பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

45

 திருமாறன் வண்டி என்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டாள்.

அந்த உண்மையை அவள் அறிய முடிந்ததை அன்னம் அறிவித்தாள். அதை முதலிலேயே பெரியவளுக்கு அவள் அறிவித்திருந்த போதிலும், 'நான் தான் அதை அப்பொழுதே சொல்லிவிட்டேனே!’ என்று சிடு சிடுக்கும் உரிமை அவளுக்குக் கிடையாதே!

'அந்த வண்டி எப்பொழுது வந்திருக்கும்? வண்டி வந்ததோ நின்றதோ நம் காதில் விழவே இல்லையே?' என ஐயுற்றாள் தலைவி.

'நாம் ஆந்தையுடன் போராடிக்கொண்டிருக்கையில் வண்டி வந்திருக்கலாம்' என்று அன்னம் மொழிந்தாள்.

'அவ்வாறானால் ஆந்தை அவரைக் கொல்லவில்லை என்கிறாய்?'

'யாரும் யாரையும் கொன்றதாக நான் சொல்லவில்லையே?’ என்று பதற்றமாகக் குறிப்பிட்டாள் அன்னம்.

'நீ சொன்னதாக நான் சொன்னேனா? ஆந்தை அவரைக் கொன்றுவிட்டு இங்கு வந்திருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு...'

'கீழே பதுங்கி நின்றவனோ, அல்லது வேறு எவரோ அவரைக் கொன்றிருக்கலாம், திருமாறன் இரவில் இங்கே வந்திருந்தால்...' என்று அன்னக்கிளி இழுத்தாள்.

'ஏன் அவர் வந்திருக்கமாட்டார்? பின் அவர் வண்டி ஏன் இங்கு வந்து நின்றது?’ என அமுதம் படபடத்தாள்.