பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வியத்தற்குரிய கொடை

 தொண்டை மண்டலத்தில் ஓர் ஊரில் வல்லாளர் என்ற செல்வர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்திருந்த ஊர் இன்னதென்று தெரியவில்லை.

அவர் செல்வத்தைப் பயன்படுத்தும் வகை தெரிந்தவர். வறியவர்களுக்கு அளிக்கும் வண்மை உடையவர்.

ஒரு வகையில் புலவர்களும் வறியவர்களாகவே வாழ்க்கையை நடத்தினர். வறியவர்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை. புலவர்களுக்கோ கிடைத்தும் கையில் நிற்பதில்லை. இதுதான் வேறுபாடு.

அவ்வப்போது கிடைக்கும் பொருளை உற்றாருக்கும் உறவினருக்கும் வாரி வீசிவிடுவார்கள் புலவர்கள். ஒருவகையில் அவர்கள் துறவிகளாகவும், மற்றாரு வகையில் வள்ளல்களாகவும் இருந்தனர். 'நாளைக்கு வேண்டுமே!’ என்ற கவலை இல்லாமல் கையில் உள்ளதை வீசவேண்டுமானால் துறவிகளைப் போன்ற மனப்பான்மை அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படியே வறியவர்களைக் கண்டால், உள்ளதை இரங்கி ஈயும் பான்மை வள்ளல்களுக்குரியது மாத்திரம் அன்று; புலவர்களிடமும் அந்த இயல்பு இருந்தது. அதனால்தான், புலவர்கள் எப்போதும் வறியவர்களாக வாழ்ந்தனர் போலும்.

தொண்டை நாட்டு வள்ளலாகிய வல்லாளர் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்ற வகையில் வறியவர்களைப் பாதுகாத்தார்; புலவர்களைப் போற்றினார். எந்தச் சமயத்தில் ஏது இருந்தாலும் புலவர் கேட்டால் கொடுத்து விடுபவர் என்ற புகழை அவர் பெற்றார். அந்த இயல்பைப் புலவர்களே பாராட்டி வியந்தார்கள்.