பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆத்மாவின் ராகங்கள்

பத்தரிடம் சாவியைக் கொடுத்து விட்டுப் புறப் பட்டான் ராஜாராமன். தெருவில் தயிர்க்காரிகளின் பட்டாளம் ஒன்று சேர்ந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தலையில் அவ்வளவு பெரிய பானையைக் கூடைக்குள் வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் வீசிச் சுதந்திரமாக ஒரு சிறிதும் பயப்படாமல் எப்படி அவர்களால் நடந்துவர முடிகிறதென்பது அவன் மனத்தில் ஆச்சரியமாயிருந்தது. வாழ்க்கையில் எந்த மூலையிலும் பொறுப்பும் சுமையுமுள்ளவர்கள் இப்படித்தான். அநாயசமாக நடந்து வருகிறார்களென்று தோன்றியது. பொறுப்பும் சுமையும் இல்லாதவர்கள் தான் தடுமாறி விழுகிறார்களோ என்று ஒரு சிந்தனை உள்ளே ஓடியது. வீட்டுக்குப் போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படக் கிளம்பிய ராஜாராமனை மேலுருக்குப் போய் குத்தகைக்காரனைப் பார்த்துவிட்டு வரச் சொல்லித் தாய் வற்புறுத்தினாள். அவர்களுக்குப் பூர்வீகம் மேலூர். மேலூரில் ஒரு பழைய வீடும், திருவாதவூரில் கொஞ்சம் நிலமும் உண்டு. அப்பா காலம் வரை மேலூரில் தான் வாசம். அவன் ஹைஸ்கூல் படிப்புத் தொடங்கிய போது மதுரைக்கு ஒண்டுக் குடித்தனம் வந்தவர்கள் தான்; மதுரை இன்னும் அவர்களை விட்டபாடாக இல்லை. மேலுர் வீடு ஒரு உர டிப்போவுக்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த உர டிப்போவின் ஹெட் ஆபீஸ் மதுரையிலிருந்ததால் வாடகையை அந்தக் கையால் வாங்கி, இந்தக் கையால் மதுரை ஒண்டுக் குடித்தனத்துக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அவன் அம்மா.

அவன் காலேஜ் படிப்பை விட்டதிலிருந்து, 'ஏண்டா இனிமேலே மதுரையிலே எதுக்கு குடித்தனம்? மேலூருக்கே வீட்டோடப் போயிடலாமே?' என்று அவன் தாய் வாய்க்கு வாய் முணுமுணுப்பது சகஜமாகியிருந்தது. வாசக சாலையையும், தேச பக்த நண்பர்களைளும், தலைவர்களையும் பிரிந்து தேசத்தின் பரபரப்பான காலத்தில் மேலூருக்குப் போக அவனுக்கு விருப்பமே இல்லை.