பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 33 அர்த்தம்? நீங்க கூடத்தான் ஐந்து வருஷத்துக்கு முன்னால "மானேஜிங் டைரக்டர் புறப்பட்டுவிட்டார்’னு சொல்றதுக்காக, எம். டி. பாஸ்ட் அவே'ன்னு எழுதினிங்கன்னு மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன் சொன்னாங்க" என்று அடுத்த செக்க்ஷனுக்கு எட்டும் படியாகக் கேட்டான். தலைமைக் குமாஸ்தா பதிலே பேசவில்லை. மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன் விக்கித்துப் போனாள். எழுதியது எப்படி உண்மையோ, அப்படி, அவள் பிரகாஷிடம் சொன்னதும் உண்மை. இப்போது, வசந்திக்குத் தலைமைக் குமாஸ்தாவையே கிண்டல் செய்யவேண்டும்போல் தோன்றியது. என்.ஸி.ஸி. பெண்ணைப்போல், இருக்கையில் வந்து உட்கார்ந்தாள். பிரகாஷ், அவளை எழுத விட வில்லை. அவள் எழுத வேண்டிய ஃபைல்களுக்கு, அவனே குறிப்புக்களை எழுதிக் கொடுத்தான். லஞ்ச் வேளையில், அவள் அவனை நன்றியறிதலோடு பார்த்துக் கொண்டே, "அந்தக் கிழத்த நல்லாக் கேட்டிங்க. ஆமா.. எம்.டி. பாஸ்ட் அவேன்னு எழுதினால் தப்பா?” என்று கேட்டாள். "பாசுடு அவேன்னா இறந்துட்டார்னு அர்த்தம்." வசந்தி, விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் சீரான வெண்முத்துப் பற்களை ரசித்துக் கொண்டே, வசந்தி, உனக்குப் பச்சைப் புடவை எடுப்பாய் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அதில், எந்தவிதமான சினக்குறியும் தெரியவில்லை. அதே நேரத்தில், அவன் பேச்சின் நோக்கைப் புரிந்து கொண்ட பாவமும் இல்லை. "என்ன, நான் சொல்றேன். நீ பதிலே சொல்லல?" இப்போது அவள் பதிலளித்தாள். "அப்போ இந்தப் புடவை நல்லா இல்லியா?"