பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

சமூகத்தின் முன் நின்று பேசவேண்டும் என்பதற்காகவே இது செய்தேன்.”

தொண்டைமானுடைய பேச்சும் மிடுக்கும் உருவமும் நவாபின் உள்ளத்தை ஈர்த்தன. அவன் தமக்குப் பயன்பட வேண்டும் என்ற விருப்பமுடையவன் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர் சினம் தணிந்தது.

"இரண்டு காரணம் என்றாயே; மற்றொன்று என்ன?" என்று கேட்டார் நவாபு.

"அது சாமானியமான காரணம். இந்தக் கடா ஊரில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. இது வீதியில் வரும்போது பெண்கள் நடமாட முடிவதில்லை. இதன் மிடுக்கைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன்.".

"அது நம்முடைய கடா என்று தெரியாதா?”

"தெரியும். சமூகத்தில் மக்களுக்கு எது நன்மை என்று அறிந்து அதைச் செய்யும் பண்பு நிறைந்திருக்கிறதென்று அறிந்திருக்கிறேன். அந்தக் கடாவினால் உண்டாகும் அபாயத்தை யாரும் இங்கே தெரிவித்திருக்க மாட்டார்கள். அதைக் கண்டு யாவரும் பயப்படுவதோடு, அதனால் விளையும் தீங்குகளினல் மக்கள் தங்களுக்குள் நவாபு அவர்களைப் பழி கூறி வருகிறார்கள். அறிவில்லாத ஓர் ஆட்டின்பொருட்டு, சமூகத்திற்குக் கெட்ட பெயர் வரக்கூடாதல்லவா? ஆகையால், அதை அடக்கி மக்களுடைய பயத்தைப் போக்கினால் சமூகத்துக்கு வந்த பழியைப் போக்கினவன் ஆவேன் என்று எண்ணினேன்."

இப்போது நவாபு தொண்டைமானுடைய பேச்சுச் சாதுரியத்தையும் வியந்தார்; 'இப்படி ஒரு வீரனை நம் கையில் வைத்திருந்தால் நமக்குச் சமயத்தில் பயன்படுவான்' என்ற எண்ணம் அவருக்கு உண்டாகிவிட்டது.