பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 சுந்தர சண்முகனார்

கடலுக்கு 'முந்நீர்' என்ற பெயர் தமிழில் உள்ளது. ஆற்று நீர், வேற்று நீர் (மழை), ஊற்றுநீர் (அடி ஊற்று) என்னும் மூவகை நீரையுடையது எனவும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழில் புரிவது எனவும் சிலரால் பெயர்க் காரணம் கூறப்படுகின்றது. இதனினும், கிழக்கு (வங்கக் கடல்), மேற்கு (அரபிக் கடல்) தெற்கு (இந்துமா கடல்) ஆகிய மூன்று திக்குகளிலும் உள்ள நீர்ப் பகுதியாதலின் முந்நீர்' என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமான தாகும். எனவே, முந்நீர் என்னும் பெயர் தெளிவானது. ஒருவேளை, இந்த மூன்று பக்கக் கடலுடன், தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் நடுவே உள்ள கடல் பகுதியையும் சேர்த்து நான்கு கடல் என்பது கூறப் பட்டிருக்குமோ! ஆய்வுக்கு உரியது இது.

தனி அன்று, பொது

முடிசூட்டிக் கொள்ள வரச் சொன்ன தயரதனின் மாளிகைக்கு இராமன் தேரில் சென்றதைக் கண்ட மக்கள், பல பேசிக் கொண்டனர். அவற்றுள் ஒன்று. இனி உலகில் தீவினைகளும் துயரங்களும் அற்றுப்போகும். இனி இவ்வுலகம் தனித் தனியாய்ப் பலரால் அரசாளப் படாமல், பொதுவாய் இராமன் ஒருவனால் அரசாளப் படும் என்றனர். பாடல் பகுதி:

பாவமும் அருந்துயரும் வேர் பறியும் என்பார்; பூவலயம் இன்று தனி அன்று; பொது என்பார்

(102)

இந்தப் பாடலுக்கு எதிர் மாறானது போன்ற ஒரு கருத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரர் கூறியிருக்கிறார். அதாவது, உலகம் பல அரசர்கள் ஆளக்கூடியதாய்ப் பலருக்கும் பொதுவானதாய் இல்லாமல், தனி ஒருவர்க்கே உரியதாய்த் தனி ஒர் அரசராய்த் தாமே ஆளக் கூடிய பேரரசர்க்கும் சரி-எளிய வேடன் ஒருவனுக்கும் சரி- அனைவருக்குமே