உள்ளடக்கத்துக்குச் செல்

ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்

விக்கிமூலம் இலிருந்து
(ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்
ஒங்கொங்கில் 2004 ஆம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி வகுப்புகளின் ஒவ்வொரு ஆண்டு நிறைவு நாளையும் விழாவாக எடுத்து வருகின்றனர். அத்துடன் ஆண்டு விழாவின் போது, ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் வெளியிட்டு மேலும் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு ஹொங்கொங் வரலாற்றில் தமிழ் மொழி வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளன்று வெளியிட்ட 2004 - 2005 ம் ஆண்டு விழா மலர் நூலின் உள்ளடக்கத்தை (தமிழ் வழி கற்க முடியாத அந்நிய நாட்டு சூழமைவில், தமிழ்க் கல்விக்கான முக்கியத்துவம் கருதி) அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி சிலப் பகுதிகள் கீழே தட்டச்சிடப்பட்டுள்ளது.

முகவுரை

[தொகு]
2004-2005 ம் ஆண்டு மலர்

ஜூன் 2003 இல் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் "இளம் இந்திய நண்பர்கள் குழு" (Young Indian Friends Club) துவங்கப்பட்டது. கடற்கரை வாலிபால், காற்பந்து, கிரிக்கெட், பந்தெறிதல் மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுகளை YIFC தொடர்ந்து நடத்தி வந்திருக்கின்றது; மற்ற குழுக்களோடும் விளையாட்டில் போட்டியிட்டு கோப்பைகள் பல வென்றிருக்கின்றது. இந்த குழுவினரிடம் எழுந்த தாய்மொழி பற்றின் விளைவால், அடுத்த தலைமுறையினருக்குத் தாய் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் செப்டம்பர் 2004 இல் YIFC ஆல் துவங்கப்பட்டதுதான் "தமிழ் வகுப்பு".

வகுப்புகள் துவங்கப்பட்டதுமே மாணவர்கள் ஊக்கத்துடன் கற்க முன்வந்தனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்தது. புரவலர்களின் ஆதரவு இருந்தது. பிரமுகர்களின் பின் துணை இருந்தது. ஆசிரியர்களின் கடின உழைப்பு இருந்தது. தன்னார்வ தொண்டர்களின் அயராத பணி இருந்தது. இப்போது ஒரு கல்வியாண்டு (2005) முடிந்து விட்டது. ஓராண்டு தமிழ்ப் படிப்பை முடித்திருக்கும் 35 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குகிற நிகழ்ச்சியை 29 மே 2005 அன்று தமிழ் வகுப்பின் முதலாம் ஆண்டு விழாவாகக் கொண்டாட YIFC முடிவு செய்தது. இந்த விழாவில் வெளியிடப்படும்- உங்கள் கைகளில் தவழும் - இந்த மலர் கடந்த ஓராண்டில் நடந்தவைகளின் ஆவணமாக விளங்குகிறது. நிழற்படங்களும், ஆண்டறிக்கையும், கட்டுரைகளும் தமிழ் வகுப்பின் முதாலாண்டை நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த உதவும் கிரியாவூக்கியாகவும் செயல்படும். இந்த பணி சிறப்பாக நடைப்பெற உதவிய அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் இளம் இந்திய நண்பர்கள் குழு நன்றி நவில்கிறது.

உங்கள் அனைவரின் ஆதரவை என்றும் நாடும்,

இளம் இந்திய நண்பர்கள் குழு

தபால் பெட்டி எண் 91221

ஒங்கொங்

மின்னஞ்சல்: tamil@yifchk.org

29 மே 2005

ஒங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் செ. முஹம்மது யூனுஸ்

[தொகு]

கல்வி அழியாத செல்வம்

தீயால் எரிக்க முடியாது, தீயவர்களால் அபகரிக்க முடியாது, தீயவர்களால் அபகரிக்க முடியாது. கல்வியைப்பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் தெளிவாகக் கூறாத அறிஞர்கள் இல்லை. நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்கள் சீனாவுக்குச் சென்றேனும் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கல்வியைத் தேடிச் சென்று அடையுங்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும் என்று ஔவை பிராட்டியார் கூறியிருக்கிறார். கல்வியின் முக்கியத்துவம் கண்ணோடு ஒப்பிடப்படுகிறது. "கண்ணுடையரென்பர் கற்றோர், மற்றிரண்டு புண்ணுடையோர் கல்லாதாவர்" என்று திருவள்ளுவர் கல்வி கற்றவர்களின் முகத்தில் உள்ளவைதான் கண்கள், கல்லாதவர்கள் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல, புண்கள் என்று புகழ்கிறார்.

"கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று அதிவீரராமபாண்டியர் அறிவிக்கிறார்.

மேற்கூறிய அறிஞர்களின் அறிவுகளை அலசினால் விரியும் கல்வியின் முக்கியத்துவத்தையும், தேவையையும், அவசியத்தையும், எங்கிருந்தாலும், எப்படியும் முயன்று அதை அடைய வேண்டும் என்பதே, அறிஞர்கள், மேதைகள் எல்லோருடைய கருத்தாகும்.

தமிழ் தாய்மொழி

தமிழ், தமிழ்ப்பெருமக்களின் தாய் மொழியாகும். தாய் மொழி தாய்ப்பாலைப்போல அமுதமாகும். தமிழுக்கு அமிழ்தென்றே பெயர். தமிழ் தமிழ் தமிழ் என்று கூறினால் அமிழ்து அமிழ்து என்றே ஒலிக்கும்.

ஹொங்கொங்கில் தமிழ் கற்க வழி இல்லாதிருந்தது. கடந்த ஆண்டு நம் தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியைப் போதிக்கத் தொடங்கினார்கள். கடந்த ஓராண்டு காலமாக விடாமுயற்சியுடன் தமிழ் வகுப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மிகவும் பாராட்ட வேண்டிய செயல்.

ஒங்கொங்கில் ஓய்வற்ற சூழ்நிலையிலும் தமிழைப்போதிக்க வேண்டும், நம் தமிழ் குழந்தைகள் பிற்காலத்தில் ஓரளவாவது தாய் மொழியைத்தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் போதித்து வருகிறார்கள். மிகவும் பாராட்ட வேண்டும். தமிழ்ப் போதனை முயற்சியைத் தொடங்கி ஓராண்டு நிறைவெய்தியதை அறிந்து மிக்க மகிழ்வதோடு முயற்சித்துத் தொண்டாற்றி வரும் அனைவரையும் மனமார வாழ்த்துக்கிறேன்.

தமிழைப் போதித்தக் கொடுக்க தொஅலை தூரத்தில் இருந்தெல்லாம் வருகிறார்கள். எந்த விதமான பிரதிபலனும் இல்லாமல் போதித்துத் தருகிறார்கள். சிலர் சென்னை - மலேசியா - சிங்கப்பூர் முதலிய ஊர்களிலிருந்து தமிழ் நூற்கள் வாங்கி வந்து மாணவர்களுக்கு அளித்து ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.

எல்லாம் கிடைத்தது சரி. தகுந்த இடம் வேண்டுமே கொடுத்து உதவ தாராளச் சிந்தனை வேண்டுமே ALADIN GOURMET என்ற உணவகத்தின் பரந்த இடத்தைப் போதிய மேஜை நாற்காலிகளுடன் கொடுத்து உதவிய அதன் அதிபர் டாக்டர் ஜவஹர் அலி அவர்களுக்கும் எல்லோருடைய சார்பாக நன்றியும் வாழ்த்தும் கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க அன்புடன்

செ. முஹம்மது யூனுஸ்

தமிழ் வேண்டும்

[தொகு]

ஒங்கொங்கில் நம் இளம் தலைமுறையினருக்கு தமிழை கற்பிக்க வேண்டும், அவற்றை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் "Young Indian Friends Club" தமிழை கற்றுக் கொடுக்கும் வகுப்பை ஆரம்பித்து உள்ளனர்.

இந்த இளைஞர்களை நான் மனதார பாராட்டுகின்றேன். அவர்கள் தன்னார்வங்கொண்டு செயல்படும் இந்த காரியத்தில் இறைவன் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இந்த கல்விப்பணி சிறிது சிறிதாக வளர்ந்து வரும் 15 ஆண்டுகளில் தமிழை ஓர் விருப்பப்பாடமாக கொண்ட 1 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரையில் பயிலக்கூடிய ஒரு பள்ளிக்கூடமாக மாற வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ மாணவியர்கள் எல்லா சிறப்புகளையும் பெற்று நம் தாய் நாட்டிற்கும் நம் தாய் மொழிக்கும் சிறப்பை தர வேண்டும். இந்த காரியத்தை இந்த குழு முயன்றால் முடியும். வாழ்த்துக்கள்.

திரு.நஜிமுதீன்

திரு. மு. இராமனாதன்

[தொகு]

செப்டம்பர் 2004 இல் ஆரவமும் அர்ப்பணிப்பும் மிக்க "இந்திய இளம் நண்பர்கள் குழு" வால் துவங்கப்பட்டது "தமிழ்க் கல்வித் திட்டம்". ஒங்கொங்கின் இடப் பிரச்சினைகளையும் பணி அழுத்தங்களையும் மீறி நடத்தப்படும் தமிழ் வகுப்புகள், வார இறுதிகளின் மதியப் பொழுதுகளை 35 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஓங்கொங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது. இந்தக் கல்வி இவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களுக்கு அப்பால் தமிழ் இலக்கியத்த்ஹிற்கான சாளரங்களையும், தமிழ் பண்பாட்டிற்கான கதவுகளையும் திறந்துவிடுமென்பதை இவர்களின் பெற்றோர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஒங்கொங் இந்தியச் சமூகத்தின் மாணவர்கள், எல்லா மொழி வழிச் சிறுபான்மையினரைப் போல், ஆங்கிலப் பயிற்று மொழி (medium of instruction) மூலமாகவே கற்கிறார்கள். ஆயினும் தத்தமது தாய்மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு எப்படி இருக்கிறது?

ஒங்கொங்கில் சுமார் 35,000 இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் தமிழர்கள் 2,000 பேர் இருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. மேற்கு கவ்லூனின் எல்லிஸ் கடோரிப் பள்ளியின் மாணவர்களில் 38% வீதம் இந்தியர்கள், 41%வீதம் பாகிஸ்தானியர்கள். இந்த அரசுப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது. எஸ் எஸ் குரு கோவிந்த சிங் கல்வி அறக்கட்டளை சீக்கிய மாணவர்களுக்குப் பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர ஒங்கொங்கில் முறையாகக் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி குறித்து வேறு விவரமில்லை. (2004) கடந்த ஆண்டு வரை இந்தப் பட்டியலில் தமிழ்க் கல்வி இல்லாதிருந்தது. ஒங்கொங் தமிழர் வரலாற்றில் முறையான பாடத்திட்டத்தோடு தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகள் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடுமென்பதால் இந்த வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த பணியில் ஒருங்கிணைப்பாளர் டி. உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பண்டிதச் சாயல் சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் காழி அலாவுதீனும் வெங்கட் கிருஷ்ணனும். இந்த் வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னணி என்ன? "மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது", என்கிறார் உபைதுல்லா. ஹொங்கொங் தமிழ்ச் சமூகச் சிறுவர்கள் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். என்கிறார் அஜீஸ்.

வகுப்புகள் துவங்கப்பட்ட முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் சேர்ந்தனர். 5 முதல் 13 வயதிற்கிடையிலான இவர்களின் தமிழ்க் கல்வி, எழுத்துப் பயிற்சிப் புத்தகங்களின் ஜெராக்ஸ் நகல்கள் துவங்கியது. விரைவில் பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டது. அலாவுதீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்தின் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து, மூழ்கிக் கரை சேர்ந்த போது ஒங்கொங் சூழலுக்கு இசைவான ஒரு பாடத்திட்டம் அவர்கள் கையில் இருந்தது. இப்போது சிங்கப்பூர்ப் பாட நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கிற பயிற்சிப் புத்தகங்களில் (exercise books) கோடிட்ட இடங்களை நிரப்புவது,ஓங்கொங் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தனியே எடுத்து எழுதுவதைக் காட்டிலும் எளிதாயிருக்கிறது.

மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். எழுத்துக்கள் மட்டும் முதற் பிரிவுக்கும், சொற்களும் சொற்றொடர்களும் பாடல்களும் கதைகளும் இரண்டாம் பிரிவிற்கும், வாக்கியங்களும் உரைநடையும் மெல்லிய இலக்கணமும் மூன்றாம் பிரிவிற்கும் சொல்லித் தர்ப்படுகிறது. பீர் முகமதுவின் மகள் மாஜிதா ஃபாத்திமா இடைப்பட்ட பிரிவிற்குத் தேர்வு செய்யப்பட்டுருந்தார். "யாவ் மாட் டை கைஃபங்" பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஃபாத்திமாவிற்கு வயதில் சிறிய மாணவர்களோடு படிப்பதில் ஆரம்பத்தில் மனத்தடை இருந்தது. ஆனால் தமிழ்ப் படிப்பதில் ஆர்வமேற்பட்ட பிறகு இந்தப் புகார் மறைந்து விட்டதென்கிறார் பீர் முகமது. "திருநெல்வேலிக்குப் போனா பஸ்லே இருக்கிற போர்டெல்லாம் என்னாலேயே படிக்க முடியும்", என்று ஃபாத்திமா சொல்கிற போது அந்த ஆர்வம் தெரிகிறது. மூன்றாம் பிரிவில் படிக்கும் காதிரி இஸ்மாயிலும் இந்தக் காயல்பட்டினத்தில் இருக்கும் தாத்தா- பாட்டியைத் தனது தமிழ் வாசிப்பால் வியக்க வைக்கக் காத்திருக்கிறார். காதிரி "தோ கோ வான்" இல் உள்ள "போ லிங் க்யுக்" (NPL) மேனிலைப் பள்ளியின் இரண்டாம் படிவ (Form 2) மாணவன்.

சேய்க் இம்தாதிடமும் இந்த ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. மே 29 அன்று ஆண்டு விழாவில் தான் பேசபோவதை, "இந்தியா என் தாய் நாடு. நாம் அனைவரும் இந்தியர்கள்" என்று ஒத்திகை பார்க்கும் போது சேய்க்கின் கண்கள் ஒளிர்கின்றன. இவரின் தாய் ஜெய்னப் தமக்கு மொழி ஆர்வம் உள்ள போதும் தொடர்ச்சியாகப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது நடைமுறைச் சாத்தியமாயில்லை என்கிறார். மாணவன் முகமது அர்ஃபக்கின் தாய் நாலிமா அபுவும் இதை எதிரொலொக்கிறார். மேலும் நாலிமா தமிழகத்திலேயே நகர்ப்புற மாணவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன், அரபி, முதாலானவற்றில் ஒன்றைத் தரிவு செய்து தமிழைத தவிர்ப்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். அவர்கள் "பா பா பிளாக் ஷிப்" படிக்கிற போது ஒங்கொங் சிறுவர்கள், "நிலா நிலா ஓடி வா" படிக்கிறார்கள். வீட்டுப் பாடங்களும், பயிற்சிகளும், தேர்வுகளும் 'தமிழ்' வகுப்பின் பாடத்திட்டத்தில் கவனமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வியாண்டில் நிகழ்ந்த சுற்றுலா, மாறு வேடப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை மாணவர்களுக்கு மட்டுமில்லை, பெற்றோர்களுக்கும் உற்சாகம் நல்கியது என்கிறார் மாணவன் முகமது தல்ஹாவின் தாய் மஹ்ஸூனா.

அக்கறையோடு வகுப்புகள் நடக்கிற செய்தி பரவியதும் அதிகம் பேர் நிர்வாகிகளை அணுகினர். "புதிதாகச் சேருபவர்களை ஏற்கனவே படிந்து வருவோரோடு பொருத்துவதில் உள்ள சிக்கல்களால் ஒரு கட்டத்தில் மாணவர் சேர்க்கையை நிறுத்தினோம்", என்கிறார் வகுப்பறை நிர்வாகத்தைக் கவனிக்கும் எச். எம். அம்ஜத். அப்படி வருத்தத்துடன் அனுமதி முஷ்டாக், நிர்வாகத்தின் சிரமம் தனக்குப் புரிகிறதென்கிறார்; வகுப்புகள் விரிவாக்கப்படவிருக்கும் அடுத்த கல்வியாண்டில் தம் பிள்ளைகள் கண்டிப்பாகத் தமிழ் கற்பார்கள் என்றும் சொல்கிறார்.

"சுங் கிங் மாளிகை"-E ப்ளாக்கின் 9-ஆம் தளத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த இடத்தில் நடைபெறும் இந்திய உணவகம், வகுப்புகளுக்காகச் சனிக்கிழமை மதியம் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருக்கைகளும் எழுதுவதற்கு அட்டைகளும் கொடுக்கப் பட்டன. விரைவிலேயே இருக்கைகளோடு மேசைகளும் வகுப்பறைகளில் இடம் பெற்றன. உணவகத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் அலியைப் போன்ற புரவலர்கள் தமிழுக்கு எல்லாக் காலங்களிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹபிப் முகமது திட்டத்தின் பொருளாளர். நன்கொடைகளையும், நீண்ட ஆலோசனைக்குப் பிற்பாடு வசூலிக்கப்படும் கட்டணத்தையும், செலவினங்களையும் அவர் கவனிக்கிறார். பிரபு சுஜபு மற்றும் முபாரக் வகுப்பறை நிர்வாகத்தில் தோள் கொடுக்கிறார்கள். பெற்றோர் அழைத்து வருகிற மாணவர்களைச் "சுங் கிங் மாளிகை" வாசல் வரை கொண்டு விடுவதும் இவர்கள் பொறுப்பு. "முனிஸன்ஸ்" ஷேக் அப்துல் காதரும் இந்த பணியில் தக்க பலமாகச் செயல்படுகிறார்.

இந்தத் திட்டத்தை ஒங்கொங் இந்திய முஸ்லீம் கழகமும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் ஒருங்கே ஊக்கிவிப்பதை நிர்வாகிகள் அனைவரும் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றனர். தமிழகத்திலிருந்து மனித வள மேம்பாட்டு முகாமொன்றில் பயிற்றுவிக்க ஓங்கொங் வந்திருந்த வி. ராமன் இந்த வகுப்புகளுக்கும் வந்தார். "ஆசிரியர்கள் அலாவுதீனும், வெங்கட்டும் சிறுவர்களை அன்போடு பன்மையில் 'வாங்க போங்க' என்று விளிப்பதைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது" என்றார் அவர். வகுப்பறையில் மாணவர்கள் தமிழ் மட்டும் கற்கவில்லை என்று தெரிகிறது. 'அடுத்த தலைமுறைக்கு நமது மொழியை எடுத்துச் செல்வதன் மூலம் நமது பண்பாட்டையும் இலக்கிய வளங்களையும் எடுத்துச் செல்கிறோம்", என்கிறார் அஜீஸ்.

குறிப்பு: மு. இராமனாதன் அவர்கள் தின்னை, தினமனி, காலச்சுவடு போன்றத் தளங்களில் எழுதிவருகிறார்.

ஆசிரியர் திரு. வெங்கட் அவர்கள்

[தொகு]

அ முதல் ஔ வரை

வகுப்பில் பாடம் நடத்த உதவிய அனைத்து நண்பர்களையும் நினைவு கூர்கிறேன். அவர்கள் பக்கபலம், என்னை மேலும் ஆர்வத்துடன் பாடத்தை நடத்த உதவியது. வாழ்க்கை எனக்குப் பல நல்ல நண்பர்களை தமிழ் வகுப்பின் வாயிலாக அறிமுகப்படுத்தியது.

குழந்தைகளைப் பற்றி எழுத இந்த இடம் போதாது. அவர்கள் காட்டிய ஆர்வமும், வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையும், நேரந் தவறாமையும், வகுப்பு ஒழுங்கும், சொல்லிப் சொல்லிப் பாராட்டப்பட வேண்டியது. "வெங்கட் அங்கிள், அங்கிள் வெங்கட்" என்று மாறி மாறி அவர்கள் கூப்பிட வாஞ்சைக்கு அன்பைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை.

குழந்தைகளிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். "உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு தனியாக எண்ணங்கள் உண்டு" என்று கலீல் ஜிப்ரான் சொன்னதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். "நிலா நிலா ஓடி வா" பாடலை சொல்லித் தரும் போது "நடு வீட்டில் வைத்து வா, நல்ல துதி செய்து வா" என்ற வரிக்கு, "யாருடைய வீட்டில்" என்று கேட்ட சாஹூலுக்குப் பதில் சொல்ல முடியாமல் நான் நின்றது இன்றளவும் மறக்கவில்லை. நான் படித்த காலத்தில் ஏன் அப்படி கேற்க தோன்றவில்லை என்று இப்போது தோன்றுகிறது. குழந்தைகளின் சிந்தனை ஓட்டத்திற்கு அளவுகோலிட முயல்வது தவறு என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.

இன்று அவர்கள், கண்ணில் படும் தமிழ் வார்த்தைகளை எல்லாம் படிக்க முற்படும் போது, விடைத்தாள்களில் தங்கள் பெயர்களைப் பிடிவாதமாகத் தமிழிலேயே எழுத முயற்சிப்பதைக் காணும் போது, ஒரு நல்ல எதிர்காலத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க உதவிய நிறைவு ஏற்படுகிறது.

அதே நேரத்தில், வருங்காலத்தில் மேலும் சிறப்புடன் இந்த பணியை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் பிறக்கிறது.

வெங்கட்

ஆசிரியர்

ஆசிரியர் காழி அலாவுதீன்

[தொகு]

"கற்றல் கற்பித்தல்" என்ற கொள்கை அடிப்படையில், நான் முதலில் தமிழைப் பற்றியும், தமிழ் சொல்லித் தரும் முறைகள் பற்றியும், ஆராயத் தொடங்கினோம். இணையத்தில் தேடத்தேட புதிய சாத்தியங்கள் தென்படத் தொடங்கியது. உலகெங்கும் தமிழ் கற்பிப்பதற்கான முயற்சிகள் நடப்பதைக் கண்ட போது, மேலும் ஆர்வம் பெருகியது.

அடுத்து நெறிப்பட்டது, பாடப் புத்தகங்கள். ஒரு நல்ல பாடத்திட்டம் இல்லாமல் கற்றுத் தருவது சரியில்லை என்பதனால் நானும் வெங்கட்டும் அமர்ந்து, புதிய பாடத்திட்டத்தை வகுத்தோம். இந்தியா விலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் நம் ஒங்கொங் சூழலுக்குப் பொருத்தமான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தமிழ் வகுப்பு மேலும் நெறிப்பட தொடங்கியது. தேர்வுகள் மூலம் குழந்தைகள் படிப்பு நிலையை தொடர்ந்து எங்களால் எடை போட முடிந்தது.

தமிழ் செம்மொழி ஆகி இருக்கும் இந்த வேளையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்தால்தான் தமிழின் அருமை பெருமைகளைக் காப்பாற்ற முடியும்.

தமிழ் வளர உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுங்கள். நன்றி

காழி அலாவுதீன்

ஆசிரியர்

பெற்றோர்களின் பார்வையில்

[தொகு]
  • 1. தாய்மொழி தமிழை வளர்க்க உதவி செய்யும் தமிழனுக்கு நன்றி. தாய்மொழியாகிய தமிழை இதுவரை தெரியாமல் அறியாமல் முயற்சி செய்து முயன்று படிக்கும் மாணவர்களுக்கு, இன்னும் அதிகம் வளர இறைவன் உதவி புரிவானாக! மேலும் நாடுகடந்து வாழ்ந்து வரும் நம்மவர் மக்களுக்கு பரீட்சை, ஓவியம் வரைதல், சுற்றுலா, போன்ற இன்ப நிகழ்ச்சியை தந்து, மற்ற பலதமிழ் மக்களை கலந்து சந்தோசத்தை பகிர்ந்துக் கொண்டது ரொம்ப மனநிறைவு தந்தது. இது போல மென்ன்மேலும் பற்பல கலை நிகழ்ச்சி நடக்குவும், இந்த தமிழ் வகுப்பு சிறப்புடன் நடக்க நாம் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக!
  • 2.தாய் போல் காக்கப்படவேண்டியது தாய் நாடும், தாய் மொழியும், இந்தத்தமிழ் மொழியைக் கற்க ஹாங்காங் நாட்டில் எங்களுக்கு ஒரு வகுப்பு கிடைத்தது பெரும் புதையல். அந்தப்புதையல் கிடைக்கப் பாடுபடும் சகோதரர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறோம்.
  • 3.ஹாங்காங்கில் வாழும் இளம் தளிர்களுக்கு தித்திக்கும் தேன் மொழியாம் தெவிட்டாத தமிழ் மொழியை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் YIFC யின் தமிழ் கல்வி சேவை என்றென்றும் சிறந்தோங்க இறைவன் இறஞ்சுகிறோம்.
  • 4.எனது மகன் கடந்த எட்டு மாத காலமாக தமிழ் பயின்று வந்தான். இப்பொழுது அவன் தமிழ் நல்ல முறையில் எழுத, படிக்க, தெரிந்துக்கொண்டான். இதில் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகவும் சந்தோஷம். இந்த அளவிற்கு எனது மகனை படிக்க வைத்த பெருமை "YIFC" இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங், உள்ளவர்களைச் சேரும். அவர்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • 5.கடல் கடந்து வாழும் இளம் சிறார்களுக்கு தாய் மொழியாம் தமிழ் மொழியை செவ்வனே கற்றுத்தரும் YIFC யின் தமிழ் கல்வி பணி சிறந்தோங்கி வளர வல்லோனை வேண்டுகிறோம்.
  • 6.சமூகத்தின் தேவையறிந்து நம் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நல்லதொரு சேவையை வழங்கிய நற்சிந்தனையாளர்களுக்கு எனது பாராட்டுகள். இது போன்ற ஆக்கப்பணிகள் மென்மேலும் தொடர இந்திய இளைஞர் நண்பர்கள் குழுவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்!
  • 7.தாய்மொழி என்பது நமது பண்பாட்டு அடையாளம். ஹாங்காங்கில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு, அவர்களது மொழியை கற்பிக்கும் 'இளம் இந்திய நண்பர்கள் குழு' விற்கும், ஆசிரியர்களுக்கும் எங்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.