பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அன்னக்கிளி


'பெரிய குற்றமோ, சீறிய குற்றமோ - அதை நான் அல்லவா முடிவுகட்ட வேண்டும்?' என்று மொழிந்தாள் அமுதம்.

அழுது கெஞ்சி நேரம் போக்கிய கிழவி, உண்மையை சொல்லாமல் தீராது என்ற நெருக்கடி எழுந்ததும், மனம் இல்லாமலே ஒப்புக்கொண்டாள்.

நான் முடியவே முடியாது என்று அடம் பிடித்தேன். இப்படிச் செய்யக்கூடாது, அது தப்பு என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். பாவிமகன் கேட்டானா?...'

'கதை-அளக்காமல், ஒப்பாரி வைக்காமல், உள்ளதைச் சீக்கிரம் சொல்லு?" என்று அமுதவல்லி அடிக்கடி கட்டளையிடவேண்டியது அவசியமாயிற்று.

கிழவியின் மகன்தான் தோப்பில் பதுங்கியிருந்தான். அவனுக்கு வேளை தவறாது உணவு எடுத்துச் சென்று, மரத்தடியில் வைத்துவிட்டுத் திரும்புவதைக் கிழவி வழக்கமாகக் கொண்டாள். சில நாட்களாகத்தான் இது நடைபெறுகிறது - கிழவியின் பேச்சிலிருந்து அமுதவல்லியும் மற்றவர்களும் புரிந்துகொள்ள முடிந்தது இது.

'அவன் ஏன் இப்படித் திருட்டுத்தனம் பயிலவேண்டும்?' என்று தலைவி கேட்டாள்.

கிழவி வாய் திறவாது நிற்கவும் அவளைக் காவலாட்களிடம் ஒப்படைத்து, கழுமரத்தில் கட்டிவைத்துப் புளியமிலாறுகொண்டு அறை கொடுக்கும்படி கட்டளையிடப் போவதாகத் தலைவி பயமுறுத்தினாள். பொன்னம்மாள் உடனே அவள் காலில் விழுந்து ஊளையிடுவதுபோல் அழுகைக் குரல் எழுப்பினாள்.