பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

81


அறிவு இருக்கும் இடத்தில் அன்பினை அமர்த்துங்கள். பிறகு எல்லாம் அதனதன் படியே நடக்கும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வழி - அன்பு வழி என்பதை மட்டும் கடைப்பிடித்தால் போதும்.

வீட்டில் இருக்கும் போது மட்டும் அல்லாமல், கடைக்குள் இருக்கும்போதும், பள்ளியில் இருக்கும்போதும் மற்ற எந்த இடத்திற்குப் போனாலும் எந்த மக்களிடம் தொடர்பு கொண்டாலும் அங்கெல்லாம் - அப்போதெல்லாம் நீங்கள் அன்புள்ளவராக - அன்பராக இருக்கிறோம் என்று எண்ணியிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தேவை.

மற்ற ஆண் பெண் சுமக்கும் சுமைகளையும் நீங்கள் சுமந்திட வேண்டும். இயேசு பெருமான் என்னென்ன அன்புப் பணி செய்தாரோ அவற்றையெல்லாம் நீங்களும் செய்திடல் வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்கு வேண்டும். முனைந்து பிறர் துன்பங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களிடத்தில் இயேசு இருந்தால் என்னென்ன பணி செய்வார் என்பதை எண்ணிப் பார்த்துச் செய்யுங்கள்.

அன்பு என்பது தனித்து வருவதில்லை; அன்பு கொள்ளுமாறு செய்யும் ஆற்றலோடு வருகிறது. அன்பினால் என்னென்ன ஆக்கப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டுமோ, அவற்றை நீங்கள் செய்யுமாறு உங்களைப் பின் நின்று தூண்டியும் இயக்கியும் வரக்கூடியது அன்பு!

உங்களைத் தெய்விக நிலைக்கு உயர்த்தும் அன்பு, தெய்வத் திரு ஆகிய இயேசு செய்த பணிகளையெல்லாம் செய்விக்கும் அன்பு. தேவையான பணம், வேண்டிய சுற்றம், நட்பு ஆகிய மக்கள், செல்வாக்கு ஆகியவற்றைத் தேடி அவற்றைச் சார்ந்து நிற்கும் பணிகளாகிய எளிய மக்கள் செய்யும் பணிகளைத் தான் நீங்களும் செய்து கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்போது அவற்றையெல்லாம் விடுத்து இயேசுவின் நற்பணிகளைப் - பொற் பணிகளை ஆற்றும் அன்புப் பாதைக்கு மாறிவந்து விட்டீர்கள்.

நீங்கள் சில சமயம் நினைக்கக்கூடும், நம்மால் ஆவதென்ன? அன்பு கொண்டால் மட்டும் போதுமா? நாம் கடன்பட்ட அத்தனையும் திருமா? தீர்க்கப்படுமா என்று. அன்பின் வயம் உங்களை ஒப்படைத்துப் பாருங்கள் பின்பு அறிவீர்கள் என்ன நடக்கிறது என்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/85&oldid=1219516" இலிருந்து மீள்விக்கப்பட்டது