பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 103

சூர்ப்பணகை இராவணனிடம் போய்க் கோள் மூட்டிச் சீதையை விரும்பும் எண்ணத்தைத் தூண்டியதாலேயே இராவணன் தன் குடும்பத்தோடு அழிந்தான். அதனால்தான் மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் எனப்

பட்டாள். மூல நாசம் = வேரோடு அழிதல். மொய்ம்பு= வலிமை.

வீடணனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியவில்லை எனினும், இராவணனின் வழி மரபு அழிந்து விட்டது. 'உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்கவேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி” (20) என்னும் ஒளவையின் மூதுரைப் பாடலின்படி, சூர்ப்பணகை உடன் பிறந்தே அண்ணன் மடியக் காரணமானாள்.

உயிர் எப்பொழுது தோன்றியதோ - அப்பொழுதே இறப்பும் அதற்குக் காரணமான பிணியும் தோன்றி விடுகின்றன. ஈண்டு, -

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்’ (334) என்னும் திருக்குறளும், வாழாது வாழ்கின்றேன்”, 'சாமாறே விரைகின்றேன்’ என்னும் திருவாசகப் பகுதிகளும் ஆய்வுக்கு உரியன.

உடன் தோன்றிய நோய், சாகடிப்பதற்கு உரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போலும்!

சூர்ப்பணகை இராமனைக் கண்டதும் அவன் அழகில் மயங்குகிறாள். இராமனது பேரழகைச் சூர்ப்பணகை வியந்ததை அறிவிக்கக் கம்பர் L1@) பாடல்கள் செலவிட்டுள்ளார்.