மொழியின் எல்லைகளைக் கடந்து - திலீப் குமார்

விக்கிமூலம் இலிருந்து


இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரிய வந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலீப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத் தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்றுதொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்...) அப்பெயர்கள், காதா சப்த சதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன் அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ? ஆனால் இந்த இழையைப் பற்றிக் கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .


நிகழ்காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்களுக்கு தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள் என்ற போதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்றுதான். தமிழ் மொழி பேசுகிறவர்களான போதிலும், டி.பி. கைலாசமும், மஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்நாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலையாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு. கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப் குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.


திலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது. முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத்தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில்தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும்? அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.


முற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ் கபூர் 'ஆவாரா'வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். னால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம்தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மைதான். ஆனால், திலீப் குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய தர பள்ளிக் கல்வி வரைதான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகிவிட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப சாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தைதான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யதேச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்நாக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள்! தமிழ் வெகுஜன கலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை.


திலீப் குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராகவேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத்தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவுதான் . அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில்தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப் பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி - மத்தியதர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் - எழுதுகிறார். சரி, ஆனால், அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவே தான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுத்தாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.


'மூங்கில் குருத்து' என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத்தலைப்புக் கதை ஓர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனிமேல்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்ததுதான் மிச்சமே ஒழிய ஒரு பைசா கூட வசூல் ஆகவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில் குருத்து வருஷத்தில் ஒரு நாள் தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்றுதான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும். இன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் கியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. கையால் அடிக்கடி தன் பணத் தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமான கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம். திலீப் குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம் என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக் கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறைபாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப்போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இடவேண்டாம், அதை வைத்துக் கொண்டு தன் பிழைப்பை நடத்த வேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதை பண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடுதான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம் ஆகி பிரிய தம்பதிகளாகவும் ஆகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.

திலீப் குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.

குறிப்புகள்[தொகு]

ஆங்கிலம்: 'Crossing the Language Barriers'- Patriot, New Delhi, ஆகஸ்ட், 13, 1989