பாற்கடல்/அத்தியாயம்-16

விக்கிமூலம் இலிருந்து




16

ன்னி புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

“மன்னி, அம்மா எப்ப வருவா? நீங்கள் எங்கே போறேள் ?”

பாட்டி முகம் சுளிக்கிறாள். “இது என்னடி அபசகுனம் மாதிரி! போடா உள்ளே!”

“சித்தப்பா, அம்மா எப்போ வருவா ?”

“அம்மா எப்ப வரணும்னு பெரியவாளுக்குத் தெரியும். நீ அம்மியாத்துக்கு விளையாடப் போ”

சித்தப்பாவே அம்மியாத்துக்குப் போகப் பர்மிஷன் குடுக்கறான்னா பயமாயிருக்கு.

“அம்மி, அம்மா எப்போ வருவா?”

அம்மி என் தோள்மேல் கையை வைத்து நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறாள். மலை எழுந்திருக்கிற மாதிரி. அவளால் முடியவில்லை. என்னை உள்ளே அழைத்துச் செல்கிறாள்; படுக்கை அறையில் சுவரில் ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய படம். அழகான முகம்: தாடி, தலையைச் சுற்றி ஒரு முள் மகுடம். ஆள் சிலுவையிலிருந்து தொங்குகிறான். இடுப்பைச் சுற்றி அந்த இடத்தை மட்டும் மூடிக்கொண்டு கொஞ்சம் துணி. இரண்டு புது மெழுகுவர்த்திகளைக் கொண்டு வந்து, அம்மி படத்துக்கு எதிரே வைத்து ஏற்றி மண்டியிடுகிறாள். என்னையும் மண்டியிட ஜாடை காட்டுகிறாள். ஆனால் நான் மாட்டேன். அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். அவள் கண்ணை மூடிக்கொண்டு தலை குனிகிறாள். அம்மி என்ன செய்கிறாள்? சற்று நேரம் கழித்து அம்மி கண்ணைத் திறக்கிறாள். என்னை மெதுவாக அறையை விட்டு அழைத்துக்கொண்டு போய் ஒரு சின்ன பீங்கான் தட்டில் பிஸ்கட், வாழைப் பழம் இன்னும் ஏதேதோ எடுத்து அடுக்குகிறாள்.

எனக்கு.

ஆனால், எனக்கு இப்போ வேண்டியில்லை. நான் தொடக்கூட இல்லை. வெளியேறுகிறேன்.

ஒருநாள் திடீர்னு வீடு பளிச்சிடுகிறது. வாசலில் கோலம் போட்டு, செம்மண்ணிட்டு உள்ளே வாசல் அறையில் கட்டிலைத் தயார் பண்ணி, புது தலகாணி உறை –

அம்மா வரப்போறா.

அம்மா வந்துட்டா.

வாசலில் ஜட்கா நிக்கிறது. வாசலில் சின்னவா பெரியவா எல்லாருமே கூடி இருக்கிறோம்.

ஆனால் மன்னி மேல் ஒருமட்டா தாங்கிக்கொண்டு ஜட்காவிலிருந்து இறங்குவது அம்மாவா? இது அம்மாதானா? அம்மா மாதிரி யாரோவா? குழி விழுந்து கன்னம் ஒட்டிப்போய், தேஞ்சு மாஞ்சு -

“அம்மாப்பொண்ணே, வந்தையா? வாடியம்மா?! - தாத்தா, “நான்தான் அன்னிக்கே சொன்னேனே. அவள் என்ன சத்தியம் மறந்தவளா?” பாடுகிறார். வெண்கலப் பானை மேல் கரண்டியை அடித்தாற் போல் ‘கும்’ கொடுத்து அந்தக் 'கணீர்’ அலை பாய்ந்தது.

அம்மா போய்க் கட்டிலில் சாய்கிறாள். அவள் அருகில் கட்டிலில் சுண்டு விரலுக்குக் கையும் காலும் முளைத்தாற்போல் ஏதோ ஒண்ணு நெளியறது.

”அம்பிப் பாப்பாடா!”

வியப்புடன் பார்க்கிறேன். இது என் தம்பியாமே! விரலான்.

பாதி இரவில் திடுக்கென முழிச்சுக்கறேன். இல்லை, எனக்குத் தூக்கமே வரல்லியோ என்னவோ?

ஓசைப்படாமல் எழுந்து அடிமேல் அடி வெச்சு - கும்மிருட்டு, பயமாத்தானிருக்கு - ஆனாலும் முன் கட்டுக்குப் போறேன். கதவை மெதுவா திறக்கிறேன்.

விடிவிளக்கில் கட்டில்மேல் அம்மா தெரியறா. உட்கார்ந்துண்டு பாப்பாவுக்குப் பால் கொடுத்துண்டு இருக்கா என்னை அடையாளம் கண்டுண்டதும் அவள் விழிகள் நாவல் பழம் மாதிரிப் பளப்பள - ஒரே பேப்பர் மாதிரி வெளுத்திருக்கா. நான் உள்ளே வரக் காலை எடுத்து வைக்க முன்னிடுவதைக் கண்டதும் மறுக்கும் பாவனையில் தலையை பலமாக ஆட்டுகிறாள்.

”அம்மா, உன்னை நான் தொடணுமே!”

புன்னகை புரிகிறாள்.

”உன்னைத் தொடத்தான் தொடுவேன்!” என் முனகல் உயர்கிறது. தரைமேல் காலைப் பிடிவாதத்தில் உதைக்கிறேன்.

“உஷ்!” உதட்டின்மேல் கையை வைத்துத் தரையில் சுருண்டு படுத்திருக்கும் உருவத்தைக் காட்டுகிறாள்.

மன்னிப் பாட்டி குறட்டை விடுகிறாள். பாவம் சரியான அசதி,

”ஒரே ஒருவாட்டி!”

அம்மாவின் கண்களில் தயக்கம் தலைகாட்டுகிறது. அடுத்த நிமிஷமே திடம் திரும்பிக் கூடாது என்று தலையை பலமாக ஆட்டுகிறாள்.

தாங்க முடியாத அசதி என்மேல் படருகிறது. திரும்பி என் இடத்துக்கு வந்து கவிழ்கிறேன்.

அழுகை பீரிடுகிறது.

அம்மா, நீ செத்துப் போ.

இரவு வேளை.

தாத்தா - அதான் - அப்பா - அதான் தாத்தா - சரி அப்பா, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கொத்த மல்லித் துவையல் அடுத்து புடலங்காய் பொரித்த குழம்பு. தாத்தாவுக்கு ரொம்பப் புடிக்கும்.

எங்களுக்கும் புடிக்கும். எங்களுக்குச் சாப்பாடு ஆயிடுத்து.

லாந்தர் வெளிச்சத்தில் தாத்தாவின் வாழை இலையில் துவையல் சாதம் மேல் நெய் பளபளப்பதைப் பார்க்கையில் எனக்கு மறுபடியும் பசிக்கவே ஆரம்பிச்சாச்சு.

ஏன் என் தட்டில் என் சாதம் இவ்வளவு நன்னா இல்லை? என் தட்டில் மாத்திரம் ஏதோ சிதறி, குதறி ஆறிப்போய், சளசளா, சொள சொளா - தாத்தா ஒரு பக்கம் மேடு கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாத் தள்ளித் தள்ளி மொத்தையடிக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் வாய்க்கும் கைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தாத்தா சப்பளம் மாற்றி ஒரு காலை மண்டியிட்டுக் கொள்கிறார். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கொள்கிறார். துவையலுக்குப் பின் பொரித்த குழம்பு சாதம். அப்பறம் ரசஞ்சாதம். உள்ளே வேகிறேன். எங்களுக்குத் தொட்டுக்க மட்டும் பொரிச்ச குழம்பு. அப்பறம் நேரே மோருஞ் சாதம். தாத்தாவுக்கு மட்டும் இத்தனை சாதமோ? ரசஞ்சாதம் முடித்தபின் தாத்தா இலையை ஸ்பெஷலாக வழிக்கிறார்.

சித்தி ஒரு ஓரத்தில் சர்க்கரை வைக்கிறாள்.

“ஏய், பாலுஞ்சாதம் !”

தாத்தா தளரப் பிசைந்த அன்னத்தைத் தூக்கித் தூக்கி வாய்க்குள் எறிந்துகொள்கிறார். பூனைபோல் ஏதோ முனகல்கள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. அனுபவித்துச் சாப்பிடுகிறார். எனக்குத் தாங்க முடிய வில்லை. என் வாயிலிருந்து 'சொள்ளு' தரையில் சொட்டுகிறது. தாத்தா பார்த்துவிடுகிறார். அவருக்கு முகம் சுளிக்கிறது.

”ஹும்! இதுகளைத் தூங்கப் பண்ணப்படாதா எனக்குப் படைக்கு முன்?”

”எல்லாரும் தூங்கியாச்சு. இவன்தான் இப்படி!”

”கிட்ட வந்து தொலை!” இரண்டு கவளங்கள் அள்ளி, குருவிபோல் திறந்த என் வாயுள் எறிகிறார். அப்பா, என்ன ருசி! என்ன ருசி!

அந்தப் பிரசாதம்தான் என்னிடம் ஏதோ ஓர் அளவுக்கு இப்பவும் பேசுகிறதோ?

அம்மாவுக்குச் சாதம் போடும்போதெல்லாம் மன்னி கதவை மூடிக்கொள்கிறாள். அப்படியும் அவாளுக்குத் தெரியாமல் நான் தலையை உள்ளே நீட்டுகிறேன்.

அம்மாவின் கை வழிய முழு நெய், அம்மாவுக்கு மட்டும் தனிச் சமையல்; கெட்டித் தயிர். பாட்டி என்னைப் பார்த்துவிட்டாள். எழுந்து ஓடி வருகிறாள்.

“ஒடு! ஒடு! மத்ததெல்லாம் இவன் மாதிரி இருக்கா பாரு. இவனுக்குத்தான் இந்த நுழைநரித்தனமெல்லாம்!”

சாப்பாடு முடிஞ்சதும் பாட்டி குட்டி குட்டியா அம்பது வெற்றிலையேனும் இருக்கும்; தனித்தனியா மடிச்சு ஒரு துடைப்பக் குசசியில் அத்தனையும் செருகி அம்மாவிடம் எறிகிறாள்.

“சாறை மட்டும் முழுங்கு. சக்கை ஜீரணமாகாது.”

அம்மா முகத்தின் சுண்ணாம்பு வெளுப்பில் உதடுகள் மட்டும் வெகு சீக்கிரம் ரத்தச் சிவப்புக் கொள்கின்றன.

நாளடைவில் அந்தச் சிவப்பு அம்மாவின் கன்னங்களுக்கு, நெற்றிக்கு ரோஸா பரவறது. ராத்திரி ஒரு டம்ளர் நிறையப் பால்.

அப்புறம் காலை ஒரு ஆறு, ஏழு மணிவாக்கில் கிட்டத்தட்ட ஒரு எலுமிச்சம்பழ அளவில் மருந்து தின்கிறாள். பிள்ளை பெற்றாள் லேகியம் பண்ணின சூட்டில் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு சுண்டைக்காய் கிடைத்தது. ஒரே காரம், கொஞ்சம் கசப்பு. ஆனால் தாண்டி ஒரு தித்திப்பு. நெய் எல்லாம் சேர்ந்து என்னவோ ரொம்ப ஜோர்.

அம்மா அறையை விட்டு வெளியே வந்து படிப் படியாக வீட்டுக் காரியங்களில் படிய ஆரம்பித்த பின்னரும் ரொம்ப நாளைக்கு அந்த மருந்து மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வலிக்கிறதா?

”அது என்ன ராத்திரி கண் மூடறவரையில் வாய் மூடாப் பட்டினியோ, சதா எதையேனும் அரைச் சிண்டு ! கொட்டடா குடையடான்னு அந்த உடம்பு என்னத்துக்குத்தான் இப்படி அலையறதோ?” மத்யானம் இட்டிலிக்குச் சட்டினிக்கு உடைச்ச கடலை வாங்கி வெச்சிருந்தால் பொட்டலம் காலி, வெல்ல டப்பாவில் திடீர் திடீர் என பெரிய கட்டி சின்னக் கடடிகளாகத் தானே பிட்டுக்கொள்ளும்.

“யாரு? அவன்தான். எங்கேடிம்மா வெச்சுக் காப்பாத்தறது? வயத்துலதான் வெச்சுக் காப்பாத்தனும்!”

“அவன் வயத்துலதானே வெச்சுக்கறான்!”

அம்மாவுக்கு ரோசமாயிருக்கு. பல்லைக் கடிக்கிறாள். அடிக்கிறாள். நேக்குச் சிரிப்பாயிருக்கு.

ஒருநாள் பின்கட்டில், எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில், முன் அறையில், என்னுடைய அனுமார் தேடலில் ஜன்னல் பிடிச்சுவரில் மருந்து பாட்டிலைப் பார்த்துவிடுகிறேன். நேற்றுத்தான் மறுபடியும் மன்னி புதுசா பண்ணி, பாட்டில் நெறைய அடைச்சு வெச்சிருக்கு. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திறந்து வழித்துப் போட்டுக் கொள்கிறேன். காரம் காதில் சுரீல் என்கிறது. ஆனால் நாக்கடியில் கூடவே தேனும் வெல்லமும் தித்திக்கிறதே! பத்திரமா மூடிவிட்டு வெளியே சற்று நேரம் - வெளியே என்ன, வீட்டு உள்ளேதான் – மறுபடியும் –

மறுபடியும் - போக வரப் புளியம் பொந்தில் கை விட்டுக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாம் வேளை குழந்தைகளுக்குச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. வட்டமா எங்களை உட்கார வைத்து மன்னி, கல்சட்டியில் பழையதைப் பிசைந்து கையில் போடுகிறாள்.

“என்னடா தூங்கித் தூங்கி வழியறே?”

ஆமாம், அதென்ன அப்படியொரு தூக்கம் வரது!

கை அலம்பினதாகக்கூட ஞாபகம் இல்லை. முன் அறையில் அடுக்கி வெச்சிருக்கும் பாய் தலைகாணிமேல் விழுகிறேன். அதற்கு முன்னால் சாப்பிட்ட வாய்க்கு ஒரு பெரிய பாச்சாக் கோலிக் குண்டளவு.

ஆனால் எனக்குத் தூக்கமாக வரவில்லை. என்னவோ என் அடியில் தரை வளைஞ்சு நகர்றமாதிரி இருக்கு. சுவர் சுத்திச் சுத்தி மிதக்கிறது. கண்ணுக்கெதிரே என்னென்னவோ பெரிசு பெரிசா நான் இதுவரை பார்க்காத பூச்சிகள், புழுக்கள், பல்லிகள், முள்ளு, கொம்பு பெரிசு பெரிசா நெளியறதுகள். வெளிச்சங்கள், கலர் கலரா மாறி மாறி அதிலிருந்து இன்னும் ஏதேதோ ஐந்துக்கள், குடைகள் சிலந்தி –

பயம்...ம்...மாயிருக்கு.

“அம்மா!” அலறுகிறேன். அம்மா பதைபதைத்துப் பின்கட்டிலிருந்து ஓடி வருகிறாள். பசு மாதிரியிருக்காள். அவளைக் கட்டிக்கிறேன். சிரிக்கிறேன். அழறேன். சிரிக்கிறேன். எங்கோ சுட்டிக் காண்பிக்கிறேன். “அங்கே பாத்தியா, சாமி வரார் எருமை மாட்டு மேலே ”

“மன்னி இங்கே வாங்களேன்! குழந்தையைப் பாருங்களேன்!”

மன்னி என்னைத் தன் மடியில் கிடத்திக்கொள்கிறாள். ”என்னடி இவன் வாயோரம் கறுப்பாயிருக்கு?”

அம்மாவுக்குப் பளிச்சின்னு விஷயம் உதயமாகிறது. எழுந்து ஓடிப்போய் மருந்து பாட்டிலைக் கொண்டு வருகிறாள். அம்மாவின் விழிகள் வட்டம் சுழல்கின்றன. மன்னி முகத்துக்கெதிர், பாட்டிலைத் தூக்கிப் பிடிக்கிறாள்.

”என்னடி அம்மாப்பெண்ணே ?” பாட்டில் பாதிக்கு மேல் காலி.

”ஐயய்யோ! மருந்தில் கஞ்சா சேர்ந்திருக்குடி விஸ்வனாதன் செட்டி எழுதின ப்ரகாரம்!”

“பெருந்திருவே கருப்பண்ணா!”

வீடு அல்லோலப்படுகிறது. எனக்கு எல்லாம் அக்கரையில் தெரியறாப்போல இருக்கு.

அண்ணாவுக்குச் சொல்லி அனுப்பி, வருகிறார். தலையில் டர்பன்; கழுத்துவரை க்ளோஸ் கோட் ஒரு கையில் பஞ்சகச்சத்தின் கொடுக்கைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

என்ன கம்பீரம் ! அண்ணாவுக்குக் கொஞ்சம் ஜவஹர்லால் நேரு ஜாடை உண்டு.

கன்னத்துள் நாக்கைத் துழாவிக்கொண்டு. அண்ணாவுக்கு எப்பவுமே ஒரு நமுட்டு விஷமச் சிரிப்பு உண்டு. இப்பவும் இருக்கு.

மன்னி என்னைத் தூக்கிக்கொள்கிறாள். நெற்றியில் விபூதி இடுகிறாள். அடுத்த தெருவில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மதில் ஓடுகிறது. பெருந்திரு கருப்பண்ணன் துணை.

என்னை நாற்காலியில் உட்கார வைத்துத் தொண்டை வழியாகப் புனல் வைத்த ரப்பர் குழாயை வயிற்றுள் இறக்கி மருந்தோ, தண்ணியோ - இல்லை, இரண்டுமோ அதனுள் ஊற்றி, என்னவோ பண்ணி - மறுக்கி மறுக்கி வாந்தியெடுக்கிறேன். நான் தின்ற மருந்து கோழையுடன் சடைசடையாக வெளியே பேஸனில் வந்து விழறது.

ரெண்டு மூணு தடவை அப்படிப் பண்ணி எனக்கு வயிறு புண்ணா வலிக்கிறது. ஆனா அவா விடறதா இல்லை. கடைசியா வாந்தியில் இனிக் கலப்படம் இல்லை என்று தெளிந்த பின்னர்தான் குழாயை ஒருவாறு வெளியே எடுக்கிறார்கள். நான் வாயில், மோவாயில், மார்பில் கொழுகொழுன்னு எச்சில் தண்ணியா ஓட ஓட அழுது கொண்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் அழுகைக்காக அழுகையும் கலந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

அன்று என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை. மன்னி தான் கட்டிலின் கீழ்த்தரையில் படுத்துக் கொள்கிறாள்.

“Wake up, Sonny, your mother has come to take you home! “

ஜன்னல் வழியாகப் பொற்கிரணங்கள் தூலம் பாய்கின்றன.

“ராமாமிருதம்...“

என் முகத்தின் மேல் குனிவது இது என்ன முகம்? சூரியனைவிட வெளிச்சமான முகம்! அந்தக் கண்களில் விளையாடி, கன்னங்களில் வழியும் அந்தக் கருணையை, அந்த ஆசையை, அந்த அன்பை, அந்தப் பாசத்தை, அப்படியே அள்ளித் திங்கணும்போல் இருக்கு. ஆனால் தின்ன முடியாதா?

என்னிக்கும் அம்மா அம்மாதான்.

அதிலும் நீ நீதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-16&oldid=1534386" இலிருந்து மீள்விக்கப்பட்டது