பக்கம்:அமுதும் தேனும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கவிஞர் சுரதா




வாதமிட்டு நாள்கழிக்கும் அரசாங் கத்தில்
வன்முறைதான் அதிகரிக்கும்; வந்தோர்க் கெல்லாம்
சாதமிட்டுக் கணக்கெழுதும் மடங்கள்: சாதிச்
சண்டையிட்டு நாள்கழிக்கும் மக்கள் கூட்டம்,
மாதமிட்டும் தேதியிட்டும் பிறர்பால் சென்று
மண்டியிட்டும் கெஞ்சுபவர் மிகுந்தால், ராமர்
பாதமிட்ட இடந்தோறும் கோயி லன்றிப்
பகுத்தறிவுச் சாலைகளா நாட்டில் தோன்றும்?

மாடுகட்டிப் போரடித்தால் மாளா தென்றே
மலைநிகர்த்த யானைகட்டிப் போர டிக்கும்
நாடிதுவே எனப்புகழ்ந்து பேசிக் கொண்டே
நாமிருந்து பயனில்லை. ஏழை கட்கு
வீடுகட்டித் தரவேண்டும்; கல்விக் கூடம்
வீதிதொறும் தோன்றிடுதல் வேண்டு மென்றான்.
ஏடுடைய மாமலரைப் போன்ற மங்கை
இவையனைத்தும் விரைவில்நிறை வேறு மென்றாள்.

வளைவுபடும் புருவங்கள் கண்ணைச் சுற்றி
வளர்ந்தாலும் ஒருவேளை வளரக் கூடும்.
பிளவுபடும் கட்சிகளால் நாட்டில் தோன்றும்
பிரச்சினைகள் ஒருபோதும் தீரா தென்றான்.
அளவுபடும் இளம்பருவம் மாறி விட்டால்
அப்பருவும் மறுபடியும் வாரா தென்றாள்.
களவுபடும் செம்பொன்னும் மணியும் முத்தும்
கல்வியைப்போல் தனிப்பெருமை தாரா தென்றான்.