பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 155

பிறப்பெனும் பெருங்கடல்

தயரதன் அமைச்சர்களிடம் சொல்கிறான். யான் அரசைத் துறக்கப் போகிறேன். இந்தத் துறப்பு என்னும் தெப்பம் துணை செய்யாவிடின், பிறப்பு என்னும் பெருங்கடலை நீந்த முடியாது- என்கிறான். வள்ளுவர் பிறப்பைப் பெருங்கடலாகக் கூறி அதை நீந்திக் கடக்கும் வழிமுறையும் கூறியுள்ளார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்

(10)

என்பது குறள். இதை அடியொற்றி, பிறப்பைக் கடலாகக் கம்பர் உருவகித்து, கடக்கும் முறையும் அறிவித்திருப்பது ஒரளவு ஒப்பு நோக்கத் தக்கது.

பிறந்திலென்

தயரதன் அமைச்சர்களிடம் அறிவிக்கின்றான். யான் போர்க்களத்தில் இறக்கவும் இல்லை. அது கிடக்க-யான் மூப்பு வந்த பின்னும் அரசைத் துறக்கவில்லை எனில், யான் பிறந்ததனால் என்ன பயன் உள்ளது?- என்று வினவுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்கிறான்.

இறந்திலன் செருக் களத்து இராமன் தாதை தான் அறந்தலை நிரம்ப முப்பு அடைந்த பின்னரும் துறந்திலன் என்பதோர் சொல் உண்டானபின் பிறந்திலென் என்பதின் பிறிது உண்டாகுமோ?

(27)


என்பது பாடல். இந்தப் பாடலில்,

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

(236)


என்னும் குறள் கருத்து இழையோடுகிறதல்லவா?