பக்கம்:ஆண்டாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

37


என்று பாடி இறும்பூது எய்துகின்றார். இவ்வாறு கோதை யாருக்கு நன்னெறியும், ஒழுக்கமும், ஓங்கியுலகளந்தான்பால் உயர்ந்த சிந்தனையும் இயல்பாகவே அமைகின்றன.

பேதை நீங்கிப் பெதும்பை

குழவிப் பருவம் மாறிக் குமரிப் பருவம் அடைகின்றாள். வைகறையில் துயிலெழும் பழக்கம் வாய்க்கின்றது. தந்தையுடன் மலர்வனம் புகுந்து, நீர் பாய்ச்சுதல், மலர் பறித்தல், மாலை தொடுத்தல் ஆகிய பணி செய்து காலம் பயனுடையதாகின்றது. இந்நேரத்திலெல்லாம் உள்ளக்கிழியில் மாயவன் உருவம் தீட்டப் பெறுகின்றது. ஆயர்பாடியில் வெண்ணெயை அள்ளியுண்ட கண்ணனின் கோலம் கருத்தில் உதிக்கின்றது. அவனை அடைதற்கேற்ற வழிகளை மனம் ஆராய்கின்றது. விரைந்து அடைய மனம் உந்துகின்றது; அவ்விரைந்த மனம் கோதைக்குப் பேரூக்கத்தை அளிக்கின்றது.

எனவேதான் இறைவனுக்கு இடப்பெறும் பொருள்களைக் கண்ணுறும்போது அவை தனக்கும் உரிமையுடையன என்ற உரிமைச் சிந்தனை-எண்ண உறுதி ஏற்படுகின்றது. அந்த முறையில்தான் தந்தை, வடபத்திர சாயிக்கெனக்கட்டி வைத்த மாலைகளில் கோதையின் கருத்துச் சேர்கின்றது. உரிமையெண்ணம் முந்துறுத்த, அதைத் தான் அணிந்து கொள்ளும் துணிவு பிறக்கின்றது: எண்ணம் செயலாகின்றது.

திருமாலையே கணவனாகப் பெற வேண்டுமேயல்லாமல் மனிதர் ஒருவரையும் மணப்பதில்லை என்ற உறுதியான கொள்கை வலுப்பெறுகின்றது. ஆகவே திருமாலவனுக்கே தன்னை மனைவியாகப் பாவித்துத் தன் தந்தையார் கோயிலுக்குத் தொடுத்து வைத்திருக்கும் மாலையைத் தான் அணிந்து ஆடியில் பார்த்து, 'அவனுக்கு நேர் ஒவ்வா திருப்பேனோ; ஒத்திருப்பேனோ' என்று ஆய்ந்து ஆராய்ந்து அழகு பார்த்து விட்டு மாலையைத் தன் தோளினின்றும் சுருட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/39&oldid=957508" இலிருந்து மீள்விக்கப்பட்டது