பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 தோன்றாத் துணை "முப்பத்தஞ்சு...” "முப்பத்தஞ்சு கிடைச்சதே ஆச்சரியம். எல்லாம் என் தலையெழுத்து. உங்கள மாதிரி ஆட்களைக் கட்டி மாரடிக்க வேண்டியதிருக்கு ஒழுங்கா வேலையைக் கத்துக்க இல்லன்னா மானேஜர்கிட்டச் சொல்லிச் சீட்டைக் கிழிக்க வேண்டியதிருக்கும்." வசந்திக்குத் தன் குடும்ப நிலையைச் சொல்லி, அப்படி அவர் எதுவும் செய்துவிடக் கூடாது என்று அவரைக் கும்பிட வேண்டும் போலிருந்தது. ஆனால், அவர் பார்த்த பார்வை, அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. பேசாமல், இருப்பிடத்தில் வந்து தொப்பென்று உட்கார்ந்தாள். அன்று இரவு, அவளால் துரங்க முடியவில்லை. ஒரு வாரம் ஆகியிருக்கும். மானேஜர் அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். வசந்தி கைகால்கள் நடுங்க, அவர் அறைக்குள் போனாள். இண்டர்வியூ சமயத்தில் சிரித்த முகத்துடன் அவரைப் பார்த்து, அதையே மனத்தில் பதிய வைத்திருந்த வசந்திக்கு, இப்போது மானேஜர் கடுவன் பூனை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தது பயமாக இருந்தது. நாக்கு, பல்லில் ஒட்டிக் கொண்டு வெளியே வர மறுத்தது. மானேஜர் டை'யைச் சரிசெய்து கொண்டே அவளிடம் பேசினார். "நீ இன்னும் ஒர்க்கை பிக்கப் பண்ணலன்னு ஹெட் கிளார்க் சொல்றார். தப்பில்லாம இங்லீஷ்ல ஒரு சென்டன்ஸ்கூட உன்னால எழுத முடியல. பதினைஞ்சு நாள் டயம் கொடுக்கிறேன். அதுக்குள்ளே வேலையைக் கத்துக்க... இல்லன்னா. ஐ அம் ஸாரி. நான் வேற கிளார்க்கைப் போட வேண்டியதிருக்கும்." வசந்திக்கு, அவரிடம் எவ்வளவோ பேச வேண்டும் போல் தோன்றியது. சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்து வருகிறவர்கள், முதலில் அப்படித்தான் இருப்பார்கள்; ஆனால் போகப் போகச் சரியாகிவிடுவார்கள் என்று