பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 தோன்றாத் துணை "உன் சிவந்த உடம்புக்குப் பச்சை நிறம் எடுப்பாய் இருக்கும். அப்புறம் காதில் இருக்கிற கம்மலைத் தூக்கி எறிஞ்சிடு, நல்ல ரிங்கா வாங்கிப் போடு. ஜாக்கெட்ல கை இவ்வளவு நீளமா இருக்கக் கூடாது." "ஸார், நீங்க எந்த ஸ்டுடியோவிலேயும் மேக்கப் மேனா இருந்திங்களா?" என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். பிரகாஷிற்கு உற்சாகம் ஏற்பட்டது. அவளைத் தொட வேண்டும் போலிருந்தது. ஆசையை அடக்கிக் கொண்டான். விட்டுப் பிடிக்க வேண்டும். முன்பு அவசரப்பட்டதால், கமலாவை அவனால் பிடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல், அவள், அவன் மனைவியிடமே புகார் செய்துவிட்டாள். இப்போது, தலைமைக் குமாஸ்தா, அவன் இல்லாத சமயங்களில்தான், அவளைத் திட்டுவார். ஒரு சமயம், அவன் எங்கேயோ, வெளியே போயிருந்தான். வசந்தி, இருக்கையில், கீண்ணிர் வராக் குறையாக இருந்தாள். தலைமைக் குமாஸ்தாவின் டோஸ் நீண்டு கொண்டே இருந்தது. நீ எழுதற இங்கிலீவுைச் சொன்னா என் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்' என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பிரகாஷ் வந்துவிட்டான். "ஏன் ஸார் எப்ப பார்த்தாலும் உங்க பெண்ணை இழுக்கறிங்க? இன்னொரு வேகன்ஸி வராமலா போயிடும்? இந்தப் பெண்ணை நிறுத்திட்டுத்தான் உங்க பெண்ணுக்கு வேலை கொடுக்கணுமா என்ன? என்று அவன் சொன்ன போது, தலைமைக் குமாஸ்தா தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டாரே தவிர, அவனுக்கு வெளிப்படையாக விடையளிக்கவில்லை. அவன், மானேஜிங் டேரக்டருக்குத் துரத்து உறவு. மானேஜரே அவனுக்குப் பயப்படுகிறார். அதோடு, பயல் மொட்டைப் பெட்டிஷன் போடுவதில் சமர்த்தன்.