பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பெயர். அவன் மனிதர்களையே தின்பவன். மலை போல இருப்பான். பரட்டைத் தலையன். நெருப்பை கக்கும் சிவந்த கண்ணன். அவன் நடந்தால் நிலம் நடுங்கும். அவன் உறுமினல் வானில் பறவைகள் சிதறிப் போகும். இந்த ஊர்க்காரர் நன்றாக வாழ, நாங்கள் தினமும் அவனுக்கு ஒரு வண்டி சாதமும் இரண்டு எருமையும் ஒரு மனிதனையும் அனுப்பவேண்டும். ஊரிலே முறை வைத்து இந்தப் பூதத்தை உபசரித்து வருகிறோம். நாளை எங்கள் வீட்டு முறை. வீட்டிலே நாலு பேர் இதிலே யார் பலியாவதற்குப் போவது என்று விவாதிக்கிறோம்.”

இந்த பயங்கரக் கதையைக் கேட்ட குந்திக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டுமென்பதிலும் அவள் தீவிரமாக இருந்தாள். சற்று நேரம் யோசித்துவிட்டு, எனக்கு ஒரு வழி தோன்றுகிறது, கேளுங்கள்" என்றாள்.

‘'எதாவது சொல் அம்மா. நாங்கள் குழம்பிப் போயிருக்கிறோம். சிந்திக்க முடியவில்லை. நீயே சொல்லு."

"கேளுங்கள், உங்களுக்கோ ஒரே பிள்ளை. அவனும் சிறு குழந்தை. எனக்கு வலுவான பிள்ளைகள் ஐந்து பேர் உண்டு. அவர்களில் ஒருவன் சோற்று வண்டியையும் எருமைகளையும் எடுத்துப் போகட்டும்” என்றாள் குந்தி.

இதைக் கேட்டதும் அந்த வீட்டுக்காரர் அதிசயத்து நடுங்கி, தன் காதைப் பொத்திக்கொண்டார்.

“தாயே, நாங்கள் உன் யோசனையை ஒப்புக்கொள்ள மாட்டோம். உன் பிள்ளை ஒருவனை பலிகொடுத்து, எங்களைக் காப்பாற்றுவதா? அபசாரம்!”

குந்தி அவரைத் தேற்றி, மறுபடி சொல்லுவாள் :

"ஐயா, என் பிள்ளைகளைப் பற்றி உமக்குத் தெரியாது. என் பிள்ளைகளில் ஒருவனை மனத்தில் கொண்டே இப்படிச் சொன்னேன். உங்கள் மகன் மீது நீங்கள் அன்பு காட்டுவது போலவே என் மகன் மீதும் எனக்கு ஆசை இருக்கிறது. அவனே நான் சாக அனுப்பவில்லை. அவன் பூதத்தை வென்று விடுவான் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறேன். என் மகன் உருவத்திலே ராட்சதன் போல இருப்பான். வாயுதேவனைப்போல் வேகமானவன் அவன். அவனையே பகனிடம் அனுப்புகிறேன்."