பொன்னியின் செல்வன்/முடிவுரை
முடிவுரை
[தொகு]நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் "பொன்னியின் செல்வன்" கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.
கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.
கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். "பொன்னியின் செல்வன்" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா?
பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.
சரித்திரத்தின் எந்த ஒரு காலப் பகுதியைப்பற்றியும் பரிபூரணமாகவும், ஐயந்திரிபுக்கு இடமின்றியும் வரலாறு எழுதப்பட்டு விட்டதாகச் சொல்லுவதற்கில்லை.
ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நீடித்து அரசு புரிந்த பல்லவ சக்கரவர்த்திகளின் வரலாறு ஓரளவு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த இருநூறு ஆண்டுகளைப் பற்றிய சரித்திர வரலாறு விவரங்கள் நன்கு தெரிய வந்திருக்கின்றன.
பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முந்நூறு ஆண்டு புகழுடன் விளங்கிய விஜயாலய சோழ பரம்பரையின் காலத்து நிகழ்ச்சிகளும் ஓரளவு ஆராயப்பட்டிருக்கின்றன. இக்காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றித் திட்டமாக நிர்ணயிக்க முடியாதபடி பல ஐயப்பாடுகள் தோன்ற இடமிருக்கிறது. ஆயினும், சில சரித்திரச் சம்பவங்கள் மறுக்க முடியாத தகுந்த ஆதாரங்களுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எல்லாம் மிக முக்கியமானது, தமிழகத்துக்கு இணையற்ற பெருமையை அளிக்கக்கூடியது, சரித்திரத்திலேயே ஒப்பற்ற சம்பவம் என்று கொண்டாடுவதற்குத் தகுதியானது ஒன்று உண்டு. சுந்தர சோழ மன்னரின் இரண்டாவது திருக்குமாரனாகிய அருள்மொழிவர்மன், (பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் என்று புகழ் பெற்ற பேரரசன்), இளம் பிராயத்தில் எளிதில் பெற்றிருக்கக் கூடிய சோழ சாம்ராஜ்யத்தை வேண்டாம் என்று மறுத்து, உத்தம சோழனுக்குப் பட்டம் கட்டி வைத்ததுதான்.
"சுந்தரசோழனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்மனே சோழ சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழிவர்மன் தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தனுடைய புதல்வனும், தனக்குச் சிறிய தகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தமசோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டி வைத்தான்." என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.
இந்த நிகழ்ச்சியை மற்றும் பல செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் அந்தக் காலத்தில் அறிஞர்கள் பலரால் எழுடப்பட்ட நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.
அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ளவேண்டும் என்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும் அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.
உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும் பெரும் செயலைக் காணுதல் அரிது. அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, "இனி யுத்தமே வேண்டாம்" என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம்.
"பொன்னியின் செல்வன்" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஒப்பற்ற தியாகமே ஆகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே இக்கதையின் ஐந்தாவது பகுதிக்கு "தியாக சிகரம்" என்று பெயர் தரப்பட்டது.
இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி "பொன்னியின் செல்வன்" செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையைப் படித்து வந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். யாராவது அதை அறியவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்தக் குறையைக் கதை ஆசிரியர் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு, நேயர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதுதான்.
"பொன்னியின் செல்வன்" கதை வெளியாகி வந்தபோதெல்லாம் நேயர்கள் ஒப்பற்ற ஆர்வம் காட்டி வந்தார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தியும் வந்தார்கள். நேயர்களிடம் அப்போதெல்லாம் கருத்து வேற்றுமையே காணப்படவில்லை. கதை முடிவடைந்த பிறகும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன. இக்கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையைப் பாராட்டிக் கதையின் முடிவையும் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தைக் குறை கூறியிருக்கிறார்கள். சட்டென்று முடித்துவிட்டதற்காகவும் பல கதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே கதையை முடித்து விட்டதற்காகவும் வருந்தியிருக்கிறார்கள். காரசாரமாகக் கண்டனங்கள் எழுதியிருப்பவர்களும் உண்டு.
கண்டனமாகவும் குறை சொல்லியும் எழுதியிருப்பவர்கள் அனைவரும் கதையை இன்னும் வளர்த்தி எழுதியிருக்கலாம் என்றே அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை எண்ணி தொடர்ந்து திருப்தி அடைகிறேன். மூன்றரை ஆண்டு தொடர்ந்து வெளியாகி வந்த கதையைக் குறித்து அலுப்பு அடைந்து "எப்போது முடிக்கப் போகிறீர்?" என்று கேளாமல், "ஏன் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர்? ஏன் மேலும் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாது?" என்று நேயர்கள் கேட்பது ஒருவாறு மகிழ்ச்சி அடைவதற்குரிய நிலைமைதான். ஆயினும் நேயர்களில் ஒரு பெரும் பகுதியினரைத் திருப்தி செய்ய முடியாமற் போனது பற்றி வருந்துகிறேன்.
"பொன்னியின் செல்வன்" கதையை இப்போது முடித்திருப்பது போல் முடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு:
1. முன்னமே குறிப்பிட்டதுபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன் கையில் கிடைத்த மகாசாம்ராஜ்யத்தைத் தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்தப் பெரு நிகழ்ச்சிக்குப் பிறகு கதையை வளர்த்திக் கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல, 'கிளைமாக்ஸு'க்குப் பிறகு, 'ஆண்டி கிளைமாக்ஸு'க்குப் போவதாக முடியும். நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதற்காகக் குறை சொன்னாலும், இந்தக் கதையை மேலும் வளர்த்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாகக் குறைப்பட நேரிடும். "எப்போது முடிக்கப் போகிறீர்?" என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.
2. பொதுவாக 'நாவல்கள்' எழுதுவதற்கும், முக்கியமாகச் 'சரித்திர நவீனங்கள்' எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை) ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள். ஆயினும் முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது.
முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லாருக்கும் கதை ஆசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்து கொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்குமேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதைகளில் வரும் மற்றப் பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம்.
கலியாணம் செய்து கொண்ட தம்பதிகள் பிள்ளை குட்டி பேரர்களைப் பெற்று நெடுங்காலம் சுகமாக வாழ்ந்தார்கள் என்றும், மற்ற கதாபாத்திரங்களில் நல்லவர்கள் எல்லாரும் சுகமடைந்தார்கள் என்றும், கெட்டவர்கள் எல்லாரும் பல கஷ்டங்கள் பட்டுச் செத்தொழிந்தார்கள் அல்லது தக்க தண்டனை அடைந்தார்கள் என்றும் கூறிக் கதையைத் திருப்திகரமக முடிக்கலாம். சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும் ஆகாது.
சரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர எல்லாரும் பிற்காலத்திலும் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றியோ தோல்வியோ சுகமோ துக்கமோ அடைவார்கள். அவற்றைக் குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா? அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டும் சொல்லுவதுதான் உசிதமாகுமா? கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலைமையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன். ஆனால் இது பல நேயர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லையென்பதைக் காண்கிறேன். ஓரளவேனும் அவர்களைத் திருப்தி செய்விக்க வேண்டியது அவசியம் என்று உணருகிறேன்.
பல நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களைக் கேள்விகளின் ரூபத்தில் இதோ கோவைப் படுத்தித் தந்திருக்கிறேன்.
- 1. வந்தியத்தேவர் இளவரசி குந்தவைப் பிராட்டியை மணந்தாரா?
- 2. கோட்டைத் தளபதி சின்னப்பழுவேட்டரையர் என்ன ஆனார்?
- 3. வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்ன செய்தான்?
- 4. பொன்னியின் செல்வரின் பிரயாணம் என்ன ஆயிற்று?
- 5. பழைய மதுராந்தகரும், சின்னப் பழுவேட்டரையரின் மகளும் என்ன ஆனார்கள்?
- 6. நந்தினியினால் முடி சூட்டப்பட்ட இளம் பாண்டியனைப் பற்றிய விவரம் என்ன?
- 7. நந்தினியின் கதி என்ன?
- 8. வானதியின் விஷயமாகக் குடந்தைச் சோதிடர் கூறியவை பலித்தனவா?
- 9. ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்?
மேற்கூறிய கேள்விகள் பலவற்றுக்குப் பதில்களை, தமிழ்நாட்டுச் சரித்திரம் படித்தவர்கள் தாங்களே அறிந்து கொள்வார்கள். ஆயினும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பொருட்டு மேற்கண்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.
- 1. மேலும் பல இடையூறுகளைத் தாண்டிய பிறகு குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் சோழசாம்ராஜ்யத்தில் மிக மதிக்கப்படுகிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், "இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டு விளங்குகிறது.
- 2. இரும்பு மனிதராகிய சின்னப்பழுவேட்டரையர் உயிர் பிழைத்துப் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகு ஊருக்குத் திரும்பி வருகிறார். சோழ சாம்ராஜ்யத்துக்குப் பல அரிய சேவைகள் புரிகிறார்.
- 3. வீர வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் தனது ஒற்றறியும் வேலையை மேலும் நடத்திக் கொண்டிருக்கிறான். நந்தினியும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் செய்யும் சதித் திட்டங்களை அறிந்து வந்து சொல்கிறான்.
- 4. பொன்னியின் செல்வர் வந்தியத் தேவருடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற்கொள்ளைக்காரர்களை அடக்கிச் சோழ சாம்ராஜ்யத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் நிலைநாட்டுகிறார். உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜ ராஜ சோழன்' என்ற பட்டத்துடன் நீண்டகாலம் சோழ சாம்ராஜ்யத்தை ஆளுகிறார்.
- 5. பழைய மதுராந்தகன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். அவனுடைய முயற்சி பெரிதும் பலம் பெறுகிறது. இராஜராஜ சோழர் பட்டத்துக்கு வந்தபிறகு அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார். அவன் வீர சொர்க்கம் எய்துகிறான்.
- 6. திருப்புறம்பயம் காட்டில் முடிசூட்டப்பட்ட இளம் பாண்டியனும் பாண்டிய ராஜ்யத்துக்கு உரிமை கொண்டாடுகிறான். அவன் போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்று மறுபடியும் நாட்டைப் பெறச் சதிசெய்கிறான். இவன் பிற்காலத்தில் இராஜேந்திர சோழனால் போரில் முறியடிக்கப் படுகிறான்.
- 7. நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.
- 8. குடந்தைச் சோதிடரின் கூற்றுக்கள் வானதியின் விஷயத்தில் பலிக்கின்றன. (சோதிடர் சாஸ்திரம் பார்த்துச் சொன்னாரா ஊகத்தினால் சொன்னாரா, நாம் அறியோம்) வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான். ஆனால் வானதி தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டு உயிர் துறக்கிறாள். இராஜ இராஜனுடன் சோழ சிங்காதனம் ஏறுகிறவள் 'உலகமகாதேவி' என்னும் திருநாமம் கொண்ட இன்னொரு ராணியாவாள்.
- 9. ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.
நேயர்கள் அவ்வளவாகக் கவலைப்படாத இன்னும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் கூறிவிடுகிறேன்.
சுந்தர சோழர் காஞ்சி பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்' என்று பெயர் பெறுகிறார். அவருடைய அருமை மனைவி வானமாதேவி, மலையமானுடைய மகள் அவருடன் உடன்கட்டை ஏறிச் சொர்க்கம் அடைகிறாள்.
பார்த்திபேந்திரன் குந்தவை தன்னை நிராகரித்துவிட்ட கோபத்தினால் காஞ்சியில் சுதந்திர பல்லவ ராஜ்யத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறான். அதில் தோல்வியடைந்து சந்ததியில்லாமல் மாண்டு போகிறான்.
கந்தமாறன் பாலாற்றின் வடமேற்கில் புதிய மாளிகை கட்டிக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குத் தொண்டு செய்து வாழ்கிறான். அவனுக்குப் பின்னால் சம்புவரையர் குலம் மிகப் பிரசித்தி அடைகிறது.
நேயர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவையெல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திரக் கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளாகும்.
உத்தமசோழருக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் 'பொன்னியின் செல்வன்' கதையைப்போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக் கூடியவை.
இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோந்நதமான நவீனங்களை எழுதித் தமிழகத்துக்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என நம்புகிறேன்.