பக்கம்:ஆண்டாள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஆண்டாள்


ஆட் செய்பவனாய், எல்லா நற்குணங்களும் இயையப் பெற்றவனாய் உள்ள நாராயணனான கண்ணபிரான், செவ்விய தனது திருக்கையினால் எனது காலைப்பிடித்து அம்மியின்மேல் எடுத்து வைக்க நான் கனவு கண்டேன்."

இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மையு டையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழிநான்109

"தோழி! அழகிய வில்போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தையும் உடையவர்களான என் தமையன்மார்கள் வந்து, நெருப்பை நன்றாகக் கொழுந்து விட்டு எரியச் செய்து, அந்த நெருப்பின் முன்னே என்னை நிறுத்தி, இரணிய வதத்தின் பொருட்டு நரசிம்மனாய் அவதாரம் செய்த கண்ணபிரானுடைய திருக்கையின்மேலே என்னுடைய கையை வைத்துப் பொரிகளை அள்ளிப் பரிமாற நான் கனவு கண்டேன்."

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்110

"தோழீ! குங்குமக் குழம்பை உடம்பெல்லாம் பூசி, குளிர்ந்த சந்தனத்தை மிக அதிகமாக மேலே தடவி, பீடுடைய களிற்றின் மேலே அக்கண்ணபிரானோடு கூடியிருந்து, திருமண விழாவினைக் கொண்டாடும் பொருட்டு அலங்காரங்கள் திகழ்ந்து தோன்றும் தெருக்களிலே ஊர்வலம் வந்து மணம் மிகுந்த நீரினால் எங்கள் இருவரையும் திருமஞ்சனம் பண்ணுவதாக நான் கனவுகள் கண்டேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/172&oldid=1462173" இலிருந்து மீள்விக்கப்பட்டது