பெருங்கதை/1 41 நீராட்டு அரவம்

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 41 நீராட்டரவம்

பனித்துறைக் கோள் அரவம்[தொகு]

பரந்த விழவினு ளுவந்தவை காட்டி
நகர மாந்தர் பகர்வன ரறையும்
பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும்

நீர் விளையாட்டுக்குரிய கருவிகள்[தொகு]

கிடைப்போழ்ப் பந்தத் திடைப்புனைந் தியற்றிய
அவிர்நூற் பூங்கிழி யாப்பினொடு சார்த்திக் 5
கட்டளை யமையச் சட்டகங் கோலிக்
கண்டோ ரின்றியுங் கைந்நவில் வித்தகர்
கொண்டோர் மருளக் கோலங் குயிற்றி
அம்புவா யணிந்த பெருந்தண் சக்கரம்
சாந்திற் செய்த வேந்திலை யெறிவேல் 10
போதிற் புனைந்த பூம்பொறி வளையம்
மலர்புறத் தழுத்திய வலையணி யீர்வாள்
பிணையலிற் பொலிந்த கணையக் கப்பணம்
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டிணை
உருக்குறு …..முள்வாய் சேர்த்தி 15
அரக்குறு நறுநீ ரஞ்செங் குலிகம்
குங்கும வீறலொடு கொண்டகத் தடக்கிய
எந்திர நாழிகை யென்றிவை பிறவும்

அரசகுமரர் ஒலி[தொகு]

ஏற்றிப் பண்ணிய வினக்களிறு நிரைஇ
மாற்று மன்ன ராகுமி னெனத்தம் 20
உரிமை மகளிரொடு செருமீக் கூறிக்
கரைசென் மாக்கள் கலாஅங் காமுறூஉம்
அரைச குமர ரார்ப்பொலி யரவமும்

பறவைக் கூட்டத்தின் ஒலி[தொகு]

வளையார் முன்கை வையெயிற் றின்னகை
இளையோர் குடைதலி னிரைகோளப் பெறாஅப் 25
பைந்தாட் குருகின் மென்பறைத் தோழுதி
தடவுச் சினைதொறுந் …….
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுட்
பார்ப்பொடு நாலும் பையு ளரவமும்

மரங்களைக் கரையேற்றுவோர் ஒலி[தொகு]

அறைவரைச் சாரற் சிறுகுடிச் சீறூர்க் 30
குறவர் கறைத்த கொய்புன மருங்கின்
அந்தண் ணகிலுஞ் சந்தனக் குழையும்
கருவிளங் கோடுங் காழிருள் வீடும்
திருவிழை கழையுந் தேக்குந் திமிசும்
பயம்புங் கோட்டமுங் கயம்பல கலங்க 35
அமிழ்ந்துகீ ழாழ வருங்கலஞ் சுமந்து
நுரைபுன னீத்தத்து நூக்குவனர் புக்குக்
கரைமுதற் சார்த்துங் காளைக ளரவமும்

பெண்மான்களை இனத்தோடு கூட்டும் இளைஞர் ஒலி[தொகு]

இடைநீர்ப் பட்ட மடமா னம்பிணை
மம்மர் நோக்க தோக்கி நையா 40
நம்மில் காலை யென்னவென் றெண்ணிப்
புன்றஃசுழி நீத்த நீந்தி மற்றவை
இனத்திடைப் புகுத்து மிளையோ ரரவமும்

தோணியிற் செல்லும் மகளிர் ஒலி[தொகு]

தொடியணி தோளியர் துன்னி யேறிய
வடிவமை யம்பி யடியினுள் வானத் 45
தாழ றவிர்ந்து மரும்புனல் கவைஇயின
தாழ்தரும் வலிமின் றைய லீரெனத்
திரிதர லோவாது தீயவை சொல்லிய
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர்
அச்சப் பணிமொழி யமிழ்தென மிழற்றி 50
நச்சுவன ராடு நல்லோ ரரவமும்

பேதை மகளிர்[தொகு]

அணியற லன்ன வைம்பாற் கூழையர்
மணியுமிழ்ந் திமைக்கும் வயங்குகொடிப் பைம்பூண்
முத்தொடு முரணித் தத்து மாகத்துக்
காமங் காலா வேம நோக்கத்து 55
மாத ராற்றா மழலையங் கிளவிப்
பேதை மகளிர் சேதடி யணிந்த
கண்பிணிப் பகுவாய்க் கிண்கிணி யரவமும்

பெதும்பை மகளிர்[தொகு]

முகிழ்நிலா விரிந்த முத்துவடக் கழுத்தினர்
திகழ்நிலா விரிந்த திருமதி முகத்தர் 60
செண்ண மாகிய சிகழிகை முடியர்
வண்ண மகடூஉ வல்லவா வகுத்த
இரதப் தல்காழ்ப் பரவை யல்குவர்
பொன்னிறக் கோங்கின் பொங்குமுகிழ்ப் பென்ன
முன்ன ரீன்ற முலைமுதன் முற்றத்து 65
மின்னுக்கொடி பிறழுங் கன்னிக் கோலமொ
டொதுங்க லாற்றா வொளிமலர்ச் சேவடிப்
பெதும்பை மகளிர் சிலம்பொலி யரவமும்

மங்கை மகளிர்[தொகு]

கொடியணி பிறழுங் கொம்மை வெம்முலைக்
கடிகை வேய்நலங் கழிக்கு மென்றோட் 70
கொடியென நடுங்குங் கோல மருங்குலர்
அம்பெனக் கிடந்த வையரி நெடுங்கண்
மங்கை மகளிர் பைங்கா சரவமும்

மடந்தை மகளிர்[தொகு]

நீனிறக் கொண்மூ நெற்றி முள்கும்
வானிற வளர்பிறை வண்ணங் கடுப்பச் 75
சின்மெல் லோதி சேர்ந்த சிறுநுதற்
குலாஅய்க் கிடந்த கொடுநுண் புருவத்
துலாஅய்ப் பிறழு மொள்ளரித் தடங்கண்
வம்புமீக் கூரும் பொங்கிள முலையின்
நுடங்குகொடி மருங்கி னுணுகிய நுசுப்பின் 80
மடந்தை மகளிர் குடைந்தா டரவமும்

அரிவை மகளிர்[தொகு]

கலங்கவின் பெற்ற கண்ணார் களிகை
நலங்கவின் கொண்ட நனிநா கரிகத்
தம்மென் சாய லரிவை மகளிர்
செம்மலஞ் சிறுவரைச் செவிலியர் காப்பப் 85
பூம்புன லாடுதொறும் புலம்பும் புதல்வரைத்
தேம்படு கிளவியிற் றீவிய மிழற்றிப்
பாலுறு வனமுலை பகுவாய்ச் சேர்த்தித்
தோளுறத் தழீஇ யோலுறுப் பரவமும்

தெரிவை மகளிர்[தொகு]

பொன்னரி மாலை புனல்பொதிந் தசைதர 90
மின்னொசிந் ததுபோற் பொன்னணி பிறழப்
புனலக மூழ்கிப் பூந்துகில் களையார்
மணலிகு நெடுந்துறை மங்கலம் பேணிப்
பெரியோ ருரைத்த பெறலருந் தானம்
உரியோர்த் தரீஇ யுள்ளுவந் தீயும் 95
தெரிவை மகளிர் வரிவளை யரவமும்

பேரிளம் பெண்டிர்[தொகு]

தித்தி யொழுகிய மெத்தெ னல்குலர்
மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்
நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்
திரையுடைக் கலுழி திறவதி னாடித் 100
தாமிள மகளிரைக் காமஞ் செப்பி
அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித் தாடுமிந்
நங்கையர் நோற்ற பொங்குபுனற் புண்ணியம்
நுங்கட் காகென நுனித்தவை கூறி
நேரிழை மகளிரை நீராட் டயரும் 105
பேரிளம் பெண்டிர் பெருங்கலி யரவமும்

வேறு பலவகை ஒலிகள்[தொகு]

கைபுனை பாண்டியங் கட்டளை பூட்டி
வையந் தரூஉம் வயவ ரரவமும்
புகுவோ ரரவமும் போவோ ரரவமும்
தொகுவோ ரரவமுந் தொடர்ந்துகை தழீஇ 110
நடந்தியன் மறுகி னகுவோ ரரவமும்
மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு
நயந்த காத னன்னுதன் மகளிரைத்
தேருந ரரவமுந் திகைக்குந ரரவமும்
பேருநர்ப் பெறாஅப் பெரியோ ரரவமும் 115
நெடுந்துறை நீந்தி நிலைகொள லறியார்
கடுங்கண் வேந்தன் காதல ரரவமும்
கொலைத்தொழில் யானை சென்றுழிச் செல்லாத்
தலைக்க ணிரும்பிடி பிளிற்றிசை யரவமும்
துறைமாண் பொராஅத் தூமண லடைகரை 120
நிறைமாண் குருகி னேர்கொடிப் பந்தர்ப்
பாடலொ டியைந்த பல்லோ ரரவமும்
ஆடலொ வியைந்த வணிநகை யரவமும்
யாற்றொலி யரவமொ டின்னவை பெருகிக்
கூற்றொலி கேளாக் கொள்கைத் தாகி 125

ஆடவும் உண்ணவும் அமைந்தவை[தொகு]

அரைப்பமை சாந்தமு முரைப்பமை நானமும்
ஒப்பமுறை யமைந்த வோமா லிகையும்
வித்தகர் வனைந்த சித்திரக் கோதையும்
காதன் மங்கைய ராகத் தெறியும்
சாதி லிங்கமுஞ் சந்தனத் தேய்வையும் 130
உரைத்த வெண்ணெயு நுரைப்பம லரைப்பும்
பீடுடன் பேராப் பெருந்துறை யெங்கும்
ஆடவு முண்ணவு மாதர மாகப்
பேராக் காதலொடு பெருஞ்சிறப் பியற்றி
நீராட் டரவ நிகழுமா லினிதென். 135

1 41 நீராட்டரவம் முற்றிற்று.