பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



"உன் மனைவியை வேண்டி வந்தனம்" என்ற சொல் அவரைப் பொறுத்தமட்டில் எவ்வித உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் "இது நமக்கு முன்பு உள்ளது" என்று அவர் பேசுகிறார் என்றால் நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மமகாரத்தின் முழு வடிவமாக இருப்பவள் மனைவி. ஆனால் இயற்பகையாரைப் பொறுத்த மட்டில் அந்த மனைவி அவருடைய வீட்டிலுள்ள குடம், தவலை, நாற்காலி, கைக்குடை என்பவை போலவே கருதப்படும் பொருளாக ஆகிவிட்டது. அதனால்தான் "இது நமக்கு முன்பு உள்ளது" என்று பேசுகிறார்.

அடுத்த வீட்டுக்காரர் நம்முடைய குடையைச் சற்று இரவல் கேட்டால், எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் "இதோ இருக்கிறது. எடுத்துப் போங்கள்" என்று சொல்லுவதைப் போல இயற்பகையார் விடை இறுக்கிறார்.

நம் போன்ற சாதாரணமான மக்களைப் பொறுத்த மட்டில் மனைவிக்கும், குடைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் மமகாரத்தின் விளைவுதான் என்றாலும் மனைவி உயிரோடு கூடிய பொருளாகவும், குடை தேவைப்படும் பொழுது பயன்படக்கூடிய பொருளாகவும் வேறுபட்ட நிலையில் உள்ளன.

நாமே மயக்கமுற்றுள்ள நிலையில் இருக்கும் பொழுது பக்கத்தில் உள்ளவர்கள் "கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் மனைவி வந்திருக்கிறாள். உங்கள் மகன் வந்திருக்கிறான்" என்று சொல்லும் பொழுது Deep Coma போன்ற ஆழந்த மயக்கத்தில் உள்ளபொழுது எவ்வித வேறுபாட்டையும் தோற்றுவிப்பதில்லை.

மமகாரத்தை அறவே ஒழித்த இயற்பகையார், அடியார்கள் விரும்பியதைக் கொடுப்பதுதான் தம் பிறப்பின் பயன் என்ற முடிவில் உறுதியாக நிற்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/118&oldid=481022" இலிருந்து மீள்விக்கப்பட்டது