பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

89


மனிதனின் அன்பு மிக்க அழகு வாய்ந்தது. மானிடப் பண்பின் இயற்கையானது அவ் அழகு! ஆனாலும் அம் மலரில் இருக்க வேண்டிய தேனுக்கு மாறாக, நஞ்சு இருப்பதாகத் தோன்றுகிறதே ஏன்? மானிடரின் உள்ளத்தில் வலியை உண்டாக்குகிறது. கணவன் மனைவியிடையே மன முறிவு ஏற்படுத்துகிறது. பலப்பல குடும்பங்கள் ஒற்றுமையின்றிப் பிளவு பட்டுப் போகின்றன. சீரழிந்த குடும்பங்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் இத்தனையும் நமது நாகரிகத்தை இழிவுபடுத்துகிறது.

ஆனால் இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பு, எந்தக் குடும்பத்தையும் இரண்டுபடுத்தவில்லை! எந்த உயிரையும் சீரழியச் செய்யவில்லை. எந்தக் குழந்தையையும் குற்றம் இழைக்கச் செய்ததில்லை. இதனை நன்கு சிந்திக்கும் ஆண் பெண் இருபாலரையும் விழிப்புறச் செய்யும்.

எவர் ஒருவர் அன்புள்ளம் கொண்டாரோ அப்போதே அவர் பேருள்ளம் பரந்த மனம் படைத்தவராகிறார்; மனித நலநாட்டப் பண்புள்ளம் கொண்டவராகிறார். இன்னும் சற்று மேலாகச் சொல்லப்போனால், தெய்வ உள்ளமே கொண்டவராகிவிடுகிறார்: அவர்களுடைய கண்கள், ஏழைகளை ஏறிட்டுப் பார்க்கின்றன; அவருடைய செவிகளோ, தம்மைச் சுற்றி உடைந்த உள்ளங்களின் விம்மி அழுதலை, பெருமூச்சினை விட்டுக் கதறி அழும் மக்களின் மன நலத்தைக் கேட்கின்றன.

அன்புள்ளம் கொண்ட அக்கணமே, உள்ளபடியே நாம் மானுடத்தின் மேலான இடத்தைப் ஏற்றுவிடுகிறோம் என்றே சொல்லலாம்.

யோவான் 15:9இல் இயேசு சொல்கிறார்:-

"எந்தை என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்"

நீங்கள் ஒரு பெண்ணில் அல்லது ஆணில் அன்பு கொண்டு வாழ்ந்து வருதலைப் போன்று, அவருடைய அன்பில் வாழ்ந்து வருமாறு கேட்டுக் கொள்கிறார். இயேசு அவருடைய தந்தையின் அன்பில் வாழ்ந்துவருவது போன்று நாமும் தமது அன்பில் வாழ்ந்திட வேண்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/93&oldid=1219512" இலிருந்து மீள்விக்கப்பட்டது