாவும் தம்பியும் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். பேச்சில் இடையில் அண்ணாவின் கேள்வியில் ஏதோ படுகிறது. ”இங்கு நிலைமை எப்படி?”

”கவலையேபடாதே - ஒரு பள்ளிக் கூடம் இல்லாட்டா இன்னொண்ணு. Muslim High Schoolஇல் இப்பவே ஒரு Vacancy இருக்காம் - நமக்குத்தான். அந்தச் சகவாசம் நமக்குப் பிடிக்கணும்.”

”எதோ ஒண்ணு, முன்னால் தொத்திக்கணும். அப்புறம் தாவிக்கலாம். வேலையில்லாமல் ஒரு க்ஷணம் இருக்க முடியாது” அப்பா புன்னகை புரிகிறார். ஆனால் அந்தப் புன்னகையில் தெம்பு இல்லை.

”அநாவசியமாகக் கவலைப்படாதேடா! நாங்கள் எல்லாம் ஏதுக்கிருக்கோம்! பெருந்திருவே எங்கேயும் போயில்லேடா !”

சம்பாஷணை இந்த முறையில் நடந்ததாகவோ, இவ்வளவு தெளிவாகவோ ஞாபகத்தில் இல்லை. நினைவில் நிற்காததைக் கொஞ்சம் இட்டு நிரப்பியிருக்கிறேன். ஆனால் ஒன்று சந்தேகமற வெளிச்சமாயிற்று.

பெங்களுரை விட்டாச்சு.

எங்கள் பெங்களூர் வாழ்க்கை முடிந்தது.

பெங்களூரை விட்டுக் காலை உதறியாச்சு.

குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-13&oldid=1532857" இலிருந்து மீள்விக்கப்பட்டது