பாற்கடல்/அத்தியாயம்-19

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search




19

Magic lantern Slide இப்போது மாறுகிறது. சற்று வெடுக்கெனத்தான். ஆனால் சம்பந்தத்துடன்தான்.

Reserve Bank அண்ணாவைப் பற்றிச் சொல்லப் போகிறேன்; சொல்லியே ஆகணும்.

அண்ணா பெயர் வெங்கட்ராம ஐயர். ஆனால் அவர் எல்லோருக்கும் அணணா. Reserve Bank-இல் வேலையாயிருந்தார். பரோபகாரம் செய்வதில், அதாவது சரீர உபகாரத்துக்கு - அவரை மிஞ்சி எனக்கு யாரும் இதுவரை நினைவுக்கு வரவில்லை.

கலியாணத்தில் சந்தனப்பேலா, சர்க்கரைத்தட்டு தூக்கணுமா? கூறைப்புடவை, தாலித்தட்டை எல்லோருக்கும் காண்பிக்கணுமா?

பந்தியில் கோகர்ணம் தூக்கணுமா?

சமையல்காரன் சமையலுக்குத் துண்டு விழறதென்றால் மார்க்கெட்டுக்குப் போய் வரணுமா?

இதைவிட மேல்.

பிணம் தூக்கக் கால்மாடு ஒரு கை குறைகிறதா? அண்ணாவை –

கூப்பிடவே வேண்டாம். இதோ. “ஏம்பா அனாவசியக் கவலைப்படறே? இதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்.“ பஞ்சக்கச்சத்துக்கு உடனே மாறி இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, தலையில் கட்டுக்குடுமி, பெரிய புஜங்கள், தொப்பை, கடோத் கஜன், கம்பீரன்.

அண்ணா கைபட்டுக் கரையேறினவர் எத்தனை பேரோ? யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சாஸ்திரங்கள் சொல்வதை நம்பினால் அந்த மஹானுக்கு மறு பிறப்பே கிடையாது. நாராயணனும் அதேமாதிரிதான். தந்தை வழி மகன்.

ஒருநாள் மாலை அமமாவும் நானும் ஒரு சீப்பு ரஸ்தாளி வாங்கிக்கொண்டு (அண்ணாவின் தாயார் வயசான வளாச்சே! அண்ணா வீட்டுக்குப் புறப்பட்டோம். சும்மாதான், நலன் விசாரிக்க. அண்ணாவின் ஜாகை George town-இல் தம்புசெட்டித் தெருவில் பட்டனவாசம். நாலு குடித்தனத்துக்கு நடுவில்தான்.

போய்ச் சேர்ந்ததும் வீடு பூரா ஏதோ படபடப்பு பரபரப்பு கண்டோம். கூடிக் கூடிப் பேசிக்கொள்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் விழிக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் என்னென்று கேட்பது? ஆனால் சூழ்நிலையில் ஏதோ மின்சாரம். மாடியேறிச் சென்றோம். கீழே விட மாடியில் அண்ணா விடுதிப் பக்கம் கூட்டம் தெரிந்தது. இடித்துப் புகுந்துகொண்டு உள்ளே போனால் –

மொட்டை மாடியில் அண்ணா மலைபோலும் சாய்ந்து கிடக்கிறார். மூடிய கண்கள். அவரை டாக்டர் Stethoscope வைத்துப் பரிசீலனை பண்ணிக்கொண் டிருக்கிறார்.

அண்ணா பக்கத்தில் மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தபடி அவர் தாயாரும் மனைவியும் நிற்கிறார்கள்.

டாக்டர் பரிசீலனை ஒப்புக்குத்தான். எத்தனை அனுபவம். அவருக்குத் தெரியாதா என்ன? எழுந்து நின்று பெருமூச்செறிந்து உதட்டைப் பிதுக்குகிறார். வேகமாகக் கீழிறங்கிச் செல்கிறார்.

“ஐயையோ !”

“அழாதேடி கண்ணே! இல்லை, பொறுத்துக்கோ நாம் என்ன செய்ய முடியும்?” கிழவி மருமகளை அணைத்துக்கொண்டு அவள் மோவாயைப் பிடித்துக் கொண்டு தேற்றப் பார்க்கிறாள். ஆறுதல் சொல்கையிலேயே அவள் குரல் உடைகிறது. இருந்தும் சமாளிக்கப் பார்க்கிறாள்.

நாங்கள் கையில் ரஸ்தாளிச் சீப்புடன் பேயறைந்தாற் போல் நிற்கிறோம்.

இடம், ஏவல், ஆண்டவனின் வேடிக்கைச் சித்திரம் எப்படி?

ஒரொரு சமயம் தோன்றுகிறது-சே, இந்த வாழ்க்கை ஏன் தன் உயிருக்கு வந்தது? சின்னப் பையன் தும்பியுள் துடைப் பக்குச்சியை ஏற்றினால் 'பாவி’ என்று திட்டுகிறோம். சுண்டெலி வாலில் கயிறு கட்டித் தலை கீழாகப் பிடித்தால், தாங்க முடியவில்லை. அட்டையில் பட்டுப்பூச்சியை ஊசியால் குத்தித் தைக்கிறான். கண்ணை மூடிக்கொள்கிறோம் கவணால் பறவையை அடித்துக் கீழே வீழ்த்துகிறான். அத்தனையும் அவனுக்கு விளையாட்டு. 'உருப்படுவியா நீ?' என்று சபிக்கிறோம். ஆனால் இப்புவனமே ஆண்டவனின் பரீக்ஷைக்கூடமாக விளங்குகிறதே, அவனை யார் என்ன செய்வது? 'ஆண்டவனே! உனக்கு அடுக்குமா?' என்று அப்பவும் அவனையேதான் சரணடைகிறோம். நமக்கும் வேறு கதியில்லையா? அவனும்தான் இப்படியெல்லாம் நம்மைச் சோதனை செய்து என்ன தேடுகிறான்?

அண்ணா மூன்று பெண்களையும், ஒரு பிள்ளையையும், மனைவியையும், தாயாரையும் நடுவழியில் விட்டு விட்டு மீளாத தன் தனிப் பயணத்தில் போய்விட்டார்.

எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணும் அண்ணா.

யார்க்கும் உபகார அண்ணா.

ஆபீஸ் ட்ரஸ்ஸில் - டர்பன், கோட், பஞ்சகச்சம், இரட்டை நாடி சரீரம் - காம்பீர்ய அண்ணா.

இது கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. நாராயணனும் ரிஸர்வ் பாங்கிலிருந்து ஓய்வு பெற்றாயிற்று.

ஆனால் -

அன்று மன்னி தோளில் அம்மா தலையை இங்கு பார்க்கையில், உடனே அடுத்து, மகனைப் பறிகொடுத்த தாய், கணவனைப் பறிகொடுத்த மருமகளைத் தேற்றும் காக்ஷி நினைவில் எழுகிறது.

Ballet, Silhouette, பொம்மலாட்டம், Tableaux நாடக நடனங்களில் இதுபோலும் விதங்கள் உள. தவிர, சினிமா, டிராமா. ஆனால் எத்தனை வருடங்களாயினும் அழியாது, நெஞ்சில் உறைந்துபோன இச்சித்திரங்களுக்கு ஈடாகுமோ?

இங்கு ஒன்று சொல்வது முறையாகும். இந்த வரலாற்றில் இதுவரை கண்டிருக்கும் சம்பவங்கள் அப்பட்டமாகவும், சாயல்களாகவும், அடையாளமாகவும் என் கதைகளில் இழைந்திருப்பது, என் எழுத்துடன் பழக்கமான வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். எங்கெங்கு, என்னென்ன, எவ்வெவ்வாறு எனத் தனிப்பட்ட முறையில் நான் விளக்கப் போவ தில்லை, அனுபந்தமும் தரப்போவதில்லை. பொதுவாக அது கலைக்குக் குறைவு ஏற்படுத்துவதாகும். பாலாடைப் புகட்டல். எழுத்தாளன், வாசகன் இருவரையுமே அவமானப்படுத்துவதாகும். இலக்கிய அனுபவம் ஆளுக்கு ஆள் வேறு. அது வாசகனுடைய பிரயத்தனமாகவும் இருத்தல் வேண்டும்.

இலக்கிய அனுபவம் என்பதுதான் என்ன? இதைத் திட்டவட்டமான ஒரு சட்டத்துள் அடைக்க முடிந்ததாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனை வியாக்யானங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் அது வாங்கிக்கொண்டு மேலும் இடம் காட்டும். இதில் பிரளயத்திற்குப் பின் ஆண்டவன் அதரங்கள் இளகும் புதிர்ப் புன்னகையின் ஒளியாட்டம் ஒளிந்துகொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

சம்பவங்கள் நேர்கையில் அவைகளில் பூமியிலிருந்து பிடுங்கிய ஒரு கிழங்கு முரட்டுத்தனம், ஒரு கோரம் - ஏன், தரக்குறைவுகூடத் தெரியும். ஆனால் நினைவில் ஸ்புடமாகி அதன் வேளையில் எழுத்தாக வெளிப்படும் போது, நிகழ்ந்த நேரத்தின் மிரண்ட மூர்க்கம் கழன்று ஆனால் வலுக் குன்றாமல், ஒரு தெளிந்த குளுமை ஒளி தரும் சுடராக மாறுகின்றது. எழுத்துக்கே ரஸவாதம் உண்டு.

ஆனால் இதற்கு அடிப்படை உண்மைச் சம்பவம் தான். தி.ஜ.ர. சொல்வார்: “எந்தக் கதையேனும், அதில் கொஞ்சமேனும் நிஜத்தின் ஆதாரம் இருந்தால்தான், நம்பக்கூடியதாகவும் படிப்பவன் அத்துடன் ஒன்றக் கூடியதாகவும் இருக்க முடியும்” ஆகாயத்திலிருந்து நார் கிழித்ததாக, 150% கற்பனை என்று தம்பட்டம் தட்டும் எழுத்தும் இதற்கு விலக்கல்ல.

“உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக மாற்றுகிறேன் என்று இவர் சொல்லிக்கொள்ளும் சாக்கில் இவருடைய சொந்த விவகாரங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” ஆக்ஷேபணைக்காகவே ஆக்ஷேபணை செய்பவர்க்கு என் பதில் இதுதான்: கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது.

“இது எனக்கு நேர்ந்தது, அல்லது நேரக்கூடியது. இதில் இவ்வளவு அழகு இருக்கிறது என்பதை, நேர்ந்த போது எப்படி அறியாமல் போனேன்?” என்கிற ஒரு புல்லரிப்பு, அதன் விளைவாக ஒரு இன்பம், உயிருக் குயிர் அனுதாபம், உள்ளூர ஊறும் ஆத்ம பலம், நம்பிக்கை - இதுதான் இலக்கிய அனுபவம். என் காலத்தில் எனக்கும் முன் காலத்தில், அதற்கும் முன் காலத்தில் இதுபோன்ற மனிதர்கள் நடமாடினார்கள்; வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த அவர்களுடைய நம்பிக்கைகள், லக்ஷியங்கள், ஆசாபாசங்கள்; வாழ்க்கை முறை இன்னவிதமாக இருந்தன. இப்போது எந்த அளவுக்கு நீர்த்துப் போய்விட்டோம். அல்லது எந்தெந்தக் கோணங்களில் முனனேற்றம் கண்டிருக்கிறோம் - எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்கு பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்த மாக்குவதே 'பாற்கடல்' எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.

நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.

சில கதவுகள் திறக்கின்றன.

திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.

சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர்.

இதுதான் இலக்கிய அனுபவம்.

ராயப்பேட்டை வாழ்க்கையில் என் முக்கிய நினைவுகளில் ஒன்று மொகரம் பண்டிகை.

மொகரம் பண்டிகையாம்! எனக்கு அப்பவே தமிழ் கூடத் தெரிஞ்சிருந்தால் துயரப் பண்டிகை எனப் பெயர் சூட்டி இருப்பேன். துயரமும் பண்டிகையும் எப்படி

எதிர் மறைகள் சேரும்? நமக்குத்தான் புத்தி இப்படி ஓடும்! எல்லாமே கொண்டாட்டம்.

கொளுத்திவிட்டுச் சுடலையிலிருந்து திரும்பியதும், முப்பருப்பு - பாயஸ்த்துடன் பந்தி.

பத்தாம் நாளன்று முக்கனி, பாயஸம் இத்யாதிகளுடன் விமரிசையாக விருந்து.

பதின்மூன்றாம் நாள் தீண்டல் கழிகிறதாம். புதுத் துணி, விருந்து, சந்தனம் குங்குமத்துடன் மங்கலத்தின் ஸ்வீகரிப்பு. காரியங்கள் யதாப்பிரகாரம் நடக்கின்றன. யாருக்காகவும் எதுவும் காத்திருக்க முடியாது. ஒப்புக் கொள்கிறேன்.

இந்தப் பத்து நாட்களுக்கும் இரவு தித்திப்புடன் பலகாரம் தவிர, அக்ரஹாரத்தில் வசித்தால் ஒருநாள், வீட்டுக்கு வீடு படியேறி முச்சந்திப் பணியாரம் என்று போட வேண்டும்.

சம்பிரதாயப்படி இறந்த ஒரு வருடத்துக்குப் பண்டிகைகள் கொண்டாடலாகாது. ஆனால் சம்பிரதாயங்களுக்கும் பவுடர் பூசி முகத்தை மாற்றியாகிறது. புத்திமதிகளையும் யோசனைகளையும் உதிர்க்கப் பக்கத்து வீடு, எதிர் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் சௌகரியமாகச் சொல்லும் யோசனைகளை ஏற்க வீட்டுப் பெண்டிர்க்கு வலிக்குமா?

‘மாமியார், நன்னா வயசாகிக் காலமாகி இருக்கிறார். கலியாணச் சாவு! தீபாவளிக்குக் குழந்தைகளை வஞ்சனை செய்யாதே; நீங்கள் பெரியவாள் வேணுமானால் எண்ணெய் தேய்ச்சுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு யதாப்ரகாரம் நடக்கட்டும், பட்டாசு உள்பட, பக்கத்து வீட்டில் மத்தாப்புக் கொளுத்தினால் இதுகள் ஏக்கமாகப் பார்த்துண்டு இருக்க முடியுமா? நீங்கள் கூட மத்தியானம் புதுசைக் கட்டிண்டுடலாம். ஒரு தடவை தட்டினால் மூணு தடவை போகும். மாமா கிட்டே நான் சொன்னேன்னு சொல்.”

துயரப் பண்டிகை ! கவியாணச் சாவு! பதச் சேர்க்கைகள் எப்படி!

“மற! மற! மற!” உபதேசங்களின் அடிப்படை.

எதை? மறைந்தவர்களையா? அல்ல, அவர்களின் மறைவையா? நடைமுறையில் அதுதான் புரியவில்லை. இரண்டும் ஒன்றுதானே? வித்தியாசம் இருக்கிறதா என்ன?

பைக்ராப்ட்ஸ் ரோடு வீடுகளில், மாடி ஒன்றில் இடம் பிடிச்சாச்சு. காலை பதினோரு மணியிலிருந்தே, ரோடு திமிலோகப்படுகிறது. வெயில்கூடச் சமயத்தை அனுசரித்து மங்கிச் சூரியனும் முகம் தொங்கலில் இருக்கிறானே?

11, 12, 1.

ஜன நெருக்கம் அதிகமாகிறது.

அந்த நெருக்கடியில் இரட்டை மாட்டுக் கட்டை வண்டிகளில் பெரிய பெரிய அலுமினிய அண்டாக்களுடன் வந்தன. அவற்றில் என்ன?

போலீஸ் தலைப்பாகைகள் கூட்டத்தில் செறிந்து கலந்திருந்தன. தவிர, குதிரைகளில் சவாரி செய்யும் போலீஸ் வீரர்கள், அவ்வப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தில் திணறின.

மேற்படி இரண்டு வாகனங்களையும் போலீஸ் ஊர்திகளையும் தவிர மற்ற வண்டிப் போக்குவரத்து படிப்படியாக ஓய்ந்து நிறுத்தவும் பட்டுவிட்டன.

ஆ! அதென்ன? 'திடும்! திடும்!' தூர இடிச் சப்தம்? இல்லை, இடிச் சப்தம் மாதிரி? பெல்ஸ் ரோடின் வாலாஜா முனையிலிருந்து, மெதுவாக, விதியின் விலக்க முடியாத தன்மையுடன் நெருங்கிக்கொண்டு வருகிறது; நெருங்கிக்கொண்டே வருகிறது.

ஒரே சீராக விழும், இல்லை, இறங்கும் இடிகள் பலமாக இருக்கு. அந்த இடத்தை விட்டு ஓடிப்போக வேணும்னு தோண்றது. அதேசமயத்தில் ஏதோ ஒரு வசியம் என்மேல் கூடு கட்டுகிறது. என்னால் அங்கு விட்டு ஓட முடியாது.

பெல்ஸ் ரோடும் பைக்ராப்ட்ஸ் ரோடும் சந்திக்கும் கூடலில் ஜனம் கடல் கடைகிறது. அந்தக் கடைசலில் கக்கும் நுரை போலும் மிச்சக் கூட்டம் வழிகிறது, சுழல்கிறது, நுரைக்கிறது.

“சொடேர் ! சொடேர் ! சொடேர்!”

பல நூற்றுக்கணக்கான சாட்டைகள் சொடுக்குவது போலும் - ஆனால் இதில் ஆச்சரியம் யாதெனில் ஒரே அளவில் லயம் பிசகாத அந்தத் தாளம். தாள பயங்கரம்.

திடும்! திடும்! திடும்!

எந்தச் சந்தேகமும் வேண்டாம். சப்தம் நெருங்கி விட்டது. இதோ, நேர்முகம் திரும்பினதுபோல், மெதுவாக - கம்பீரமாக, கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டு, முதல் batch எங்கள் பார்வைக்குத் தோன்றுகிறது.

முஸ்லிம் குருக்கள் குரானிலிருந்து ஒரு சுலோகத்தைப் பாட்டுக் குரல் கொடுத்து வாசிக்கிறார். அந்தச் சுலோகம் முடிந்ததும்:

“ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”

அப்பா! அடிகள் மார்மேல் இறங்குகின்றன. அத்தனை கரங்களும் ஒரே நிதானத்தில், ஒரே இடைவெளியில், ஒரே எண்ணத்தில், ஒருமித்த மனோலயத்தில்—

திடும்! திடும்! திடும்! அடியா அது! இடி! இடியா அது? இப்போது தோன்றுகிறது. அன்று பண்டையில் நடந்த பாவச்செயலுக்குப் பச்சாதாப துக்கம். அந்த ரத்தில் மாரடித்துக் கொள்பவர்களுக்குத் தனித்தனியாகச் சரகு பிரிந்து ஒரு பெரிய, பிரமாண்டமான orchestral movementஇல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மூடுபனியில் திடீரென விளிம்பு காட்டும் Iceberg எட்டவும் இருக்கிறது, கிட்டவும் தோன்றுகிறது. நான் துக்க மலை.

இப்போ எனக்கு பயம்கூடத் தெரியவில்லை ஏதோ பரவசம்.

திடீரென வெயில் தன் சுய வெம்மையைக் காட்டுகிறது. சூரியனை மறைத்த மப்பு கலைந்துவிட்டது.

இந்தக் கூட்டத்தை அடுத்து பெல்ஸ் ரோடில் இன்னொரு மாரடிச் சத்தம் தனித்துக் கேட்கிறது. முதல் கூட்டம் நகர்கிறது. அடுத்த batch வந்துவிட்டது. அந்த முக்கில் (pycrafts Road - Bells Road) ஒரு மசூதி இருக்கிறது. அதனால் இங்கே துக்கக் காணிக்கை தனியாகச் செலுத்தியாகிறதோ?

இரண்டு மூன்று நிமிடங்கள்தான். ஆனால் எத்தனை யுகங்கள்! நேரத்தை அதன் கணக்கழித்து நிறுத்தியாகிவிட்டது.

”ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்”

அடுத்த batch—

அடுத்த batch –

கரங்கள் ஆகாயம் நோக்கித் தூக்கிச் சூரியனை அஞ்சலிக்கும் பூ மலர்ச்சிகள். விரல்கள் தனித்தனியாக இதழ் விரியலில் தவிக்கின்றன; துடிக்கின்றன. அடுத்து, விரைந்து, மார்கள் மேல் இறங்குகின்றன. மார்புகள் குருதித் தடாகங்கள்.

”ஹஸ் - ஸேன்! ஹுஸ் - ஸேன்” இரண்டு நிமிடங்களில் அடிகள் உச்ச சுருதியை அடைந்து, தங்கிப் படிப்படியாகத் தணிகின்றன. கரங்கள் மார்புகளைத் தடவிக் கொள்கையில், தடாகத்தில் மிதக்கும், கசங்கிய இதழ்கள்.

குருக்கள் அடுத்த சுலோகத்தைத் தொடங்குகிறார். இந்த batch நகர்கிறது. அடுத்த batch நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அடி தாங்காமல் களைத்து விழுந்தவர்களை, இதைப் பார்க்கச் சகிக்காமல் கூட்டத்தில் மூர்ச்சையானவர்களைத் துக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் அவசரச் சிகிச்சைக்கூடங்களுக்குப் பறக்கின்றன. இரட்டை மாட்டுக் கட்டை வண்டியிலுள்ள, பெரிய தவலைகளிலிருந்து, மாரடித்துக் கொள்ளுபவர்களுக்குச் சிரமபாணம் ஏதோ வழங்கப்படுகிறது.

கடைசியாக முன் சென்றவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு கோஷ்டி தோன்றுகிறது. இந்தக் கோஷ்டியினர் இந்தத்துக்கக் கடலினின்று எடுத்த ஏடு போலும். அவர்களுடைய அழகில், திவ்யமான நிறச் செழிப்பில், உடல் கட்டுமஸ்தானத்தில் அவர்களைச் சுற்றித் திகழும் ஏதோ ஒரு தேஜஸ்ஸின் தூய்மையில், அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கும் ஆவேசத்தில் தனித்துத் தூக்கி நிற்கின்றனர்.

இவர்களின் மாரடி, துக்கம் முதலாக நேர்ந்தபோது அடித்துக்கொண்ட அந்தப் பரம்பரையிலிருந்து இறங்கிய அடி. இதில், சங்கிலியாலும், சாட்டையாலும் அடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடுவே, அவர்களுக்குச் சரியாகத் தங்களை தண்டித்துக் கொள்ளும் என் வயதுச் சிறார்கள் சிலரைப் பார்க்கிறேன். வீராவேசம் கட்டிய மொக்குகள், இதற்குள்ளேயே இவவளவு வெறியா? விவரம் தெரிந்த பக்தியா? அல்லது பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஒரு சந்துஷ்டியா?

”ஆலி! ஜூலா!, ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”

இதுவரை உணராத ஒரு துக்கம் என் தொண்டையை அடைக்கிறது. நானும் - நானும் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களோடு நின்று, அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ளமாட்டேனா என்று ஏதோ ஏக்கம் காண்கிறது. கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சி வரை ஒரு 'கிர்ர்ர்...!' அப்புறம் ஒண்ணும் தெரியல்லே.

அடுத்தாற்போல் ஏதோ குரல், மன்னியென்று நினைக்கிறேன் –

”குழந்தைகளை எல்லாம் இதுக்கெல்லாம் அழைச்சுண்டு வரப்படாது!”

அண்ணா குரல்: ”அப்படிப் பொத்திப் பொத்தி வெச்சால் எப்போதான் அதுகள் எல்லாத்துக்கும் பழகறது? இதையும் பார்க்க வேண்டியதுதான்!”

ஒருநாள் மாலை, எதிர்வீட்டில் அங்கே பையன்களுடன் விளையாடிவிட்டு, வீடு திரும்பியபோது, எல்லாரிடமும் ஒரு பரபரப்பான நடமாட்டம் கண்டேன். மன்னி ஒரு கம்பளியில் தலையணையை வைத்துப் படுக்கையாகச் சுருட்டிக்கொண்டிருந்தாள். அம்மா ஒரு சின்னப் பெட்டிக்குள் அண்ணாவின் துணிகள், மருந்துகள் என்னவோ அடுக்கிக் கொண்டிருந்தாள். அண்ணாவும் பரபரப்பாக அலைந்துகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நேரே என்னிடம் வந்து என் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, “மன்னியும் நானும் ஊருக்குப் போகிறோம். அப்பாவுக்கு உடம்பு சரிப்படலேன்னு சேதி வந்திருக்கு. போகும் போது எங்கே போறேன்னு கேட்காதே. கேட்கப்படாது. முன்கூட்டியே சொல்லிவிட்டேன்.“

ஆனால் இந்த வாய் சும்மா இருக்காது. எங்கே போறேன்னுதான் கேட்கக்கூடாது. எப்போ திரும்பி வருவேன்னு கேட்கக்கூடாது என்று சொல்ல வில்லையே! அண்ணாவும் மன்னியும் வாசற்படியில் இறங்கியாச்சு, கேட்டும்விட்டேன். கேட்காவிட்டால் எனக்கு மண்டை வெடிச்சுடும். அது ஏன் அப்படி?

“நான் மெனக்கெட்டுச் சொல்லி இருக்கேன்“ பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணா கையை ஓங்கிவிட்டார்.

“சரி. விடுடா சப்தரிஷி! எல்லாம் நடக்கறதுதான் நடக்கும். பெருந்திரு விட்ட வழி! குழந்தையைச் சிக்ஷை பண்ணிண்டிருந்தா நமக்கு ரெயிலுக்கு நேரமாயிடும்.“

அவசரமாக அவர்கள் போனபிறகு, அம்மாவிடம் சக்கையாக வாங்கினேன். ஆனால் அடியெல்லாம் துடைச்சுப் போட்டு வளைய வர வயசுதானே! அடியை மட்டுமல்ல அண்ணாவும் மன்னியும் ஊருக்குப் போனதையே மறந்துபோனேன். ஏன் விளையாட்டின் முனைப்பில் அண்ணாவும் மன்னியும் வீட்டில் இல்லாததுகட நினைப்பில் நிற்கவில்லை.

சின்ன அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் புக்ககம் பட்டணத்தில்தான். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வீடு. கணாங்! கணாங்! கணாங்! வாசலிலேயே ட்ராம்கள் சென்றன. அத்தை அடிக்கடி பிறந்தகம் வருவதில்லை. வந்தாலும் தங்குவதில்லை.

”ஏன் அத்தை வந்திருக்கே?”

“என்னடி அம்மாப் பெண்ணே, உன் பிள்ளை இப்படிக் கேட்கிறான்?”

”ஏன் கேட்டதில் என்ன தப்பு? வர வர, நான் வாயைத் திறந்தாலே தப்பாயிருக்கு!”

“என்னை என்ன பண்ணச் சொல்றே? கொஞ்ச நாளாவே அவன் நாக்கில் சனி ஓடிண்டிருக்கு. நானும் பார்த்துட்டேன். கண்டிச்சாலோ, தண்டிச்சாலோ இனனும் அதிகமாறது.”

அம்மாப்பெண், பிள்ளைக்குப் பரிந்து பேசவில்லை. அம்மாப்பெண் எத்தனை நிர்த்தாக்ஷண்யமானவள் என்று எல்லாருக்குமே தெரியும். ராமாமிருதம் ராமேசுவரப் பிரசாதம் என்று ஏற்கெனவே தெரிந்த விஷயம். ஆகையால் அவனுடைய அசட்டுத்தனங்கள் எல்லாம் தனி ரீதியைச் சேர்ந்தவை.

திடீரென ரேழியில் கார்த்திகேயனின் அழுகை பெருங்குரலாய்க் கேட்டது. கையில் ஒரு சிவப்புக் காகிதத் துண்டுடன் உள்ளே வந்தான்.

உடனே எல்லாரும் அழத் தொடங்கிவிட்டனர். இது மாதிரி இதுவரை நாங்கள் குழந்தைகளுக்குப் பார்த்துப் பழக்கம் இல்லை. கை கால்கள் உதறல் எடுத்துக் கொண்டன. நாங்களும் ஒன்றும் புரியாமலே அழுதோம்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சித்தப்பா ஆபீஸிலிருந்து வந்தார். இத்தனை அழுகை நடுவில் அவர் ஒருவர்தாம் அழவில்லை. சிணுங்கக்கூடவில்லை. என் நினைப்பில், அவர் கண்ணீர் சிந்தியதாகவே எனக்கு ஞாபகம் இல்லை. உள்ளம் கெட்டி.

அன்றிரவே எல்லாரும் ரெயிலேறிவிட்டோம். ஆனால் ஜாலியா இல்லை. அம்மாவும் சித்தியும் முன்றானையால் வாயைப் பொத்தியபடி உட்கார்ந் திருந்தனர். குழந்தைகள், எங்கள் சத்தம் அதிகரித்தால் அவ்வப்போது 'ஷ' பண்ணிக் கொண்டிருந்தனர். வழியில் எங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. கையோடு எடுத்தும் வரவில்லை. கார்த்திகேயன் ஜன்னலோரம் உட்கார்ந்துகொண்டு, ஒரு கையில் தலையைத் தாங்கியபடி மெளனமாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். சித்தப்பா உறவின் மரியாதையைக் கடைப்பிடிக்க பரஸ்பரம் அவனுக்கு வயது வரவில்லை. எங்களிடமும் மரியாதை இல்லை. ஊரைவிட்டு ஊருக்கு ரெயிலில் போகிறோம் - அந்த ஜாலியோட சரி. ஆனால் அதுவே எங்களுக்கு அந்த வயதில் போதும். இரக்கம், அனுதாபம், சமயம் சந்தர்ப்பம் அறியா வயது. பெரியவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? பசி வயிற்றைக் கிள்ளுகிறது. எங்கள் முனகல், அழுகை எதுவும் பலிக்கவில்லை.

லால்குடி ஸ்டேஷனில் இறங்கியதும் ஜட்கா பிடித்து, வண்டி கீழத் தெருமுனை திரும்புமுன்னரே கார்த்திகேயன் கட்டுக்கடங்காமல் அழ ஆரம்பிச்சாச்சு. வீட்டுக்கு எதிரில் வண்டி நின்று நாங்கள் இறங்கியதுமே, வீட்டின் உள்ளிருந்து எங்களை எதிர்கொண்டது பேரழுகை, உள்ளே போனால் ஒரு பெரிய கூட்டம் மன்னியைச் சூழ்ந்துகொண்டு, அவளைக் கட்டிக் கொண்டு, மூலைக்கொருவராகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, “அடி பாவி, நீ முன்னால் போய்ச் சேர்ந் திருக்கக்கூடாதா ?” திட்டறாளா ? அழறாளா ? மன்னியைக் கொன்றுவிடப் போகிறார்களா? அது மாதிரி. ப..ய..ம்..ம்..ம்.

அன்றிரவு.

“ராமண்ணாவுக்குப் பரமபத சோபன படம் மாதிரி இனிமேல் ஏணி ஏர்றதும் பாம்பில் இறங்கறதுமா, ஜன்மாவஸ்தை கிடையாது. நேரே பெருந்திருவின் பாத கமலங்களில்கூட அல்ல - அவளுடைய அபய ஹஸ்தத்திலேயே சேர்ந்துட்டான். அதுமாதிரி ஐக்யம் சாமான்யமா கிடைக்கக்கூடியதா?”

வாளாடி அத்தைப் பாட்டியை முதல் முதலாகப் பார்க்கிறேன். செம்மரப் பாச்சிபோல் சிறுகூடாக, காய்ந்துபோன வெற்றிலைபோல் கூடத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். ஒடிந்த நாற்காலியைக் கூடச் சிம்மாசனமாக்கிவிடும் ப்ரஸன்னம் சிலபேருக்குத் தான் உண்டு.

அவளைச் சுற்றிச் சிறியவர், பெரியவர் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம்.

இந்தச் சமயத்தில் ஒரு உரத்த சிந்தனைக்கு இடம் வேண்டுகிறேன். இந்தக் குடும்ப வரலாறில், இந்தக் கால கட்டங்களை வெளியிடுவதில் எனக்கு நிச்சயமாக இருக்கும் ஒரு பிரதிகூலத்தை உணர்கிறேன். அம்முவாத்து இந்தத் தலைமுறையில் - அதாவது நான் விவரித்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்கு முன் தலைமுறை முன்னோர்கள் ஒவ்வொருவருமே, ஏதோ விதத்தில் வார்ப்படம் மீறியவர்கள். பேச்சிலும், தோற்றத்திலும் அவர்களுக்கு தோரணை இயற்கையாகவே வந்தது. அதை அவர்கள் மறப்பது இல்லை. வார்த்தைகளின் உசச்சரிப்பில்கூட ஒரு தனித்தனம்; அந்த வரியை, அதிகாரத்தை எழுத்தில் என்னால் கொண்டுவர இயலவில்லை.

‘எல்லாருமேவா இப்படி? - லேசாக நம்பத்தகாத ஓர் அதிசயத்துடன்? - இனம் காண முடியாத அதிசயத் துடன்!‘ என்று நேயர்கள் வியப்புற, அவர்கள் மனத்துள் ஒரு புன்னகை புரிந்துகொள்ளக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு நியாயம் இல்லை. அது நியாயம் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

எனக்கு அப்போது ஆறு வயது. கதை கேட்கும் வயது. அப்போது கேட்ட கதையை வைத்துக்கொண்டு இப்போது கதை பண்ணுகிறாயாக்கும்? என் முயற்சி எவ்வளவு நாணயமாக இருப்பினும், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? உண்மையில் அதுவுந்தான், என்னை அறியாமல் நடந்துகொண்டிருக் கிறதோ என்னவோ.

உணமை என்பது என்ன? What is truth? Pilate-இன் என்ன மகத்தான கேள்வி! கோபுரக் கேள்வி. எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும் தோன்றும் வியப்புக்கு அலுப்பே இல்லை.

ஆம், உண்மை என்று சொல்லிக்கொள்ளும் போதெல்லாம் அவரவருக்குக் கிடைப்பது பார்வைகள் (கோணங்கள்)தாம். உண்மை அதன் முழுமையில் எங்கே? கண்டவர் விண்டிலர். உண்மையைப் பேசாமல் நழுவுவதற்கு, இப்படி ஒரு தீர்ப்பா?

ஆகையால் உண்மையோ ஒரு பொய்யோ - அந்த எண்ணமே கூசுகிறது. பயமாய் இருக்கிறது. இதுமாதிரியான புரட்சி பண்ணுவதில் நாட்டமும் இல்லை. அதற்கு உரிய தில்லும் எனக்கு இல்லை.

இந்த உதயத்தையோ (இருளையோ) அதன் முழுமையில் உணர்ந்துவிட்டதால்தானோ, Sartre தன் சுயசரிதைக்கு Words என்று தலைப்புக் கொடுத்தானோ?

வெறும் சொற்கள்.

வெறும் பார்வைகள்.

கோணங்கள்.

இவைகளிலாய, இவைகளே ஆய.

மனித உறவுகள்.

உண்மை என்பது என்ன?

அது எங்கே?

இவை சேர்ந்ததுதான் உண்மையா?

ஆயினும் இவைகளில் கமழும் மணங்களை மறுக்க முடியுமா? இவைகளும் நாம் அதன் முழுமையில் உணர, காண இயலாத, சதா தேடிக்கொண்டிருக்கும் உண்மையைச் சார்ந்தனதாமே !

பிறவி, சாவு, இடையில் உறவுகள் இல்லாமல் இருக்க முடியாது.

துணை தேடும் உறவு.

காதலுடன் உறவு.

குரு - சீட உறவு.

கடவுளுடன் உறவு.

துணை துறந்து தனிமையுடன் உறவு.

உன்னை நீ அறி எனும் வேட்டையுடன் உறவு.

உறவைத் தேடலிலேயே தேடலோடு உறவு.

பிறவிக்கும் சாவுக்கும் இடையே உனக்குக் கிடைத்த உறவுடன் சமாதானம் அடை.

சமாதானம் அடைவாயாக.

சிந்தனைக்கு இடங்கொடேல்.

சிந்தனையில் இறங்குவதாக இருந்தால், கடைசி வரை - உன் கடைசிவரை அதை ஒரு கை பார்த்து விடத் துணிச்சலுடன் இறங்கு.

கலைஞன் முழு ப்ரக்ஞையுடன் உணரும் தன் விதி இது. சமுத்திரத்தை அதன் எதிர்க்கரைக்கு (?) (!) நீஞ்சத் துணிச்சல்,

எங்கு அவனுக்கு எது, இந்த நீச்சலில் அவன் கண்டானோ, அத்துடன் அவன் ஜலசமாதி. அதுவே அவன் கண்ட கரை. அதையும் அவன் அறிந்திருத்தல் வேண்டும்.

நிற்க. இதோ வாளாடி அத்தை பேச ஆரம்பித்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-19&oldid=1534624" இலிருந்து மீள்விக்கப்பட்டது