பக்கம்:ஆண்டாள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

113


உந்துமதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தங்கமழுங் குழலீ.........
செந்தாமரைக் கையால் சீரார்வளை யொலிப்ப

- திருப்பாவை : 18

பள்ளியறையைச் சுற்றிலும் நிலைவிளக்குகள் ஒளியினைக் கால, யானையின் தந்தத்தால் கடையப் பெற்ற கால்களையுடைய கட்டிலின்மேல் மென்மையாயிருக்கும் பஞ்சணைமீது ஏறிக் கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டியுள்ள கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பகத்தின் மேலே தலையை வைத்துத் துயில்கொண்ட அகன்ற மார்பினையுடையவன் கண்ணனாவன். மை தீட்டிய கண்களையுடைய நப்பின்னை தன் கணவனாகிய கண்ணனை நாழிகை எத்தனை ஆனாலும் கண்விழிக்க விடமாட்டேன் என்கிறாள். ஏனெனில் கண்ணனின் பிரிவைக் கணநேரமும் தாங்க மாட்டாதவள் அவள். ஆனால் அது நியாயமும் ஆகாது; குணமாகவும் கொள்ளப்படமாட்டாது என்று ஆயர்மகளிர் நப்பின்னையைப் பார்த்து உரைக்கின்றனர். இக்கருத்தடங்கிய திருப்பாவைப் பாட்டு அமைதியில் ஒளிரும் ஓர் அழகுக் காட்சியினைப் புலப்படுத்தி நிற்கக் காணலாம்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலாமார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயும்உன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

-திருப்பாவை : 19
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/115&oldid=1157493" இலிருந்து மீள்விக்கப்பட்டது