பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ம் ஆரணிய காண்ட ஆய்வு


“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)

விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!

இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.

அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.

மென் முறுவல்

பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.