உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி என்னும் பன்முக மேதை

விக்கிமூலம் இலிருந்து

கடந்த ஒரு ஆண்டு காலமாக பாரதி நூற்றாண்டு நினைவு விழாக்கள் நாடு முழுதும் நடந்து வருகின்றன. தமிழ் நாட்டில் அந்த கொண்டாட்டம் கிளப்பியுள்ள கோலாகலம் ஆரவாரம் நிரம்பியது படாடோபமானது. அத்தோடு அது வண்டி வண்டியாக புத்தகங்களையும் பிரசுரித்து சந்தையில் கொண்டு வந்து குப்பையாகக் கொட்டியுள்ளது.


பாரதி நூற்றாண்டு நினைவு ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் வருவதற்கு முன்னரே பத்திருபது ஆண்டுகளாக பாரதி ஒரு வழிபாட்டுக்குரியவராகிவிட்டதன் காரணத்தால், பாரதியைத் தெரிந்தவர் தெரியாதவர், கூட இருந்து பழகியவர் பழகாதவர், பாரதியின் கவிதைகளை படித்து ரசிப்பவர், படித்தே அறியாதவர் எல்லோரும் பாரதியுடன் தாம் கழித்த நாட்களைப் பற்றியும், பாரதியின் கவிதை பற்றிய தம் புகழ்ச்சியுரைகளையும் எழுதும் நிர்ப்பந்தத்திற்கு தம்மை உட்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தக் குவியலில் பெரும்பாலானவரின் வேஷதாரித்தனத்தையும், கவிதை உணர்வு வறட்சியையும், அறியாமையையும்தான் நாம் காணவேண்டியிருக்கிறது.


இந்தக் கூட்டம் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதனால், தாமும் பாரதி ரசிகர்களாகத் தம்மையும் உலகுக்குக் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்டவர்கள் கூட்டம். ஆனால் அவசர அவசரமாக பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி புத்தகம் எழுதியவர்கள் வியாபார நோக்கோடு பாரதி பெயரைப் பயன் படுத்திக்கொண்டவர்கள்.


பாரதியின் மேதமை பன்முக விகாசம் கொண்டது. அந்த மேதமையின் பல பரிமாணங்கள் இன்னும் ஆராயப்படவிருக்கின்றன. எனக்குத் தெரிந்து ரசிய புரட்சியை வரவேற்ற, பாராட்டி கவிதை பாடிய கவிஞர் இந்தியாவின் எந்த மொழியிலும் பாரதிதான். இதுவே மிகச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் என்பதோடு, இதிலும் இன்னும் சிறப்பாகப் பேசவேண்டியது அந்தப் புரட்சியின் விளைவாக பின்னர் ஒரு அரசின் கொள்கைச் செயல்பாடாகவே நாடு முழுதும் பரவிய வன்முறையை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் குரலும் பாரதியினதுதான். அவன் அக்குரல் எழுப்ப எதற்காகவும் காத்திருக்கவில்லை. லெனின் ரசிய அரசுத் தலைமையில் இருந்த போதே அவன் எதிர்ப்புக் குரல் எழுந்தது. பாரதி இறந்தது 1921-ல்.


இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் அந்த வன்முறை தொடர்ந்து திட்டமிட்ட செயல்பாடாக முப்பதுக்களின் கடைசியில் மாஸ்கோ வழக்கு விசாரணகள் ஐரோப்பிய அறிவுலகத் தலைவர்கள் கண்களைத் திறந்தபின்தான் அவர்கள் அவ்வன்முறையை எதிர்க்கத் தொடங்கினார்கள். திரும்பவும் குருட்டு மத நம்பிக்கைகளுக்கும் சாதிவேற்றுமைகளுக்கும், பிராமண மேலாதிக்கத்திற்கும் எதிராக எழும்பிய முதல் குரலும் பாரதியினதுதான்.


பாரதியும் ஒரு பிராமண குலத்தில் பிறந்தவன்தான். இவற்றிற்கெல்லாம் எதிப்புக் குரல் எழுப்பிய பாரதி இறந்து பல வருடங்களுக்குப் பின்தான் தமிழ் நாட்டில் பிராமண எதிர்ப்பு இயக்கத்தைத் தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிராமணருக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கியது. ஈ.வே.ராவுக்கும் சரி அவரைப் பின்பற்றிய அவரது தொண்டர்களுக்கும் சரி, தாழ்த்தப்பட்டு தீண்டத் தகாதவர்களாக இருந்தவர்களின் பரிதாப நிலை பற்றி கவலைப்பட்டது கிடையாது. இருப்பினும், ஈ.வே.ரா வும் சரி அவரது சீடர்களும் சரி, பாரதியை ஒரு கவிஞனாக அங்கீகரித்தது கிடையாது. ஏனெனில் பாரதி பிராமணனாகப் பிறந்தவன். ஈ.வே.ராவுக்கும் பல வருடங்கள் முன்னதாக பாரதி சமூக சமத்துவம், சீர்திருத்தம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டதையும் அங்கீகரித்தது கிடையாது. ஏனெனில், அது அசௌகரியமான உண்மை.


நன்றியுணர்வு சிலருக்கு இருப்பதில்லை. அதுபோல, தான் அறிந்த உண்மைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதும் சிலருக்கு சுலபமாக வருவதில்லை. பெண்கள் கல்வி, பெண்கள் சம உரிமை பற்றி தீவிரமாகப் பேசியவன் எழுதியவன், அதில் நம்பிக்கையும் கொண்டவன் பாரதி. இருப்பினும் அவன் தன்னுடைய மனைவி தன் அதிகாரத்திற்குப் பணிய வைப்பதில், அவர் மீது தன் நம்பிக்கைகளைத் திணிப்பதில் கடுமையாக இருந்தவன் பாரதி. தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி தன் மனைவி கஸ்தூர்பா மீது தன் சமத்துவ கொள்கைகளைத் திணித்து வற்புறுத்தவில்லையா? அது போல. ஹிந்து சம்பிரதாயத்தில் பிறந்து வளர்ந்த படிப்பற்ற சாதுவான அந்த இளம் மனைவிக்கு இம்மாதிரியான சமத்துவ சிந்தனைகள் மகாப்பாவ காரியமாகப் பட்டிருக்கும்.


பாரதியின் வேர்கள் இந்த மண்ணில் ஆழமாக வேரூன்றியவை. ஜீவனுள்ள, காலத்துக்கிசைய வாழும் அத்தனையிலும் ஆழமாக வேர் கொண்டவை. அதே சமயம் பாரதி புதிய சிந்தனைகளையும் வரவேற்றவன். எழும் புதிய சிந்தனைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டவன். அத்தோடு 1800 வருடங்களாக ஜீவித்து வரும் தமிழ் கவிதையின் கடைக் கொழுந்து அவன். அவனுக்கு முந்திய அந்த நீண்ட மரபு தொடரற்று இடைவெளி விழுந்திருந்தது.


தமிழ் இலக்கியத்தின் நவீன உரைநடைக்கும் கவிதைக்கும் தந்தை பாரதிதான். அவன் தான் கையாண்ட அத்தனை விஷயங்களையும் சொல்லதக்க சாதனமாக அவற்றை ஆக்கினான். பாரதியின் தன் கவித்வ ஆளுமையை அவனுக்குச் சமீபப் பழமையான இரண்டு இழைகளிலிருந்து உருவாக்கிக் கொண்டான். ஒரு இழை ராமலிங்க ஸ்வாமிகளிடமிருந்து வந்தது. ஆயிரம் வருஷங்களுக்கும் மேலாக, சங்க பக்தி காலத்திலிருந்து கிட்டத்தட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த பின்னர் விடுபட்டுப் போன கவிதை மரபுக்குத் திரும்ப உயிர் கொடுத்தவர் வள்ளலார். அன்று கவிதை மக்களின் மொழியில் சமூக விழிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. ராமலிங்க ஸ்வாமிகள் தீவிர மதவாதத்தை எதிர்த்தவர். சமுதாயத்தில் நிலவிய வேற்றுமைகளுக்கு எதிராக மனித சகோதரத்துவத்தை போதித்தார். மற்றொரு இழை கோபால கிருஷ்ண பாரதியிடமிருந்து வருவது. அவர் தனது கதாகாலட்சேபத்திற்கு இயற்றிய இசைப்பாடல்கள் பக்தியையும் தெய்வத்தின் முன் மனிதர் அனைவரும் ஒன்று என்ற சிந்தனையையும் பரப்பியவை. கோபால கிருஷ்ண பாரதி அவர் காலத்தில் பல விஷயங்களில் புரட்சிகர மனிதராக இருந்தார்.


அவருடைய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்ற இசை நாடகம் ஹிந்துஸ்தானி, கர்னாடக இசைகளிலிருந்து மட்டுமல்லாமல், கிராமிய மெட்டுக்களையும் கொண்ட பாட்டுக்களைக் கொண்டது. அவருடைய மொழி இலக்கண சுத்தமற்றது. பாமர மக்கள் பேசும் கொச்சையில் அமைந்தது. இந்த இருவரும் பல நூற்றாண்டுகளாக ஜீவனற்றுக் கிடந்த பழம் மரபுக்கு திரும்ப உயிர் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நிலவிய மதவெறிக்கும் சமூக வேறுபாடுகளுக்கும் பண்டிதத்திற்கும் எதிராகக் கிளம்பிய புரட்சிக்காரர்கள்.


பாரதி தன்னில் இந்த இரண்டு இழைகளையும் கொண்டிருந்தான். எனவே அவன் கவிதை, சாதாரண மக்களின் கவிதை, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கவிதை. இசையாகப் பாடவல்ல கவிதை. அவன் கர்னாடக, ஹிந்துஸ்தானி இசை மரபுகளிலிருந்து மட்டுமல்லாமல், கிராமிய மெட்டுக்களையும், தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டான். அவனுடைய காலத்தில் கவிதை இசையிலிருந்து பிரிந்து, ஜீவனற்ற செய்யுளாகயிருந்தது. இருப்பினும், பாரதி தான் தமிழ் இலக்கியத்தின் நவீன யுகத்தை, தன் கவிதை மூலமும் உரைநடை மூலமும் ஆரம்பித்து வைத்தவன். பழம் தமிழ்ச் செய்யுள் மரபை உடைத்துக்கொண்டு வெளிவந்தவர்கள் பாரதியைத் தான் தம் உத்வேகமாகச் சொல்வார்கள்.


பாரதியின் ஆளுமை சிக்கலும் கூட்டுத் தொகுப்புமான ஒன்று. ஆனாலும் நம்மீது கொட்டப் பட்டுள்ள வண்டிச் சுமைக் குப்பை கூளத்திலிருந்து தானிய மணிகளைச் சிரமப்பட்டுப் பொறுக்கிய பின்னும் நமக்கு பாரதி என்னும் பன்முகத் தொகுப்பிலிருந்து அவரவர்க்குப் பிடித்த தேர்ந்தெடுத்த சிலவும் பின்னப்பட்டதுமே கிடைக்கும். பின் பாரதி என்ற உன்னத எழுச்சி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சிகளின் நாடகம். வறுமைப்பட்ட ஜீவனம், என்று கைதாகலாம் என்ற பயத்தின் இடைவிடா துறத்தல், தேசீய இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு, தட்டிக்கழிக்க முடியாத குடும்பப் பொறுப்பும் பாசமும், எல்லாம் கடைசியில் கஞ்சாவின் பிடியில் கொண்டு தள்ளுகிறது. பாரதி இறந்த போது அவனுக்கு வயது 39தான்.


மலையாகக் குவிக்கப்பட்டுள்ள கூளத்திலிருந்து, ஏன் அதிலிருந்து பொறுக்கிக் கிடைத்த தானிய மணிகளிலும் கூட ஒரு வைரக் கல் கிடைக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வைரக் கல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதாரண குடும்ப ஸ்த்ரீயிடமிருந்து. வீட்டில் கிடைத்த படிப்புதான் அவரது. இலக்கியக் கனவுகள் ஏதும் காணாதவர். தனக்கு இயல்பாக வந்த பகட்டற்ற சாதாரண தமிழில் பாரதியுடனான தன் நினைவுகளை கிட்டத்தட்ட நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.


அதுவும் ஒரு புஸ்தக வெளியீட்டாளர் அவர் பாரதி பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் பாரதியோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் ஒரு சிறுமியாக பாரதியுடன் பழகிய விவரம் அறிந்து அவரை அந்நினைவுகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டதால் எழுதியது. யதுகிரி அம்மாள் அதுதான் அவர் பெயர், இதை எழுதியது 1939-ல், பாரதி இறந்து 18 வருஷங்களுக்குப் பிறகு. 1912- லிருந்து 1919 வரை அவர் பாரதி பற்றி அவர் நினைவில் மிஞ்சி இருந்தவற்றை எழுதியிருக்கிறார். அவர் பாரதியின் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழி. பாரதியின் வீட்டில் அவரும் ஒரு செல்லக் குழந்தை. அவருடைய தந்தையார் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.வே.சு. அய்யர், பின் அவர்களுடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்த அரவிந்தர், அப்போது தான் அரவிந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருந்தார், இவர்கள் எல்லோரும் பாரதியின் சகாக்கள். அப்போது நடந்தவற்றை சிறுமியான யதுகிரி உடனிருந்து பார்த்தவர்.


வேடிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளை எழுதப் பணிக்கப்பட்டபோது அவருக்கு வயது 40. அந்த சமயத்தில்தான் பாரதி திரும்பக் கண்டெடுக்கப்பட்டு, புதிதாக மதம் மாறியவனின் பக்தி வெறிபோல பாரதியைப் போற்றிப் புகழ்வதற்கும் அந்த சந்தடி சாக்கில் எழுத்தாளர்களும் தாங்கள் பாரதியை மீட்டெடுத்த தீர்க்கதரிசிகளாக தம் சுயசித்திரத்தைத் தீட்டிக்கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை இதில் கண்டார்கள். அந்த சமயத்தின் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உற்சாக வெள்ளத்திற்கும் பாரதியைப் பற்றிய அவர்கள் புகழாரமயமான மதிப்பீடுகள் வழியமைத்தனவே அல்லாது 1905 லிருந்து 1921 வரை அவர்கள் பாரதியை அறிந்தவற்றின் உண்மைப் பதிவாக இருக்கவில்லை. ஒரே ஒரு விதி விலக்கு யதுகிரி அம்மாள் தன் இயல்பில் வரைந்திருந்த பாரதி பற்றிய நினைவுகள். அவருடைய நினைவுகளில் பதிந்திருந்தவை, தன் குழந்தைப் பருவத்திலிருந்து பதினாலோ பதினைந்தோ வயது வரையில் அவர் இதயத்தில் பாரதி பதித்துச் சென்றவைதான். அதை மீறி இப்போதைய புத்தி பூர்வ அலசல்களோ சமாதானங்களோ, மிகையான சித்தரிப்போ இல்லாதவை. எனவே பாரதியின் செயல்களில் பல குழந்தை யதுகிரிக்கு புரிபடாது திகைப்பூட்டியவை. புரியாது கேட்கும் குழந்தைக்கு பதில் சொல்லும் அக்கறை பெரியவர்களுக்கும் இருப்பதில்லை. இந்த மாதிரி அசட்டுக் கேள்விகளெல்லாம் கேட்காதே என்று பெரியவர்கள் கண்டித்தது உண்டு. அவையெல்லாம் அந்த அசட்டுத்தனங்களாகவே இங்கும் பதிவு பெறுகின்றன.


பாரதியை இங்கு அவரது எல்லா உணர்ச்சி நிலைகளிலும், அதன் எதிர் எதிர் கோணங்களிலும் பார்க்கிறோம். ஒரு சமயம் அன்பே உருவான கணவனும், தந்தையுமாக. அதன் ஒரு கோடியில், தன் குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனவியுடன் காதல் மொழி பேசி கொஞ்சும் பாரதி. இதன் இன்னொரு கோடியில் தன் சொல்படி கேட்டே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சர்வாதிகாரப் போக்கு. தன் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வளவு தரம் சொன்னாலும் புரிந்து கொள்ளாத மௌனம் சாதித்து தன் வழியே செயல்படும் மனைவியின் பழங்காலச் சிந்தனைகள். கடற்கரையில் மீனவர்கள் பாடும் பாட்டில் லயித்துப் போகும் பாரதி அவர்களிடம் சென்று அவர்களைத் திரும்பப் பாடச்சொல்லி அதை எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்பிய பாரதி, தன் மனைவி குழந்தைகளிடம் சொல்வார்:" பார் இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள் தான் கொச்சையாக இருக்கின்றன"


அப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தார். அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுகின்றன. யதுகிரிக்கு பாரதியின் இன்னொரு பாட்டு கிடைத்து விட்டது. இன்னொரு மெட்டும் கிடைத்து விட்டது. உடனே தன் நோட்டில் பதிவு செய்துகொள்கிறாள் சிறுமி யதுகிரி. தன் தந்தையைப் போல தன்னிடம் பாசத்தைப் பொழியும் பெரியவரிடமிருந்து இம்மாதிரி பரிசுகள் தினம் கிடைக்கும். இந்த யுகத்தின் மகா கவிஞரிடமிருந்து கிடைத்த ஒரு அமர கவிதையாக இல்லை. அந்த பிரக்ஞை யதுகிரிக்கு அப்போது இல்லை. பின்னர் தான் அது தெரியவரும். இப்போதைக்கு தான் சேகரித்துப் பாதுகாக்கும் பாடல் புத்தகத்தில் சேர்க்க இன்னும் ஒன்று. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் போது, அல்லது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களின் போது யதுகிரியும் அவள் தோழிகளும் பாடுவார்கள். அதில் பாரதியும் சேர்ந்து கொள்வார். யதுகிரியின் சின்ன புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட மிகையான ஒரு சொல்லோ பொய்யான பாவனைகளோ கிடையாது.


இன்னொரு சமயம் வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றிப் பாடத் தொடங்குகிறார். குழந்தைகள் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். வேலைக்காரிகள் பாடிக்கொண்டு நெல் குத்திக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று நெல் குத்துவதை நிறுத்தி பாரதி அவர்கள் பாடுவதைக் கேலி செய்து பாடுவதாகச் சொல்லி பாரதியுடன் சண்டை பிடிக்கத் தொடங்குகின்றனர். தான் அவர்களைக் கேலி செய்யவில்லையென்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில் பாரதியின் மனைவி செல்லம்மாள் வந்து அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. அந்த தின நிகழ்ச்சியும் யதுகிரியின் நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. யதுகிரி மனப்பாடம் செய்துகொள்ள இன்னொரு பாட்டு கிடைத்துவிட்டது. இம்மாதிரி பாரதி அவ்வப்போதைய தூண்டலில் உடன் இயற்றும் பாடல்கள் யதுகிரியின் பிஞ்சு மனதில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. பல சமயங்களில் அவர் தன் நினைவில் பதிந்த பாடங்களே சரியானவை, ஏனெனில் அவை பாரதியே பாட தான் நேரில் கேட்ட பாடங்கள், பின்னர் அச்சில் வந்தவை பல இடங்களில் தவறாகப் பதிவானவை, என்று மற்ற பதிப்புகளில் உள்ள பாடபேதங்களைச் சுட்டிக்காட்டமுடிந்திருக்கிறது.


இன்னம் சில சந்தர்ப்பங்களில், இது காறும் வெளிவந்துள்ள பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறத் தவறியுள்ள பாரதி பாடல்கள் பலவற்றை யதுகிரி தன் நினைவிலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது. யதுகிரி மிக ஆசையோடு கவனமாக பாதுகாத்து வந்த அந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் புதுச் சேரியில் அடித்த புயலில் நாசமடைத்து போயின. அப்புயலில் புதுச்சேரி தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீர் வற்றியதும், தமிழ் மண்ணின் இந்த நூற்றாண்டின் மகா கவி குடிசை இழந்த அந்த ஏழை ஜனங்களிடையே, அவர்கள் தென்னை மட்டைகளைக் கொண்டு திரும்பவும் குடிசை எழுப்புகிறவர்களோடு அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு குடிசைக் கிழவி சொல்ல அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தார்.


பாரதி பாண்டிச்சேரி வாழ்க்கை போதும் போதும் என்றாகிவிடுகிறது. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து தன்னைத் தேடி வந்து துன்புறுத்தும் போலீசுக்குப் பயந்தே காலம் கழிகிறது. ஒருவருக்கும் தெரியாமல் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து தலைமறைவாகிறார். போலீசார் கையில் அகப்பட்டால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார்களே என்று செல்லம்மாள் பயப்படுகிறார். குழந்தைகளும் மற்ற பெரியவர்களும் செல்லம்மாளுக்கு சமாதானம் சொல்கிறார்கள். பயப்பட வேண்டாம், பாரதி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக்கொள்வார் என்று. ஆனால் செல்லம்மாளுக்கு மனம் சமாதானம் அடைவதில்லை. "யார் கண்டார்கள். அவர் எதையாவது பார்த்து, திடீரென்று உற்சாகத்தில் உரக்க பாட ஆரம்பித்து விட்டால்? அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா? அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்தது தானே?" என்று கேட்கிறார். "அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள வேண்டுமே செய்வாரா? என்றும் கேட்கிறார். சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். செல்லம்மாள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்தது தான். செல்லம்மாளை இப்படியெல்லாம் சொல்லி பொய் சமாதானம் செய்து வைக்க முடியாது. இம்மாதிரியான சாதாரண சம்பவங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் நாம் பாரதியின் கவித்வ ஆளுமையையும் மேதமையையும் தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரி மாணிக்கச் சிதறல்களை ஒரு சிறுமியின் நினைவுகளிலிருந்துதான் பெற முடிகிறது. மிகப் படித்த அறிவாளிகள் பண்டிதர்கள் மலையாகக் குவித்துள்ள பாரதியின் கவித்வ விசாரணைகளில் மதிப்பிட்டு வார்த்தைப் பெருக்கில் காணமுடியாது.


பாரதி நினைவுகள் முடிவுறும் கடைசி வருடங்களில் யதுகிரி நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு பின் படுக்கையை விட்டு எழத் தொடங்கியதும், உடல் நிலை முற்றிலும் ஆரோக்கியமடைய, சூரியன் உதிக்கும் முன் காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்தால் நல்லது என்று டாக்டர்கள் யதுகிரிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அதன் படி யதுகிரி தன் தந்தையாரோடு காலை நேரத்தில் நடந்து செல்வார். அப்போது ஒரு நாள் தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது. அது கடற்கரையின் திசையிலிருந்து வந்தது. காலை நேர ராகமான பூபாளம் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டு வந்த திசையில் கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள். கிட்ட நெருங்க நெருங்க குரல் பரிச்சயமான குரலாக, கிட்டத் தட்ட பாரதியின் குரல் போலப் படுகிறது. கிட்ட நெருங்கினால் பாரதி ஒரு கட்டுமரத்தின் அருகே கிழக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை அகல விரித்து பலமாக ஆட்டிக்கொண்டும் சூரிய உதயத்தை எதிர் நோக்கிப் பாடிக்கொண்டிருக்கிறார்.


யதுகிரியின் தந்தை அங்கேயே சற்று தூரத்தில் நிற்கச் சொல்லி பாரதியின் அருகில் சென்று அவரிடம் என்னமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியை அவர் கோபத்தோடு ஏதோ கண்டித்துப் பேசுவது போலத் தோன்றுகிறது. பின் அவர்கள் எல்லோரும் பாரதியின் வீடு நோக்கி நடக்கிறார்கள். வழி நெடுக யதுகிரியின் தந்தை பாரதியை ஆங்கிலத்தில் கடுமையாகக் கண்டித்துக் கொண்டு வருகிறார். பாரதியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர் மௌனமாகவே கேட்டுக்கொண்டு வருகிறார். எதுவும் பேசவில்லை. அப்படி பாரதி இருக்கவே மாட்டார். அது அவர் குணமல்ல. செல்லம்மாள் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு காணாமற் போன பாரதியின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். பாரதி எதுவும் பேசாமல் விரைவாக விட்டிற்குள் நுழைகிறார். " பாரதி நேற்று இரவிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று செல்லம்மாள் சொன்னாள். ஆனால் செல்லம்மாள் பாரதியிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இரண்டு பேரும் மௌனமாக இருக்கிறார்களே ஏன்? " என்று யதுகிரி தன் தந்தையாரிடம் கேட்க, அவர் யதுகிரிக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. யதுகிரி இன்னும் சின்னக் குழந்தை. கள்ளங்கபடற்றவள். அவளிடம் இப்போது பாரதியின் தவறான நடத்தைகளையும், கஞ்சாப் பழக்கம் கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்லக்கூடாது. பாரதியின் குடும்பம் மிக கஷ்டத்தில் இருந்து வருகிறது. யதுகிரிக்கு கல்யாணம் நடந்து மைசூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்குச் செல்கிறார். வெகு சீக்கிரம் பாரதியின் மரணத்தைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைக்கும்.


இந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மா மனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது.


இந்த நினைவுகளை எழுதித்தரும்படி கேட்க யதுகிரி இதை எழுதியது 1939-ல். இந்த 100 பக்க சின்ன புத்தகம் வெளிவருவதற்கு அதன் பின் 15 ண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. கடைசியில் இது வெளி வந்தபோது, யதுகிரி உயிருடன் இல்லை. இதுதான் ஒரு மகாகவிக்கும், ஒரு க்ளாசிக்கிற்கும் தமிழ்நாட்டில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும். இதுதான் நம் தாய்த் திருநாடு, தமிழ் நாடு.

குறிப்புக்கள்

[தொகு]
  • ஆங்கிலத்தில் Subramanya Bharati - a multi faceted genius - National Herald, New Delhi, Sunday, 11.9.1988