பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

103


வெலவெலத்து நிற்கும் சிறு பெண்போல, அன்னக்கிளி கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள். அவளது அழகிய விழிகள் நீர்க்குளம் ஆயின.

'நீலிக்குக் கண்ணீர் நிமையிலே என்பது சரியாகத் தான் இருக்கிறது. முத்து மாலையை என்னிடம் கொடுத்துவிடு அன்னம். உனக்கு வேண்டுமானால் வேறொரு முத்தாரம் தருகிறேன்' என்றாள் அமுதவல்லி.

'என்னிடம் முத்துமாலை இருந்தால் அல்லவா அதை நான் தரமுடியும்? நான் மாலையைப் பார்த்ததும் உங்களிடம் அது பற்றிக் கேள்வி கேட்டதும் உண்மை. உங்கள் பின்னாலேயே நானும் வந்து விட்டேன். மாலையைப் பற்றி நான் எதுவும் அறியேன்' என்று உருக்கமான குரலில் அன்னம் கூறினாள்.

அதை அமைதியாகச் செவி மடுக்கச் சித்தம் கொள்ளாத தலைவி சீறிப்பாய்ந்தாள். 'என்னைப் பொய்சொல்லி என்று பழிக்கிறாய் இல்லையாடி? நீ எடுக்கவில்லை என்றால் வேறு யார் அதை எடுத்திருப்பார்கள்? இந்த அறைக்குள் நுழைவதற்கு வேறு எவருக்குத் துணிச்சல் உண்டு இந்த வீட்டிலே?'

'நான் எடுக்கவில்லை அம்மா...'

'பின்னே அது மாயமாக மறைந்தா போய்விட்டது? அல்லது சிறகு முளைத்துப் பறந்து விட்டதோ?'

'எனக்குத் தெரியாதம்மா!'

அமுதவல்லியின் ஆத்திரம் அவளது அறிவுக்குத் திரையிட்டது. அவள் தனது பெருந் தன்மையைத் துறந்-