பக்கம்:ஆண்டாள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஆண்டாள்


வெண்ணெயும் இவர்களின் செல்வ வளப்பொருள்களாம். அந்நாளிற் பசுவைக் கொண்டே ஒருவர் தம் செல்வவளம் கணக்கிடப்பட்டது. தலைமகள் ஒருத்தி, திருமணமாகித் தலைமகன் வீடு சென்ற காலையில் அப்புக்ககத்தில் ஒரு பசுவே கட்டப்பட்டிருந்தது. அவ்வொரு பசுவால் கிடைக்கும் எளிய வருவாயே (ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை)அக்குடும்பத்திற்கு வாய்ப்பதாயிருந்தது. ஆனால் இப்பொழுது இப்புதுப் பெண் வரவால் நாள்தோறும் விழவயரும் வீடாகத் திகழ்கின்றது. பலரும் விருந்தினராக வந்து உண்டு செல்கின்றனர். அக்குறுந் தொகைப் பாடல் வருமாறு:

உடுத்துந் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயோ யிஃதோ
ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.

- குறுந்தொகை : 235

மேலும், 'வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்' என்னும் புறப்பொருள் உணர்த்தும் தொடரும் பசுக்களின் செல்வ நிலை பகரும். பகைவர் நாட்டுப் பசுக்களைப் பிறிதோர் நாட்டு அரசன் தன் நாட்டிற்கு ஒட்டிவந்துவிடுவது போரின் தொடக்கமாகக் கருதப்பட்டதோடு பகைவன் நாட்டுச் செல்வ வளமும் கொண்டுவந்து சேர்த்து விட்டதாகக் கருதப்படும். எனவே அச் செல்வத்தை மீண்டும் தம் நாட்டிற் கொண்டு வந்து சேர்த்தலே தமக்குப் பொருளும் புகழும் சேர்க்கும் செயல் என்று பகையரசரும் கருதிக் கரந்தை சூடிப் பகைவர் கவர்ந்த பசு மந்தைகளைத் திரும்ப்ப் பெறுதற்கு முனைந்தனர். 'மாடு' என்ற சொல் செல்வம் என்னும் பொருளைக் குறித்து நிற்றலையும் ஈண்டுக் கருத்தில் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/92&oldid=1462088" இலிருந்து மீள்விக்கப்பட்டது